தேசப் பிரிவினை (அருந்ததி ராய் – தொடர் 3)

அருந்ததி ராய்

இத்தொடரின் மூன்றாம் பாகத்தில் நுழையும் முன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தினை வாசித்துக் கொள்ளுங்கள். – சத்தியமார்க்கம்.காம்

இந்துத்துவ பாசிஸ சக்திகளின் துப்பாக்கி முனையில் நிறுத்தி வைக்கப் பட்டிருப்பவர்கள் முஸ்லிம்கள் மட்டுமல்ல. தலித்களும் தொடர்ந்து இவர்களின் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றனர்.

அண்மையில் ஒரிஸ்ஸாவின் கந்தமாலில் இரண்டரை மாதங்களாக கிருஸ்துவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில் 40-க்கும் அதிகமானோர் படுகொலை செய்யப் பட்டனர். நாற்பதாயிரம் பேர் அவர்களின் இருப்பிடங்களிலிருந்து விரட்டப்பட்டு அகதி முகாம்களில் தங்கியுள்ளனர்.

இத்தனை ஆண்டுகளாக ஹஃபிஸ் சயீத் லாகூர் மக்களின் மரியாதைக்குரியவராக, ஜமாத்துத் தாவா என்ற அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். ஜமாத்துத் தாவா லஷ்கர்-எ-தொய்பாவின் ஒரு துணை அமைப்பு என்றே பலர் நம்புகின்றனர். ஹஃபிஸ் சயீத் தனது அனல் பறக்கும் பேச்சுகளால் திரித்துக் கூறிப் பிரச்சாரம் செய்யப் படும் ‘ஜிகாத் கொள்கை’களின் பக்கம் இன்னும் இளைஞர்களை ஈர்த்து வருகிறார்.

கடந்த டிசம்பர் 11 அன்று ஐக்கிய நாட்டு சபை ஜமாத்துத் தாவா அமைப்பின் மீது தடையுத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்த பிற உலக நாடுகளின் நெருக்குதலினால் பாகிஸ்தான் அரசு ஹஃபிஸ் சயீத்தை வீட்டுக்காவலில் சிறை வைத்தது. ஆனால் பாபு பஜ்ரங்கியோ ஜாமீனில் வெளிவந்து குஜராத்தில் ஒரு மரியாதைப்பட்ட மனிதனைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

குஜராத்தில் இனப் படுகொலைகளை அரங்கேற்றிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாபு பஜ்ரங்கி விஹெச்பி-யிலிருந்து விலகி, சிவசேனாவில் இணைந்தான். பஜ்ரங்கியின் முன்னாள் வழிகாட்டியான நரேந்திர மோடி இன்னமும் குஜராத்தின் முதல்வராக இருக்கிறார். கொடூரமான குஜராத் இனப் படுகொலைகளைத் தலைமை தாங்கி நடத்திய ஒருவர், இருமுறை மாநில முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார். ரிலையன்ஸ், டாடா போன்ற பெரும் இந்திய வணிக நிறுவனங்களின் மதிப்பிற்குரியவராக இருக்கிறார். இந்திய விளம்பரத்துறையில் ஒரு முக்கியப் புள்ளியும் தொலைக்காட்சிப் பிரபலங்களில் ஒருவருமான சுஹேல் சேத், “மோடி கடவுளுக்குச் சமமானவர்” என்கிறார். குஜராத் கலவரங்களின்போது இந்துத்துவ பயங்கரவாதக் கும்பல்களை உற்சாகப் படுத்தி, அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்த காவல்துறை அதிகாரிகள் வெகுமதிகள், பதவி உயர்வு என நன்றாக ‘கவனிக்கப்’ பட்டனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு நாடெங்கிலும் 45,000 கிளைகளும் தொண்டு நிறுவனங்களும் இருக்கின்றன. அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் சுமார் 70 லட்சம் தொண்டூழியர்கள் இந்தியா முழுக்க வெறுப்புணர்வை விதைக்கும் கொள்கைப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்களுள் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாயி, எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி, மேலும் பல மூத்த அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர்.

நம் நாட்டின் மதச்சார்பின்மைக் கொள்கையைச் சிக்கலாக்க இவை போதாது என்பதுபோல, பல இந்திய இஸ்லாமிய அமைப்புகளும் தமது குறுகலான சிந்தனைகளைப் பிரச்சாரம் செய்து வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, ‘ஏ’ அல்லது ‘பி’ பிரிவில் ஏதேனும் ஒன்றை நான் தேர்ந்தெடுக்க நேர்ந்தால் நான் ‘பி’ பிரிவைத்தான் தேர்ந்தெடுப்பேன். சந்தர்ப்பச் சூழல் முக்கியமானது – எப்போதுமே.

இந்தியத் துணைக் கண்டத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சந்தர்ப்பச் சூழல் தேசப் பிரிவினையாகும். 1947-ல் இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிப்பதற்காகக் கிழிக்கப்பட்ட அந்தக் கோடு, ஒரே இரவில் மாநிலங்களை, மாவட்டங்களை, கிராமங்களை, வயல்வெளிகளை, சமூகங்களை, நீர்நிலைகளை, வீடுகளை, குடும்பங்களைப் பிரித்து வைத்தது. அது ஆங்கிலேயர்கள் நம் மண்ணிலிருந்து விடைபெறுமுன் நமக்குக் கொடுத்த ‘பரிசு’. தேசப் பிரிவினை அண்மைய வரலாறு கண்டிராத அளவிற்கு மக்களை நாடு விட்டு நாடு மாறச் செய்தது. மேலும் இலட்சக் கணக்கானோர் கொடுமைகளுக்கு ஆளாவதற்குத் தூண்டுகோலாகவும் இருந்தது.

