கண்ணீர் வடிக்கும் காஷ்மீர் ரோஜாக்கள்

காஷ்மீரத்து ரோஜாக்கள் ரத்தக் கண்ணீர் வடிப்பது புதிதல்ல. ஆனால், இப்போது இதயம் இடிந்து விடும் அளவிற்கு அதிர்ச்சிச் செய்தி வந்திருக்கிறது.

எல்லை தாண்டி வரும் எதிரிகளோடு நேருக்கு நேர் மோதுவது ராணுவத்தின் கடமை. ஆனால், பரிசுகளும் பதவி உயர்வுகளும் பெறுவதற்காக அப்பாவி மக்களையேஎன்கவுன்ட்டர்என்ற பெயரால் சுட்டுக் கொன்றிருக்கின்றனர்.


என்கவுன்ட்டர் என்ற பெயரால் காஷ்மீரத்துக் குருத்துக்கள், முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட போதெல்லாம் அதனை மறுத்தனர். கொல்லப்பட்டவர்கள் கொடூர பயங்கரவாதிகள் என்று கதை கட்டினர்.

ஆனால், அண்மையில் இரண்டு இடங்களில் சுட்டுக் கொல்லப்பட்ட ஐவர், அந்த மண்ணின் மைந்தர்கள் என்பது அம்பலமாகியிருக்கிறது. எனவே, கந்தகக் குழம்பாக இருந்த காஷ்மீர் மக்கள், எரிமலைச் சிதறலாக வெடித்து எழுந்தனர். அதனைத் தொடர்ந்துஎன் கவுன்ட்டர் புலிகள்பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

ராணுவ அதிகாரிகளோடு காஷ்மீர் காவல் துறை அதிகாரிகளும் இணைந்து, மனித உயிர்களைக் காய்ந்த சருகுகளாகக் கருதி சுட்டுக் கொன்றிருக்கின்றனர். பயங்கரவாதிகளைப் பந்தாடுவதற்காக அனுப்பப்பட்ட அவர்கள், காக்கிச் சட்டைகளுக்குள் புகுந்த காட்டுமிராண்டிகள் என்பதனை மெய்ப்பித்திருக்கிறார்கள்.

தங்கள் கிராமத்து இளைஞரைக் காணவில்லை என்று ஒரு புகார் வந்தது. அதன் மீது ஸ்ரீநகர் தென்பகுதி போலீஸ் எஸ்.பி. உத்தம் சந்த் விசாரணை நடத்தினார். அதற்கு மேல்நிலை அதிகாரிகள் துணை நின்றனர். ஏன்? உண்மை வெளிச்சத்திற்கு வந்தால், காஷ்மீர் வெடிக்கும் என்பதனை முதல்வர் குலாம் நபி ஆசாத் அறிவார். ஆனாலும் அவரும் நியாயமான, நேர்மையான விசாரணை வேண்டும் என்றார்.

விசாரணை கல்லறைகளுக்குள்ளும் புகுந்தது. காணாமல் போனது ஒருவர் அல்ல; ஐவர் என்ற உண்மை வெளி வந்தது. அவர்கள் எல்லை கடந்து பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் அல்ல. அந்தக் கிராமத்துக் குடிமக்கள்தான் என்பதும் அம்பலமானது.

இந்தப் படுகொலைகள் நாட்டையே தலைகுனிய வைத்து விட்டன. மனிதாபிமானம் கடும் சோதனையைச் சந்திக்கிறது. மனித உரிமைகளை ராணுவத்தின் கறுப்பு ஆடுகளே மேய்ந்தால், யாரிடம் போய் முறையிடுவது?

என்கவுன்ட்டர் என்ற பெயரால் நடைபெறும் இந்தப் படுகொலைகள், பயங்கரவாதம் வளர்வதற்குத்தான் துணை செய்யும்.மனித உரிமைகளைக் காப்பதில் மிகுந்த பொறுமை காட்டவேண்டும்என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஆனால், கழுவ முடியாத களங்கத்தை ராணுவத்தின் கறுப்புக் குல்லாய்கள் தேடிக் கொடுத்திருக்கின்றன.

