இஸ்லாம் கூறும் எளிய தர்மம் – புன்னகை!

புன்னகையின் சிறப்பும் அதன் பயன்களும் அதனைக் குறித்தப் பல மேற்கத்திய அறிஞர்களின் கூற்றுகளும் சமீப காலங்களில் புன்னகைக் குறித்து வெளியாகி வரும் மருத்துவ அறிக்கைகளும் அனைத்துச் சமூகங்களிலும், குறிப்பாக முஸ்லிம்களிடையேயும் வேகமாகப் பரவி வருகிறது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சமூகப் பிணைப்பை ஏற்படுத்தக் கூடிய ஓர் எளிய ஆனால் வசீகரமான உத்தியாக இப் புன்னகையைக் குறித்து இஸ்லாம் அழகிய முறையில் அறிவுறுத்திச் சென்றிருக்கிறது. இதைப் பிறர் அறிந்திருக்கின்றார்களோ இல்லையோ, இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுள்ள முஸ்லிம்கள் அறிந்தோ அறியாமலோ அதனை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது தான் வேதனையான உண்மை.

அன்றைய இஸ்லாமியக் கூற்றுகள் – இன்றைக்கு வேறு வடிவில்!

A smile is a curve that sets everything straight. – Phyllis Diller

A smile is an inexpensive way to change your looks.

– Charles Gordy

Today, give a stranger one of your smiles. It might be the only sunshine he sees all day.

– H. Jackson Brown, Jr.

Life is like a mirror, we get the best results when we smile at it.

 

”உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிவது உனக்கு நல்லறமாகும். நீ நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் நல்லறமாகும். பாதை தவறிய மனிதருக்குப் பாதையைக் காட்டுவதும் உனக்கு நல்லறமாகும். பார்வையிழந்தவருக்குப் பார்வையாக நீ ஆவதும் உனக்கு நல்லறமாகும். பாதையில் கிடக்கும் கல், முள், எலும்பு போன்றவற்றை நீ அகற்றுவதும் உனக்கு நல்லறமாகும். உனது வாளியில் உள்ள தண்ணீரை உனது சகோதரரின் வாளியில் ஊற்றுவதும் உனக்கு நல்லறமாகும்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, இப்னு ஹிப்பான்)

 

வேறு எந்த ஒரு மதத்திலும் இல்லாத அளவிற்கு, அறிவுக்கு ஒவ்வும் சிறந்த பகுத்தறிவுச் சித்தாந்தத்தை இஸ்லாம் புகுத்தியுள்ளதை இதில் காண முடியும். ஒரு மனிதன் தனக்குச் செய்ய வேண்டிய வழிபாடுகளைப் பற்றியும் அதன் நன்மைகளைப் பற்றியும் சொல்லும் இறைவன், அதே அளவில் பயனைப் பெற்றுத் தரும் இன்னொரு செயல் பற்றியும் கூறுகிறான். இறைவழிபாட்டின் மூலம், தான் வழங்கும் நன்மைகளைப் போன்றே ஒரு மனிதன் சக மனிதர்களுடன் அன்புடன் கலந்துறவாடுவதற்கும் கொட்டித் தருவதாக வாக்களிக்கிறான். சுருக்கமாகச் சொல்வது என்றால், சமூகத்தினுள் அழகானதொரு பிணைப்பை ஏற்படுத்தும் இறைவனின் தயாள குணத்தினை சிந்தனையாளர்கள் இதில் இருந்து அறிந்து கொள்ள இயலும்.

