தமிழகச் செய்தி ஊடகங்களுக்கு த.மு.மு.க எச்சரிக்கை!

{mosimage}நாட்டில் நடக்கும் எந்தவொரு பயங்கரவாத செயலுக்கும் சிறு பான்மை முஸ்லிம்கள் மீது பழி போடுவது ஓர் வாடிக்கையாகி விட்டது. எங்கே குண்டு வெடிப்புகள் நடந்தாலும் உண்மைக் குற்றவாளிகளை கண்டு பிடிக்க துப்பற்ற, திறமையற்ற காவல் துறை மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் முஸ்லிம் அமைப்புகளையும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையும் காரணமாக்குவதையும் கைது செய்வதையும் தங்கள் வழக்கமாக்கி கொண்டிருக்கின்றன. கையாலாகாத காவல் துறை சொல்லும் அனைத்தையும் கண், காது, மூக்கு வைத்து தங்கள் மனோ இச்சைக்கு ஏற்ப எழுதுவதையும் ஒளிபரப்புவதையுமே வாடிக்கையாக கொண்டுள்ளன அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள்.

 

சமீபத்தில் நடந்த பெங்களூர் மற்றும் அஹ்மதாபாத் குண்டு வெடிப்புகளிலும் வழக்கம் போல முஸ்லிம்களை இணைத்து செய்திகள் வெளியிட்ட மீடியாக்கள் தமிழகத்தில் தீவிரவாதிகள் கைது, குண்டு வைக்க சதி என்ற காவல் துறையின் வழக்கமான பல்லவியை போட்டி போட்டு கொண்டு தங்கள் இஷ்டம் போல வெளியிட்டு அரிப்பைத் தீர்த்துக் கொண்டன. காவல்துறை சொல்வதை அப்படியே வாந்தி எடுக்கும் இந்த ஊடகங்கள மறுபுறம் கேட்க வேண்டும்; குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் என்ன கூறப்படுகிறது என்பதையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற சமூக அக்கறையில்லாமல் செயல்பட்டு வருகிறார்கள்.

குறிப்பாக முஸ்லிம் தீவிரவாதிகள், இஸ்லாமிய பயங்கரவாதிகள் என ஒரு சமூகத்தையும் மதத்தையும் கொச்சைப்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது மட்டுமல்ல, பத்திரிக்கை சட்டத்தின்படி தண்டனைக்குரியது. ஆனால் எழுதுவதற்கு முன்னால் தங்கள் மூளையிலும் பேனா முனையிலும் போதை ஏற்றிக்கொள்ளும் ஊடகங்களுக்கு சரியான பாடத்தை முஸ்லிம் சமுதாயம் புகட்ட வேண்டியதிருக்கும் என எச்சரிக்கிறோம். மதுரையில் ஒரு நாளிதழுக்கு நேர்ந்த கதியை பார்த்தும் இவர்கள் திருந்தவில்லை. அந்தளவுக்கு போகாமல் ஜனநாயக ரீதியில் இது போன்று வக்கிரமாக எழுதும் ஊடகங்களின் அலுவலகங்களில் நூற்றுக்கணக்கில் திரண்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என தமிழகத்தின் அனைத்து ஊடகங்களையும் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் எச்சரிக்கிறோம்.

காலத்தின் கட்டாயம்

தமிழக ஊடகங்களில் இந்துத்துவா மற்றும் ஏகாதிபத்திய கைக்கூலிகளே நிறைந்திருக்கும் சூழ்நிலையில் பொதுவான நடுநிலையான மாற்று அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை ஏற்படுத்த வேண்டியது முஸ்லிம்களின் அவசர மற்றும் முக்கிய கடமையாக இருக்கிறது. கேரள முஸ்லிம்களின் முன்மாதிரியைக் கொண்டு தமிழகத்தில் உடனடியாக இதற்கான வேலைகளை சமுதாய நலன் விரும்பிகள், செல்வந்தர்கள் முடுக்கி விடவேண்டும். ஊடகத் துறையில் பணியாற்றுவதற்கு முஸ்லிம் இளைஞர்கள் ஆர்வமுடனும் அர்ப்பணிப்புடனும் முன் வர வேண்டும். அப்போதுதான் ஊடகத்தில் இருக்கும் நச்சு விதைகளை கிள்ளி எறிய முடியும்.

நன்றி : த.மு.மு.க