காலம்….!

உலகம் படைக்கப்பட்ட நாள் முதல் தொடராக இரவும் பகலும் மாறி மாறி நிகழ்வதைபோல், இவ்வுலகில் மனிதன் தொடர்ந்து பல நிகழ்வுகளையும் சந்தித்து வருகிறான். அது சில வேளைகளில் அவனுக்கு சாதகமாகவும், மகிழ்ச்சியளிப்பதாகவும், இலாபகரமானதாகவும் சில நேரங்களில் அவனுக்குப் பாதகமாகவும், உடல் ரீதியாக பொருள் ரீதியாக இழப்பும், பல்வேறு பிரச்சினைகள் தரக்கூடியதாகவும் இருக்கலாம்.

 

நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான், “ஆதமின் மகன் (மனிதன்) காலத்தை ஏசுகிறான்; நானே காலம் (படைத்தவன்) என் கையில்தான் இரவு பகல் (இயக்கம்) உள்ளது.” அறிவிப்பவர்: அபு ஹுரைரா(ரலி); நூல்: புகாரி(6181)

 

மனித சமுதாயம், மக்கள்தொகையின் வளர்ச்சியின் அடிப்படையில் மட்டுமின்றி வாழ்வியல் வளர்ச்சியிலும், பொதுவாக சகல துறைகளிலும் மிகுந்த முன்னேற்றமான நிலையில் இருக்கும் ஒரு காலகட்டத்தை எட்டிப்பிடித்துள்ளது. உலகம் என்பது ஒரு குடும்பம் எனும் சொல்லாடல் உண்மையாகும் விதத்தில் உலகமே ஒரு கிராமம் போல தொலைதொடர்பு சாதனங்களின் மூலம் ஒருகைப்பிடிக்குள் அடங்கிவிட்டது.

 

இந்நிலையிலும் மனிதன் இயல்பாகவே தனது விருப்பத்திற்கு மாற்றமான நிகழ்வுகளை காணும்போதும், அவை அவனுக்கு சிறியதொரு பாதிப்போ இழப்போ ஏற்படுத்தும் போதும் அதை ஏற்றுக்கொண்டு பொறுமையுடன் செயல்படாமல், அவன் இறைவனிடமிருந்து இதுவரை பெற்ற/பெற்றுள்ள/பெற்று வரும் வாழ்க்கை ஆதார நல்ல உணவு , உடை, வீடு வசதி சாதனங்கள், போன்ற அன்றாட தேவைகள் முதல் ஆரோக்கியம், அந்தஸ்து, செல்வம் , சொத்துக்கள், ஓய்வு இதர போன்ற எல்லா அருட்செல்வங்களையும் மறந்தவனாக காலத்தைக் குறை கூற முனைகின்றான்.

 

எனக்கு காலம் சரியில்லை, நேரம் சரியில்லை போன்ற காரணங்கள் கூறி நொந்துகொள்வது, வேதனை படுவதும் காலத்தை மாற்றி மாற்றி ஏற்படுத்தி, கண்காணித்து வரும் இறைவனைக் குறை கூறுவது ஆகும் என்பதை மறக்கின்றான். இறைவன் தன்னையே காலம் எனக் கூறியதால் காலத்தைப் பழிப்பது தம்மை படைத்த இறைவனை பழிப்பதற்கு ஒப்பாகும் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

மனிதன் தனக்கு ஏற்படும் எந்த ஒரு பிரச்சினையாக இருப்பினும் அது ஒரு சிறிய முள் காலில் குத்துவது முதல் தனக்கு ஏற்படும் சிறிய பெரிய நோய்கள், இழப்புக்கள், நஷ்டங்கள், கஷ்டங்கள் எல்லாம் இறைவன் புறத்திலிருந்து ஏற்படுகின்றது; அவனே இதை அகற்றுவான் என்ற நம்பிக்கையுடன் இறைவனைக் குறை கூறாமல், தனக்கு அவ்விதமான பிரச்சினைகள், இழப்புகள் நிகழ தன் புறத்தில் என்ன தவறு நிகழ்ந்தது என்பதைக் குறித்து சிந்தித்து தமது செயல்களை சீராக்கி செயல்பட முயல வேண்டும்.

