சட்டத் தீர்ப்புக்கு அப்பால்…

சட்டத் தீர்ப்புக்கு அப்பால்...
Share this:

உலகில் தொண்ணூறு நாடுகளில் மரண தண்டனை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகிலுள்ள பதினோரு நாடுகளில் ராணுவக் குற்றம் தவிர பிற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப் படுவதில்லை. இவை தவிர மேலும் முப்பத்திரண்டு நாடுகளில் மரண தண்டனையைச் சட்டப் புத்தகத்தில் வைத்திருந்தாலும் அதை நடைமுறைப் படுத்துவதில் அதீத எச்சரிக்கை செலுத்துவதால் பெரும்பாலும் தீர்ப்புகளில் மரணதண்டனைகள் விதிக்கப் படுவதில்லை. ஆக மொத்தத்தில், குற்றங்களுக்காக விதிக்கப்படும் தண்டனைகளில் “மரண தண்டனை” மட்டும் மனித உயிர்களின் மதிப்பைக் கருதி, உலக நாடுகள் அரிதிலும் அரிதாகவே பயன்படுத்துகின்றன.

!–more–

இந்தியாவில் இத்தண்டனை இன்னும் நடைமுறையில்தான் இருக்கிறது. “அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்” என உச்ச நீதிமன்றம் 1983-ல் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் அதற்கான வரையறையும் செய்துள்ளது. அவ்வாறு வழங்கப்படும் தண்டனைகளைக்கூட மறுபரிசீலனை செய்ய வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அதற்கும் மேல் ஜனாதிபதியிடம் கருணை மனு சமர்ப்பிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

எக்காரணம் கொண்டும் அப்பாவிகள் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதும், குற்றம் சாட்டப்பட்டவரை மரண தண்டனையிலிருந்து விடுவிக்க ஏதாவது ஒரு காரணம் இருந்தாலும் அதைப் பயன்படுத்தி அக்குற்றவாளியை மரண தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதும் எழுதப்படாத சட்டங்கள் என்றே சொல்லலாம். இதன் காரணத்தாலேயே பாராளுமன்றத் தாக்குதலில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டு “மரண தண்டனை” விதிக்கப்பட்ட அஃப்சல் குருவிற்கு இதுவரை அத்தண்டனையை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது.

சுருக்கமாக, குற்றங்களுக்கான தண்டனைகளில் “மரண தண்டனை”க்குரிய குற்றங்களில் மட்டும் 100 க்கு 100 உறுதியான அளவில் குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் மிகத் தெளிவாக சமர்ப்பிக்கப்பட்டாலே மரண தண்டனைகள் நிறைவேற்றப் படுகின்றன. இத்தனை சட்டத்திட்டங்களும் விதிமுறைகளும் இருந்தாலும், “மரண தண்டனை என்பது மனித உரிமைகளுக்கு எதிரானது; அதைத் தடை செய்ய வேண்டும்” எனப் பல மனித உரிமை ஆர்வலர்கள் இப்பொழுதும் போராடி வருகின்றனர்.

பல்வேறு ஆதாரங்கள், சாட்சியங்கள் மற்றும் வழக்கு விவாதங்களைக் கவனமாக ஆராய்ந்து, நீதிமன்றங்களால் தீர்ப்பளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை அண்மைக் காலத்தில் குறைந்திருப்பதாகப் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டும் அதே வேளையில், வழக்கு, நீதிமன்றம் போன்ற அனாவசிய(?) அலைச்சல்கள் எதுவுமில்லாமல், “என்கவுண்டர் என்ற பெயரில் காவல்துறையினராலேயே ‘மரண தண்டனை’ விதிக்கப்பட்டு தீர்த்துக் கட்டப்படும் சட்டத்துக்குப் புறம்பான கொலை நிகழ்வுகள் அண்மையில் மிகவும் அதிகரித்துள்ளன” என மனித உரிமை அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன.

மனித உயிர்களுக்கான எவ்வித மனிதாபிமானமோ இரக்கமோ இன்றி காவல்துறையால் அநியாயமாக நிகழ்த்தப்படும் என்கவுண்டர் கொலைகளுக்குக் காவல்துறை தரப்பிலிருந்துச் சொல்லப்படும் காரணங்களை இப்படிச் சுருக்கலாம்: “அவன் என்னைச் சுட்டான்; நான் பதிலுக்குச் சுட்டேன். ‘பொட்’டுனு போய்ட்டான்”. திரைக்கதை, வசனம் வெவ்வேறாக இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ‘கதை’ மட்டும் இதுதான்.

