இந்தியாவின் அடிவேர்: ராஃபி அஹமது கித்வாய்

Share this:

ந்திய நாட்டின் விவசாய ஆராய்ச்சிக்காகவும் விவசாய உயர்கல்விக் கொள்கைகளை வகுப்பதற்காகவும் விவசாய உயர்கல்விக் கூடங்கள் மற்றும் விவசாயப் பல்கலைக் கழகங்களை நிர்வகிப்பதற்காகவுமான  ஒரு அமைப்பு,  நடுவண் அரசின் வேளாண்மை அமைச்சின் கீழ் செயல்பட்டு வருகின்ற  இந்திய விவசாய ஆராய்ச்சி சபை (Indian Council of Agricultural Research – ICAR) என்பதாகும். “சரி, அதற்கென்ன இப்போ?” என்று கேட்பதற்கு முன் சுவாரஸ்யமான பின்னணியையும் படித்துவிடுங்கள்.

இந்திய நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தின் நலனுக்கென்று அமைக்கப்பட்ட ICAR, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வேளாண்மை அமைச்சின் மிகப்பெரும் விருதாக தங்கமடலும் மூன்று இலட்ச ரூபாய்களும் வெகுமதி அளித்து வருகிறது. (SatyaMargam.com)

இந்த வெகுமதியை ஒருவர் பெற வேண்டுமென்றால், அவர் இத்துறையில் மிகச்சிறந்த (Outstanding) ஆராய்ச்சிக்குச் சொந்தக்காரராகவும் தனது பங்களிப்பை இந்தியாவுக்கு அர்ப்பணிப்பாவராகவும் இருக்க வேண்டும். இத்துறை என்பது விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் அது சார்ந்த அறிவியல், மீன் வளத்துறை, நீர்வாழ் உயிரின அறிவியல், பொது சுகாதாரம் மற்றும் நுண்ணுயிரியல் என்பதாகும். (சத்தியமார்க்கம்.காம்)

1956 முதல் அளிக்கப்பட்டு வரும் இவ்வுயர் விருதின் பெயர் “ராஃபி அஹமது கித்வாய் விருது. – (Rafi Ahmed Kidwai Award)” பலருக்கும் வித்தியாசமாகத் தோன்றும் இப்பெயர்,  இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றையும், அதன்பின் அமைந்த நேரு மந்திரி சபையைப் பற்றியும், அதில் அமைச்சர்களாயிருந்த இரண்டு முஸ்லிம் அமைச்சர்களுள் ஒருவரான  கித்வாயைப் பற்றி அறிந்திராத இளைய தலைமுறையினருக்கு வியப்பாகத்தான் இருக்கும்.

சரி, யார் இந்தக் கித்வாய்? ஏன் அவர் பெயரில் இவ்வுயர்விருது? என்றால் காரணமிருக்கிறது.

https://pbs.twimg.com/media/CbfpYiXUYAEkACL.jpg

ராஃபி அஹமது கித்வாய் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவர். அலீகரில் அன்றைய அங்கிலோ முஹம்மதன் ஓரியண்டல் கல்லூரியில் இளங்கலை வகுப்பு முடித்து, சட்டம் படிக்க இருக்கையில் நாடு முழுவதும் வியாபித்திருந்த மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்து ஜெயிலுக்குச் சென்றவர் ராஃபி அஹமது கித்வாய். பின்  நேருவுடன் தோள்கொடுத்துப் போராடினார் சுதந்திரம் கிடைப்பது வரை.

மோதிலால் நேருவுக்குச் செயலராகவும், பின் ஜவஹர்லால் நேருவின் உற்ற நண்பர்களுள் ஒருவராகவும் காலம் பூராவும் செயல்பட்ட ராஃபி அஹமது கித்வாய், அன்றைய காங்கிரஸில் வகுத்த பல பதவிகளினூடே இந்திய சுதந்திரத்திற்கு உரமிட்டவர்.

சுதந்திரத்திற்கு முன்னரே (1937-1950) உருவாக்கப்பட்டு, பின்னர் இந்தியாவோடு ஐக்கியப்படுத்தப்பட்ட பிரிட்டிஷாரின் இந்திய ஐக்கிய மாகாணத்தில் (United Provinces)  வருவாய்த் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற கித்வாய், அப்போது கொண்டுவந்த நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் பின்னாட்களில் ஜமீன் நில ஒழிப்புக்கு வழிவகுத்துக் கொடுத்து இலகுவாக்கின. கித்வாய் ஒரு ஜமீன்தாரி குடும்பத்திலிருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேருவின் முதல் மந்திரிசபையில் (1947) சுதந்திர இந்தியாவின் முதல் தகவல் துறை அமைச்சர் கித்வாய்.

ஒன்றுபட்ட இந்தியாவிற்குத் தபால் சேவையை வழங்கும் பொறுப்பை முதன்மைப் பொறுப்பாகக் கொண்டு வெற்றிகரமாக நடத்திக்காட்டிய கித்வாயின் பெயரால்தான் நம் நாட்டின் தபால்துறையின் உச்சபட்ச பயிற்சி அமைப்பு, RAFI AHMED KIDWAI NATIONAL POSTAL ACADEMY என்று அழைக்கப்படுகிறது. (இந்திய அரசின் இணைய தளம்: raknpa.gov.in)

http://www.indianphilately.net/images/raknpaacademydayspc180216.jpg

பின்பு நேருவின் முதல் மந்திரிசபையில் உணவு மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர். சிக்கலான துயரம் மிகுந்த நாட்களில் நாட்டு மக்களின் உணவுத் தேவையை நிர்வகித்ததில் அவர் ஆற்றிய பங்கு மகத்தானது. கித்வாயின் மகத்தான இப்பணிகளுக்கான அங்கீகாரமாகத்தான்  இத் தேசத்தின் உயர் விருதுகளில் ஒன்றான மேற்சொன்ன விருது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

விருதுகளின் வேர்களை நினைவு கூர்வோம்!

– அப்துல் ரஷீத்

 


 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.