 

தர்மம் என்பதெல்லாம் ஏதோ பணவசதியும் பொருள் வசதியும் நிறைந்தவர்களுக்கு மட்டும்தான் என்கிற குறுகியக் கண்ணோட்டத்தை அடியோடு மாற்றியமைக்கிறது இஸ்லாம். ஏழை, எளியவர்களும் தம்மால் இயன்ற தர்மத்தைச் செய்து நன்மையைப் பெற முடியும் என்று இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் மிகவும் ஊக்கப்படுத்தியுள்ளார்கள். எந்த அடிமட்ட நிலையில் இருக்கக் கூடிய வறியவர்களும் தர்மம் செய்து நன்மையை அடைந்து கொள்ளும் வழியினை இறைவன் கூறுகிறான்:


لَن تَنَالُواْ الْبِرَّ حَتَّى تُنفِقُواْ مِمَّا تُحِبُّونَ وَمَا تُنفِقُواْ مِن شَيْءٍ فَإِنَّ اللّهَ بِهِ عَلِيمٌ

நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;. எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் 3:92)

 

சமூகத்தில் ஏற்படும் குழப்பங்கள், பிரச்னைகள் மற்றும் கொலை, கொள்ளை போன்ற கொடிய பல செயல்கள் ஆகியவற்றின் மூல காரணமாக ஒருவரின் வறுமை சொல்லப்படுகிறது. சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் வறுமையை ஒழிக்கும் ஒரே ஆயுதமாக “வளத்தை விநியோகித்தல்” எனும் அற்புதத் திட்டமான ‘ஜகாத்’தை ஏற்படுத்திய இஸ்லாம், தமது இறைவிசுவாசத்தினைக் காட்ட ஒவ்வொரு முஸ்லிமும் தங்களால் இயன்ற அளவிற்குச் சமூகத்திற்கு, தான-தர்மங்கள் செய்வதை வலியுறுத்துகிறது. ஏழை, பணக்காரன் என்ற பெரும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதற்கான மூலக்காரணம் விநியோகத்தில்தான் உள்ளது என்பதை அறிந்து உருவாக்கப்பட்ட திட்டமே இது என்பதை சிந்திப்பவர்கள் உணர்ந்து கொள்ள இயலும்.


அதே போன்று ஒருவர் விரும்பிக்கொடுக்கும் தர்மமான சதகாவை இஸ்லாம் கொடுக்கச் சொல்லி மிகவும் வலியுறுத்துகிறது. தஸதகா (தர்மம் கொடுப்பது) எனும் வார்த்தை சதக்கா (உண்மையைச் சொல்வது / உண்மையாளராய் இருப்பது) எனும் அரபிப் பதத்திலிருந்து உருவானதாகும். மனமுவந்து கொடுக்கும் தர்மமான இதை ஒவ்வொருவரும் தனது தினசரி வாழ்க்கையில் ஓர் அங்கமாக ஆக்க வலியுறுத்தியுள்ளது இஸ்லாம்.


நபி(ஸல்) அவர்கள் ஒருவர் முகத்தில் காட்டும் மென்மையான புன்னகையும் அவர் பிறருக்குச் செய்யும் தர்மமே என்ற அளவிற்கு அதனை வலியுறுத்தியுள்ளார்கள். மக்கள் நடந்து செல்லும் பொதுவழிப் பாதைகளில் உள்ள கற்கள், முட்கள் ஆகிய தடைகளை அகற்றி வழிகளைச் சீரமைப்பது என்று கூறிய நபியவர்கள், புன்னகைப்பதும் அதற்கு ஈடான தர்மம் என்று கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.


“உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பதும் தர்மமாகும்! என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்” – அறிவிப்பாளர்கள்: அபூதர் (ரலி), ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) (திர்மிதி 2022, 2037)


இறைவனிடமிருந்து இவ்வளவு எளிதாக நன்மையைப் பெற்றுத்தரும் ஒரு வாழ்வியல் நெறி வேறெந்த சமுதாயத்திலும் சொல்லப்பட்டதில்லை என்பது தெளிவு.


அதே சமயம் ஒருவர் ஒரேயடியாகச் சிடுமூஞ்சியாகவும் இல்லாமல், எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் புன்னகை மன்னனாகவும் இல்லாமல் அளவுடனும் கனிவுடனும் சிரிப்பதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது. தவிர, தக்கக் காரணமின்றி எப்போதும் சிரிப்பவர் எதிரில் உள்ளவரைப் பரிகாசம் செய்வதாகவும், மறைகழன்றவர் என்று பிறர் எண்ணவும் வாய்ப்புண்டு என்பதைக் கவனிக்கவேண்டும். எனவே புன்னகைக்கான அளவுகோலையும் அறிந்திடல் அவசியமாகிறது.


