மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து கர்னல் புரோகிதை விடுவிக்க சதி!

Share this:

ஹிந்துத்துவ தீவிரவாதத்திற்கு உதவிகரமாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட கர்னல் புரோஹித் மீதான வழக்கில் எதிர்பாராத விதமாக திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கமான அபினவ் பாரத் உடன் கர்னல் புரோஹிதின் தொடர்பு அவருடைய வேலையின் ஒரு பாகம் எனக் கூறி அவரை குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து பாதுகாப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.


புரோஹிதின் உயர் அதிகாரிகள் இராணுவ நீதிமன்றத்தில் புரோஹித்-க்கு எதிராக நடந்த வழக்கில் அவருக்குச் சாதகமாக வாக்குமூலம் வழங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இராணுவத்தின் புலன்விசாரணை குழுவில் பணி செய்திருந்த புரோஹித், ஹிந்துத்துவ தீவிரவாதம் குறித்த விவரங்களைச் சேகரிப்பதற்காகவே அபினவ் பாரதில் அவர்களின் நபர் போன்று நுழைந்ததாகவும் இவ்விவரத்தையும் அபினவ் பாரதில் செயல்பட்டபோது அவ்வியக்கத்தின் தீவிரவாதம் தொடர்பான செயல்பாடுகளளயும் தன்னுடைய உயர் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல்கள் தெரிவித்திருந்ததாகவும் இராணுவ அதிகாரிகள் இராணுவ நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புரோகிதுக்கு எதிரான தீவிரவாத வழக்குகளிலிருந்து இராணுவ நீதிமன்றம் அவரை நிரபராதி என விடுதலை செய்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஒரு பிரிகேடியரின் தலைமையில் 2009 ஏப்ரல் மாதம் துவங்கிய இராணுவ நீதிமன்றத்தின் நடவடிக்கை 60 இராணுவ அதிகாரிகளிடம் விசாரணை நடத்தில் 37 மாதங்கள் கடந்த நிலையில் கடந்த மே மாதம் முடிவடைந்தது. இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு இராணுவ மத்திய கமாண்டிங் பிரிவிற்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உள்துறை நடவடிக்கையின் உட்பட்ட விசயமாதலால் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியிடப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியாகியுள்ள தகவல்களிலிருந்து கர்னல் புரோகிதும் அவருக்கு உதவிய மற்ற நான்கு இராணுவ அதிகாரிகளும் தேசவிரோத செயல்கள் எதிலும் ஈடுபடவில்லை என்ற முடிவினை இராணுவ நீதிமன்றம் எடுத்துள்ளதாக தெரிகிறது. 2008 செப்டம்பர் 29 ல் மாலேகாவில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் அன்றைய மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப்படை தலைவராக செயல்பட்டுவந்த ஹேமந்த் கார்கரே கர்னல் புரோகிதைக் கைது செய்திருந்தார். இந்திய வரலாற்றில் ஒரு தீவிரவாத வழக்கில் கைது செய்யப்படும் முதல் இராணுவ அதிகாரியாவார்.

புரோகித் கைது செய்யப்பட்டதன் பின்னர், ஹிந்துத்துவ தீவிரவாதத்தின் முகம் வெளிப்பட்டதோடு பல குண்டுவெடிப்புகளை நடத்திய சாமியாரிணி ப்ரக்யாசிங், இந்திரேஷ்குமார், தயானந்த் பாண்டே முதலாய ஹிந்த்துவவாதிகளைக் கைது செய்யப்பட்டனர். சங்கபரிவாத்தின் ஒரு பாகமாக செயல்ப்பட்ட அபினவ் பாரதின் தொண்டர்களான இவர்கள் மக்கா மஸ்ஜித், டெல்லி ஜுமா மஸ்ஜித், அஜ்மீர், சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் முதலான பல குண்டுவெடிப்புகளின் பின்னணியிலும் இவர்களே செயல்பட்டுள்ளனர் என்ற விவரம் தொடர் விசாரணையில் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அபினவ் பாரதின் ரகசிய கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்டிருந்த புரோகித், இராணுவத்திலிருந்து 60 கிலோ கிராம் ஆர்.டி.எக்ஸ் திருடி அபினவ் பாரதிற்கு வழங்கியதாகவும் அபினவ் பாரத் தொண்டர்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி வழங்கியதாகவும் அபினவ் பாரதிற்கு பண உதவிகள் ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் கார்கரேயின் விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கண்டறியப்பட்டன.

இந்நிலையிலேயே மும்பை தீவிரவாத தாக்குதலில் கார்கரே சந்தேகத்திற்கிடமான வகையில் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மாலேகாவ் முதலான கார்கரே விசாரித்து வந்த புரோகித் முதலான ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் தொடர்பான வழக்குகள் ஸ்தம்பித்தன. அத்துடன் இவ்வழக்குகளிலிருந்து புரோகிதைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் நடந்தன. இராணுவ நீதிமன்றத்தில் உயர் அதிகாரிகள் வழங்கிய வாக்குமூலமும் இதன் ஒரு பாகமே.

இந்நிலையில், ஹிந்துத்துவ பயங்கரவாதம் குறித்து கர்னல் புரோகித் முன்னரே விவரங்கள் சேகரித்திருந்ததாகவும் அவ்விவரங்களை உடனுக்குடன் இராணுவ மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுவது உண்மையெனில், அந்த முக்கிய விவரங்களை மற்ற புலன்விசாரணண குழுக்களுக்கு இராணுவம் ஏன் அளிக்கவில்லை?

தன்னுடைய வேலையின் நிமித்தமாகவே கர்னல் புரோகித் அபினவ் பாரதில் இணைந்து செயல்பட்டார் என்று தற்போது கூறுவது உண்மையெனில், மாலேகாவ் வழக்கில் அவருக்குத் தொடர்புள்ள விவரத்தைக் கார்கரே கண்டறிந்த உடன், புரோகித் மீது இராணுவம் உடனடி நடவடிக்கை எடுத்ததோடு தொடர் விசாரணைக்காக மும்பை தீவிரவாத தடுப்புப் படைக்கு அவரை விட்டுக்கொடுத்தது ஏன் என்பது போன்ற அதிமுக்கிய கேள்விகள் தொக்கி நிற்கின்றன.

கர்னல் புரோகிதை இராணுவ நீதிமன்றம் நிரபராதி என விடுவித்துள்ள நிலையில், மாலேகாவ் குண்டுவெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ தொடர்ந்துள்ள வழக்கிலிருந்து அவர் தப்பித்துக்கொள்வதற்குப் போதுமானது. இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு சுட்டிக்காட்டப்படுவதோடு புரோகிதுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் காவல்துறை முதலில் இந்தியன் முஜாஹீதின் என்ற அமைப்பைச் சந்தேகித்தது. தொடர்ந்து பல முஸ்லிம் அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கஸ்டடி விசாரணையில் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மிகச் சமீபத்திலேயே நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டனர். இராணுவ நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பைத் தொடர்ந்து, ஏழு பேர் மரணமடையவும் பல நிரபராதிகள் சித்திரவதை செய்யப்படவும் காரணமான மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து முக்கிய குற்றவாளி ஒரு சிறு கீறல் கூட இல்லாமல் தப்பிப்பதற்கு வழி ஏற்பட்டுள்ளது.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.