குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-6)

ஐயம்: நூஹ் (அலை) அவர்களின் மகனின் நிலை எது?
•மொத்த குடும்பமும் பிழைத்தது (21:76)
•நூஹ் (அலை) அவர்களின் மகனார் மூழ்கடிக்கப்பட்டார் (11:43)

மேலும்: திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய, ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார். ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது. (அல்குர்ஆன் 29:14)

(ஆயினும்) அவர்கள் அவரை ஏற்க மறுத்தனர். எனவே, நாம் அவரையும் அவருடன் கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். அவர்களையே வழித்தோன்றல்களாகவும் ஆக்கினோம். நம் சான்றுகளை ஏற்க மறுத்தோரை நாம் (பெருவெள்ளத்தில்) மூழ்கடித்தோம். எச்சரிக்கப்பட்டோரின் முடிவு என்னவாயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக. (அல்குர்ஆன் 10:73)

நபி நூஹ் (அலை) அவர்களின் ஆயுட்காலம் தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகளாகும். நீண்டகால உழைப்பிற்குப் பிறகும், நூஹ் (அலை) அவர்களின் சமுதாய மக்கள் திருந்தவில்லை – அம்மக்கள் ஏக இறைவனை ஏற்கவில்லை. மாறாக, நபியை பெரும் துயரத்திற்கு ஆளாக்கினர். குறைவானவர்களே நம்பிக்கைக் கொண்டனர். பிறகு நபியையும், நம்பிக்கைக் கொண்டேரையும் கப்பலில் ஏற்றிக் காப்பாற்றி, மறுத்தவர்களை வெள்ளப் பிரளயத்தில் மூழ்கடித்தான் இறைவன் என 29:14, 10:73 ஆகிய இறை வசனங்கள் பேசுகின்றன.

நூஹையும் (எண்ணிப் பார்ப்பீராக) இதற்கு முன்னர் அவர் (நம்மை) அழைத்தபோது, அவருக்காக (அவரது அழைப்பை) ஏற்றுக்கொண்டு, அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பெரும் துன்பத்திலிருந்து நாம் காப்பாற்றினோம்.

நம் வசனங்களை ஏற்க மறுத்த சமூகத்தாருக்கு எதிராக அவருக்கு நாம் உதவினோம். நிச்சயமாக அவர்கள் தீய மக்களாக இருந்தனர். எனவே, நாம் அவர்கள் அனைவரையும் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்தோம். (அல்குர்ஆன் 21:76,77)

நான் தோற்கடிக்கப் பட்டுவிட்டேன். எனக்கு நீ உதவி செய்வாயாக! என்று அவர் (நூஹ்) தம் இறைவனிடம் பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் 54:10 மேலும், பார்க்க: 23:26)

இங்கே கேள்வியில் எழுப்பியுள்ளது போல், ”மொத்த குடும்பமும் பிழைத்தது” என்று 21:76வது வசனத்தில் இல்லை. மாறாக, ‘அவரையும் அவரது குடும்பத்தாரையும் காப்பாற்றினோம்” என்று கூறப்பட்டுள்ளது. நபி நூஹு (அலை) அவர்களின் நீண்டகால பிரச்சாரப் பணியில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதுடன், அவரது சமூக மக்கள் அநியாயக்காரர்களாக இருந்தனர். இதனால், ”நான் தோற்கடிக்கப்பட்டேன் எனக்கு நீ உதவி செய்வாயாக! என்று இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். இறைவனை ஏற்க மறுத்த சமூகத்தாருக்கு எதிராக, அவருக்கு இறைவன் உதவினான்.

நபி நூஹு (அலை) அவர்களின் சமூகத்தாரில் மிகக் குறைவானவர்களே ஏக இறைவனை நம்பிக்கை கொண்டிருந்தனர். “ஏற்கெனவே நம்பிக்கை கொண்டவர்கள் தவிர, இறைவனை மறுத்தவர்கள் இனி ஒருபோதும் இறைவனை நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்!” எனவும் இறைமறையில் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.           

