ஹிஜ்ரீ ஒன்பதாம் ஆண்டு நிகழ்வுற்ற தபூக் படையெடுப்பு உமைர் பின் ஸஅத் ரலியல்லாஹு அன்ஹுவின் வரலாற்றில் நமக்கு அறிமுகமானது நினைவிருக்கிறதா? எதிரிகள்மீது திடீரென நிகழ்த்தவிருக்கும் படையெடுப்பாக இருக்கும் பட்சத்தில் பெரும்பாலான தருணங்களில் எங்குச் செல்கிறோம் என்பதை முஸ்லிம்களிடம் நபியவர்கள் அறிவிக்காமல் ரகசியம் காப்பது வழக்கம். ஆனால் இம்முறை தமது படையெடுப்பின் இலக்கைத் தெளிவாக அறிவித்து விட்டார்கள். அதற்குச் சிலபல காரணங்கள் இருந்தன.
தபூக் போருக்கான படையெடுப்பு முடிவான நேரம் கடுமையான வெயில் காலம். பேரீச்சம் பழங்கள் பழுத்துக் கொத்தும் குலையுமாகத் தொங்கி, ‘வாயேன்; என்னை அறுவடை செய்யேன்’ என விவசாயிகளை அழைத்துக் கொண்டிருந்தன. பேரீச்சை விவசாயத்தில் பெருமளவில் ஈடுபட்டிருந்த மதீனாவின் விவசாயிகளுக்கு அது பிரசவகாலம் போன்ற நேரம். தவிர பழங்கள் நிறைந்திருந்த மரங்களின் அடர்நிழல் அந்த வெப்பத்தின் கடுமைக்குப் பெரும் இதம். இப்படியிருக்க, மேற்கொள்ளவிருக்கும் பயணத்தின் தொலைவோ பல நூறு மைல்கள். கடந்து செல்லவேண்டிய பாதை பெரும் பாலைவனம், வனாந்திரப் பகுதிகள் போன்றவற்றை உள்ளடக்கியது. அதுநாள்வரை முஸ்லிம்கள் போரில் சந்தித்தவர்கள் குறிப்பிட்ட அளவிலான படையினர் மட்டுமே. ஆனால் இப்போரில் சந்திக்க வேண்டிய எதிரிகளின் எண்ணிக்கையும் பெருமளவில் இருக்கும் என்பது நபியவர்களின் எதிர்பார்ப்பு. ஆகிய காரணங்களினால்,
தம் வீரர்கள் எதிர்கொள்ளப் போகின்ற இடர்களை வெளிப்படையாகக் கூறிவிட்டார்கள் நபியவர்கள். ‘செல்ல வேண்டிய திசை வடக்கு, அடைய இருக்கும் ஊர் தபூக், தொலைவு பல நூறு மைல்கள், சந்திக்க இருக்கும் எதிரி வல்லரசு பைஸாந்தியம்’ என்று முஸ்லிம்களுக்குத் தெளிவாக அறிவிக்கப்பட்டது. அப்போதுதான் அவர்கள் தங்களின் பயணத்திற்கான ஆயத்தம், போருக்கான தளவாடம், செலவினங்களுக்கான ஏற்பாடு எனத் தங்களைச் சரியான முறையில் தயார் செய்து கொள்ள முடியும் என்பது நபியவர்களின் திட்டம். பெண்கள், வயோதிகர்கள், உடல் ஆரோக்கியம் குன்றியவர்கள், பொருள் வசதி குன்றியவர்கள் ஆகியோருக்கு மட்டும் இந்தப் போரில் கலந்து கொள்வதிலிருந்து விலக்கு. பல இன்னல்களை மீறித் திரண்டிருந்த 30,000 வீரர்கள் திரண்டிருந்த இந்தப் படைக்கு ‘ஜய்ஷுல் உஸ்ரா’ – கோத்திரப்படை என்று பெயர் ஏற்பட்டுப் போனது.
