தீவிரவாதி(!) ஷமீம் விடுதலை!

கேரள மாநிலத்தின் குளிமாடு பாழூர் சாலிக்குழி வீட்டில் ரஹீம் என்பவரின் மகன் ஷமீம்(22)  ரஹீம் மரியம் தம்பதிகளின் மூத்த மகனாவார். மர்கஸ் கலைக் கல்லூரியில் இவ்வருடம் பட்டம் பெற்ற ஷமீம், வேலை தேடி மத்தியப் பிரதேசம் சென்றார். அவரைக் கடந்த மாதம் 18 அன்று மத்தியபிரதேசம் இண்டோருக்கு அருகிலுள்ள பர்வானி மாவட்டத்திலுள்ள பள்சூத் காவல்துறை கைது செய்தது. பள்ஸூதிலுள்ள லிட்டில் ரோஸ் அரசுப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துக் கொண்டிருந்த ஷமீமைத் தீவிரவாதி எனக் கூறி காவல்துறை கைது செய்து சிறையிலடைத்தது.

ஷமீமின் விடுதலைக்காக அவரின் தந்தை ரஹீம், கேரள உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். விபரம் அறிந்த மத்தியப் பிரதேச காவல்துறை, அவசரம் அவசரமாக ஷமீமை விடுவித்து உடனடியாக கேரளாவுக்குத் திரும்புமாறு கூறியதாக நேற்று மதியம் கேரளம் திரும்பிய ஷமீம் கூறினார்.

 

"ஆகஸ்ட் 19 அன்று இரவு எனது வசிப்பிடத்தில் அத்துமீறி நுழைந்து என்னைக் கைது செய்த காவல்துறை, முதலில் பள்ஸூத் காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றது. அங்கிருந்து அன்று இரவே பட்வானி எ.எஸ்.பியின் அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர். எ.எஸ்.பி என்னைக் கண்டவுடன், "குர்ஆன் வாசிக்கத் தெரியுமா?" எனக் கேட்டார். நான், "தெரியும்" எனக் கூறியபொழுது, இடது கையால் முகத்தில் அறைந்தார். பிறகு, "தினமும் பள்ளிவாசலுக்குச் செல்வதுண்டா?" எனக் கேட்டார். "போவதுண்டு" என நான் பதில் கூறிய பொழுது, மீண்டும் முகத்தில் அறைந்தார். "உன் நண்பர்களெல்லாம் முஸ்லிம்களா?" என்பது இறுதியான கேள்வி. "ஆம்" என்று நான் கூறியபொழுது, எ.எஸ்.பி மூன்றாவது தடவை என் முகத்தில் அறைந்தார்" – எனக் காவல்துறை செய்த கொடுமைகளை ஒவ்வொன்றாக ஷமீம் விவரிக்கும் பொழுது கண்களில் நடுக்கத்தின் ரேகைகள்!.

 

 

எ.எஸ்.பியின் விசாரணைக்குப் பிறகு ஷமீமைப் பலநாட்கள் ராஜ்பூர் காவல்நிலைய லாக்கப்பில் அடைத்து வைத்திருந்தனர். இதற்கிடையே பலரும் மாறிமாறிக் கேள்வி கேட்டுக் கொடுமைபடுத்தியுள்ளனர். "பெங்களூர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஒருவர் என்னுடைய நண்பர்" என்ற பொய்க் குற்றசாட்டை அடிப்படையாக வைத்தே தன்னிடம் விசாரணை நடத்தியதாக ஷமீம் தேஜஸ் என்ற நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் கூறினார். ஷமீமுக்குத் தீவிரவாதத்தோடு எவ்விதத் தொடர்போ தீவிரவாதிகளுடன் தொடர்போ இல்லை எனக் கேரளக் காவல்துறை அறிக்கை அனுப்பிய பின்னரும் விசாரணையும் கொடுமைப் படுத்தலும் தொடர்ந்து நடந்துள்ளது. நீண்ட நாட்கள் லாக்கப் வாசத்திற்குப் பின்னர் பணியிடத்துலுள்ள ஓர் அறையில் காவல்துறை அவரை அடைத்து வைத்துள்ளது. இந்நிலையில் மேல் அதிகாரிகளைச் சந்தித்துத் தான் நிரபராதி என்பதைத் தெளிவிப்பதற்கோ சட்ட உதவி தேடுவதற்கோ அவரை அனுமதிக்கவில்லை.

 

இதற்கிடையில், ஷமீமைக் கண்டுபிடித்துக் கொண்டு வரக் கோரி ஷமீமின் தந்தை கேரள உச்சநீதிமன்றத்தை அணுகிய விவரம் பள்ஸூத் காவல்துறையினருக்குக் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு முன்னர் எ.எஸ்.ஐ, "உடனடியாக நாட்டிற்குத் திரும்ப வேண்டும்" என ஷமீமை நிர்பந்தித்து அவரை விடுவித்துள்ளார்.

 

 

மத்தியபிரதேசக் காவல்துறை எவ்வித காரணமும் தெரிவிக்காமல் கைது செய்த தனது மகனை விடுவிக்க வேண்டும் எனக் கோரி இம்மாதம் 5 ஆம் தேதி, சாலிக்குழி ரஹீம் கேரள நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், மாநில அரசுச் செயலரிடம் விளக்கம் சமர்ப்பிக்கக் கட்டளையிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மாநில உள்துறை அமைச்சகம் மத்தியபிரதேசக் காவல்துறையிடம் ஷமீம் கைது தொடர்பான காரணங்கள் அடங்கிய அறிக்கை கேட்டது. இக்கோரிக்கை கிடைக்கப்பெற்ற நாளில் எவ்வித விளக்கமும் இன்றி உடனடியாகக் கடந்த செவ்வாய்க் கிழமை ஷமீமை விடுவித்த மத்தியபிரதேசக் காவல்துறை, அவரை உடனடியாக கேரளம் செல்ல நிர்பந்தித்து அனுப்பி வைத்துள்ளது.

 

குர் ஆன் ஓதுவதையும் நாள்தோறும் பள்ளிக்குச் சென்று தொழுவதையும் தீவிரவாதக் குற்றங்களாக மாற்ற முயலும் மத்தியப் பிரதேசக் காவல்துறை சட்டப்படி தண்டிக்கப் படவேண்டும் என்பது நீதியை மதிக்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கோரிக்கையாகும்.