தோழர்கள் – 58 உபை இப்னு கஅப் أبي بن كعب

Share this:

உபை இப்னு கஅப்
أبي بن كعب

லீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு மதீனாவின் வீதிகளில் உலாச் சென்றிருந்தார். அறையில் சொகுசாய் அமர்ந்து ஆட்சி செலுத்தும் பழக்கம் உருவாகாத காலம் அது. மக்களுக்கான நல்லது கெட்டது, ஊர் நடப்பின் நேரடித் தகவல் போன்றவற்றுக்கு அதுதான் கலீஃபா உமருக்கு வசதிப்பட்டது.

அப்போது இறை வசனம் ஒன்று அவரது நினைவிற்கு வந்தது. ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் அவர்கள் செய்யாதவற்றை (செய்ததாக)க் கூறி நோவினை செய்பவர்கள் … – சூரா அல் அஹ்ஸாபின் 58 ஆவது வசனம் அது.

மக்களும் அவர்களது நலனும் என்று உச்சபட்ச அக்கறையுடன், இறைவனின் சட்டங்களின் அடிப்படையில் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தவர் உமர். தமது ஒவ்வோர் அசைவும் இறை நியதிக்கு உட்பட்டிருக்கிறதா என்பதே அவருக்கு சதா கவலை. அதனால் அந்த வசனம் அவரது நினைவிற்கு வந்ததும் ஆட்சி என்ற பெயரில் தாம் மக்களிடம் கடுமை காட்டுகிறோமோ,  அநீதி இழைக்கிறோமோ என்று அவருக்குக் கவலை ஏற்பட்டுவிட்டது. எனவே இந்த வசனத்திற்கு விளக்கம் பெற நினைத்தார்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அணுக்கத் தோழர் உமர். நபியவர்களிடம் நேரடியாகப் பலவும் கற்று அறிந்தவர். அதனால் என்ன? “தான்” என்ற அகங்காரம், ஞானச் செருக்கு என்பனவெல்லாம் அவருக்கு அந்நியம் என்பதால் விளக்கம் அறிய தோழர் அபூமுன்திருடைய இல்லத்திற்கு விரைந்தார். அங்கே தமது வீட்டில் ஒரு திண்டில் அமர்ந்திருந்த அந்தத் தோழர், கலீஃபா உமரைக் கண்டதும் வரவேற்றார். தமது திண்டை அவருக்கு அளித்து, “அமருங்கள் அமீருல் மூஃமினீன்” என்று உபசரித்தார்.

‘எவ்வளவு கவலையுடன் வந்திருக்கிறேன், இதென்ன திண்டும் உபசரிப்பும்’ என்பதைப்போல் அதைத் தமது காலால் தள்ளி அகற்றி விட்டுத் தரையில் அமர்ந்து கொண்டார் உமர் இப்னுல் கத்தாப். மேற்சொன்ன வசனத்தை ஓதி, “இந்த வசனம் குறிப்பிடும் நபர் நானோ என்று எனக்கு அச்சமேற்படுகிறது. நான் இறை நம்பிக்கையாளர்களுக்குத் தீங்கிழைக்கிறேனோ?”

அபூமுன்திர் பதில் அளித்தார்: “ஆட்சியாளராகிய நீர் மக்களின்மீது அக்கறை கொள்ளாமல் இருக்க முடியாது. எனும்போது அவர்களது நலனுக்கான விதிகளும் கட்டளைகளும் விலக்கப்பட வேண்டிய செயல்களுக்கான தடைகளும் ஏற்படுத்தத்தானே வேண்டும்.” அவையெல்லாம் இறை நம்பிக்கையாளர்களுக்குச் செய்யப்படும் தீவினை அல்ல என்று விளக்கமளித்தார் உபை.

“நீர் சொல்வது புரிகிறது. எனினும் அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்” என்று விடைபெற்றார் உமர்.