தோழர்கள் இந்தப் படையெடுப்பிற்குத் தங்களது செல்வங்களிலிருந்து அள்ளி இறைத்தது, துள்ளித் தயாரானது, சிலர் பொருள் வசதியற்ற காரணத்தினால் கலந்துகொள்ள இயலாமல்போய் அழுது திரும்பியது எனச் சில நிகழ்வுகளை உமைர் பின் ஸஅத் வரலாற்றில் பார்த்தோம். நபியவர்களின் அறிவிப்பைக் கேட்டு, முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் படை திரண்டனர். அன்றைய அப்போதைய சூழ்நிலையில் பதிவேடுகளில் எழுதி மாளாத அளவிலான முஸ்லிம்கள் தயாராக ஆரம்பித்தனர். அது எந்த அளவிற்கு இருந்ததென்றால் ஒருவர் போரில் கலந்துகொள்ளாமல் பின்தங்கி ஒளிந்து கொண்டால்கூட பிறர் அதைக் கவனிக்க இயலாத அளவிலான எண்ணிக்கை. அந்த அளவிற்கு மிகுந்திருந்தது படை.
இதுவே சிலருக்குத் தவறான அனுகூலம் அளித்துவிட்டது. யாருக்கு? நாங்களும் முஸ்லிம்கள் என்று கூறிக்கொண்டு கபடம் புரிந்து திரிந்து கொண்டிருந்தார்களே நயவஞ்சகர்கள், அவர்களுக்கு. ‘நாம் படையில் இணையாமல் தோப்புப் பக்கம், கொல்லைப் பக்கம் என்று பதுங்கிக்கொண்டால் நபியவர்களுக்குத் தெரியவா போகிறது’ என்று எண்ண ஆரம்பித்தார்கள். வரலாற்றில் நயவஞ்சகர்கள் பட்டியலில் இடம் பிடிப்பதற்கென்றே பிறந்ததைப்போல் அப்படியொரு கபடத்தனம். தேர்வுக்குப் படிக்காவிட்டால், பாடம் பிடிக்காவிட்டால் ஏதாவது சாக்குபோக்குச் சொல்லிப் பள்ளிக்கூடத்திற்கு ‘மட்டம்’ அடிக்கவிரும்பும் மாணவனைப் போல் சிலர் நபியவர்களிடம் வந்து சொன்ன காரணங்கள் அபத்தம். சில அபத்தத்தின் உச்சம்.
அல்ஜாத் பின் ஃகைஸ் என்றொருவன். நபியவர்களின் கட்டளை, ஜிஹாதின் கடமை ஆகியன தெரியவந்ததும் நபியவர்களிடம் வந்தான். காரணம் ஒன்றைக் கூறினான். “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இந்தப் படையெடுப்பிலிருந்து விலக்கு அளித்துச் சோதனையிலிருந்து என்னைக் காப்பாற்ற மாட்டீர்களா? அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். பெண்களை நான் எந்தளவு போற்றக்கூடியவன் என்பதை என் குலத்தவர் நன்கு அறிவர். செம்மை நிறமுடைய ரோம நாட்டுப் பெண்களை என் கண்கள் கண்டால் என்னால் என்னையே கட்டுப்படுத்த இயலாது என்று அஞ்சுகிறேன்.” என்னவொரு கேவலமான காரணம். அவனை விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள் நபியவர்கள். குர்ஆனில் சூரா தவ்பாவின் 49ஆம் வசனம் இவனைக் குறித்து இறங்கியது.
“(வீட்டிலேயே தங்கியிருக்க) எனக்கு அனுமதி தாருங்கள்; என்னைச் சோதனைக்கு உள்ளாக்காதீர்கள்” என்று சொல்வோரும் அவர்களிடையே இருக்கிறார்கள்; அவர்கள் சோதனையிலன்றோ வீழ்ந்துவிட்டார்கள். மேலும் நிச்சயமாக நரகம் காஃபிர்களை (எல்லாப் பக்கங்களிலிருந்தும்) சுற்றி வளைத்துக் கொள்ளும்.”
