ஆர்.டி.எக்ஸ் + அமோனியம் நைட்ரேட் = சாத்வீ (துறவி)

Share this:

சாதுக்கள் என்றால் சாத்வீகமானவர்கள்; உலகை வெறுத்து, கடவுளின் நினைப்பிலேயே காலந் தள்ளும் துறவிகள்; அவர்களின் பக்தர்களால் வணங்கப் படுகின்றவர்கள்; மற்ற மதத்தவர்களாலும் மதிக்கப் படுபவர்கள் என்றெல்லாம் எண்ணியிருந்த ஒரு காலம் இருந்தது – கடப்பாறைகளோடும் சூலாயுதங்களோடும் அயோத்தியில் ஆட்டம் போட்டப் ‘புதுவகை சாது’க்களை உலகம் காணும் வரை.


 

சாத்வீ என்பது சாது என்ற சொல்லின் பெண்பாலாம். சாத்வீ ரிதம்பரா என்ற பெயரும் அவர் ஆடிய ஆட்டமும் உலகுக்கு அறிமுகமானதும் அயோத்தியில்தான். விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவியாக இருந்த உமா பாரதியும் சாத்வீ ரிதம்பராவும் டிஸம்பர் 6, 1992 இல் பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் பங்கு வகித்த பெண் தீவிரவாதிகளாவர்.

இந்தூருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் மகாராஷ்டிரத் தீவிரவாதத் தடுப்புக் காவல் படை(ATS)யினால் கடந்த வியாழக்கிழமை (23.10.2008) கைது செய்யப் பட்டு, தற்போது நாஸிக் நகரக் காவல் துறையினரால் (24.10.2008 முதல் 03.11.2008 வரை) பத்து நாட்கள் நீதிமன்றக் காவலில் விசாரணைக் கைதியாக வைக்கப் பட்டிருக்கும் ப்ரக்யா சிங் தாகூர் (38), சற்றுக் கூடுதல் வித்தியாசமான ‘சாத்வீ’.

கடந்த நோன்புப் பெருநாளைக்கு முதல் நாள் (29.09.2008) மகாராஷ்டிர மாநிலம் மாலேகோனில் நடந்த குண்டு வெடிப்பில் மூன்று முஸ்லிம் இளைஞர்களும் ஒரு சிறுவனும் பலியானார்கள்; 89 பேர் படுகாயமடைந்தனர். அதே நாள் அதே நேரத்தில் குஜராத்திலுள்ள மொடஸா என்ற ஊரிலும் குண்டு வெடித்து ஒருவர் பலியானார்; பலர் காயமடைந்தனர்.

 

மாலேகோனில் நடந்தேறிய குண்டு வெடிப்புக்குப் பயன் பட்ட மோட்டார் சைக்கிளின் நம்பர் ப்ளேட்டையும் சேஸையும் ரசாயனப் பொருட்களை உபயோகித்து அடையாளம் காண முடியாதவாறு குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் ஆக்கியிருந்தனர்.

“மிகுந்த முயற்சி எடுத்து, குண்டு வெடிப்பில் பயன் படுத்தப் பட்ட மோட்டர் சைக்கிள் சாத்வீ ப்ரக்யா சிங் தாகூருக்குச் சொந்தமானது என்று கண்டு பிடித்தோம்” என்று தீவிரவாத தடுப்புக் காவல் படையின் தலைவர் ஹேமந்த் கர்காரெ கூறினார். குற்றம் ஐயத்துக்கிடமின்றி உறுதியானதும் சாத்வீ ப்ரக்யாவோடு ஷாம்லால் பவார் சாஹூ (42) என்பவரும் சிவநாரயண் சிங் (36) என்பவரும் உடனடியாகக் கைது செய்யப் பட்டனர். மூவர் மீதும் இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவு 16 (பயங்கரவாதச் செயல்கள்), பிரிவு 18 (பயங்கரவாதச் செயல்களுக்கான சூழ்ச்சி செய்தல்) மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு, கூட்டுக் கொலை, கொலை முயற்சி ஆகிய குற்றங்களுக்காக (302,307,326) வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

மேலும், திலீப் நெஹர், தர்மேந்திரா பஜ்ரங்கி ஆகிய இருவர், சந்தேகத்தின் பேரில் காவல் படையால் கைது செய்யப் பட்டிருக்கின்றனர். விசாரணையில் கிடைத்தத் தகவல்களின் அடிப்படையில் மேலும் பலரைக் கைது செய்யக் காவல் படை மத்தியப் பிரதேசத்துக்குச் சென்றது.

