தோழியர் – 6 கான்ஸா பின்த் அம்ரு خنساء بنت عمرو

கான்ஸா பின்த் அம்ரு

خنساء بنت عمرو

மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சி பெறுவதற்கு முன்பு அரபுகள் மத்தியில் போதையூட்டும் விஷயம் ஒன்று இருந்தது. கவிதை! அதில் மிகச் சிறந்து விளங்கினார்கள் அவர்கள். வரலாறு பகர, காதல் சொல்ல, கொஞ்ச, திட்ட, சண்டை போட, போர் புரிய என்று எதற்கெடுத்தாலும் கவிதை; பாடல். அதுவும் அதன் வார்த்தைகளும் அமைப்புகளும் ஏனோதானோ என்றெல்லாம் கிடையாது. சிறந்து விளங்கக்கூடியவை. இப்படியிருந்த நிலையில் குர்ஆன் இறங்க ஆரம்பித்ததா, கவிதைகளுக்கான முக்கியத்துவம் முஸ்லிம்கள் மத்தியில் குறைந்து போனது.

ஒருவிதத்தில் பார்க்கப்போனால், குர்ஆன் இறை வேதம்தான் என்று அவர்கள் உறுதியுடன் அழுத்தந்திருத்தமாய் நம்புவதற்குக் கவிதைகளுடனும் பாடல்களுடனும் அவர்களுக்கு இருந்த புலமை பெரும் உதவி புரிந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இணையற்ற குர்ஆன் வசனங்களின் மொழி ஆளுமை அப்படி.

இஸ்லாத்தில் அவர்கள் இணைய ஆரம்பித்ததும் கவிதைகளின் முக்கியத்துவம்தான் குறைந்து போனதே தவிர, கவிஞர்களும் கவிதாயினிகளும் இருக்கத்தான் செய்தனர். அற்ப விஷயங்கள், அனாச்சாரங்கள், வீண் ஆரவாரம், இணைகற்பித்தல் ஆகியவை கலவாத கவிதைகளுக்கும் பாடல்களுக்கும் தடையேதும் ஏற்படுத்தப்படவில்லை என்றே அறிய முடிகிறது. ஏனெனில் ஹஸ்ஸான் இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹு நபியவர்களின் அன்பிற்குரிய கவிஞராய் விளங்கியிருக்கிறார். இஸ்லாத்திற்கு எதிராய்க் கவிதைகளும் பாடல்களும் புனைபவர்களை அவர்களது பாணியிலேயே எதிர்கொள்ள இந்தத் தோழரைத்தான் கட்டளையிட்டுள்ளார்கள் நபியவர்கள்.

ஹஸ்ஸானைப்போல் கவிதையில் சிறந்து விளங்கிய பெண் கவிஞர் ஒருவர் இருந்தார். கான்ஸா! இவரது பாடல்களைக் கேட்க நேரிட்ட நபியவர்கள், “வாராய், கனஸ்!“ என்று உரிமையுடன் அழைத்து இஸ்லாத்திற்கு ஆதரவாய்ப் பாடல் இயற்றும்படி கேட்டிருக்கிறார்கள் என்று அறிவிக்கின்றன சில வரலாற்றுக் குறிப்புகள்.

யார் இந்த கான்ஸா?

oOo

ஹுதைபிய்யா உடன்படிக்கை நிகழ்வுக்குப்பின் மதீனாவில் நிறைய மாற்றங்கள். சுற்றுப்புறங்களிலும் அரேபியாவின் இதர பகுதிகளிலிருந்தும் மக்கள் கோத்திரம் கோத்திரமாய் வந்து முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தில் இணைந்து கொண்டிருந்தனர். பனூ ஸுலைம் என்றொரு கோத்திரம். இக் கோத்திரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அல்-அப்பாஸ் இப்னு மிர்தாஸ் என்பவர் தலைமையில் வந்து இஸ்லாத்தை ஏற்றனர். இந்த பனூ ஸுலைமின் குழுவொன்றுடன் சேர்ந்து வந்து நபியவர்களிடம் பிரமாணம் அளித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர் கான்ஸா பின்த் அம்ரு, ரலியல்லாஹு அன்ஹா!

அழகும் நற்குணங்களும் நாவன்மையும் இருந்தன கான்ஸாவிடம். கூடவே கவித்திறனும். தமது இளைய பிராயத்திலேயே இவர் கவிதை பாடத் துவங்கியிருக்கிறார். அவை இரண்டு மூன்று வரிகள் மட்டுமே அமைந்த குறுங்கவிதைகள். ஆனால் பிறகு அவரது வாழ்வில் சோகம் ஒன்று பலமாய் வந்து தாக்கியது. அதுதான், அந்த நிகழ்வுதான் அவருள் புதைந்திருந்த கவித் திறமையை முழுவதுமாய் வெளியே கொண்டுவந்திருக்கிறது.

