நற்பண்புகள் (குறைகளை மறைத்தல்)

Share this:

உண்மை முஸ்லிமின் நற்பண்புகளில் ஒன்று பிறரது குற்றங்குறைகளை மறைத்தலாகும். இஸ்லாமிய சமூகத்தில் கீழ்த்தரமான விஷயங்கள் பரவுவதை அவர் விரும்பமாட்டார். திருமறையும், நபிமொழியும் முஸ்லிம்களின் குற்றம் குறைகளை தூண்டித்துருவி ஆராய்ந்து அவர்களது கௌரவத்துக்கு பங்கம் விளைவிக்கும் குழப்பவாதிகளை வன்மையாகக் கண்டிக்கிறது.

எவர்கள் (இதற்குப்பின்னரும்) விசுவாசிகளுக்கிடையில் இத்தகைய மானக்கேடான வார்த்தைகளைப் பரப்ப விரும்புகின்றார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. (அல்குர்ஆன் 24:19)

யார் சமூகத்தில் மானக்கேடான விஷயங்களைப் பரப்புவதில் ஈடுபடுகிறாரோ அவரும் அந்தச் செயலை செய்தவரைப் போன்ற பாவியாவார். அலீ (ரழி) அவர்கள் கூறினார்கள் ”மானக்கேடானதைப் பேசுபவனும் அதைப் பரப்புபவனும் பாவத்தில் சமமாவார்கள்.” (அல் அதபுல் மு·ப்ரத்)

இஸ்லாமிய சமூகத்தில் வாழ்பவர் இழிவான, கீழ்த்தரமான விஷயங்களில் ஈடுபடுவதிலிருந்து மிகவும் வெட்கி விலகியிருப்பார். நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ‘பிறரது அந்தரங்கத்தில் தலையிடாமை’ என்ற பண்பை ஏற்று பாவங்களை பகிரங்கப்படுத்துவதிலிருந்து தனது நாவை காத்துக்கொள்வார். தன்னுடைய பாவத்தையும் அல்லது பிறரின் பாவத்தையும் அதை அவரே பார்த்திருந்தாலும் சரியே அல்லது பிறர் கூற கேட்டிருந்தாலும் சரியே, அதை வெளிப்படுத்தக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”எனது உம்மத்தினர் அனைவரும் மன்னிக்கப்படுவார்கள். அந்தரங்கத்தை பகிரங்கப் படுத்துபவனைத் தவிர. ஒரு மனிதன் இரவில் ஒரு செயலைச் செய்கின்றான். அல்லாஹ் அவனது செயலை மறைத்துவிட்ட நிலையில் காலையில் அவன் ”ஓ! நேற்றிரவு நான் இன்னின்ன காரியத்தைச் செய்தேன்” என்று கூறுகிறான். அல்லாஹ் அவனது குறையை நேற்றிரவு மறைத்திருந்தான், அல்லாஹ் மறைத்ததை இவன் காலையில் பகிரங்கப்படுத்துகிறான்.” (ஸஹீஹ¤ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்: ”ஓர் அடியானின் குறையை மற்றொரு அடியான் மறைத்தால் அவனது குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்கிறான்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

உக்பா இப்னு ஆமிர் (ரழி) அவர்களிடம் ஒரு கூட்டத்தினர் ”எங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள அண்டை வீட்டார் மது அருந்து கிறார்கள், சில தீயசெயல்களையும் செய்கிறார்கள். நாங்கள் இதைப் பற்றி ஆட்சியாளரிடம் தெரிவிக்கலாமா?” என்று கேட்டனர். உக்பா இப்னு ஆமிர் (ரழி) அவர்கள் கூறினார்கள் வேண்டாம்!. நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: ”எந்த ஒரு மனிதர் முஸ்லிமிடம் ஒரு குறையைக் கண்டு மறைத்து விடுகிறாரோ அவர் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை கப்ரிலிருந்து உயிரோடு மீட்டவராவார்” என்று கூறினார்கள். (அல்அதபுல் மு·ப்ரத்)

மனிதனின் பலவீனங்கள் என்ற நோய்களுக்கான மருந்தாகிறது அவர்களது குறைகளை ஆய்வுசெய்து அதை பகிரங்கப்படுத்தி அவர்களை இழிவுபடுத்துவதல்ல. இது எவ்வகையிலும் நிவாரணமாகாது. உண்மை நிவாரணம் என்னவெனில், இம்மனிதர்களிடம் சத்தியத்தை எடுத்துரைத்து, நன்மைகளில் ஆர்வத்தை ஏற்படுத்தி, தீய செயல்களின் மீது அவர்களுக்கு வெறுப்பை ஊட்ட வேண்டும். சண்டை, சச்சரவுகளை பகிரங்கப்படுத்தக் கூடாது. நேசமும் மென்மையும் கொண்ட இவ்வாறான நடவடிக்கைகளால்தான் மூடிய இதயங்களைத் திறந்து, தூய்மைப்படுத்த முடியும். இதனால்தான் முஸ்லிம்களின் குற்றம் குறைகளை தேடித்துருவி ஆராய வேண்டாமென இஸ்லாம் தடை செய்துள்ளது.