சோதனையிலிருந்து தப்பித்துக் கொள்கிறேன் பேர்வழி என்று இறைவனின் படு சோதனையில் வீழ்ந்து நிரந்தர நட்டம் அடைந்தவர்களுள் அவனும் ஒருவன். இத்தகையவர்களை உதாசீனம் செய்துவிட்டு நபியவர்களும் தோழர்களும் போருக்கும் பயணத்திற்குமான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
கஅப் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அச்சமயம் போதிய வசதி படைத்திருந்தார். நல்ல உடல் பலம்; முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பொருளாதாரம் என்று அவரது வாழ்க்கைத் தரம் நல்ல நிலையில்தான் இருந்தது. இப்பொழுதெல்லாம் நம்மிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனம் இருப்பது எப்படி வசதிக்கான ஓர் அடையாளமோ, அவ்விதம் அப்போது அவரிடம் இரண்டு ஒட்டகங்கள் இருந்தன. நீண்ட பயணம் மேற்கொள்ளத் தோதான வாகன மிருக வசதி அது. அவரும் தோழர்களுடன் சேர்ந்து கொண்டு பயண ஏற்பாடுகளைச் செய்ய காலை நேரத்தில் செல்வார். காலை பகலாகும். பகல் மாலையாகும். அன்றைய நாள் முடிவுறும். ஆனால் தம்முடைய பயணத்திற்கான எந்த ஏற்பாட்டையும் செய்து முடிக்காமல் திரும்பி வந்துவிடுவார். பெரிதாய்த் தடங்கல் ஏதும் நிகழ்ந்திருக்காது. நினைக்கும்போது தம்மால் அந்த ஏற்பாடுகளை எளிதாகச் செய்து முடிக்கும் சக்தியிருக்கிறதே! பிறகு, நாம் ஏன் அவசரப்படவேண்டும்? நாளை பார்த்துக் கொள்வோம் என்று மனத்திற்குள் எண்ணம். அவ்வளவுதான்.
ஆனால் மறுநாள்? அதுவும் அப்படியே அவருக்குக் கழியும். முஸ்லிம்கள் பெரும்பாடுபட்டு தயாராகிக் கொண்டிருக்க கஅபின் நிலையோ மாறுதலில்லாமல் ஒவ்வொரு நாளும் அப்படியே நீடித்துக் கொண்டிருந்தது.
ஒருவழியாகப் பயண ஏற்பாடுகள் நிறைவடைந்து ஒரு வியாழனன்று காலை, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம்முடன் முஸ்லிம்களை அழைத்துக் கொண்டு புறப்பட, படை கிளம்பிச், சென்றே விட்டது. அப்போதும்கூட கஅப் தம்முடைய பயணத்திற்கு வேண்டிய எந்த ஏற்பாட்டையும் செய்து முடித்திருக்க வில்லை. அந்த நிலையிலும் அவர் மனத்தினுள் ஓடிய எண்ணம், ‘ஒன்றும் பிரச்சினையில்லை. ஒன்றிரண்டு நாளில் பயண ஏற்பாடுகளைச் செய்துகொண்டு நபியவர்களுடன் விரைந்து போய்ச் சேர்ந்து கொள்ளலாம்’ என்பதே.
படை கிளம்பிச், சென்ற நாளின் இரவு கழிந்தது. மறுநாள் காலை. கஅப் பயண ஏற்பாடுகளைச் செய்ய நினைத்தார். ஆனால், அன்றைய நாளும் எந்த ஏற்பாடும் செய்யாமல் திரும்பி வந்துவிட்டார்.
அதற்கு அடுத்த நாள் காலை. அன்றும் எந்த ஏற்பாடும் நிகழாமல் நாள் மட்டும் கழிந்து சென்றது.
இப்படியாக இன்று, நாளை, நாளை என்று அவருடைய நிலை இழுபட்டுக் கொண்டே சென்று, இறுதியில் அந்தப் போர் அவர் கை நழுவியது.