இந்தக் குண்டுவெடிப்பின் பின்னணியில் பாரதீய ஜனதாவின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ABVB)க்கு நெருங்கிய தொடர்புடைய ‘ஹிந்து ஜாக்ரன் மன்ச்’ என்ற பயங்கரவாத அமைப்புக்குத் தொடர்பு இருப்பதை மகாராஷ்டிர மாநிலத் தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்காரே உறுதிப் படுத்தினார்.

வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயிற்சிப் பள்ளி

இந்த வழக்கில் முன்னாள் இராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாயா என்பவரும் முன்னாள் இராணுவ மேஜர் பிரபாகர் குல்கர்னி என்பவரும் கைது செய்யப் பட்டுள்ளனர். இருவரும் நாசிக் அருகே, ‘இந்து ராணுவப் பயிற்சிக் கழகம்’ என்ற பயிற்சிப் பள்ளியை நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள். மேஜர் குல்கர்னி, ‘ஹிந்து சைனிகி சன்ஸ்த்தா’ என்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆயுதப் பிரிவில் செயலாளராகத் தொண்டு(!) ஆற்றி வருபவராவார்.

பெண் துறவி ப்ராக்யாவின் வழிகாட்டுதலில் செயல்படும் இந்தப் பயிற்சிப் பள்ளியில் உபாத்யாயாவும் குல்கர்னியும் வெடிகுண்டுகளைத் தயாரிப்பது, வெடிகுண்டுகளைக் கையாள்வது பற்றிப் பாடமும் பயிற்சியும் அளித்து வந்துள்ளனர். மற்றும் ஆயுதப் பயிற்சியும் கொடுத்தனர் என்று கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப் பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.


{youtube}tbvLOIWoLwM{/youtube}

அடுத்த கட்ட விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என நம்பப் படுவதாகத் தீவிரவாதத் தடுப்புப் படையின் நாசிக் யூனிட் ஆய்வாளர் ராஜன் குலே தெரிவித்துள்ளார். மேலும் மாலேகோனில் 2006 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பிலும் இந்த இந்து அமைப்புகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று மகாராஷ்டிர மாநிலத் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அதுகுறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இரு முன்னாள் இராணுவ மேஜர்களையும் தவிர்த்து, மூன்றாவதாக மேஜர் Y.D. சஹஸ்ரபுத்தே என்பவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

ப்ரக்யா தாகூர்
கடந்த 2006ஆம் ஆண்டு அலஹாபாத்தில் நடைபெற்ற கும்பமேளாவின்போது, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவரான சுவாமி அவ்தேஷனன் கிரியைத் தன் ஆன்மீக குருவாக வரித்துத் துறவியான பின்னர் சாத்வீ பூர்ணா சேத்தானந்த் கிரி என்று பெயரை மாற்றிக் கொண்டார் செல்வி ப்ரக்யா சிங் தாகூர் (38)

ப்ரக்யாவின் குடும்பம் மத்தியப் பிரதேசத்தின் புகழ் பெற்ற சாம்பல் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பின்த் மாவட்டத்தின் லஹர் என்ற ஊரைச் சேர்ந்ததாகும். ப்ரக்யாவின் தந்தையும் ஆர்.எஸ்.எஸ் ஊழியருமான ஸீ.ப்பீ சிங் தாகூர் (C P Singh Thakur) ஓர் ஆயுர்வேத மருத்துவராவார். இவருக்கு லஹரில் இப்போதும் ஓர் ஆயுர்வேத மருத்துவமனையும் சொத்துகளும் உள்ளன.