(எவருடைய குற்றத்தையும்) நீங்கள் துருவித் துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம். (அல்குர்ஆன் 49:12)

இப்னு மஸ்வூத் (ரழி) அவர்களிடம் ஒரு மனிதர் இழுத்துக் கொண்டு வரப்பட்டார். இழுத்து வந்தவர்கள், ”இவருடைய தாடியிலிருந்து மது சொட்டுகிறது” என்று கூறினார்கள். இப்னு மஸ்வூத் (ரழி) அவர்கள் ”நிச்சயமாக நாங்கள் குற்றங்களை துருவித்துருவி ஆராய்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளோம். எனினும் ஏதேனும் தவறுகள் வெளிப்பட்டால் நாங்கள் தண்டிப்போம்” என்று கூறினார்கள். (ஸ¤னன் அபூதாவூத்)

அதாவது முஸ்லிம்களின் குறைகளை துருவிப் பார்ப்பதும், அவர்களது பலவீனமான செயல்களையும் குறைகளையும் கண்டறிந்து பகிரங்கப்படுத்துவதும், அது சம்பந்தப்பட்ட முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி அவர்கள் வாழும் சமுதாயத்தையும் பாதிக்கும். ஒரு சமுதாயத்தில் மானக்கேடான காரியங்கள் பெருகி அவர்களுக்கு மத்தியில் புனையப்பட்ட பேச்சுகள் பரவிவிட்டால் அந்த சமுதாயத்தில் ஒற்றுமைக்கேடு உருவாகி பாவங்கள் இலேசாகி குரோதமும், வஞ்சமும், சூழ்ச்சியும் வேரூன்றி அச்சமுதாயத்தையே குழப்பங்கள் சூழ்ந்து கொள்ளும்.

இது குறித்து நபி (ஸல்) அவர்கள் ”நிச்சயமாக நீ முஸ்லிம்களின் குறைகளை ஆராய்ந்து கொண்டிருந்தால் அவர்களை நீ பாழாக்கி விட்டாய்! அல்லது பாழ்படுத்த நெருங்கிவிட்டாய்” என்று கூறினார்கள். (ஸ¤னன் அபூதாவூத்)

இவ்விடத்தில் மக்களின் கௌரவத்தைக் குலைக்கும் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதற்கு நபி (ஸல்) அவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்கள். அவ்வாறு ஈடுபடுபவர்களை அவர்களது வீட்டிலேயே அல்லாஹ் அவமானப்படுத்திவிடுவான் என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”அல்லாஹ்வின் அடியார்களை நோவினை செய்யாதீர்கள், இழிவுபடுத்தாதீர்கள், அவர்களது குற்றங்களை தேடிச்செல்லாதீர்கள். எவன் தனது முஸ்லிம் சகோதரனின் குற்றம் குறைகளை தேடித்திரிகிறானோ அவனது குறைகளை அல்லாஹ் துருவிப்பார்ப்பான். இறுதியில் அவனை அவனது வீட்டுக்குள்ளேயே அவமானப்படுத்தி விடுவான்.” (முஸ்னத் அஹ்மத்)

மக்களின் குறைகளை தேடித்திரியும் வீணர்களைக் கண்டிப்பதில் நபி (ஸல்) அவர்களின் நடவடிக்கை எவ்வளவு கடினமாக இருந்தது என்பது பற்றி அபூ ஹ¤ரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரசங்கம் நிகழ்த்தினார்கள். வீட்டுக்குள்ளிலிருந்த பெண்கள்கூட செவியயேற்கக்கூடிய பிரசங்கமாக அது இருந்தது.

