தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள் – 3

வெடித்துச் சிதறும் தீப்பிழம்பாய் …!

சி.எஸ்.டியில் தாக்குதல் நடந்த உடனேயே மெட்ரோவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அவசரகதியில் காவல்துறை இயங்கியது. அதேநேரத்தில் மெட்ரோவில் இருந்த ஒரு பத்திரிக்கையாளர் அங்கு நடந்த சம்பவத்தை விவரித்தார்: “ஒரு காவல்துறை அதிகாரி, அனைவரையும் உடனடியாக அங்கிருந்து விலகிச் செல்லக் கட்டளையிட்டார். இதனைக் கேட்ட அனைவரும் அங்கிருந்து விலகிக் கொண்டிருந்தனர். ஆனால் இருவர் மட்டும் தாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்து விலகவில்லை. இருவரில் ஒருவர், தனது உடையினுள்ளிருந்து துப்பாக்கியை எடுத்துக் காவல்துறை அதிகாரியை நோக்கிச் சுட்டார். மறுநிமிடம், அந்த அதிகாரி குண்டடிபட்டுக் கீழே விழுவதைக் கண்டேன். மறுநொடியில் இருவரும் காணாமல் மறைந்தனர்”.

 

 

அவ்விருவரும் “கலாஷ்நிக்கோவ்(ஏ.கே.47) துப்பாக்கியை உபயோகித்துத் தாறுமாறாகச் சுட்டதாக”க் காவல்துறை கூறும் கஸபோ இஸ்மாயீலோ அல்ல. அவ்வாறெனில், கஸபையும் இஸ்மாயீலையும் தவிர்த்து, வேறு சில கொலையாளிகளும் சி.எஸ்.டியில் இருந்துள்ளனர். கொலையாளிகள் எத்தனை பேர்?. தாஜிலும் நரிமன் ஹௌஸிலும் தாக்குதல் நடத்தியவர்களை விட அதிகமான தீவிரவாதிகள் சி.எஸ்.டியில் இருந்திருக்க வேண்டும். கொலையாளிகளின் முக்கியக் குறி கார்கரே ஆகவும் அவரைத் தீர்த்துக் கட்டத் தேர்ந்தெடுத்த இடம் சி.எஸ்.டி/காமா மருத்துவமனை வளாகமாகவும் இருந்திருக்க வேண்டும். தாஜிலும் ஓபராயிலும் நடந்தத் தாக்குதல், ஊடகங்களின், பொதுமக்களின், காவல்துறையின் கவனத்தைத் திசைதிருப்பும் வேலையாக இருந்திருக்கலாம்.

சி.எஸ்.டியில் தாக்குதல் நடந்த மறுநிமிடம் மெட்ரோவிற்கருகில் துப்பாக்கிச் சூடு நடக்கும் காட்சிகளைத் தொலைகாட்சிகள் ஒளிபரப்பு செய்திருந்தன. “காவல்துறையோடு தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர்” என்றும் “அதில் கார்கரேவிற்குக் குண்டடி பட்டது” எனவும் முதலில் செய்தி வந்தது. கார்கரே அணிந்திருந்த இளநீலநிறச் சட்டையைப் போன்று உடையணிந்திருந்த ஒருவரை வண்டியில் ஏற்றும் காட்சியும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஆனால், அந்த உடலில் கார்கரேயின் முகத்தில் இருந்தது போன்ற காயங்களின் வடுக்கள் இல்லாமல் இருந்தது. ஆரம்பத்தில் கார்கரே கொல்லப்பட்டதாகக் காட்டப்பட்ட காட்சியும் செய்தியும் திடீரென காணாமல் போனது. பிறகு, காமா மருத்துவமனைக்கு அருகில் உள்ள இருளில் ஆளரவமற்ற இருளில் வைத்துக் கார்கரே கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. சாட்சியின் வாக்குமூலப்படி, கஸபும் இஸ்மாயீலும் காலை மணி 9.55க்கு சி.எஸ்.டியில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மிகச் சரியாக அதே நேரத்தில் சி.எஸ்.டிக்கு அருகிலுள்ள சபர்பன் டெர்மினலின் அருகில் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவ்வாறெனில், சி.எஸ்.டியில் நான்கு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஆனால், காவல்துறையின் விளக்கப்படி, சி.எஸ்.டியில் இருவர் மட்டுமே தாக்குதல் நடத்தியுள்ளனர். எனில், சபர்பன் டெர்மினலின் அருகில் தாக்குதல் நடத்திய அவ்விருவர் யாவர்? “காமா மருத்துவமனையில் துப்பாக்கி சூடு நடத்தியர்கள் தூய மராத்தி மொழியில் பேசினர்” என்ற மருத்துவமனை ஊழியரின் சாட்சி வாக்குமூலத்தையும் இதனுடன் இணைத்துப் பார்த்தால் சில விஷயங்கள் கூடுதலாகத் தெளிவாகின்றன.

கார்கரேக்கு மும்பை காவல்துறையிலேயே அளவுக்கதிகமான எதிரிகளை மாலேகோன் வழக்கு விசாரணை உருவாக்கியிருந்தது என்ற உண்மையை இங்கு நினைவில் நிறுத்த வேண்டும்.

பணிநீக்கம் செய்யப்பட்டவரும் அதன் பின்னர் சிவசேனாவில் இணைந்தவருமான என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் சச்சின் வாஸா இதில் முக்கியமானவர்.

சிவசேனாவில் இணைந்த சச்சின் வாஸாதான் கார்கரேக்கு எதிரான பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கியிருந்தார். கட்கூப்பர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட காஜா யூனுஸ், காவல்துறை கஸ்டடியில் கொல்லப்பட்டு அவரது உடலை சிதைத்து மறைத்த வழக்கில் சச்சின் வாஸா குற்றம் சுமத்தப்பட்டிருந்தார் (காஜா யூனுஸ் என்பவர், “கட்கூப்பர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி” என யு.எ.யில் இருந்து கைது செய்து கொண்டுவரப்பட்ட நிரபராதியாவார்). யூனுஸின் உடலையும் ஆதாரங்களையும் சிதைத்த வழக்கில் மும்பை காவல்துறையில் சச்சின் வாஸாவோடு மேலும் சிலரும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தனர். இதில் முக்கியமான மற்றொருவர், ஸலஸ்கருடன் பணிபுரிந்திருந்த ப்ரதீப் ஷர்மாவாகும். கள்ளக்கடத்தல், சதியாலோசனை, ஆள்கடத்தல், நிழலுலக மாஃபியாக்களிடமிருந்து இலஞ்சம் பெறல் எனத் தொடங்கி பல்வேறு கிரிமினல் வழக்குகளில் குற்றவாளியான ஷர்மா, அண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

தயா நாயக் என்பவர், இதே குற்றச்சாட்டுகளில் பிடிக்கப்பட்ட மற்றொரு அதிகாரியாவார். ஊழல் அதிகாரிகளான இவர்களுக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்டி வழங்கியவர் ஸலஸ்கர் என்ற சந்தேகம் இவர்களுக்கு இருந்தது. சர்வீஸில் இருக்கும் பல பிரமுகர்களும் இவரின் நண்பர்களாவர். ஒரே நேரத்தில் மும்பை காவல்துறையில் நேர்மையான இரு அதிகாரிகள் – கார்கரேயும் காந்தேயும்; அவ்விருவரோடு ஊழல் அதிகாரிகளான சச்சின் வாஸா, தயா நாயக் ஆகியோருக்கு எதிராக ஆதாரங்கள் திரட்டியதாக நம்பப் படும் ஸலஸ்கர். மூவரும் ஒன்றாகக் கொல்லப் படுகின்றனர். கிரிமினல் குற்றங்கள் சுமத்தப்பட்டு ஸலஸ்கர் வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ப்ரதீப் ஷர்மாவும் சச்சின் வாஸும் தலைமை வகித்த என்கவுண்டர் குழுவில் பல ஆண்டுகளாக அவ்விருவரோடும் இணைந்து பணிபுரிந்திருந்த அருண் ஜாதவ், சில அற்ப காயங்களுடன் தப்பித்து அவர்கள் கொல்லப்பட்டதை கண்ணால் கண்ட ஒரேயொரு சாட்சியாக ‘மாறு’கிறார்.

மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் சர்வதேச தொடர்பைக் கண்டறியும் முக்கியமான கட்டத்தில் கார்கரே இருந்தார். கார்கரேக்குப் பின்னர் தற்பொழுது மும்பை தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவராக மீண்டும் பதவியேற்ற கெ.பி. ரகுவன்ஷி, 2006ல் நடந்த இரயில் குண்டுவெடிப்பை விசாரித்தவராவார். சிமி தொடர்பின் பெயரில் முஸ்லிம்களை வேட்டையாடிய ரகுவன்ஷிக்கு, அவ்வழக்கில் நகைப்பிற்கிடமான ஆதாரமற்ற சில பொய்கதைகளைச் சொல்வதை தவிர்த்து விட்டு, உண்மையான குற்றவாளிகளைக் கண்டறியும் நிலைக்குச் செல்ல ரகுவன்ஷியால் இயலவில்லை. அவ்வழக்குத் தற்பொழுது நீதிமன்றத்தில் கண்கட்டி விடப்பட்டுத் தடுமாறி நிற்கின்றது.

தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைமைக்குத் தகுதியற்ற ரகுவன்ஷி ரெயில்வே துறைக்கு மற்றப்பட்டு, வியன்னாவில் ரா அதிகாரியாகப் பணிபுரிந்து கொண்டிருந்த ஹேமந்த் கார்கரே மும்பைத் தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவராக நியமிக்கப் பட்டார். மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கில் கார்கரே ரகுவன்ஷியின் வழியைப் பின்பற்றவில்லை. ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் பரிசோதித்து வரும்வேளையில், குண்டுவெடிப்புக்கு உபயோகிக்கப்பட்ட இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் யார்? என்ற முக்கிய விசாரணையே கார்கரேயை அவ்வழக்கின் நேரான பாதைக்குக் கொண்டு வந்தது. ஹிந்துத்துவ சாமியாரிணி ப்ரக்யா சிங் தாக்கூர் கைதுசெய்யப்பட்டார். அவரை விசாரித்ததில் இருந்து கர்னல் ஸ்ரீகாந்த் ப்ரஸாத் புரோகிதை நோக்கியும் அதிலிருந்து ஆர்.எஸ்.எஸின் இராணுவ, வெடிகுண்டு தயாரிப்பு தலைமையகமான போன்ஸாலா இராணுவ பயிற்சி மையத்தினை நோக்கியும் கார்கரேயின் விசாரணை நீண்டது.

மாலேகோன் குண்டுவெடிப்புப் தொடர்பாக ஹிந்துத்துவ சாமியாரிணி ப்ரக்யா சிங் மற்றும் கர்னல் புரோகித் ஆகிய இருவரைக் கைது செய்து, குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இருந்த ஆர்.எஸ்.எஸின் கைகளைக் கார்கரே வெளிப்படுத்தியதோடு, பல ஆண்டுகளாக இந்திய முஸ்லிம்களின் மீது அழுத்தி மூடப்பட்டிருந்த தீவிரவாதக் குற்றச்சாட்டுகளின் கறையினை சுத்தம் செய்து, முஸ்லிம்களின் மீது புனையப்பட்டிருந்த பொய்களை வெளிச்சமிட்டுக் காட்டினார்.

இத்துடன் விஷயங்கள் முற்றுப் பெறவில்லை. மாலேகோன் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளை விசாரணை செய்யும் வேளையில் அதில் வி.ஹெச்.பி தலைவர் தொகாடியாவின் பெயரும் வெளியானது. ஹிந்துத்துவாக்கள், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பெற்ற விஷயம் உறுதியானது.

குண்டுவெடிப்பில் உபயோகிக்கப்பட்டது ஆர்.டி.எக்ஸ் எனில், அதற்குப் பின்னால் சிமி, லஷ்கரே தொய்பா முதலான பாகிஸ்தான் தொடர்புடைய இயக்கங்கள்தான் செயல்பட்டிருக்கும் என்ற முன்முடிவுகளும் தவறானது. கர்னல் புரோகித் 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் மருந்தை காஷ்மீர் இராணுவ மையத்திலிருந்துக் கடத்தி, ஹிந்துத்துவாக்களுக்கு வழங்கிய விவரமும் வெளிச்சத்திற்கு வந்தது. அதுமட்டுமின்றி, பங்களாதேஷிலுள்ள ஹிந்துத்துவாக்கள், இந்தியாவில் வந்து குண்டுவெடிப்புகளை நடத்துகின்ற விவரமும் வெளியானது.

இவ்விசாரணை, பாகிஸ்தானிகள் உட்பட 68 பேர் படுகொலை செய்யப்பட்ட 2007 பிப்ரவரியில் நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் இரயில் குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவாக்கள் ஈடுபட்ட உண்மையின் தடத்திற்கு இட்டுச் சென்றது. அத்துடன் ஹைதராபாத்திலுள்ள மக்கா மஸ்ஜிதில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பிலும் ஹிந்துத்துவாக்களுக்குள்ள தொடர்பைக் குறித்து விசாரிக்கும் நிலை வந்தது.

சம்ஜோதா குண்டுவெடிப்பை விசாரிப்பது ஹரியானா காவல்துறையானதால், அதில் தொடர்புடைய ஹிந்துத்துவாக்கள் குறித்த ஆதாரங்களை கார்கரேவிடமிருந்து ஹரியானா காவல்துறையின் விசாரணை குழு சேகரித்துக் கொண்டிருந்தது. விசாரணை பா.ஜ.கவில் உள்ள பல முக்கியஸ்தர்களை நோக்கியும் நீளும் என்ற நிலை வந்தது.

இக்கட்டத்திலேயே, “ஹிந்துக்களைத் தீவிரவதிகளாகச் சித்தரி”ப்பதாகக் கூறி பா.ஜ.க தலைவர்களான எல்.கே.அத்வானியும் நரேந்திர மோடியும் கார்கரேக்கு எதிரான ஆக்ரோஷத்துடன் வெளியாகினர். “ஹிந்துக்கள் ஒருபோதும் தீவிரவாதிகளாக இயலாது” என்ற விசித்திரமான நியாயத்துடன் இருவரும் கார்கரேக்கு எதிராகக் கடுமையாக அறிக்கை விட்டனர். அதன் பின்னர் கார்கரேக்குத் தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வரத்துவங்கின.

அவரது “வீடு குண்டுவெடிப்பின் மூலம் தகர்க்கப்படும்” என்று மிரட்டல் விடுக்கப்பட்ட அன்று இரவு, இவற்றுக்கெல்லாம் ஒரு முற்றுப் புள்ளியாக கார்கரே கொலை செய்யப்படுகின்றார். மாலேகோன் வழக்குப் பரணேறும் சாத்தியக்கூறுகள் அதிகமாகின்றன. சம்ஜோதா இரயில் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைத் தடைபடுகின்றது.

மாலேகோன் வழக்கில் கார்கரேயால் கைதுசெய்யப்பட்ட கர்னல் ஸ்ரீகாந்த் ப்ரசாத் புரோகிதைக் கொண்டு மும்பைத் தீவிரவாதத் தடுப்புப் படைக்கு பயிற்சியளிக்க ஏற்பாடு செய்த ரகுவன்ஷி மீண்டும் மும்பைத் தீவிரவாத தடுப்புப்படைக்குத் தலைவராகிறார். இத்துடன் மக்கா மஸ்ஜித் உட்பட பல வெடிகுண்டு வழக்குகளிலும் ஹிந்துத்துவாக்களுக்கான தொடர்புகள் வெளிவருவதற்கான வாய்ப்புகள் மங்கத் தொடங்கியுள்ளன.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..