 

பிரச்சினைகளும் துன்பங்களும் நிகழும் பொழுது அவை தனக்கு வைக்கப்படும் மற்றொரு சோதனை என்ற எண்ணத்தில் அவற்றைப் பொறுமையுடன் எதிர்கொள்ளவேண்டும். அதில் தான் மன நிம்மதி பெறமுடியும். அதற்கு மாறாகப் பிரச்சினைகள் ஏற்படும் பொழுது, “நமக்கு நேரம் சரியில்லை” எனக் கூறி சலித்துக் கொண்டால் அதனால் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை. பிரச்சனைகள் ஏற்படும் பொழுது அதனை இன்முகத்துடன் எதிர்கொள்பவன் தான் புத்திசாலியே அன்றி சலித்துக் கொள்பவனல்லன். 

 

குறிப்பிட்ட ஒரு நேரத்தை நல்லதாகவோ கெட்டதாகவோ கருதும் கண்ணோட்டம் தவறானது என்பதும் இந்த நபிமொழியில் விளக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஒருவருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை நிகழும் ஒரு குறிப்பிட்ட அதே நேரத்தில் மற்றொருவருக்கு ஏதாவது நன்மையான காரியம் நிகழும். உலகில் நிகழும் பிறப்பும் இறப்புமே இதற்கு நல்ல ஓர் எடுத்துக்காட்டாகும். குறிப்பிட்ட நேரத்தில் உலகின் ஒரு பகுதியில் ஓர் இறப்பு நிகழ்ந்தால் அதே நேரம் உலகின் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு உயிரின் பிறப்பும் நிகழ்கிறது. மரணம் நிகழ்ந்த இடத்தில் உள்ளவர்கள் அந்நேரத்தை பழித்து அது கெட்ட நேரம் எனக் கூறினால், ஜனனம் நிகழ்ந்த இடத்தில் உள்ளவர்கள் அதனை நல்ல நேரம் எனக் கூறுகின்றார்கள். இப்பொழுது அக்குறிப்பிட்ட நேரம் உலகிற்கு நல்ல நேரமா? கெட்ட நேரமா?

 

இதனை தான் இந்த நபிமொழி அழகாக விளக்கிக் கூறுகின்றது. ஒவ்வொருவரின் செயல்களுக்கேற்ப காலமாக இருக்கும் இறைவன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நல்லதையும் நடக்க வைக்கின்றான்; கெட்டதையும் நடக்க வைக்கின்றான். இது மனிதர்கள் ஒவ்வொருவரின் அவரவருக்கான செயல்பாடுகளுக்கான எதிர்விளைவுகளாகும். அவ்வாறு இருக்கும் பொழுது அக்குறிப்பிட்ட காலத்தை ஏசுவதாலோ அல்லது புகழ்வதாலோ எவ்வித பிரதிபலனும் இல்லை.

 

இந்த நபிமொழி மிகவும் பயனுள்ள மற்றும் மனவியல் ரீதியான ஓர் உண்மையை நிலை நாட்டுகிறது. அதாவது நிகழ்வது ஏதும் தற்செயலும் இல்லை; காலத்தின் தன்மையைச் சார்ந்ததும் இல்லை. அவை அனைத்தும் இறைவன் புறத்திலிருந்து மனிதர்களின் செயல்பாடுகளுக்கேற்ற பிரதிபலனாகவோ அல்லது மனிதன் தன் அறிவினால் அறிந்து கொள்ள இயலாத வேறொரு நன்மை கருதியோ இறைவனின் நாட்டப்படியே ஏற்படுகிறது என்ற உண்மையாகும். இந்த எண்ணம் மனிதனின் மனதில் சக்தியுடனும் தெம்புடனும் ஓர் ஆக்கபூர்வமான கண்ணோட்டத்தை வழங்கி அவனது வாழ்க்கை பயணம் மேலும் நம்பிக்கையாக உறுதியாக சீராக தொடர வழிவகுக்கிறது.

 

கட்டுரை ஆக்கம்: இப்னு ஹனீஃப்