ஏற்பாடு செய்து விடலாம்; புறப்பட்டு விடலாம்; சென்று விடலாம்; அவர்களைப் பிடித்து விடலாம் என்று நினைத்து நினைத்து, மிஞ்சியது நினைப்பு மட்டுமே. மதீனாவில் தனித்துப் போனார் கஅப். ஊரில் எஞ்சியிருந்த மக்களிடையே அவர் சுற்றிவந்தால், அவர் கண்டவரெல்லாம் இறைவனால் சலுகை வழங்கப்பட்ட முதியோர்கள், பெண்கள், பலவீனர்கள், மற்றும் சிலர். அந்தச் சிலர் நயவஞ்சகர்கள் என முஸ்லிம்களால் சந்தேகிக்கப்பட்ட மக்கள். போரிலிருந்து தவிர்த்துக் கொள்ள எவ்விதச் சலுகையுமில்லாமல் பதுங்கி நின்று விட்டவர்கள். பின்தங்கியதற்கு அவர்கள் மனத்திலிருந்த நயவஞ்சகம் தவிர வேறு காரணங்கள் இல்லாதவர்கள்.
அப்பொழுதுதான் தம் தவற்றின் பிரம்மாண்டம் அவரது மனத்தைத் தாக்கியது. இழந்தது எத்தகு வாய்ப்பு, சிக்கிக் கொண்டது எத்தகைய பிரச்சினை என்பது புரிந்தது. கவலை உருவாகி, பெருகி வளர்ந்தது.
மிகப் பெரிய படையுடன் சென்றிருந்த நபியவர்கள், படையினர் எண்ணிக்கையால், பயணத்தின் இதர கடினங்களால், தபூக் சென்றடையும் வரையில் படையில் கஅப் இடம்பெறாததைக் கவனிக்கவில்லை. தபூக்கில் மக்களிடையே அமர்ந்திருக்கும்போதுதான் நினைவிற்குவந்து கேட்டார்கள், “கஅப் என்ன ஆனார்?”
கஅபின் பனூ ஸலமா குலத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்தார். அவர்தான் பதில் கூறினார். “அல்லாஹ்வின் தூதரே! அவரது இரண்டு சால்வைகளும் ஆடை அணிகலன்களும் அவற்றை உடுத்தி அழகு பார்த்துக் கொள்வதும் அவரை வரவிடாமல் தடுத்துவிட்டன.“
உலகக் கவர்ச்சிக்கு இரையாகிவிட்டார் என்பதைப் போல் ஒருவரை மிகவும் இழிவுபடுத்தி உரைக்கும் வாசகம் அது. தக்கக் காரணமின்றி பின்தங்கிவிட்ட கஅபின் மீதிருந்த அளவற்ற வருத்தத்தினால் அவர் அவ்விதம் பதில் அளித்துவிட்டார். அங்கு அமர்ந்திருந்த முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு உடனே அவரை நோக்கி, “தீய வார்த்தை சொன்னாய். அல்லாஹ்வின் மேல் ஆணையாக! அவரைக் குறித்து நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை; இறைத்தூதர் அவர்களே!” என்று குறுக்கிட்டார். இவ்விரு பதில்களையும் செவியுற்ற நபியவர்கள் பதிலேதும் கூறாமல் மெளனமாக இருந்து விட்டார்கள்.
முஸ்லிம் படையினர் முகாமிட்டுக் காத்திருக்க ரோமர்கள் களத்திற்கு வரவில்லை; போரும் நடைபெறவில்லை. பத்து நாள் காத்திருந்து பார்த்துவிட்டு, தபூக்கிலிருந்து மதீனாவிற்குத் திரும்ப ஆரம்பித்தது படை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தபூக்கிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி மதீனாவை அடைந்தது. கஅபை எட்டியது. தம் குற்றம்; அதன் அவமானம் அவர் மனத்தில் படர்ந்து பரவி, கிலியடைந்தார் கஅப்.