“நபி(ஸல்) அவர்கள் ஒரேயடியாக தமது உள்நாக்குத் தெரியும் அளவுக்குச் சிரிக்க நான் இதுவரை கண்டதில்லை. அவர்கள் (பெரும்பாலும்) புன்னகை புரிபவர்களாகவே இருந்தார்கள்” – (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், நூல்: புகாரி)


புன்னகை பூக்கும் இன்முகத்துடன் ஒருவர் ஒரு செய்தியைச் சொல்லும்போது அது கேட்பவருக்கு மனதில் பதியவும் சொல்வதைக் கூர்ந்து கேட்கும் ஆர்வத்தையும் அதிகரிக்கும் என உளவியல் ஆய்வு ஒன்று நிரூபிக்கிறது. சந்திப்புகளில் உள்ள இறுக்கத்தை ஓர் எளிய புன்னகை தளர்த்துவதோடு மட்டுமின்றி, எந்த ஒரு சிரமமான விஷயத்தையும் எளிதில் சாதிக்க வைக்கும் ஆற்றல் உள்ளதாகவும் விளங்குகிறது.


இஸ்லாத்தினைப் போன்று உறுதியான சமூகப் பிணைப்பை வாழ்வில் நடைமுறையில் செயல்படுத்தத் தூண்டும் மார்க்கம் வேறு ஏதுமில்லை. அன்பும் பாசமும் தான் ஒரு சமூகத்தை இணைக்கும் வலுவான சக்தியாக இருக்கும் என்பதை மிகவும் வலியுறுத்தக்கூடியது இஸ்லாம். இறைவன் தன் திருமறையில் கூறுவதைப் போன்று இந்தப்புன்னகை உள்ளங்களுக்கு இடையே பிணைப்பை ஏற்படுத்த வல்லது என்பதை அதைக் கடைபிடிக்கும் ஒவ்வொருவரும் உள்ளப்பூர்வமாக கடைபிடிக்கையில் உணரலாம்:


وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الأَرْضِ جَمِيعاً مَّا أَلَّفَتْ بَيْنَ قُلُوبِهِمْ وَلَـكِنَّ اللّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ

மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை (அல்லாஹ்) உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது – ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:63)

சொல்வது வேறு – செய்வது வேறு என்ற நேரெதிராய் செயல்படும் இன்றைய காலகட்டத் தலைவர்கள் போன்று அல்லாமல் நபி(ஸல்) அவர்கள் மிகச்சிறந்த முன்னுதாரணமாக வாழ்ந்துக் காண்பித்துள்ளார்கள். “ஒரே சமயத்தில் மனித மனங்களையும் சிந்தனைகளையும் தம் பக்கம் வென்றெடுத்த ரகசியம் நபி(ஸல்) அவர்களின் அமைதி தவழும் புன்னகை பூத்த முகம்தான்!” என்பதைப் பல்வேறு நபித்தோழர்களின் அறிவிப்பில் இருந்து காண முடிகிறது.


நபி(ஸல்) அவர்களின் பேரனான ஹுஸைன்(ரலி) தம் தாத்தாவான நபிகளாரின் குணங்களைப் பற்றி, தம் தந்தையான அலீ(ரலி) அவர்களிடம் ஒருமுறை கேள்வி எழுப்பினார்கள். அலீ(ரலி) அவர்கள் நபிகளாரைப் பற்றிக் கூறுகையில் “இன்முகமும், பெருந்தன்மையும் கூடிய கனிவு அவர்களிடத்தில் எப்போதும் குடி கொண்டிருக்கும். கடுமையாகவோ, முரட்டுத்தனமாகவோ நபியவர்கள் நடந்து கொண்டதேயில்லை. பிறர் குறைகளை ஆராயும் மனப்பான்மை உள்ளவராகவோ அல்லது அது போன்ற அற்பமான செய்கைகளிலோ அவர்கள் ஈடுபடாமல் விலகியிருப்பார்கள்” என்று பதிலளித்தார்கள். (தப்ரானி)