உண்மையான என்கவுண்டர் என்பது ஒரு விபத்தைப் போல நிகழ்ந்திருக்க வேண்டும். ஓரிரண்டு சம்பவங்களைத் தவிர மற்றதெல்லாம் அரங்கேற்றப்பட்ட நாடகங்கள்தாம் என்பதற்கு அக்கொலைகளுக்குப் பிறகு காவல்துறை வெளியிடும் அறிக்கைகளில் இருக்கும் முரண்பாடுகளே சாட்சிகளாக இருக்கின்றன.

ஒவ்வொரு என்கவுண்டர் கொலைக்குப் பிறகும் அதுபற்றி முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பியும் அதன் உண்மையான காரணங்கள் வெளிவருவதே இல்லை. பொதுமக்களின் மனங்களில் வலியப்புகுத்தப் படும் ஊகங்கள்:

  • குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு போதிய ஆதாரங்களைக் காவல்துறையினரால் திரட்ட முடியாமல் இருந்திருக்கலாம்.
  • அப்படி வழக்குத் தொடரப்பட்டாலும் குற்றவாளி தமது செல்வாக்கைப் பயன்படுத்தி அந்த வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடலாம்.குற்றவாளியைத் தப்பிக்கச் செய்யும் அளவிற்கு சட்டங்களிலும் நீதித்துறை நடைமுறைகளிலும் ‘ஓட்டை’கள் இருக்கலாம்.
  • குற்றவாளியின் வாக்குமூலத்தின் மூலம் அவருடன் தொடர்பு கொண்டிருந்த சில ‘பெருந்தலை’களின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறலாம். அரசியல் காரணங்களுக்காக சிலருக்குப் பிடிக்காத நபர்கள் இவ்வாறு நிரந்தரமாகக் காணாமலாக்கப் படலாம்.
  • உண்மையான காரணம் எதுவாக இருந்தாலும், திட்டமிட்டுச் செய்யப்படும் போலி என்கவுண்டர் கொலைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டம், குற்றவியல் சட்டங்கள் மற்றும் மனித உரிமைக்கு எதிரான செயல் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால் மாண்புமிகு இந்தியப் பொதுஜனம் இந்த மனித உரிமை மீறல்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பொதுமக்களிடம் இவ்வாறு இயல்பாக எழக்கூடிய நியாய உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்து இதுபோன்ற அநீதியான கொலைகளையும் ‘நியாயம்தானே’ என ஏற்றுக் கொள்ளச் செய்வதில் ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சந்தேகத்திற்கிடமான என்கவுண்டர் கொலைகளைப் பற்றிய செய்திகளை வெளியிடும் புலனாய்வு(?) இதழ்கள், கொல்லப்பட்ட அப்பாவி/களுக்கு, ‘போலீசாரால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி’, ‘குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய தீவிரவாதி’ ‘தீவிரவாத கும்பலின் தலைவன்’, ‘பல கொலைகளைச் செய்த ரவுடி’ போன்ற தயார் நிலையிலுள்ள முன்முடிவு அடைமொழிகளை அள்ளி வீசுவதால், அவற்றைப் படிக்கும் உண்மை நிலவரம் அறியாத மக்கள், ‘உயிர் வாழத் தகுதியற்ற ஒருவனைத்தானே போலீசார் கொன்றிருக்கிறார்கள்’ என்ற தவறான முடிவுக்கு வந்து அச்சம்பவத்தை அதோடு மறந்து விடுகிறார்கள்.

என்கவுண்டர் மூலம் அநியாயமாகக் கொல்லப்படுபவர்களும் அவர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினர்களும் பத்திரிகைகளாலும் காவல்துறையினாலும் என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்களைக் குறித்து முன்னமேயே “கொல்லப்பட வேண்டியவர்கள் தான்” என்ற முன்முடிவுகள் வலிந்து உருவாக்கப்படுவதால், அவர்கள் பொதுமக்களின் பரிதாபத்திற்கு அப்பாற்பட்டவர்களாக ஆகி விடுகின்றனர். இதன் காரணத்தால் பொதுமக்களிடையே காவல்துறையினரின் செயல்பாடுகளைக் குறித்து தீவிரக் கேள்விகள் எழுப்பப்படாததால் போலி என்கவுண்டரை நிகழ்த்தும் காவல்துறையிலுள்ள கறுப்பு ஆடுகளுக்குக் குளிர் விட்டுப் போகின்றது.

