அத்வானி ஒரு தீவிரவாதி – லாலு

Share this:

டெல்லி: தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய இந்து அமைப்பினரை, இந்து அமைப்புகளும், பாஜகவும் ஆதரிப்பது கண்டனத்துக்குரியது. அந்த வகையில் பாஜகவும், அத்வானியும் கூட தீவிரவாதிகள்தான் என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் காட்டமாக கூறியுள்ளார். இதுகுறித்து லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், நான் எப்போதுமே இதைத்தான் சொல்லி வருகிறேன். மதரீதியில் மக்களை பிளவுபடுத்தும் பாஜகவும், அத்வானியும் தீவிரவாதிகள். அவர் சிறைக்குப் போக வேண்டியவர் தான் என்றார். 
 

லாலு பிரசாத் யாதவ், அத்வானியை தீவிரவாதி என்று கூறியிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் அருண் ஜேட்லி, சிலர் பேசுவதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. அப்படிப் பட்டவர்களில் லாலுவும் ஒருவர் என்று கூறியுள்ளார்.
 
இடதுசாரிகள் கடும் தாக்கு: 
 
இந் நிலையில் மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக கைதாகியுள்ள பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூரை பாஜக ஆதரித்துப் பேசுவதற்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஎம் பொலிட்பீரோ விடுத்துள்ள அறிக்கையில்:
 
"பணியில் உள்ள ராணுவ அதிகாரி மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக கைதாகியுள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கை விசாரிக்க விடாமல் காவல்துறையினரையும் நிர்வாகத்தையும் நெருக்க ஆரம்பித்திருக்கிறது பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்சும். பாஜகவைச் சேர்ந்த சில முதல்வர்கள் பானிப்பட்டில் நடந்த ஆர்.எஸ்.எஸ்- வி.எச்.பி. ஆதரவிலான சாதுக்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். இந்துக்கள் தீவிரவாதிகளாக இருக்க முடியாது என்றும் பெரும்பான்மை சமூகத்தின் முக்கியப் புள்ளிகளை காவல்துறை வேண்டும் என்றே குறி வைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர். இந்துத்வா அமைப்புகளுடன் தொடர்புடைய யாரையும் தீவிரவாத குற்றம் புரிந்ததற்காக விசாரிக்கவே கூடாது என்று பாஜக கூறுவது அபாயகரமான பேச்சாகும். தீவிரவாதத்திற்கு எதிரான பாஜகவின் நிலைக்கு முற்றிலும் முரணாக இது உள்ளது. அதன் போலி மதச்சார்பின்மையை இது வெளிப்படுத்துவதாக உள்ளது" என்று கூறியுள்ளது.
 
இதேபோல சிபிஐ, பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகளும் பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. 
 
பாஜக தேச விரோத கட்சி – பாஸ்வான்: 
 
"இதற்கிடையே பாஜக, வி.எச்.பி, பஜ்ரங் தளம் ஆகியவை தேச விரோத சக்திகள்" என லோக் ஜன சக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தீவிரவாதிகளுக்கு எந்த மதமும் கிடையாது. தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் யாருமே தேச விரோதிகள்தான். சமீப காலமாக இந்து தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாஜக பேசி வருகிறது. தற்போதைய தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் அத்வானி ஆகியோர் இது தொடர்பாக எடுத்துள்ள நிலை குறித்து அவர்கள் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். 
 
நன்றி: தட்ஸ் தமிழ்

 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.