கலீஃபாவே தேடி வந்து ஆலோசனை பெறும் அளவிற்கு அந்தத் தோழருக்கு மெச்சத்தகுந்த குர்ஆன் ஞானம் அமையப் பெற்றிருந்தது. ஒரு பேச்சுக்காக, பாராட்டுதலுக்காகக் குறிப்பிடுவது போலன்றி, அது மாமனிதரால் சான்றிதழ் வழங்கப்பெற்ற ஞானம். அபூமுன்திர் என்று அழைக்கப்பட்ட அவரது இயற்பெயர் உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு.

oOo

உபை இப்னு கஅப் மதீனாவின் கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவர். யத்ரிபில் இஸ்லாம் மீளெழுச்சியுற்ற ஆரம்பத் தருணங்களிலேயே அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுவிட்டார். பின்னர் அகபா உடன்படிக்கையில் பங்கேற்றவர்களுள் ஒருவர், நபியவர்களின் புனிதக்கரம்  பற்றிப் பிரமாணம் அளித்த பாக்கியவான் என்று இஸ்லாத்துடனான ஞான உறவு துவங்கியது. நபியவர்கள் மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து யத்ரிபு மதீனாவாகி, அதன்பின் நடைபெற்ற பத்ரு யுத்தத்தில் பங்கு பெறும் அடுத்த பாக்கியமும் பெற்றார் உபை இப்னு கஅப். அதைத் தொடர்ந்து நிகழ்ந்த யுத்தங்களிலெல்லாம் நபியவர்களின் படையணியில் உபை ஒரு முக்கிய வீரர்.

ஒவ்வொரு தோழருக்கும் ஒவ்வொருவிதச் சிறப்புத் தகுதி அமைந்திருக்கும். இவருக்கு குர்ஆன். குர்ஆன் முழுவதும் மனனம்; செவியுறுவோர் மகிழ்வுறும் குரல் வளத்தில் பாராயணம் என்று உருவானார் உபை. அழகுற ஓதுவது என்பதுடன் நின்று போகாமல் குர்ஆனைப் பற்றிய அவரது ஞானம்தான் அவருக்கு இறைவன் அளித்த தனிச் சிறப்பு.

எந்தளவு?

‘குர்ஆன் கற்றுக்கொள்ள வேண்டுமா? இந்த நால்வரிடம் செல்லுங்கள்’ என்று நபியவர்கள் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் பரிந்துரைத்த அந்த நால்வருள் ஒருவர் உபை இப்னு கஅப். மற்ற மூவர், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத். அபூஹுதைஃபாவினால் விடுவிக்கப்பட்ட அடிமை ஸாலிம், முஆத் பின் ஜபல் ரலியல்லாஹு அன்ஹும்.

அத்தகு பரிந்துரைக்கு உரிய தகுதிகள் அவருக்கு அமைந்திருந்தன என்பதற்குச் சில நிகழ்வுகளும் சாட்சி. ஒருநாள் நபியவர்கள் உபையிடம் “ஓ அபூமுன்திர்! அல்லாஹ்வின் அருள்மறையில் எந்த வசனம் உயர்வானது?” என்று கேட்டார்கள்.

“அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அதைச் சிறப்பாக அறிந்தவர்கள்” என்று பதில் வந்தது. அதென்னவோ, தோழர்களிடம் அப்படி ஒரு பழக்கம். நபியவர்கள் ஒரு கேள்வி கேட்டால் அதற்கான விடை அவர்களுக்குத் தெரிந்திருந்தாலுமேகூட அவர்களுடைய பதிலானது இப்படியான அடக்கமும் பணிவுமாகத்தான் வெளிப்பட்டது. மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார்கள் நபியவர்கள்.

“வணங்குதற்குரியவன் அவனையன்றி வேறில்லை; அவனே அல்லாஹ்! அவன் என்றும் வாழ்பவன். என்றென்றும் நிலைத்திருப்பவன். (சிறு) கண்ணயர்வோ (ஆழ்ந்த) உறக்கமோ அவனை அணுகா. வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதியின்றி அவனிடம் பரிந்துரைக்க எவனால் இயலும்? படைப்பினங்களின் அகத்தையும் புறத்தையும் அவன் நன்கறிவான். அவனுடைய அனுமதியின்றி எவரும் அவனுடைய அறிவின் விளிம்பைக்கூட நெருங்க இயலாது. அவனுடைய அரசாட்சி, வானங்களிலும் பூமியிலும் விரிந்து பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் ஆள்வதும் காப்பதும் அவனுக்கு ஒரு பொருட்டன்று. அவன் மிக்குயர்ந்தவன்; கண்ணியமிக்கவன்

சூரா அல் பகராவின் 255ஆம் வசனமான ஆயத்துல் குர்ஸீயை நபியவர்களிடம் தெரிவித்தார் உபை. அதைக்கேட்டு நபியவர்களின் முகம் மகிழ்வால் மிளிர்ந்தது. உபையின் மார்பைத் தமது வலக் கரத்தால் தட்டித் தந்தார்கள். ‘சரியான பதிலைச் சொன்னாய் உபை’ என்ற அங்கீகாரம் அது.