நபி (ஸல்) அவர்கள் ”நாவால் ஈமான் கொண்டு இதயத்தில் ஈமான் நுழையாதவர்களே! இறைவிசுவாசிகளை நோவினை செய்யாதீர்கள், அவர்களது குறைகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள். எவன் தனது சகோதர முஸ்லிமின் குறைகளை துருவித் துருவி ஆராய்கிறானோ அவனது கௌரவத்தை அல்லாஹ் அழித்துவிடுவான். எவன் தனது சகோதரனின் குற்றம் குறைகளை ஆராய்கிறானோ அவன் தனது வீட்டுக்கு மத்தியில் இருந்தபோதும் அல்லாஹ் அவனை கேவலப்படுத்தி விடுவான்.” என்று கூறினார்கள். (மு·ஜமுத் தப்ரானி)

நபி (ஸல்) அவர்கள் தங்களது இதயத்தில் ஈமான் நுழையாமல் நாவினால் மட்டும் ஈமான் கொண்டவர்களே! என்று கூறியது எவ்வளவு கடுமையான வார்த்தை? இது பிறர் குற்றங்குறைகளை தூண்டித் துருவி ஆராய்பவர்கள் உண்மையில் நாவினால் மட்டுமே ஈமான் கொண்டிருக்கிறார்கள்; அவர்களது இதயத்தில் ஈமான் நுழைந்திருந்தால் இத்தகைய காரியத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்ற பொருளைத் தருகிறது.

இந்த இழிவான குணமுடையோர் பிறரை குறை காணுவதை மிக எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அல்லாஹ்விடம் அது மகத்தான குற்றமாக உள்ளது. தனக்குத் தேவையற்றதில் ஈடுபடமாட்டார்

தனது இரட்சகனின் திருப்பொருத்தத்தை மட்டுமே இலட்சியமாகக் கொண்டு தனது ஈமானை வலுப்படுத்துவதில் ஆர்வமுடைய முஸ்லிம் தனக்குத் தேவையற்ற விஷயங்களில் ஈடுபடமாட்டார். தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் தனது மூக்கை நுழைக்காமல்  பிறரைப் பற்றி பேசப்படும் வதந்திகளில் ஆர்வம் காட்டாமல் விலகி நிற்பார். இவ்வாறான இழி குணங்களிலிருந்து மனிதனை மேம்படுத்தி வைத்திருக்கும் இஸ்லாமிய நற்பண்புகளை பற்றிப் பிடித்துக் கொள்வார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”தனக்குத் தேவையற்ற விஷயங்களிலிருந்து விலகியிருப்பது ஒருவரின் அழகிய இஸ்லாமியப் பண்பில் உள்ளதாகும்.” (ஸ¤னனுத் திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு மூன்று குணங்களை விரும்புகிறான், மூன்று குணங்களை வெறுக்கிறான். உங்களிடம் அவன் விரும்பும் மூன்று குணங்கள்:
1. அவனையே நீங்கள் வணங்க வேண்டும் 2. அவனுக்கு எதையும் இணைவைக்கக் கூடாது 3. நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும், நீங்கள் பிரிந்துவிடக் கூடாது.

அல்லாஹ் உங்களிடம் வெறுக்கும் மூன்று குணங்கள்: 1. ‘அவர் சொன்னார். (இவ்வாறு) சொல்லப்பட்டது’ என்பது போன்ற வதந்திகளில் ஈடுபடுவது 2. அதிகமாக கேள்விகள் கேட்பது 3. செல்வத்தை வீணடிப்பது.” (ஸஹீஹ் முஸ்லிம்)

அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்தை ஏற்றுள்ள சமூகத்தில் ‘அவர் சொன்னார், இவ்வாறு சொல்லப்படுகிறது’ என்பது போன்ற வதந்திகளுக்கும், அதிகமதிகம் சந்தேகித்து கேள்விகளை எழுப்பிக் கொண்டு மனிதனின் அந்தரங்கத்தினுள் மூக்கை நுழைப்பதற்கும் இடமில்லை.

அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்தின் உறுப்பினர் பூமியில் அல்லாஹ்வின் ஏகத்துவக் கலிமாவை உறுதிப்படுத்துவது மற்றும் அதைப் பரப்புவது போன்ற உன்னதமான செயல்களுக்காக தங்களை அர்ப்பணித்து, நாலா திசைகளிலும் ஏகத்துவக் கொடியை உயர்த்திக் கொண்டிருப்பார். மக்களிடையே ஏகத்துவத்தை ஸ்திரப்படுத்துவதில் தனது நேரங்களைச் செலவிடுவார்.

ஒரு முஸ்லிம் இத்தகைய மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும்போது பிறர்குறையை ஆராய்வதற்கு அவருக்கு அவகாசமிருக்காது.

தொகுப்பு: அபூ ஸாலிஹா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.