‘வரப் போகிறார்கள்; விசாரிக்கப் போகிறார்கள்; அல்லாஹ்வின் தூதரிடம் என்ன பதில் சொல்வது?’ என்ற பெரும் கவலை அவரது மனத்தை வாட்ட ஆரம்பித்தது. சாக்குச் சொல்வதற்காகப் பொய்யான காரணங்களை யோசிக்கத் தொடங்கினார் கஅப். எதுவும் புலப்படவில்லை.
‘நாளை நபியவர்களின் கோபத்திலிருந்து நான் எப்படித் தப்புவேன்?’ என்று தமக்குத்தாமே கேட்டுக் கொண்டவர் அதற்காகத் தம் குடும்பத்தாரிடம் ஆலோசனை கேட்க ஆரம்பித்தார். இதற்குள் நபியவர்கள் மதீனாவை நெருங்கி வந்துவிட்டார்கள் என்று செய்தி அறியவந்ததும், பொய்யாவது, புரட்டாவது என்று அதுவரை அவர் யோசித்துப் புனைந்து வைத்திருந்ததெல்லாம் அவர் மனத்தைவிட்டு ஓடியேவிட்டது.
‘அவர்களோ அல்லாஹ்வின் தூதர். அல்லாஹ்வோ எல்லாவற்றையும் அறிந்தவன். அவன் தன் தூதருக்கு உண்மை நிலவரத்தைத் தெரிவித்துவிட மாட்டானா எனும்போது, பொய்யான காரணம் என்று எதைச் சொல்வது; நபியவர்களிடமிருந்து தப்பிப்பது?’ என்று யோசித்தவர் முடிவெடுத்தார். ஒரே முடிவு. தெளிவான முடிவு. நபியவர்களிடம் உண்மையைச் சொல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலை நேரத்தில் மதீனா வந்தடைந்தார்கள். பொதுவாக நபியவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தால் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று அங்கு இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பின் மக்களைச் சந்திப்பதற்காக அங்கு அமர்வார்கள். அது அவர்களது வழக்கம். இம்முறையும் அவ்விதமே நடந்தது. நபியவர்கள் பள்ளிவாசலில் அமர்ந்ததும் தபூக் போரில் கலந்துகொள்ளாமல் பின்தங்கிவிட்டவர்கள் ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தனர். அவர்கள் ஏறக்குறைய எண்பது பேர். நபியவர்களிடம் சத்தியமிட்டு, ‘அப்படியாக்கும், இப்படியாக்கும்’ என்று தாங்கள் போரில் கலந்துகொள்ளாமல் போனதற்குச் சாக்குப் போக்குக் கூறத் தொடங்கினர். அவர்கள் சொல்வதெல்லாம் பொய் என்று எவரும் எளிதில் யூகிக்கக்கூடிய காரணங்கள்.
ஆனால், குறுக்கு விசாரணை இல்லை; சொன்ன காரணங்களைத் துருவவில்லை. ‘மிக்க நன்று’ என்று அவர்களது வாய் உரைத்த காரணங்களை ஏற்றுக் கொண்டார்கள் நபியவர்கள். அத்துடன் நில்லாமல் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரி இறைஞ்சினார் அந்த மாமனிதர். ஐயம் கொள்வதற்குரிய ஆயிரம் முகாந்திரம் இருந்தும், தண்டிப்பதற்கு அதிகாரம் இருந்தும் அந்நிலையில் அந்த நயவஞ்சகர்களின் அந்தரங்கம் நபியவர்களால் அல்லாஹ்விடம் ஒப்படைக்கப்பட்டது.
பிறகு வந்தார் கஅப் பின் மாலிக். நபியவர்களிடம் ஸலாம் பகர்ந்தார். அவரை ஏறிட்டு நோக்கிய நபியவர்களின் முகத்தில் புன்னகை. ஆனால் கோபத்திலிருப்பவர் முகத்தில் தோன்றுமே அத்தகைய புன்னகை. அதைத் தெளிவாய் உணர்ந்தார் கஅப்.