“உமக்குள்ள ஞானம் உவப்பையும் பலனையும் தரட்டும் அபூமுன்திர்” என்று நபியவர்கள் தமது பிரார்த்தனையையும் வாழ்த்தையும் தெரிவித்தார்கள்.

மற்றொரு நாள். நபியவர்கள் உபையிடம் கேட்டார்கள். “நான் உமக்கு ஒரு சூராவைத் தெரிவிக்கட்டுமா? அதைப்போன்ற ஒன்று தவ்ராத், இன்ஜீல், ஸபூர் வேதங்களில்கூட அறிவிக்கப்பட்டதில்லை.”

“அல்லாஹ்வின் தூதரே. தெரிவியுங்கள்” வேண்டினார் உபை.

அவரது பதிலில் இருந்த ஆர்வத்தைக் கவனித்த நபியவர்கள், “அது என்னவென்று தெரிவிக்கும்வரை நான் இங்கிருந்து வெளியேறுவதை நீர் விரும்பமாட்டீர் என நினைக்கிறேன்” என்றார்கள். அது உபையின் ஆர்வத்தை மேலும் தூண்டியது. சற்று நேரம் கழித்து எழுந்து நின்ற நபியவர்கள், உபையின் கையைப் பிடித்துக்கொண்டார்கள். நபியவர்களைத் தாமதம் செய்ய முனைந்தார் உபை. எங்கே தாம் சொல்லவந்ததைச் சொல்லாமல் சென்றுவிடுவார்களோ என்ற ஆர்வம் கலந்த அச்சம். நபியவர்கள் கதவை அடைந்துவிட,

“அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எனக்கு அறிவிக்கவிருந்த சூரா…” என்று தயக்கத்துடன் நினைவுபடுத்தினார் உபை.

“தொழுகையில் நின்றவுடன் நீர் எதை ஓதுவீர்?” என்று கேட்டார்கள் நபியவர்கள். குர்ஆனின் முதல் அத்தியாயமான சூரா ஃபாத்திஹாவை ஓதிக் காண்பித்தார் உபை.

“அதே! மீண்டும் மீண்டும் ஓதப்படும் அந்த ஏழு வசனங்கள். அதைப் பற்றி எல்லாம் வல்ல அல்லாஹ் “மீண்டும் மீண்டும் ஓதப்படும் ஏழு வசனங்களையும் வல்லமைமிக்க குர்ஆனையும் நாம் அருளியுள்ளோம்’ என்று கூறியுள்ளான்.”

ஆயத்துல் குர்ஸீ, இந்த சூரா ஆகியனவற்றின் சிறப்பும் உயர்வும் இன்று நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயம் என்பதால் ‘இதிலென்ன ஆச்சரியம்?’ என்ற உணர்வு ஏற்படலாம். ஆனால், அன்று, அப்பொழுது, குர்ஆனின் வசனங்கள் படிப்படியாக இறங்கிய அந்தக் காலத்தில், தாமே ஒருவர் முதன்முறையாக அவற்றை உய்த்துணர்ந்து சொல்லியிருக்கிறார் எனில் அவர் எந்தளவு இறை வசனங்களை ஆழ்ந்து உணர்ந்து பயின்றிருக்க வேண்டும்?

இவற்றைவிட மேலான நற்செய்தி ஒன்று உபை இப்னு கஅபுக்கு வந்து சேர்ந்தது. மிகவும் மேன்மையான செய்தி.

”உபை! நான் உமக்காக குர்ஆனை விரித்துவைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளேன்” என்றார்கள் நபியவர்கள்.

