அனைத்தும் திட்டமேயன்றி வேறென்ன?

ழக்கமாகத் தன் காரில் என்னை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லும் நண்பர், இன்று விடுமுறை எடுத்துக் கொள்ளப் போவதாக நேற்றே தெரிவித்து விட்டார். அதனால் என்னுடன் பணிபுரியும் மற்றொரு நண்பருக்குத் தகவல் அனுப்பி, அழைத்துச் செல்லும்படி கோரியிருந்தேன். அவரோ தானும் பணிக்கு வர இயலவில்லை என அனுப்பி இருந்த மறுமொழியை, தாமதமாக இன்று விடிகாலை 5.35 மணிக்கு தான் பார்க்க நேரிட்டது.

உடனே மூன்றாம் நபரைத் தொடர்பு கொண்டேன். பாகிஸ்தானைச் சேர்ந்த முதியவர் அவர். தளர்ந்து விட்ட வயதிலும் அயராது உழைப்பவர். சில அவசரச் சூழல்களில் அவர் எனக்கு உதவியுள்ளார். வீட்டிலிருந்து தான் கிளம்பிவிட்டதாகவும் சில நிமிடங்களில் அப்பகுதியின் முக்கியச் சாலைக்கு என்னை வந்து நிற்கும்படியும் கூறினார்.

அவசர அவசரமாகக் கிளம்பி அவர் கூறிய சாலைக்கு விரைந்தேன். அங்கே ஏற்கனவே வந்து எனக்காகக் காத்திருந்தார். காரில் ஏறியவுடன், தாமதத்திற்காக முதியவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். வண்டி கிளம்பியது; பரஸ்பரம் குசலம் விசாரித்துக் கொண்டோம். வண்டி 40ஆம் எண் விரைவுச் சாலையில் ஏறியது. டயர்களில் காற்று குறைவாக இருந்ததால் வழியில் வந்த பெட்ரோல் ஸ்டேஷனில் காற்றை நிரப்பிக் கொண்டு, அங்கிருந்து மீண்டும் 40ஆம் எண் விரைவுச் சாலையில் கார் ஏறிய போது மணி ஆறைத் தொட்டிருந்தது.

பயணித்த சில நிமிடங்களில் தடதடவெனப் பெரும் சத்தம். டயர் வெடித்திருந்தது. ஓரிரு வருடங்களுக்கு முன், ஏற்கனவே ஒருமுறை அவருடைய காரில் பயணித்தபோதும் இதே போன்று  Flat tyre ஆனது. அச்சமயத்தில் இருவரும் சேர்ந்து பழுதடைந்த டயரை கழற்றி ஸ்டெப்னி டயரை மாட்டினோம். அப்போதுதான் வாழ்க்கையில் முதன் முதலில் டயரை கழற்றி மாட்டிய அனுபவம் கிட்டியது. அதே நபருடன் இன்னொரு முறை செல்லும்போதும் ஏற்பட்டிருக்கிறது.

இப்போது பாகிஸ்தானி முதியவர் ரொம்பவே தளர்ந்து விட்டபடியாலும் ஏற்கனவே இதில் எனக்கு முன் அனுபவம் கிடைத்திருந்ததாலும், அவரைத் தடுத்து நிறுத்தி, நானே முழுமையாக கழற்றி மாட்டினேன். ஸ்டெப்னி டயரைப் பொருத்தி நிமிர்கையில் முழுமையாக வியர்த்து வழிந்து, நா வறண்டு விட்டது. வீட்டிலிருந்து அவசரமாக கிளம்பியதால் தண்ணீர் கூட பருகாமல் கிளம்பி விட்டிருந்தேன். வண்டியிலும் குடிக்கத் தண்ணீர் இல்லை. ஒரு வழியாக வண்டியைச் சரி செய்து அங்கிருந்து நகர அரை மணி நேரம் ஆனது. ஆபத்தான விரைவுச் சாலையில் எவ்வித உதவிக்கும் சாதாரணமாக ஆள் கிடைக்காத அவ்விடத்தில் நான் இல்லை என்றால், தான் மிகவும் சிரமப்பட்டிருப்பேன் எனக் கூறிய முதியவர் மிகவும் நன்றி கூறி வாழ்த்தினார்.

அவரிடம் நான் சொன்னேன்: “வழக்கமாக என்னைப் பணிக்கு அழைத்துச் செல்பவரும், மற்றொரு நண்பரும் இன்று பணிக்கு வராமல் இருக்க, உங்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் இன்று என்னை உங்களுடன் சேர்த்துள்ளான் போலும். அனைத்தும் அல்லாஹ்வின் திட்டப்படியே நடந்திருக்கிறது.”

அலுவலகம் வந்ததும் வாட்ஸ்ஆப் திறந்தபோது மதிப்பிற்குரிய ஆலிம் ஒருவரிடமிருந்து நபிமொழி ஒன்று வந்திருந்ததை வாசித்தபின் உறைந்து அமர்ந்திருந்தேன்.

“இவ்வுலகில் உங்களில் ஒருவர் சகோதர நம்பிக்கையாளரின் துன்பமொன்றை நீக்குவாரேயானால், அல்லாஹ் தீர்ப்பு நாளில் அவருடைய துன்பமொன்றை நீக்குவான். உங்களில் ஒருவர் தேவையுள்ள ஒருவரின் தேவைகளை நிறைவு செய்வாரேயானால் அல்லாஹ் அவருடைய துன்பங்களை இம்மையிலும் மறுமையிலும் நிவர்த்தி செய்வான். ஒரு முஸ்லிமை பாதுகாப்பவரை அல்லாஹ் இம்மையிலும், மறுமையிலும் பாதுகாக்கின்றான். அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவர் தன் சகோதரனான அல்லாஹ்வின் அடியாருக்கு உதவி செய்து கொண்டிருக்கும் வரை அல்லாஹ் அந்த அடியாருக்கும் உதவி செய்து கொண்டே இருப்பான்”  —  அபூஹுரைரா (ரலி), முஸ்லிம்

ஆம்! அனைத்தும் அல்லாஹ்வின் திட்டப்படியே நடக்கிறது!

– சுல்தான்