அநீதிக்கு எதிரான நடவடிக்கை என்ன? நீதிபதி கேள்வி

Thackerays

நாசகாரச் செயல்கள்: “தாக்ரேக்கள், ராணே ஆகியோர் மீது மாநில அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” உச்ச நீதிமன்றம் கேள்வி.

கட்சித் தொண்டர்களைத் தூண்டி விட்டு, கடந்த ஆண்டில் மட்டும் பலமுறை பொதுமக்களின் சொத்துகளை நாசப்படுத்தியுள்ள அரசியல் தலைவர்களான பால் தாக்ரே, உத்தவ் தாக்ரே, ராஜ் தாக்ரே மற்றும் நாராயண் ராணே போன்றோர் மீது இதுவரை நடைவடிக்கையெடுக்காத மாநில அரசினை மும்பை உயர் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை 03.02.2010 அன்று கடுமையாகக் குற்றம் சாட்டியது.

ஜெ.என் படேல், பி.ஆர் கவய் ஆகியோரின் தலைமையில் செயல்படும் விசாரணைக் குழு, பிரபல முன்னாள் ஐப்பீஎஸ் (IPS ) அதிகாரி ஜுலியோ ரிபெரோ மூலம் தாக்கல் செய்யப் பட்ட மக்கள் நல வழக்கை, அதன் குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் ஆய்வு செய்கிறது. அதில், “குற்றவாளிகளிடம் இருந்து நிரூபிக்கப் பட்ட நான்கு நாசகாரச் செயல்களுக்குப் பகரமாக முறையான நஷ்ட ஈடு அபராதமாக வசூலிக்கப்பட வேண்டும்” என்று ரிபெரோ கோரியுள்ளார்.

வழக்குத் தொடுக்கப்பட்ட நாசகாரச் செயல்கள்:

(1)  சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவுத்தின் தலைமையில் சிலர் கும்பலாக இன்டெர் காண்டினண்டெல் ஹோட்டலின் சொத்துகளை நாசப்படுத்தியது,

(2)  மும்பை நவ் நிர்மாண் சேனா எனும் ராஜ் தாக்ரேயின் கட்சியின் மூலம் மும்பைப் பல்கலைக் கழகம் மீதான தாக்குதல் நடத்தியது,

(3) அழகு நிலையங்களின் மீதான தாக்குதல்களை நடத்திச் சேதம் விளைவித்தது,

(4)   நாராயண் ராணேவின் ஆதரவாளர்கள் மூலம்நவாகாள்எனும் தினசரியின் அலுவலகத்தில் நடத்திய தாக்குதல்கள் ஆகும்.

“இன்டெர் காண்டினண்டெல் ஹோட்டலின் சொத்துகளை நாசப்படுத்தியது தொடர்பாக, பால் தாக்ரே மற்றும் உத்தவ் தாக்ரே மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதா?” என்று நீதிபதி படேல் கேள்வி எழுப்பினார்.

“இவர்களைப் போன்ற உயர்மட்டத் தலைவர்கள் வீட்டில் அமர்ந்து கொண்டு, இதுபோன்ற அராஜகச் செயல்களை ஏவுகின்றனர். மேலும் ராஜ் தாக்ரே மற்றும் நாராயண் ராணே சம்பந்தப்பட்ட இன்னபிற அடாவடி சம்பவங்களுக்காக அவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதா?” என்றும் கேட்டார். மேலும், “அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாநில அரசு விரும்பா விட்டால், அரசே அவற்றுக்கான நஷ்ட ஈட்டை வழங்கட்டும்” என்றும் அவர் கூறினார்.

அரசாங்க சார்பில் இதற்கு பதிலளிக்கையில், நிரஞ்சன் பண்டித் எனும் அதிகாரி நாசகாரச் செயல்களுக்குத் தலைமை வகித்த தலைவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு சம்பவங்களில் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நீதிபதி படேல் மேலும் இதுபற்றி விபரமாகக் கூறுகையில், “உச்ச நீதிமன்றத்தின் மூலம் இது போன்ற விவகாரங்களைக் கையாளுதல், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் உள்ளன” என்று குறிப்பிட்டார்.

“மேற்காணும் தலைவர்கள் மீது எடுக்க உள்ள நடவடிக்கைகள் பற்றி, அரசாங்கத்தின் நிலைபாட்டையும் விசாரணையின் விபரங்களையும் விபரமாக உள்துறைத் தலைமைச் செயலாளர் இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும்” என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது பொதுநல அமைப்புகள் ஒன்றிணைந்து சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களைப் பற்றி அவர்கள் யாராக இருப்பினும் எவ்விதத் தயக்கமோ அச்சமோ இல்லாமல் பொதுநலப் புகார் மனு தாக்கல் செய்திட வேண்டும். அதை அரசும் நீதிமன்றமும் முறையாக விசாரித்து, குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி தண்டனையும் அபராதமும் விதிக்க முன் வரவேண்டும்.

பொதுமக்கள் இதுபோன்ற சுயநலவாதிகளை இனம் கண்டு, அவர்களது அடாவடிகளுக்கு மௌன ஆதரவளித்திடாமல் புறக்கணித்து, அவர்களுக்குத் தங்கள் முழு பலத்தினை, நடுவுநிலையாகவும் முறையாகவும் உணர்த்திட வேண்டும்.

அப்போதுதான் சட்டத்தைத் துச்சமாகக் கருதி எதையும் யாரையும் சிறிதும் மதிக்காமல் விஷக்கருத்துக்களை விதைக்கும் விதமாக எழுதியும் பேசியும் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொள்கின்ற, வன்முறையைத் தூண்டி விடுகின்ற, பொதுமக்களின் உயிர்-உடமை-நிம்மதிக்கு ஊறு விளைவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்ற சுயநல விஷமிகளின் கொட்டம் அடங்கும்.

தகவல் : இபுனு ஹனீஃப்