நபித்தோழர்கள் பலரின் அறிவிப்பிலிருந்து நபி(ஸல்) அவர்கள் புன்னகை பூக்கும் முகமாகவும், நகைச்சுவையை ரசித்து சிரித்த சம்பங்கள் பலவும் அறிய முடிகிறது. நபியவர்களின் பிரத்யேகமான புன்னகையைக் கண்ட ஒவ்வொரு நபித்தோழரும் நபியவர்களுக்கு மிகவும் விருப்பமானவர் தாம்தான் என்ற எண்ணம் மிகைக்கும் அளவிற்கு அவர்களின் புன்னகையில் வசீகரம் இருந்தது.


ஜரீர் இப்னு அப்துல்லாஹ் அறிவிக்கிறார்கள்: “நான் இஸ்லாத்தை ஏற்ற கணத்திலிருந்து புன்னகை பூக்கும் முகம் தவிர வேறெதையும் நான் நபியவர்களிடம் கண்டதில்லை. அவர்கள் என்னைப் பார்க்கும்போதெல்லாம் மெல்லிய புன்னகை பூப்பதைக் கண்டுள்ளேன். (புகாரி)


சக சகோதரர் ஒருவரைக் கண்டு புன்னகைப்பது ஒருவர் செய்யும் தர்மம் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள்.


என் வாழ்நாளில் நபியவர்கள் அளவிற்குப் புன்னகை பூத்த இன்னொருவரை நான் கண்டதேயில்லை என்று அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு ஹாரித் (திர்மிதி)


புன்னகை – சில மருத்துவ உண்மைகள்:

புன்னகையைத் தம் முகத்தில் எப்போதும் இழையோடச் செய்பவர்கள் உடல் அளவிலும் மன அளவிலும் புத்துணர்வோடு வலம் வருகிறார்கள்.


புன்னகைப்பதன் மூலம் இதய நோய் வராமல் தடுக்கிறது என்பதை University of Maryland Medical Center in Baltimore பல்கலைக்கழகம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. ஒரே வயதையும் உடற்கூறுகளையும் ஒத்த (சிரித்த முகமாய் பழகுவர்களும், கடுகடுத்த குணம் கொண்டவர்களுமான) இரு வகைப்பட்ட மனிதர்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 40% க்கும் மேற்பட்ட புன்னகைப்பிரியர்களுக்கு இதய நோய் அண்டும் வாய்ப்பே இல்லை என்று நிரூபணமாகியுள்ளது.


இதற்கான காரணங்களை ஆராய்ந்த மருத்துவ நிபுணர்கள் மன உளைச்சலை ஏற்படுத்தும் மன அழுத்தத்தை உருவாக்கக் கூடிய endothelium எனும் உயிரணுப் படலம் பாதிப்படைவதாலேயே இதய நோய் உருவாகிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர். சந்தோஷமான சமயங்களிலும் இப்படிப்பட்டவர்கள் மனம் விட்டு சிரிப்பதில்லை பிறரையும் சந்தோஷப்படுத்துவதில்லை என்ற விஷயங்கள் ஆய்வில் வெளிவந்துள்ளன.

உடற்பயிற்சி, புகைப்பிடிக்காமை, கொழுப்புச் சத்து குறைந்த நல்ல உணவுப்பழக்கம், ஆகிய மருத்துவப் பரிந்துரைகளில் இப்போது புன்னகை முதலிடம் பெறுகிறது.

Internal Aerobics என்று மருத்துவர்கள் செல்லமாக அழைக்கும் இந்தப் புன்னகை முகத்தில் துவங்கி 400க்கும் மேற்பட்ட உடல் தசை நார்களை இயக்கி புத்துணர்வூட்டுவதால் இப்பெயர் வழங்கப்பட்டது. அத்தோடு பெயருக்கு சிரிக்கும் சிரிப்பு வெறும் 2 தசை நார்களை மட்டுமே இயக்குகிறது என்ற கொசுறுச் செய்தியையும் அறிய முடிகிறது. சிரிப்பவர்களின் உள்ளம் சும்மா இருக்கிறது என்பதை அவர்கள் கண்கள் சிரிக்காமல் வெறுமையைக் காட்டுவதைக் கண்டு உணரமுடியும் என்கின்றனர் மனவியல் நிபுணர்கள்.