‘குப்’பென அவரைக் குதூகலம் தாக்கியது. அவர்கள் உண்மை மட்டுமே உரைக்கும் இறைத் தூதர். அறிவுரை, கட்டளை என அவர்களுக்கு வருவதெல்லாம் விண்ணிலிருந்து. எனும்போது அவர்களுக்கு அவ்விதம் சொல்லப்பட்டிருந்தால் அது பேரின்பச் செய்தியல்லவா? தம்முடைய ஆர்வத்தைக் கட்டுப்படுத்தவில்லை. கேட்டுவிட்டார்.

“அல்லாஹ்வின் தூதரே. தங்களிடம் என்னுடைய பெயர் குறிப்பிடப்பட்டதா?”

“ஆம்” என்று பதிலளித்தார்கள் நபியவர்கள். “உம்முடைய பெயர், வம்சாவளி ஆகியவற்றுடன் விண்ணிலிருந்து குறிப்பிடப்பட்டீர் உபை.”

இதைவிடச் சிறந்த அங்கீகாரம் வேறென்ன அமைந்துவிட முடியும்? வாழ்நாளுக்கும் இது போதாது ஒருவருக்கு?

நபியவர்களின் தோழர்களுள் மிக முக்கியமான ஒருவராகப் பரிணமித்தார் உபை இப்னு கஅப். அவருடைய எழுத்தறிவு நபியவர்களுக்குச் சேவகம் புரிந்தது. குர்ஆன் வசனங்கள் அருளப்படும்போது அதை எழுதப் பணிக்கப்பட்ட தோழர்கள் சிலர் இருந்தனர். அந்தச் சிலருள் உபையும் ஒருவர். அது மட்டுமின்றி நபியவர்களின் கடிதப் பரிமாற்றங்களில் உதவுவதும் உபையின் பணியாக இருந்தது. உஹதுப் போருக்கு மக்காவிலிருந்து குரைஷிப் படைகள் புறப்பட்டவுடன், படையின் முழு விவரங்களையும் அவசர அவசரமாக ஒரு கடிதத்தில் குறிப்பிட்டு அதை நபியவர்களுக்கு அனுப்பி வைத்தார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹு. அக்கடிதம் வந்து சேர்ந்தபோது நபியவர்கள் குபாவிலுள்ள பள்ளிவாசலில் இருந்தார்கள். அதை நபியவர்களுக்குப் படித்துக் காண்பித்தவர் உபை. பிற்காலத்தில் பொய்யன் முஸைலமாவின் தூதுவர்கள் நபியவர்களிடம் வந்தபோது அவனுக்கு நபியவர்கள் தெரிவித்த பதிலை எழுதித் தந்தவரும் உபை.

நபியவர்களின் மறைவிற்குப்பின் உபையின் வாழ்க்கையில் இறையச்சம் – தக்வா – வழிசெலுத்தும் விசையாய் அமைந்து போனது. உலக படாடோபத்தின் வாசமே அற்ற மிக மிக எளிய வாழ்க்கை. ஏனெனில் உலக யதார்த்தத்தை அவர் மிக நன்றாகப் புரிந்து வைத்திருந்தார். எவ்வளவுதான் சொகுசு, வசதி, மாட மாளிகை, அதிகாரம் என்று ஒரு மனிதன் வாழ்ந்தாலும் அவையெல்லாம் ஒரு கட்டத்தில் மறைந்துபோய் மிஞ்சி நிற்கப்போவது அவனுடைய நற்செயல்கள் மட்டுமே என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார்.

இஷாத் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலில் தங்கி, இறை வழிபாட்டிலோ, மக்களுக்குப் பாடம் எடுப்பதிலோ அவரது நேரம் கழியும். கல்வி கற்கவும் ஆலோசனை வேண்டியும் பலர் அவரிடம் வருவார்கள். முஸ்லிம்கள் உலக மாயையில் தொலைந்து போகாமல் எச்சரிக்கை; நபியவர்களின் காலத்தில் தோழர்களின் இறையச்சம், எளிமை, தியாக மனப்பான்மை என்று மக்களுக்கு நினைவுறுத்தல்களும் ஆலோசனைகளும் நிகழ்வுறும்.