படிப்படியாக காஷ்மீரில் பயங்கரவாதிகள் தனிமைப்படுத்தப் படுகின்றனர். ஜனநாயக முறையில் தேர்தல்களைச் சந்திக்கின்ற மக்கள், மெதுவாக தேசிய நீரோட்டத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்ன பயங்கரவாதிகளின் கோரிக்கையை அவர்கள் நிராகரித்தனர். குலாம் நபி ஆசாத் தலைமையில் செயல்படும் இன்றைய கூட்டணி அரசு, தமது ஐந்தாண்டுப் பதவிக் காலத்தை நிறைவு செய்யப் போகிறது.

பயங்கரவாதத்தைப் பயிர் செய்த பாகிஸ்தான், இன்றைக்கு அந்தப் பயங்கரவாதத்திற்கே பலியாகின்ற பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறது. காஷ்மீர் தங்களுக்கே சொந்தம் என்ற கோரிக்கையை பாகிஸ்தான் ஓசையின்றிக் கைகழுவிக் கொண்டிருக்கிறது.

போர், நாட்டின் முன்னேற்றத்தையே பொசுக்கி விடும் என்பதனை பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் முஷாரப் உணருகிறார்.ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரிலும் ராணுவம் வேண்டாம். இந்தியாவின் அங்கமான காஷ்மீரிலும் படைகள் வேண்டாம். அங்கே மக்களே அரசாளட்டும்என்று அவர் அண்மையில் கூறினார்.

காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று சர்வதேசச் சமுதாயம் பாகிஸ்தானை நெருக்கிக் கொண்டிருக்கிறது.

காஷ்மீர் பிரச்னைக்காக எந்த இஸ்லாமிய நாடும் இந்தியாவின் நட்புறவை இழக்க விரும்பவில்லை.

காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் வரை இந்தியா-பாகிஸ்தானில் அமைதி என்பது வானத்தில் போடப்பட்ட கோலமாகத்தான் இருக்கும்.

எல்லாத் துறைகளிலும் இந்தியா _ பாகிஸ்தான் உறவு அரும்பத் தொடங்கி இருக்கிறது. எல்லைகளால் பிரிக்கப்பட்ட ரத்த உறவுகள், இப்போது சந்தித்துக் கொண்டிருக்கின்றன. வளைந்து கொடுக்காத எல்லை வேலிகள் வழிவிடுகின்றன.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரத்தப் பூக்கள் மலர்ந்த காலம் மறைந்து வருகிறது. அமைதிப் பூக்கள் மலரத் தொடங்கியிருக்கின்றன. இந்த அருமையான சூழ்நிலையை நாசப்படுத்தும் ராணுவத்தின் சில கரும்புள்ளிகள், ‘என்கவுன்ட்டர்என்று நாடகமாடுகின்றன. அவர்கள் செய்த மாபாதகச் செயலுக்காக நாடு தண்டனையை ஏற்க வேண்டியிருக்கிறது.

இந்தியா மீது என்ன பழிபோடுவது என்று தீவிரவாதக் குழுக்கள் காத்துக் கிடக்கின்றன. அந்தச் சக்திகளுக்குத் தீனி போடுகின்ற காரியங்களை ராணுவத்தின் ஓநாய்கள் செய்து கொண்டிருக்கின்றன. காவல்துறையின் சில கறுப்புக் குல்லாய்களும் அவர்களுக்குத் துணை நின்றிருக்கின்றன. ராணுவத்திலும் காவல்துறையிலும் எந்த அளவிற்கு ஒழுங்கீனங்கள் ஊடுருவியிருக்கின்றன என்பதனை இந்தப் பச்சைப் படுகொலைகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

சென்ற ஆண்டு மணிப்பூரின் தலைநகர் இம்பாலில், உலகம் உறையும் அளவிற்கு ஒரு நிகழ்வு நடந்தது. நள்ளிரவு நேரத்தில் ஒரு வீட்டுக் கதவை ராணுவச் சிப்பாய்கள் தட்டினர். ஒரு சகோதரியை அழைத்துச் சென்றனர். தீவிரவாத இயக்கத்திற்கு அந்தச் சகோதரி உதவி செய்வதாகக் குற்றம் கூறினர்.