கான்ஸா பின்த் அம்ருவுக்கு முஆவியா, ஸஃக்ர் என்று இரண்டு சகோதரர்கள். இஸ்லாத்திற்கு முந்தைய காலங்களில் அரபு கோத்திரங்களுக்கு இடையே ஒட்டகம் மேய்ப்பது முதல் நிலப்பிரச்சினை வரை, காரணம் காரணமின்றி ஏதேனும் பகைமை ஏற்பட்டுப் போகும். பிறகு தலைமுறைக்கும் சண்டை, போர் என்று தலை வாரிக்கொள்வதுபோல் தலை கொய்து வாழ்ந்து மடிந்து கொண்டிருந்தார்கள். அப்படியான ஏதோ ஒரு குலச் சண்டையில் கான்ஸாவின் சகோதரர் முஆவியா கொல்லப்பட்டார். அதற்குப் பழிவாங்க போருக்குப் போனார் மற்றொரு சகோதரர் ஸஃக்ர். ஆனால் அதில் அவருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டுப்போய், அவரும் இறந்துபோனார்.

சொல்லி மாளாத துக்கம் ஏற்பட்டுப்போனது கான்ஸாவுக்கு. தமது சோகத்தை, நீண்ட இரங்கற்பா ஒன்று எழுதி இறக்கிவைத்தார் அவர். அது என்னவென்றால் மிகவும் சிறப்பு ஏற்பட்டுப்போனது அந்தக் கவிதைக்கு.

أعينـيّ جُودَا ولا تَجمدا
ألا تبكيان لصخرَ الندَى
ألا تبكيان الجريّ الجميل
ألا تبكيان الفتَـى السيدَا
طويل النجاد عظيمُ الرماد
وسادَ عشيرتَـه أمـردَا

என் கண்களே, கண்ணீர் சிந்துங்கள் தாரளமாய்!
பெருந்தன்மையாளர் ஸஃக்ருக்காக விம்ம மாட்டீர்களா?
துணிவானவர், உயரமான அழகிய இளைஞர்,
தலைமைத் தகுதி அமைந்துகிடந்தவர்,
தம் மக்களை தலைமை தாங்கியவர்,
அவருக்காக கண்ணீர் சிந்த மாட்டீர்களா?

என்று தமிழில் மொழிபெயர்த்து வாசித்தால் நமக்குச் சுமாராகத் தெரியும் இக்கவிதை, அரபு மொழி வார்த்தை, வாக்கிய அமைப்புப்படி மிகப் பிரமாதமாய் அமைந்து விட்டிருக்கிறது. அரபு மொழியின் இலக்கியவாதிகள் கான்ஸாவின் பாடல்களைக் கண்டுவிட்டு, அப்பொழுதும் சரி, அதற்குப் பிறகும் சரி, எந்தப் பெண்ணும் கவிதையில் இந்தளவு சிறந்து விளங்கியதில்லை என்று உச்சுகொட்டி மெச்சுகிறார்கள்.

இப்படியெல்லாம் கவிச்சிறப்பு பெற்றிருந்த கான்ஸா, இஸ்லாத்தில் நுழைந்ததும் வரலாற்றில் இடம் பெற்றுப்போனதோ வேறொரு சிறப்பால்!

oOo

தோழர்கள் தோழியர் தொடரின் முந்தைய அத்தியாயங்களில் பார்த்துக்கொண்டே வந்த காதிஸிய்யாப் போர்க் களத்திற்கு நாம் மீண்டும் செல்ல வேண்டியிருக்கிறது. பெண்களும் போர்க் களங்களுக்குச் செல்வார்கள், கூடாரங்களில் தங்கியிருப்பார்கள் என்று அஸ்மா பின்த் யஸீத் ரலியல்லாஹு அன்ஹா வரலாற்றிலேயே பார்த்தோமல்லவா? அதைப்போல் தாமும் தம்முடைய நான்கு மகன்களுடன் களத்திற்குச் சென்றிருந்தார் கான்ஸா. உதய்ப் எனும் இடத்தில் பெண்களுக்கான கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அங்குதான் பெண்கள் தங்கியிருந்தனர்.

உக்கிரமான காதிஸிய்யாப் போர் நான்கு நாள் நடைபெற்றது என்றும், அந்தப் போரின் முதல் நாள் “அர்மாத் நாள்”, இரண்டாம் நாள் “அஃக்வாத் நாள்”, மூன்றாம் நாள் “இமாஸ் நாள்”, நான்காம் நாள் “காதிஸிய்யா நாள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளன என்பதையும் தோழர் ஜரீர் ரலியல்லாஹு அன்ஹுவின் வரலாற்றில் வாசித்திருப்பீர்கள்.