ஒருவருக்கு வழங்கிய ஆலோசனையில், “இறை நம்பிக்கையாளனுக்கு நான்கு அம்சங்கள். ஏதேனும் துயர் நிகழ்ந்தால் அவன் பொறுமை காத்து உறுதியுடன் இருப்பான். தனக்குக் கிடைக்கப் பெறுவதற்கு இறைவனுக்கு நன்றி உரைப்பான். அவன் பேசுவது உண்மை மட்டுமே. அவன் வழங்கும் தீர்ப்பு நீதி வழுவாது.”

மற்றொருவர் அவரிடம் வந்து “எனக்கு உபதேசம் அளியுங்கள்” என்றதற்கு, “அல்லாஹ்வின் அருள்மறையை உமக்குத் தலைவராக ஆக்கிக்கொள்ளவும். ஆட்சியாளராக, நீதிமானாக அது அளிக்கும் போதனைகளில் திருப்தியுறுங்கள். உமக்காக நபியவர்கள் விட்டுச்சென்ற ஆஸ்தி அதுவே. உமக்காக இறைவனிடம் பரிந்துரைக்கப் போவதும் அதுவே. அதற்கு அடிபணியுங்கள்.”

நம்மிடமுள்ள பண்புகளையும் பழக்க-வழக்கங்களையும் இந்த அறிவுரையோடு நாம் உரசிப்பார்த்துக் கொள்ளலாம்.

தோழர்கள் மத்தியில் உபைக்கு நல்ல மதிப்பு, மரியாதை. “முஸ்லிம்களின் தலைவர் என்று அவரை அழைப்பார் உமர். அந்த அடைமொழி மக்களிடம் மிகவும் பிரபல்யம். “நபியவர்களின் காலத்தின்போது குர்ஆனைத் தொகுத்தவர்கள் நால்வர். உபை இப்னு கஅப், முஆத் பின் ஜபல், ஸைது இப்னு தாபித், அபூஸைது எனும் அந்த நால்வருமே அன்ஸார்கள்” என்று அனஸ் பின் மாலிக் குறிப்பிட்டுள்ளார். பிற்காலத்தில் தமக்கே தமக்கெனத் தம் கைப்பட எழுதிய குர்ஆன் பிரதியொன்று உபை இப்னு கஅபின் வசம் இருந்தது.

அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்றதும் தமக்கென ஓர் ஆலோசனைக் குழுவை உருவாக்கினார். சிறந்த ஞானமும் துணிவும் மார்க்கச் சட்ட நுண்ணறிவும் பொருந்திய முஹாஜிரீன், அன்ஸார் தோழர்கள் உள்ளடங்கிய அந்தக் குழு “அஹ்லர் ரஅயீ” என்று அழைக்கப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்தவர்கள் மிக முக்கியத் தோழர்களான உமர், உதுமான், அலீ, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், முஆத் பின் ஜபல், ஸைது இப்னு தாபித். இவர்களுடன் உபை இப்னு கஅப். ரலியல்லாஹு அன்ஹும். அபூபக்ரு தமது ஆட்சிக் காலத்தில் பல விஷயங்களில் உபை இப்னு கஅபிடம் ஆலோசனை கேட்குமளவிற்கு அவர்மீது அபூபக்ருக்கு நம்பிக்கையும் மதிப்பும் இருந்தது.

அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுக்குப் பிறகு உமர் கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் அவரது ஆலோசனைக் குழுவிலும் மேற்சொன்ன தோழர்களும் இடம் பிடித்தனர். மார்க்க சம்பந்தமான ஃபத்வாக்களா? கலீஃபா உமர் அணுகியது உதுமான், ஸைது இப்னு தாபித், உபை இப்னு கஅப். குர்ஆன் வசனங்களுக்கான விளக்கம் எனில் நபியவர்களின் விளக்கம் அறிந்திருந்தால் அதைப் பின்பற்றுவார் உமர். அப்படியேதும் தாம் அறியாதபட்சத்தில் அவர் விரைவது குர்ஆன் ஞானம் மிகைத்துள்ள தோழர்களிடம். அவர்கள் உபை இப்னு கஅப், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத், முஆத் பின் ஜபல், இப்னு அப்பாஸ். ரலியல்லாஹு அன்ஹும்.