“வாருங்கள்” என்று அழைத்தார்கள் நபியவர்கள். நடந்து சென்று நபியவர்களின் முன்னிலையில் அமர்ந்து கொண்டார் கஅப்.
மற்றவர்களிடம் எந்தக் கேள்வியும் கேட்காத நபியவர்கள் கஅபிடம், “போரில் நீங்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை. வாகனம் இல்லையா?” என்று விசாரித்தார்கள்.
“வாங்கி வைத்திருந்தேன்” என்று கஅப் மெய்யுரைத்தார்.
“அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன்! தாங்கள் அல்லாத, உலகவாழ்வும் தன்னுயிரும் பெரிதென வாழும் ஒருவரின் அருகில் நான் அமர்ந்திருந்தால் ஏதாவது பொய்யான சாக்குச் சொல்லி அவருடைய கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உடனடியாக வழி கண்டிருப்பேன். எவராலும் வெல்ல முடியாத வாதத் திறன் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், அல்லாஹ்வின் மீது ஆணையாக! தங்களிடம் ஏதாவது பொய்யைச் சொல்லி இன்று உங்களை நான் என்னைக் குறித்துத் திருப்தியடையச் செய்துவிட்டாலும், அல்லாஹ் வெகுவிரைவில் உண்மை நிலவரத்தைத் தங்களுக்குத் தெரியப்படுத்தி என் மீது தங்களைக் கடுங்கோபம்கொள்ளச் செய்து விடுவான் என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன். தற்போது தங்களிடம் நான் உரைக்கும் உண்மை தங்களுக்கு என்மீது வருத்தம் ஏற்படுத்தக்கூடியதே. ஆயினும், அவ்விஷயத்தில் அல்லாஹ்வின் மன்னிப்பை நான் எதிர்பார்க்கிறேன்.
“அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் போரில் கலந்து கொள்ளாததற்கு என்னிடம் எந்தக் காரணமும் இல்லை. எனக்கு இருந்த உடல் பலமும் வசதி வாய்ப்பும் அதற்கு முன் ஒருபோதும் என்னிடம் இருந்ததில்லை. ஆயினும் நான் தங்களை விட்டுப் பின்தங்கிவிட்டேன்.”
தம் அசட்டையாலும் சோம்பலாலும் நிகழ்ந்துவிட்ட மாபெரும் தவறை, குற்றத்தை எவ்விதப் பொய்ப் பூச்சும் இன்றி அப்படியே ஒப்புக்கொண்டார் கஅப். அதைக் கேட்டுக்கொண்ட நபியவர்கள் “இவர் மெய்யுரைத்தார்” என்றார்கள். பின்னர் கஅபை நோக்கி “சரி! எழுந்து செல்லுங்கள். உங்களின் விஷயத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான்” என்று கூறிவிட்டார்கள்.
உள்ளொன்று வைத்துப் புறத்தில் பொய் உரைத்தவர்களின் வார்த்தைகள் அப்படியே ஏற்கப்பட்டன. அவர்கள் அகத்தில் புதைந்திருந்த வஞ்சகம் இறைவன் பொறுப்பு என்று விடப்பட்டது. பகிரங்கமாய் மெய் உரைத்தவர் தமக்கு அல்லாஹ்வின் மன்னிப்பில் நம்பிக்கை உள்ளதைத் தெரிவித்ததால் அவரது தீர்ப்பை அந்த இறைவனே வழங்கட்டும் என்பதும் பகிரங்கமாய் அறிவிக்கப்பட்டது.
உடனே எழுந்து சென்றார் கஅப்.
அதைத் தொடர்ந்து அவர் சந்தித்த சோதனை இருக்கிறதே, வாழ்வதே சிரமம் என்ற அளவுக்கு அவரை அழுத்தி மூச்சடைக்க வைத்த சோதனை. பார்ப்போம்.
– நூருத்தீன்
(கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك பகுதி – 3 இல் தொடரும் இன்ஷா அல்லாஹ்…)