முஸ்லிம்களை நாடு முழுதுமிருந்தும் அழித்தொழிக்க ஒரு சோதனைக் களமாகத் தேர்வு செய்யப் பட்ட குஜராத் மாநிலத்தின் சூரத்துக்கு 2001இல் ப்ரக்யாவின் குடும்பம் மாறியது. ஒரு புத்தகக்கடை முதலாளியான சஞ்சீவ் குப்தா என்பவருக்குச் சொந்தமான இல்லத்தில் ப்ரக்யா வசித்து வந்தார். அண்மையில் கர்ஹா, காட்னி ஆகிய ஊர்களில் அவர் கலந்து கொண்டு உரையாற்றியபோது காந்திஜிக்கும் இந்திய சிறுபான்மையினருக்கும் எதிராகச் சூடான சொற்களைப் பயன்படுத்திய வீடியோ கேசட் சிக்கியதாக ப்ரக்யாவின் வீட்டைச் சோதனையிட்ட தீவிரவாதத் தடுப்புக் காவல் படையின் கூடுதல் ஆணையர் மனீஷ் கபூரியா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். பேட்டியின்போது கோரக்பூர் சரகக் காவல்துறைப் பொறுப்பாளர் D.K. தீட்சித்தும் உடனிருந்தார்.

ஆளும் பி.ஜே.பிக்கு வக்காலத்து வாங்குபவரான மாநிலக் காவல்துறைத் தலைவர் எஸ்.கே. ரவுட் கூறும்போது, “அவரது ஜபல்பூர் ஆசிரமத்தைச் சோதனையிட்டதில் ஆட்சேபனைக்குரிய எதுவும் கண்டெடுக்கப் படவில்லை” என்றார்.

இயல்பிலேயே ஆண்மைத் தனம் கொண்டவரான ப்ரக்யா, கல்லூரி நாட்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் சாகசங்கள் புரிபவர் என்றும் எவரையும் அச்சமூட்டக் கூடிய முரட்டுக் குணம் கொண்ட மாணவர் தலைவி என்றும் ப்ரக்யாவைக் குறித்து அவரின் கல்லூரித் தோழர்கள் கூறினர்.

1997வரை பி.ஜே.பியின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி(ABVP)யின் மகளிரணியின் செயற்குழுவிலும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மகளிர் பிரிவான துர்கா வாஹினியிலும் பொறுப்பு வகித்து உஜ்ஜையினிலும் இந்தோரிலும் பணியாற்றியவர். இந்தோரில் ராஷ்ட்ரிய ஜர்கன் மன்ச் என்ற அமைப்பைப் பிரபலப் படுத்தியதோடு, குஜராத் அரசின் நிதி உதவியோடு 2002இல் சொந்தமாக ஓர் அமைப்பைத் தொடங்கி அதற்கு ‘ஜெய் வந்தே மாதரம் ஜன் கல்யான் சமிதி’ என்று பெயரிட்டு நடத்திக் கொண்டிருந்தார்.

பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், உமாபாரதி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். கைது செய்யப் பட்ட நாளிலிருந்து மெளன விரதம் அனுஷ்டித்து வரும் ப்ரக்யாவிடம் திங்கட்கிழமை உண்மை அறியும் சோதனை நடத்தப் படவுள்ளதாகவும் அதன் மூலம் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்றும் மகாராஷ்டிரத் தீவிரவாதத் தடுப்புப் படையின் சிறப்பு ஆலோசகர் அஜய் மிஸர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு, வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்கும் கையாள்வதற்கும் வெடிக்க வைப்பதற்கும் பயிற்சி கொடுப்பதற்கு இராணுவ மேஜர்களைப் பணியிலமர்த்தி நாட்டைச் சுடுகாடாக மாற்றுவதற்கு ஹிந்துத்துவாக்கள் சூழ்ச்சி செய்து கொண்டிருப்பது வெட்ட வெளிச்சமான பிறகும் மாலேகோன் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஹிந்துத்துவ தீவிர அமைப்புகளான விஷ்வ ஹிந்து பரிஷத், ஏ.பி.வி.பி, ஆர்.எஸ்.எஸ், ஹிந்து ஜர்கன் மன்ச் ஆகிய அமைப்புகள் மீது இதுவரை தீவிரவாதத் தடுப்புச் சட்டமான பொடா பாயாதது ஏன் என்று வியப்புத் தெரிவித்தால் நிச்சயமாக நீங்கள் தேசபக்தர்(!)களுக்கு விரோதிதான்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.