மஹாஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை!

 பாஜக-வின் அகில இந்திய பொதுச் செயலாளர் திரு. பிரமோத் மஹாஜன் அவரது சொந்த சகோதரரால் சுடப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மும்பை இந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது பலர் அறிந்ததே. சுடப்பட்ட குண்டுகள் திரு. மஹாஜனின் கல்லீரலையும் கணையத்தையும் கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளதால் அவர் உயிருக்குப் போராடி வருகிறார்.

இவருக்கு சிறப்புச் சிகிச்சையளிக்க இலண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைத்துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் உலகப் புகழ்பெற்ற கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். முஹம்மது ரிலா முன்வந்துள்ளார்.

இந்துஜா மருத்துவமனை மருத்துவர்கள் திரு மஹாஜனின் கல்லீரல் கடும் சேதமடைந்துள்ளதால் அவருக்கு செயற்கைக் கல்லீரல் கணையம் மூலம் அவரது உடலியல் இயக்கங்கள் நடக்க உதவி வருகின்றனர்.
திரு மஹாஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையளிக்க உதவுமாறு இந்துஜா மருத்துவமனை மருத்துவர் குழு அழைப்பின் பேரில் டாக்டர் ரிலா மும்பை வருகிறார். டாக்டர் ரிலா 800க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார். ஐந்து வயதே நிரம்பிய அயர்லாந்து குழந்தை ஒன்றுக்கு செய்த கல்லீரல் அறுவை சிகிச்சையால் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இவர் பெயர் பிரசுரிக்கப்பட்டது. 
 
டாக்டர். ரிலா தமிழகத்தைச் சேர்ந்தவராவர். இவர் மயிலாடுதுறை நகரில் பிறந்தவர். தனது மருத்துவப் பட்ட மற்றும் மேற்பட்டப் படிப்பை சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் முடித்தபின் ஐக்கிய இராச்சியம் சென்று உயர்பட்டப் படிப்பையும் FRCS அங்கீகாரத்தையும் 1988 ஆம் ஆண்டில் பெற்றார்.  
 
டாக்டர் ரிலா ஹைதராபாத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் 12 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இலவசமாகவே செய்து தர முன்வந்துள்ளார். 
 
இவர் 'பிளவு கல்லீரல்' எனப்படும் ஒரு ஆரோக்கியமான கல்லீரலை இரு நோயாளிகளுக்குப் பிரித்து அளிக்கும் முறையை அறிமுகப்படுத்தி அதில் நிபுணத்துவமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கல்லீரல் மாற்று அறுவைத் துறையில் 100க்கும் பேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ள டாக்டர் ரிலா, உலகம் முழுவதும் இத்துறையில் பல்வேறு மருத்துவர்களுக்குப் பயிற்சியும் அளித்து மாபெரும் சேவை ஆற்றி வருகிறார்.