”(நூஹே!) உம்முடைய சமூகத்தாரில் (ஏற்கெனவே) இறைநம்பிக்கை கொண்டோரைத் தவிர வேறு யாரும் (இனி) ஒருபோதும் இறைநம்பிக்கை கொள்ளப் போவதில்லை. எனவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவை குறித்து நீர் கவலைப்பட வேண்டாம்” என்று நூஹுக்கு அறிவிக்கப்பட்டது. (அல்குர்ஆன் 11:36)

நூஹ் நபியின் பிரார்த்தனை,

”என் இறைவா! இந்தப் பூமியில் இறை மறுப்பாளர்களில் ஒருவரைக் கூட நீ விட்டு வைக்காதே!” (அல்குர்ஆன் 71:26)

குர்ஆனில் முரண்பாடுகள் உள்ளன என்கிற வாதத்தின் சார்பாக, நூஹ் நபியின் மகனார் நூஹ் நபியின் குடும்பத்தார்தானே அவ்வாறிருக்க, நூஹ் நபியின் குடும்பத்தாரை நாம் காப்பாற்றினோம் என்று 21:76வது இறைமறை வசனம் கூறுகின்றது. ஆனால், 11:43வது வசனமோ பெருவெள்ளப் பெருக்கில் நூஹ் நபியின் மகனார் மூழ்கடிக்கப்பட்டார் என அறிவிக்கின்றது “இது முரண்பாடுதானே?” என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளன.

இங்கு எழுதியுள்ள வசனங்களில், நூஹ் நபியின் சமூகத்தாரில் இறைநம்பிக்கை கொண்டோரைத் தவிர மற்றவர் வெள்ளப் பெருக்கில் மூழ்கடிக்கப்பட வேண்டும் என்பது இறைவாக்கு, நூஹ் நபியின் பிரார்த்தனையும் ”இந்தப் பூமியில் இறைமறுப்பாளர்களை ஒருவரைக்கூட விட்டு வைக்காதே” என இருந்தது.

நூஹ் நபியின் மகனார் இறைமறுப்பாளராக இருந்ததால் அவர் அழிக்கப்பட வேண்டியவராக இருந்தார் என்பது தெளிவு! இதைத்தான் வரும் வசனத் தொடரில் குறிப்பிடப்படுகின்றது:

இறுதியில் நமது ஆணை பிறந்தது, பூமியின் மேற்பரப்பில் (தண்ணீர்) பொங்கியது. அப்போது நாம், ”ஒவ்வொன்றிலிருந்தும் (ஆண் பெண் இரு இனங்களில்) ஒரு ஜோடியையும், உம்முடைய குடும்பத்தாரில் யாருக்கெதிராக (நமது) வாக்கு முந்திவிட்டதோ அவர்களைத் தவிர மற்றவர்களையும், இறைநம்பிக்கை கொண்டோரையும் அதில் ஏற்றிக்கொள்வீராக” என்று கூறினோம். ஆனால் குறைவானவர்களைத் தவிர (மற்றவர்கள் யாரும்) அவருடன் இறைநம்பிக்கை கொண்டிருக்கவில்லை. (அல்குர்ஆன் 11:40 மேலும், பார்க்க: 23:27)

”உமது குடும்பத்தாரில் யாருக்கு எதிராக (நமது) வாக்கு முந்திவிட்டதோ அவர்களைத் தவிர”… என்று மேற்கண்ட இறைமறை வசனம் கூறுகின்றது. இதன் மூலம், உமது குடும்பத்தாராக இருந்தாலும், இறைநம்பிக்கை கொண்டோரைக் காப்பதாக வாக்களித்திருந்தேன் எனக் கூறி, இறைநம்பிக்கையின்றி நிராகரிப்பாளாராக இருந்தால் அவரும் அழிக்கப்படுவார் என திட்டவட்டமாக முன்னறிவிக்கப்பட்டதால் நூஹ் நபியின் மகனார் அழிக்கப்பட்டதில் முரண்பாடு இல்லை!

(கப்பல்) அது மலைகள் போன்ற அலைகளில் அவர்களை (சுமந்து) கொண்டு சென்றது. அப்போது நூஹ், ஒதுங்கி நின்ற தம் மகனிடம் ”என் அருமை மகனே! நீ எங்களுடன் (வந்து) ஏறிக்கொள், இறைமறுப்பாளர்களுடன் இருந்துவிடாதே” என்று குரல் கொடுத்தார்.