“நீதிமன்றங்கள் கவனமாகப் பரிசீலித்து முடிவுக்குspan வரவேண்டிய பொறுப்பை, ஊடகங்கள் கையிலெடுத்துக் கொண்டு, வழக்கு-விசாரணை போன்றவற்றை வெட்டிவேலையாக்கி, தலைப்புச் செய்திகளில் முன்முடிவுத் தீர்ப்புகளைத் தீட்டி விடுவதன் மூலம் அப்பாவிகளை மட்டுமல்லாது நீதி, நியாயம் ஆகிவற்றையும் சேர்த்தே புதைகுழிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். “காவல்துறையும் ஊடகங்களுமே தீர்ப்புகளையும் தண்டனைகளையும் வழங்க முடியுமென்றால் நீதித்துறைக்காக இந்திய அரசு செலவிடும் கோடிக்கணக்கான ரூபாய்களை மிச்சம் பிடிக்கலாமே?” என்று கேள்வி எழுப்புகிறார் மனித உரிமை ஆர்வலரும் வழக்குரைஞருமான பிஜோ ஃபிரான்சிஸ்.

பிரிட்டன் காவல்துறைத் தலைவராக இருந்த இயன் ப்ளேர் சமீபத்தில் தமது பதவியை ராஜினாமாச் செய்தார். 2005-ம் ஆண்டு ப்ளேர் இந்தப் பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே லண்டன் காவல்துறை, தீவிரவாதி என்ற தவறான சந்தேகத்தில் பிரேசில் நாட்டவர் ஒருவரை ‘என்கவுண்டர்’ முறையில் சுட்டுக் கொன்றது. அதற்கு ப்ளேர்தான் காரணமாக இருந்தார் என்று எழுந்த சர்ச்சை, இன்று அவரது பதவிக்கு வேட்டு வைக்கும் அளவிற்குச் சென்றிருக்கிறது.

ஆனால் இந்தியாவில் நிலைமை வேறு. அதிகமான கொலைகளைச் செய்தவர்கள் ‘என்கவுண்டர் நிபுணர்’ எனப் போற்றப் படுகின்றனர். ராஜ்பிர் சிங் 56 கொலைகள், பிரதீப் ஷர்மா 104 கொலைகள், தயா நாயக் 82 கொலைகள், என கொலைகளின் எண்ணிக்கை கூடக்கூட, கொலையாளி அதிக ‘நிபுணத்துவம்’ உடையவராக – ஒரு ‘ஹீரோ’ ரேஞ்சுக்கு – மதிக்கப் படுவது இந்தியாவில் மட்டுமே நடக்கக்கூடிய அவலங்களில் ஒன்றாகும். இதில் பிரதீப் ஷர்மாவை ‘ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்’ என வர்ணித்து ‘டைம்ஸ்’ பத்திரிக்கை சிறப்புக் கட்டுரை ஒன்று வெளியிட்டது. கொலைகளைச் செய்தே கோடிகளைக் குவித்த தயா நாயக்கின் வாழ்க்கை திரைப்படமாகவும் எடுக்கப் பட்டது.