முதல் நாளான அர்மாத். அன்றைய இரவு நேரம் ஓய்வுக்கு வந்திருந்தது. தமது கூடாரத்தில் தம் மகன்களுடன் அமர்ந்திருந்தார் கான்ஸா. மகன்களிடம் மிகத் தெளிவாய் அழகிய உரை ஒன்று நிகழ்த்தினார். “மகன்களே! நீங்கள் சுயவிருப்பத்துடன் இஸ்லாத்தில் இணைந்தீர்கள்; புலம் பெயர்ந்தீர்கள். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை. அவன் மீது ஆணையாக! நீங்கள் அனைவரும் ஒரே தகப்பனுக்குப் பிறந்தவர்கள். உங்களின் தாயும் ஒருவரே. நான் உங்களின் தந்தைக்குத் துரோகம் இழைத்ததில்லை. உங்கள் தந்தையின் சகோதரர்களுக்கும் அவமானம் ஈட்டித் தந்ததில்லை. உங்களின் பெருமதிப்பிற்கும் குலமரபிற்கும் இழிவு ஏற்படுத்தியதில்லை”

“அல்லாஹ்வின் எதிரிகளை எதிர்த்துப் போரிடும் முஸ்லிம்களுக்கு உயர்ந்த, ஏராளமான நற்கூலிகளை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். மறுமையின் நிரந்தரத் தங்குமிடம் தற்காலிகமான இவ்வுலகைவிட மிக மேலானது என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்றவர் குர்ஆனின் மூன்றாவது சூராவான ஆலு இம்ரானின் இறுதி வசனத்தை அவர்களுக்கு நினைவூட்டினார்.

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களைச்) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!” என்று அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் உதவிகொண்டு, நீங்கள் நாளை காலை ஆரோக்கியத்துடன் எழுவீர்களேயானால், விரைந்து சென்று எதிரிகளுடன் போரிடுங்கள். திடமான சித்தம் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் எதிரிகளை எதிர்கொள்ள அல்லாஹ்விடமே உதவி நாடுங்கள். போர் மும்முரமடைவதைக் காண்பீர்களானால் துணிவுடனும் பின்வாங்காமலும் சண்டையிடுங்கள். அளவற்ற வெகுமதியும் செல்வமும் மறுமையில் நிரந்தரமாய் அடைவீர்கள்.”

புதிதாய்ப் பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுவதுபோல் மகன்களுக்கு உபதேசம் அளித்துவிட்டு உறங்கச் சென்றார் அவர்.

இரண்டாம் நாளான அஃக்வாத். பொழுது விடிந்தது.

தாய் சொல்லைத் தட்டாத புதல்வர்கள் நால்வரும் களம் நோக்கி விரைந்து ஓடினார்கள். அன்றைய நாள் மேலும் கடுமையான யுத்தம் நிகழ்ந்தது. முஸ்லிம்களின் அணியில் வீராவேசத்துடன் போரிட்டார்கள் இந்த நான்கு சகோதரர்களும். குர்ஆனின் வசனங்களை உச்சரித்துக் கொண்டே இருந்தன அவர்களின் உதடுகள். அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உத்வேகத்தை அளித்தன அவை. அன்றைய தினம் போர் ஓய்விற்கு வந்தபோது அந்நால்வரும் உயிர்த்தியாகிகள் ஆகியிருந்தார்கள்.

கான்ஸாவின் கூடாரத்திற்குச் செய்தி வந்து சேர்ந்தது. “என் புதல்வர்களை உயிர் தியாகிகளாக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். என் இறைவன் அவனது கருணையைக் கொண்டு மறுமையில் என்னையும் அவர்களுடன் இணைத்து வைப்பான் என நம்புகிறேன்.” அவ்வளவுதான்.

தம் சகோதரர்களின் இழப்பின்போது சோகம் தந்த அழுத்தத்தில் இரங்கற்பா உச்சரித்த உதடுகள் இப்பொழுது இறை உவப்பை மட்டுமே வேண்டி இறைஞ்சின. அவரது இலக்கு மாறிப்போயிருந்தது. நான்கு புதல்வர்களையும் இஸ்லாத்திற்காக அள்ளித் தந்துவிட்டு அமைதியுடன் இருந்தார் அவர்.

கலீஃபா உமர் (ரலி), ஆட்சிப் பொறுபேற்றதிலிருந்து, காதிஸிய்யாவில் இன்னுயிர் நீத்த தியாகிகளான கன்ஸாவின் நான்கு புதல்வர்களையும் அவர்தம் தாயையும் நினைவில் கொண்டு, உதவித் தொகை வழங்கி வந்தார். உயிர் வாழ்ந்த வரைக்கும் ஆண்டு தோறும் 800 திர்ஹம் உதவித் தொகையாகப் பெற்று எஞ்சிய வாழ்நாளைக் கழித்து மறைந்தார் அந்த வீரத் தாய், கான்ஸா பின்த் அம்ரு.

ரலியல்லாஹு அன்ஹா!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

<தோழியர் - 3 | தோழியர் - 4>