அதற்கு அவன், ”என்னைத் தண்ணீரிலிருந்து காக்கும் ஏதேனும் ஒரு மலையில் நான் தஞ்சமடைந்து கொள்வேன்” என்று கூறினான். அதற்கு அவர், ”இன்றைய தினம் இறையருள் பெற்றவர்களைத் தவிர (மற்ற யாரையும்) அல்லாஹ்வின் ஆணையிலிருந்து காப்பவர் யாரும் கிடையாது” என்றார். அப்போது அவ்விருவருக்கும் இடையே ஓர் அலை குறுக்கிட்டது. (அதையடுத்து) அவன் மூழ்கடிக்கப்பட்டடோரில் ஒருவன் ஆனான். (அல்குர்ஆன் 11:42,43)

அப்போது நூஹ் தம் இறைவனை அழைத்து ”என் இறைவா! நிச்சயமாக என் மகன் (நீ காப்பதாக வாக்களித்த) என் குடும்பத்தாரில் ஒருவன் ஆவான், நிச்சயமாக உனது வாக்குறுதி உண்மையானது, நீ நீதியாளர்களுக்கெல்லாம் மேலான நீதியாளன் ஆவாய்” என்று கூறினார்.

அதற்கு இறைவன், ”நூஹே! அவன் (நாம் காப்பதாக வாக்களித்த) உம்முடைய குடும்பத்தாரில் ஒருவன் அல்லன், அவன் ஒழுங்கற்ற செயல் (உடையவன்) ஆவான். எனவே, உமக்குத் தெரியாத ஒன்றைக் குறித்து நீர் என்னிடம் (எதுவும்) கேட்காதீர், நீர் அறியாதோரில் ஒருவராகிவிட வேண்டாம் என உமக்கு நான் அறிவுரை கூறுகிறேன்” என்று சொன்னான்.

அதற்கு அவர், ”என் இறைவா! எனக்குத் தெரியாத ஒன்றைக் குறித்து உன்னிடம் கேட்பதிலிருந்து உன்னிடமே பாதுகாப்புக் கோருகிறேன், நீ என்னை மன்னித்து, எனக்குக் கருணை காட்டவில்லையானால் நான் இழப்புக்குரியோரில் ஒருவனாகிவிடுவேன்” என்றார். (அல்குர்ஆன் 11;45-47)

நூஹ் நபியின் மகனார் பெருவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டதும், இறைவனை அழைத்து, ”என் இறைவா! என் மகன் என் குடும்பத்தாரில் ஒருவன் ஆவான்” என்று நபி நூஹ் (அலை) கூறினார்கள். அதற்கு இறைவன் ”நூஹே அவன் (நாம் காப்பதாக வாக்களித்த) உம்முடைய குடும்பாத்தாரில் ஒருவன் அல்லன், அவன் ஒழுங்கற்ற செயல் உடையவன் ஆவான். என 11:46வது வசனத்தில் இறைவன் அறிவுரை கூறுகின்றான். அதாவது, இறைமறுப்பாளராகவும், நபியும், தந்தையுமாகிய நூஹ் (அலை) அவர்களுக்கு மாறு செய்பவராகவும் இருந்ததால் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு மரணித்துவிடுவார் என முடிவு செய்யப்பட்டோரில் அவரும் ஒருவரே என விளங்கினால் குர்ஆனில் முரண்பாடு இல்லை எனவும் புரிந்துகொள்ளலாம்!

நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான்; இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர்; எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர்; எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை; இன்னும், “நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்” என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது. (அல்குர்ஆன் 66:10)

மேற்கண்ட வசனத்தின் கருத்தாவது: நபிமார்களின் மனைவியராக இருந்தாலும் இறைமறுப்பாளாராக இருந்தால், இறைவனிடமிருந்து வரும் தண்டனையை மனைவிக்காக நபிமார்களாலும் தடுக்க இயலாது என்பதாகும்.

(இறைவன் மிக்க அறிந்தவன்)