‘கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான்’ என்று தமிழ்ப் பழமொழி ஒன்று சொல்கிறது. அதை உண்மைப் படுத்துவதுபோல ‘என்கவுண்டர் நிபுணர்கள்’ என்று பெயர் பெற்ற ராஜ்பிர் சிங்கும் மோகன் சந்த் சர்மாவும் சந்தேகத்திற்கிடமான முறையில் கொல்லப் பட்டிருக்கின்றனர். ராஜ்பிர் சிங்கைக் கொன்ற துப்பாக்கி, சக அதிகாரியான அஷோக் சியோரன் என்பவருக்கு வழங்கப் பட்டிருந்தது. அவர் அந்தத் துப்பாக்கியைச் சென்ற ஆண்டு ஒரு குற்றவாளியைத் துரத்திச் சென்றபோது சோளக்கொல்லை ஒன்றில் ‘தொலைத்து’ விட்டதாகத் தெரிவித்திருந்தார். சர்மாவைக் கொன்ற துப்பாக்கி எது என்பதைக் காவல்துறை தெரிவிக்கவில்லை என்றபோதிலும், “அவர் பின்பக்கமிருந்து வெகு அருகாமையில் சுடப்பட்டுள்ளார்” என்றும் அந்தச் சமயத்தில் சக காவல்துறை அதிகாரிகளைத் தவிர வேறு யாரும் அவரது பின்புறத்தில் நின்றிருக்க வாய்ப்பில்லை என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஊடகங்கள் வழக்கம்போல கொல்லப்பட்ட அதிகாரிகளை வீரspan-தீரர்கள் என்று போற்றிப் புகழ்ந்து, அவர்கள் கொல்லப்பட்டது இந்தியாவுக்குப் பேரிழப்பு எனப் புல்லரித்துச் செய்திகள் வெளியிட்டன. அவர்களின் குடும்பத்தினர் கதறி அழும் காட்சிகள் தொலைக் காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டன. ஒரு குடும்பம் தனது தலைவனை இழப்பது, ஒரு மனைவி தன் கணவனை இழப்பது, சிறு பிள்ளைகள் தம் தந்தையை இழப்பது, வயது முதிர்ந்த பெற்றோர் தம் மகனை இழப்பது மிக பரிதாபமான ஒன்றுதான். ஈடு செய்ய முடியாத இழப்புதான்.

அதே இழப்பின் வலியும் துயரமும் என்கவுண்டர் என்ற பெயரில் அநியாயமாகக் கொல்லப்பட்ட அப்பாவிகளின் குடும்பங்களுக்கும் பொருந்தும்தானே?p

மிக நிச்சயமான, மரண தண்டனைகளுக்குரிய வழக்குகளுக்கு அரிதினும் அரிதாகவே மரண தண்டனையை விதிக்கும் அளவிற்கு இந்திய நீதிமன்றங்கள், அப்பாவிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற உயரிய நோக்கில் செயல்படும் பொழுது, தங்களுக்கு வேண்டாதவர்களைச் சர்வ சாதாரணமாக எவ்விதச் சட்ட சிக்கலும் இன்றி, காவல்துறையினர் போட்டுத் தள்ளுவதற்கு, அவர்களின் மீதான போலி “ஹீரோயிச” உணர்வு மக்களிடையே விதைக்கப்படுவதும் சம்பவத்தின் உண்மைத் தன்மையினை ஆய்ந்துப் பார்க்காமல், அவ்வாறு என்கவுண்டர்கள் மூலம் தீர்த்துக் கட்டும் காவல்துறையினரை “ஹீரோ”வாகப் பார்க்கும் மக்களின் பொறுப்பற்றப் போக்குமே காரணமாகும். அதோடு, மாநில, மத்திய அரசுகள், நீதிமன்றங்கள் இத்தகைய மனித உரிமை, சட்ட மீறல்களைக் கண்டும் காணாமல் இருப்பது இக்கொடூரச் செயல்களுக்கு அவர்களது மறைமுக ஆதரவைக் காட்டுவது போல இருக்கிறது.

இன்று நாட்டில் நிலவும் காவல்துறையினரின் இத்தகைய மனித உயிர்களின் மீதான கட்டுப்பாடற்ற போக்குக் களையப்பட வேண்டுமெனில், நாட்டில் எங்கு ஒரு என்கவுண்டர் நடத்தப்பட்டாலும் அது தொடர்பான நேர்மையான விசாரணை, உச்சநீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளின் குழுவினாலோ தேவையெனில் சிபிஐ மூலமோ மூன்று மாத காலத்திற்குள் நடத்தப்பட வேண்டும் என்றொரு சட்டம் கொண்டு வர வேண்டும். அந்த விசாரணை முடியும்வரை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி ஊதியமில்லாத பணிவிலக்கம் செய்யப்பட்டு, விசாரணைகளின் மூலம் அவர் குற்றமற்றவர் என்று நிரூபணமான பிறகே மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் கட்டுப்பாடற்ற காவல்துறையின் அநியாயப் போக்கும் அப்பாவிகள் சுட்டுக் கொல்லப் படுவதும் கட்டுப்படுத்தப்படும். பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடுவது உறுதிபடுத்தப்படும்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.