எண்பது லட்சம் மக்கள் -ஹிந்துக்கள் பாகிஸ்தானிலிருந்தும் முஸ்லிம்கள் இந்தியாவிலிருந்தும் -தங்கள் வீடுகளை அப்படியே போட்டுவிட்டு துணிமணிகளை மட்டும் முதுகில் சுமந்து வேறொரு இருப்பிடம் தேடிக் குடிபெயர வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. அவர்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒரு கதை இருந்தது. கற்பனைக் கெட்டாத வேதனைகள், வெறுப்பு, பயங்கரம் ஆகியவற்றோடு சிறிதளவு எதிர்பார்ப்புகளும் கலந்திருந்த அக்கதைகளை அவர்கள் தத்தம் சந்ததியினரிடம் விட்டுச் சென்றார்கள். அந்த வடுக்கள், கிழிக்கப்பட்ட பின்னரும் ஒட்டிக் கொண்டிருக்கும் சதைத் துண்டுகள், சிந்திய இரத்தத் துளிகள், சிதறிய எலும்புகள், நம்மை இன்னும் ஒரு வெறுப்பு வளையத்தினுள் அடைத்து வைத்திருக்கிறது. அவற்றினூடே ஒருவித பாசமும் இழையோடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வுகளின் விளைவாக காஷ்மீர் ஒரு பெரும் சிக்கலில் அகப்பட்டுக் கொண்டு விட்டது. இதுவரை 60,000 பேருக்கு மேல் பலி கொண்டுள்ள அந்தச் சிக்கலிலிருந்து காஷ்மீர் விடுபடுவதற்கான அறிகுறிகள் எதுவும் இதுவரை தெரியவில்லை.

தூய்மையான பிரதேசம் எனப் பொருள் கொண்ட பெயருடைய பாகிஸ்தான் ஒரு இஸ்லாமியக் குடியரசாக மலர்வதாகக் கூறிக் கொண்டது. ஆனால் வெகு விரைவிலேயே அது ஊழல் மலிந்த, வன்முறைகள் தலைவிரித்தாடும், பிற மதத்தினரைச் சகித்துக் கொள்ளாத ஒரு நாடாக மாறிப்போனது. ஆனால் இந்தியாவோ தன்னை ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக அறிவித்துக் கொண்டது. இது மிகச் சிறப்பானதொரு கடப்பாடு. ஆனால் பாபு பஜ்ரங்கியின் முன்னோர்கள் இந்தியாவின் இரத்த ஓட்டத்தில் விஷத்தை கலக்கும் வேலையை 1920களிலிருந்தே – இந்தியா ஒரு தனி நாடாக பிறப்பதற்கு முன்பிருந்தே – திறமையாகச் செய்து வந்தனர்.

1990-ஆம் ஆண்டில் இந்துத்துவச் சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்ற தயாராகினர். 1992-ஆம் ஆண்டில் எல்.கே. அத்வானியால் வெறியூட்டப்பட்ட இந்துத்துவக் கும்பல் பாபர் மசூதியைச் சூறையாடி இடித்துத் தள்ளியது. 1998-ஆம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தது. ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் அமெரிக்கா நடத்திய அட்டூழியம், இந்துத்துவச் சக்திகளுக்கு சாதகமாக அமைந்தது. அதே போர்வையில் இந்துத்துவாக்கள் தாங்கள் விரும்பியதையெல்லாம் செய்து கொண்டார்கள். கொடூரமான இனப்படுகொலைகள் நடக்கக் காரணமான தங்கள் பாசிஸ கொள்கைகளை ‘ஜனநாயக அமைப்பிலுள்ள சீர்கேடுகளைச் சரிப் படுத்தல்’ என்று நியாயப் படுத்திக் கொண்டார்கள்.

இந்தியா தனது பெரும் சந்தைகளை வெளிநாட்டு முதலீடுகளுக்காகத் திறந்து விட்டிருந்த தருணத்தில்தான் இவ்வளவு களேபரங்களும் நடந்தன. வெளிநாட்டு நிறுவனங்கள்மற்றும் அவர்களுக்குச் சொந்தமான ஊடகங்கள் ஆகியவற்றின் இந்திய முதலீடுகளை பாதுகாப்பதற்காக, ‘இந்தியாவில் தங்கள் கட்டுப்பாட்டை மீறி எதுவும் தவறாக நடந்து விடாது’ என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டிய கட்டாயம் அன்றைய ஆட்சியாளர்களுக்கு இருந்தது. அதுவே இந்துத்துவச் சக்திகளின் அராஜகச் செயல்பாடுகளுக்கு ஓர் உத்வேகத்தையும் துணிச்சலையும் அளித்தது. இந்தியத் துணைக் கண்டத்தில் அன்றிலிருந்து இன்றைய மும்பைத் தாக்குதல் வரையில் நடந்து கொண்டிருக்கும் தீவிரவாதச் செயல்களின் வரலாற்றுப் பிண்ணனியும் இதுதான்.

பாகம் – 4 இன்ஷா அல்லாஹ் விரைவில்