அந்த நன்மதிப்பினால்தான் ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் அவர்கள் செய்யாதவற்றை (செய்ததாக)க் கூறி நோவினை செய்பவர்கள் … “ என்ற வசனத்திற்கு விளக்கம் தேவைப்பட்டதும். “ஓ அபூமுன்திர்! இந்த வசனம் குறிப்பிடும் நபர் நானோ என்று எனக்கு அச்சமேற்படுகிறது. நான் இறை நம்பிக்கையாளர்களுக்குத் தீங்கிழைக்கிறேனோ?” என்று அவர் விரைந்து வந்தார்.

ஸிரியாவிலும் இராக்கிலும் இஸ்லாமிய ஆட்சி பரவி அங்குள்ள மக்களுக்குக் கல்வி கற்பிக்க மார்க்க ஞானம் மிக்க தோழர்களை உமர் அனுப்பி வைத்தபோதும் தமக்கென மதீனாவில் அவர் தங்க வைத்துக்கொண்ட தோழர்களுள் உபை இப்னு கஅபும் ஒருவர். தம் அருகிலேயே தமக்கு உதவியாக உபை இருக்க வேண்டும் என்று உமர் திடமாக எண்ணியதால், அவருக்கு ஆட்சிப் பொறுப்பு, ஆளுநர் பதவி என்று அளித்துத் தொலைவில் வைக்காமல், ‘இங்கேயே இருங்கள்’ என்று தம்மருகில் வைத்துக்கொண்டார்.

கடுமையான சிக்கல்கள், பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம் கலீஃபா உமர் ஆலோசனை புரிய, சரியான முடிவெடுக்க அவரது உட்குழுத் தோழர்கள் பெரும் உதவியாய்த் திகழ்ந்தனர். மார்க்கச் சட்டம், குர்ஆன் வசனங்களில் அவர்களுக்குள்ள ஆழ்ந்த ஞானம், பிரச்சனைகளை அணுகுவதில் இருந்த யதார்த்தம், அனுபவம் ஆகியனவெல்லாம் அதற்குக் காரணம்.

“மக்களே! யாரெல்லாம் குர்ஆனைப் பற்றி அறிய விரும்புகிறீர்களோ அவர்கள் உபை இப்னு கஅபிடம் செல்லவும். வாரிசுரிமை பற்றி அறிய ஸைது இப்னு தாபித்திடமும் சட்டதிட்டங்கள் பற்றி அறிய முஆத் பின் ஜபலிடமும் பணப் பரிமாற்றம் குறித்தவற்றை என்னிடமும் கேளுங்கள்” என்று அறிவித்துள்ளார் உமர்.

ஆட்சித் தலைவராக உமர் இருந்தாலும் அவரிடம் உபை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பேசக்கூடியவர். அச்சம் என்பது இறைவனுக்கே என்றிருந்தவர். ஒருமுறை உபை இப்னு கஅப் ஒரு வசனத்தை ஓதும்போது, அதைச் சரியாக நினைவில் வைத்திராத உமர் குறுக்கிட்டு, “நீர் தவறாகச் சொல்கின்றீர்” என்றார்.

உடனே பதில் வந்தது. “இல்லை. நீர்தான் தவறிழைக்கின்றீர்.”

இதைக் கவனித்துக் கொண்டிருந்தார் அங்கிருந்த ஒரு மனிதர். அவருக்குப் பெரும் திகைப்பு. “அமீருல் மூஃமினீனைப் பொய்யர் என்கின்றீரா?”

 “அமீருல் மூஃமினீன் மீது எனக்கு அளவற்ற மதிப்பும் மரியாதையும் வெகு நிச்சயமாக உண்டு. அதற்காக அல்லாஹ்வின் அருள்மறையிலுள்ள வசனத்தை அவர் தவறாக நினைவில் வைத்திருந்தால் அதைச் சரியென்று நான் சொல்ல முடியாது.”

 “உபை சரியாகச் சொன்னார்” என்றார் உமர். பட்டம், பதவி, உயர்ந்தோன், தாழ்ந்தோன் போன்ற சமாச்சாரங்களைத் தாண்டிய மேன்மைமிகு தோழர்கள் அவர்கள். வேறென்ன?