இதைப் பற்றி மேலும் ஆராய்ந்தோமானால் பல அற்புதங்கள் கிடைக்கின்றன. மூளைக்கும், நோய் எதிர்ப்புச்சக்திக்கும் இடையே உள்ள உறவை ஆராயும் psycho-neuroimmunology சமீபத்தில் புகழ் பெற்ற ஒரு மருத்துவ நிபுணத்துவமாகும். உணர்வுகளுக்கும் உடலுக்கும் இடைப்பட்ட தொடர்பிலான இந்த ஆய்வில் புன்னகை என்பது நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு செய்யும் சுரப்பிகளைத் தூண்டுகிறது என்பதை அறியமுடிகிறது.


இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றி வருவதாகவும் தாம் ஒரு நல்ல முஸ்லிமுக்கு முன்னுதாரணம் என்றும் எண்ணிக்கொண்டிருக்கும் முஸ்லிம்களில் சிலர் நபியவர்கள் காட்டித்தந்த இந்த எளிய முறையை ஏனோ பின்பற்றுவதில்லை. இறைவனுக்குச் செய்யும் கடமைகளான தொழுவதும் நோன்பு நோற்பதும் மட்டுமே அவர்களை நேர்வழியில் பால் கொண்டு சேர்த்துவிடும் என்பதில் நம்பிக்கைக் கொண்டு உள்ளனர். ஆனால் உண்மை அவ்வாறன்று: நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமிய சமூக உறவுகளைப் பேணுவதிலும் சகோதரர்களிடையே பரஸ்பர அன்பை வளர்த்துக் கொள்வதிலும் மிகவும் ஆர்வமூட்டி உள்ளார்கள் என்பதை நாம் கவனித்துத் திருத்திக்கொள்ள வேண்டும்.


சிரித்து மனம் மகிழ்வதை விரும்பாத மனிதரை உலகில் காண முடியாது. அதிகம் சிரிக்காத சிடுமூஞ்சியாய் இருப்பவரும் யதார்த்தத்தில் சிரிப்பதை விரும்பக்கூடியவரே!


நீங்கள் விரும்பிய ஒன்றை உங்கள் சகோதரருக்காக விரும்பாத வரையில் ஒருவர் உண்மையாளராக மாட்டார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (சஹீஹ் புகாரி & முஸ்லிம்)


எனவே, இதுவரை நம் முகத்தில் அணிந்து வந்த கடுமை எனும் முகமூடியைக் கழற்றி எறிந்து விட்டு இந்த நிமிடம் முதல் ஒரு புத்துணர்வுடன் நமது வாழ்க்கையைத் துவக்குவோம்.


நம் குடும்பத்திலிருந்துத் துவங்கி, சகோதரர்களுடன், நண்பர்களுடன், அண்டை வீட்டார், உற்றார் உறவினர் ஆகிய அனைவருடனும் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்து ஊக்கப்படுத்திய கனிவுடன் கூடி புன்னகையை முகத்தில் தவழ விடுவோம். அதன் மூலம் பிறரின் இறுக மூடப்பட்ட மனங்களையும் புன்னகை என்ற கனிவான நம் திறவுகோல் கொண்டு திறப்போம். இம்மையில் சமூகத்தில் சகோதரப் பிணைப்பை உறுதி செய்து கொள்வதுடன் மறுமையில் இஸ்லாம் வலியுறுத்திச் சொல்லியிருக்கும் புன்னகை எனும் நபிவழியைப் பின்பற்றியதன் மூலம் நிறைய தர்மங்கள் செய்த நன்மையையும் பெற்றுக்கொள்வோம் இன்ஷா அல்லாஹ்!


ஆக்கம்: அபூ ஸாலிஹா