அப்படி அழைத்துச் செல்லப்பட்ட அந்தச் சகோதரி, இரண்டு நாட்கÊளுக்குப் பின்னர், கானகத்துப் புதரில் பிணமாகக் கிடந்தார். உடம்பெல்லாம் ரத்தக் காயங்கள். பெண்மை பறிக்கப்பட்டிருந்தது.

இதனைக் கேள்வியுற்ற மணிப்பூர் மாதரசிகள் பொங்கி எழுந்தனர். தலைநகர் இம்பாலில் உள்ள மன்னர் கால அரண்மனைதான் இப்போது ராணுவத் தலைமையகம். காலைப் பொழுதில் அந்தப் பொன்மேனிச் சகோதரிகள் பிறந்த மேனிகளாய் அந்த முகாமிற்குச் சென்றனர். கதவுகளைத் தட்டினர்.எங்களையும் கற்பழியுங்கள்என்றனர். அதிகாரிகள் ஆடிப் போய்விட்டனர். உலகமே அதிர்ந்து போனது.

இத்தகைய கொடுமைகள், முன்னர் காஷ்மீரத்துக் கானகங்களிலும் நடந்தது உண்டு. தீவிரவாதத்தை வேரறுக்க ராணுவக் கட்டுப்பாடு தேவை. ஆனால், அந்தக் கட்டுப்பாடு தனிமனித சுதந்திரத்தையும் வாழ்வையும் தட்டிப் பறிப்பதாக இருக்கக்கூடாது.

இத்தகைய கொடுமைகளை விசாரிக்கும் அதிகாரம், மனித உரிமை ஆணையத்திற்கு உண்டு. ஆனால், அந்த அதிகாரம் வரையறுக்கப்பட்டவை. நடந்து போன நிகழ்வுகளுக்கு அந்த ஆணையம் நல்ல தீர்ப்பு வழங்கலாம். ஆனால், பறிக்கப்பட்ட மனித மாண்பினையும் கௌரவத்தையும் அதனால் திருப்பித் தர இயலாது.

பிரச்னைகள் பெரிதாக வெடிக்கும்போது, மணிப்பூரிலும் காஷ்மீரிலும் ராணுவச் சட்டம் தளர்த்தப்படும் என்று உறுதி கூறுகிறார்கள். ஆனால், பதற்றம் தணிந்த பின்னர், மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதைதான்.

ஆனால், இம்முறை காஷ்மீர் மக்கள் தீர்க்கமான முடிவில் இருக்கிறார்கள். அண்மையில் நடந்த என்கவுன்ட்டர் மரணங்கள் அப்பட்டமான படுகொலைகளே என்பது அம்பலமான பின்னர், இதுவரை நடத்தப்பட்ட எல்லா என்கவுன்ட்டர்கள் பற்றியும் விசாரணை வேண்டும் என்று பொங்கி எழுந்திருக்கிறார்கள்.

ஜம்மு_காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்தார். மைய அரசிற்கு அவர் ஒன்றரை மாத கால அவகாசம் கொடுத்திருக்கிறார். அதற்குள் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப் படவேண்டும். அநியாயச் சாவுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறார். மாநிலம் தழுவிய பந்த்திற்கு அவர் விடுத்த அழைப்பு மகத்தான வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து, இதுவரை கற்பிக்கப்பட்ட எல்லா என்கவுன்ட்டர் மரணங்கள் பற்றியும் விசாரணை நடைபெறும் என்று மாநில முதல்வர் குலாம் நபி ஆசாத் அறிவித்திருக்கிறார்.

அதற்கு முதல்படியாக, அண்மையில் ஐவரைப் பலிகொண்ட என்கவுன்ட்டர் மரணங்கள் பற்றி உடனடியாக விசாரணை நடைபெற வேண்டும். அந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல், காஷ்மீர் ஏரி ரத்தத் தடாகமாகத்தான் உருமாறும்.

நன்றி: திரு. சோலை, குமுதம் ரிப்போர்ட்டர்

தகவல்: சிராஜ்

குறிப்பு: இதனைக் குறித்து சத்தியமார்க்கம்.காம் தளம் முன்னர் வெளியிட்டிருந்த செய்தியையும் குறிப்பிடுவது பொருத்தம் எனக் கருதுகிறோம்.