மற்றொருமுறை கலீஃபா உமருக்கும் உபை இப்னு கஅபுக்கும் இடையில் ஒரு தோப்பின் உரிமை சம்பந்தமாய் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பத்திரம், பதிவு அலுவலகம் பட்டா போன்றவை தோன்றியிராத காலம் அது. ஒரு தோப்பு தமக்குச் சொந்தமானது என்று உரிமை கோரினார் உபை இப்னு கஅப். கலீஃபா உமர் அதை மறுத்தார். இருவரும் தங்களுக்கு இடையே நீதிபதியாக ஸைது இப்னு தாபித்தை நியமித்துக் கொண்டார்கள்.

ஸைதை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தனர். உள்ளே நுழைந்ததும் “நீர் எம் இருவருக்கு இடையே நீதி வழங்க வேண்டும்” என்று வந்த விஷயத்தைத் தெரிவித்தார் உமர். ஸைது தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து நகர்ந்து, உமர் வாகாய் அமர்ந்துகொள்ள இடமும் திண்டும் அளித்து “அமருங்கள் அமீருல் மூஃமினீன்” என்று உபசரித்தார்.

“ஆரம்பத்திலேயே பாதகம் புரிய நாடுகிறீரே. நான் என்னுடைய எதிர்க் கட்சிக்காரருடனே அமர்ந்து கொள்கிறேன்” என்று சொல்லிய உமர், உபை இப்னு கஅபுடன் ஸைதின் எதிரே அமர்ந்து கொண்டார்.

ஸைது இருவரின் வாதங்களையும் கேட்டார். அந்தத் தோப்பு உமருக்கு உரிமையானது எனத் தெரிந்து தீர்ப்பு வழங்கினார். அந்தத் தீர்ப்பை மட்டும் பெற்றுக்கொண்டு, தோப்பை உபை இப்னு கஅபுக்கே அன்பளிப்பாக வழங்கிவிட்டார் உமர்.

துண்டு நிலத்தை ஆக்கிரமித்து அதற்காகத் தலையையே வெட்டிக் கொள்வது நமக்கு சகஜமான செய்தி. ஆட்சி அதிகாரம் என்றாலே ஊழலும் கொள்ளையும் என்பது இன்றைய நியதி. இப்படியான காலகட்டத்தில் வாழும் நமக்கு இதெல்லாம் ஒரு விசித்திரம்.  

பிறகு உதுமான் ரலியல்லாஹு அன்ஹு தமது ஆட்சியின்போது, குர்ஆன் பிரதிகளை எழுதப் பன்னிரண்டு தோழர்களை நியமித்தார். அவர்களுள் உபை இப்னு கஅபும் ஒருவர். அந்த ஆட்சியின்போது முஸ்லிம்களின் நிலை உபைக்குக் கவலை அளித்தது. பெரும் பிணக்கும் சண்டையும் உருவாகிவிடுமோ என்று பெரிதும் அச்சப்பட்டார்.

(நபியே!) நீர் கூறும்; “உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படிச் செய்யவும் அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி,  உங்களுள் சிலருடைய கொடுமையை வேறு சிலர் அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்.” அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக (நம்) வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி) விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.

எனும் சூரா அல் அன்ஆமின் 65ஆவது வசனத்தை ஓதும்போது ஆற்றாமை பெருகி விடும். அத்தகு சோதனைகளிலிருந்து காத்தருள்வாய் இறைவா என்பதே அவரது இறைஞ்சுதலாய் இருந்தது. வாய்த்தது.

ஹிஜ்ரீ 29ஆம் ஆண்டு. மதீனாவில் ஒருநாள். மக்கள் கூட்டம் கூட்டமாக தெருவில் சென்று கொண்டிருப்பதை இப்னு தும்ராஹ் என்பவர் கண்டார். ஒருவரிடம் விசாரித்தார்.

“என்ன செய்தி? என்னாயிற்று?”

“நீர் மதீனாவாசி இல்லையா?” பதிலுக்கு அவர் இப்னு தும்ராஹ்விடம் விசாரித்தார்.

“இல்லை”

“இன்று முஸ்லிம்களின் தலைவர் உபை இப்னு கஅப் மரணமடைந்துவிட்டார்.”

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்!

<தோழர்கள் முன்னுரை>


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.