அரசுப் பள்ளி மாணவி சாதனை!

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த 19 மாணவ, மாணவிகளிடையே ஒரே அரசுப் பள்ளி மாணவி என்ற பெருமையைப் பெற்ற திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி பாஹீரா பானுவுக்கு இதய மருத்துவ சிகிச்சை நிபுணராகி சேவை செய்வதே விருப்பம் என்றார்.

பத்தமடை,  பள்ளிவாசல் கீழ முதல் தெருவைச் சேர்ந்தவர் பாஹீரா பானு. எஸ்எஸ்எல்சி 2014 பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் 99 மதிப்பெண்ணும், இதர ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 4 பாடங்களிலும் தலா 100 மதிப்பெண்கள் என மொத்தம் 500-க்கு 499 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். மாநில அளவில் முதலிட சாதனையில் ஒரே அரசுப் பள்ளி மாணவி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

மாநில சாதனை குறித்து அவர் கூறியது: 498 மதிப்பெண் வரும் என எதிர்பார்த்தேன். ஆனால், கூடுதலாக ஒரு மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடத்தில் வந்திருப்பது பெரிதும் மகிழ்ச்சியை அளிக்கிறது. தனியா டியூசனுக்கு எதுவும் செல்லவில்லை. பள்ளியில் ஆசிரியர் கற்றுத் தந்தவை மட்டுமே எனது வெற்றியை தீர்மானித்துள்ளது. பள்ளியில் தினமும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெறும். காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வு விடுமுறை நாள்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். இந்த வகுப்புகளே எனக்கு மதிப்பெண்ணை அதிகம் பெற்றுத் தந்துள்ளது.

மேல்நிலைக் கல்வியில் அறிவியல் பிரிவை தேர்வு செய்து படிக்கவுள்ளேன். உயர்கல்வியில் மருத்துவப்படிப்பை தேர்வு செய்வேன். சிறந்த இதய மருத்துவ நிபுணராகி சேவை செய்வதே எனது விருப்பம் என்றார் அவர்.

இவருடைய தந்தை நாகூர் மீரான், சவூதி அரேபியாவில் உள்ள நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய தாய் நூர்ஜஹான். இவருக்கு 12ஆம் வகுப்பு முடித்த வருசை முகைதீன் என்ற அண்ணனும், 4ஆம் வகுப்பு முடித்த சமீரா என்ற தங்கையும், ஒன்றாம் வகுப்பு முடித்த தவ்லத் நிஷா என்ற மற்றொரு தங்கையும் உள்ளனர்.

நன்றி : தினமணி 23/5/2014.

மாணவி பஹீரா பானுவுக்கு சத்தியமார்க்கம்.காம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது!