சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008-2009 ஆண்டுக்கான சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பெண்களுக்கான இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை – சத்தியமார்க்கம் நடுவர் குழு. |
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
முன்னுரை:
“இந்தியாவில் தீவிரவாதம் தீர்க்க முடியாத பிரச்சனையா?” என்ற கேள்விக்கு “இல்லை” என்பதே எனது விடை. நான் மட்டுமல்ல, எந்த ஒரு சாதாரண சராசரி இந்தியனும், உலகில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் இதே விடையைத் தான் பகர்வார்கள். ஏனெனில் தீவிரவாதம் என்பது உலகில் ஒரு சிறிய, குறுகிய சிந்தனையளர்களால் பெரும்பான்மையான மக்களைப் பயமுறுத்தி தமது அற்ப சுயநலத்தைப் பேணிக்கொள்வதற்காக உருவாக்கப் பட்ட, ‘வீரச் செயல்’ போல் பொய்த் தோற்றத்தை ஏற்படுத்துகின்ற ஒரு செயற்கையான கருத்துருவாக்கம் என்றால் மிகையாகாது.
தீவிரவாதம் என்றால் என்ன?
“இந்தியாவில் தீவிரவாதம் என்பது தீர்க்க முடியாத பிரச்சினை இல்லை“ என்ற என் விடைக்கான விளக்கங்களுக்கு முன், தீவிரவாதம் என்றால் என்ன? யார் இதனைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்? ஏன் எடுக்கின்றார்கள்? அவர்களின் எதிர்பார்ப்பு என்ன? அதனைச் சுயநலவாதிகள் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பனவற்றைப் பார்ப்போம்.
ஒரு சிறிய குடும்பத்தில் பாராபட்சம் இல்லாத ஒரு தாய் தனது பிள்ளைகளுக்கு எதனையும் பங்கீடு செய்யும்போது கண்டிப்பாக சமமாகவே பங்கிடுவார். ஆனால் இளையவன், பெரியவனுக்கு அதிகமாகக் கொடுக்கிறாய் என்று வாதம் செய்வதைப் பார்க்கலாம். அதற்காக இளையவன் கோபமடைந்து எதையாவது போட்டு உடைத்தால் அதுதான் தீவிரவாதம். அத்தாய் இஸ்லாமிய அறிவு படைத்தவர் என்றால் உடன் கூறுவார்: “மகனே ஒரு போதும் நான் வித்தியாசமாகப் பங்கீடு செய்து உனக்கு அநீதி செய்யமாட்டேன். ஏனெனில் மறுமை நாளில் நான் இறைவனுக்குப் பதிலளிக்க வேண்டும்“ என்று கூறி அமைதிப்படுத்துவார்.
ஒரு சமுதாயமாக வாழும் ஓர் ஊரில் பல சமயத்தவரும், பல மதத்தவரும் வாழ்ந்து வரும்போது அவர்களுக்குள் ஒரு சகோதரத்துவத்தைப் பார்க்கலாம்.
ஆனால் மதத்தால் அல்லது குலத்தொழிலால் அவர்களிடையே ஒரு சிலர் வேறுபடுத்தப்பட்டு, உயர்ஜாதி, தாழ்ஜாதி என்று இனம் பிரித்துக் காட்டும்போதோ, தனி மனித உரிமை மறுக்கப்படும்போதோ, மனிதனை மனிதன் அடிமைப் படுத்த முற்படும்போதோ, மிதிக்கப் படும் மனிதன் மனதில், “நாம் ஏன், எந்த விதத்தில் தாழ்வு?” என்ற ஏக்கம் ஏற்பட்டு சிறிது, சிறிதாக அது மற்றவர்மேல் வெறுப்பாக மாறி, தம்மை வேறுபடுத்தி இழிவு செய்யும் சமுதாய விஷமிகளுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று ஒரு சாதரண மனிதன் தீவிரவாதத்தைக் கையில் எடுக்கும் சூழ்நிலை உருவாகிறது. அதுவே மிதிபடும் பலர் ஒன்று சேரும் போது விஸ்வரூபம் எடுக்கின்றது. இது ஒருவகையான தீவிரவாதம். இதனை எழவே விடாமல் இஸ்லாம் மிக எளிமையாகக் கையாள்கிறது. ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகைக்கும் ஒரே கூட்டமாகக் கூடும்போது கீழ்ஜாதி–மேல்ஜாதி, ஏழை–பணக்காரன், தொழிலாளி–முதலாளி என்ற எந்த வேறுபாடுமின்றி ஒரே வரிசையில் அணிவகுத்து இறைவன் முன் நிற்கின்றனர் முஸ்லிம்கள். எங்கே வேறுபாடு? அந்த இடத்தில் எவரது மனதிலும் தீவிரவாதம் என்ற சொல்லுக்கே இடமில்லை.
மனிதனுக்கு மனிதன் வேறுபாடு இல்லை
நமது இந்திய நாட்டில் பல்வேறு மதத்தினரும் வாழ்ந்து வருகிறோம். பிறந்த மண்ணால் எல்லோரும் இந்தியரே. எல்லோருக்கும் இந்தியக் குடியுரிமை உண்டு. இவர்களில் முஸ்லிம்கள், “அல்லாஹ் ஒருவனே“ என்று அவனையே வணங்குகிறார்கள். இந்துக்கள் அவரவர் கடவுள்களையும், கிறிஸ்த்துவர்கள் இயேசுவையும் வணங்க இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழி வகுத்துள்ளது. அதன்படி மனிதன் செயல் படும்போது மனிதனுக்கு மனிதன் வேறுபாடு, ஏற்றத்தாழ்வு காண்பதில்லை. ஆனால் உண்மையில் நடப்பது என்ன? ஆங்கிலேயர்கள் வாணிகம் செய்ய வந்து இந்திய நாட்டை அடிமைப் படுத்தினார்கள், எப்படி? ஒரே ஒரு உத்தியைத்தான் கையாண்டார்கள். அதுதான் பிரித்தாள்வது. அதே உத்தியைத்தான் இன்றும் உலகில் வல்லரசுகள் கையாண்டு வல்லூருகளாய் உலக அமைதியை இன்றளவும் கெடுத்துக்கொண்டிருக்கின்றன.
தீவிரவாதம் வித்திடப்படும் முறை:
நமது இந்திய வரலாற்றை சுதந்திரப் போராட்டம் ஆரம்பித்த 1857லிருந்து பார்ப்போம். எல்லா மதத்தினரும் இனத்தினரும் சுதந்திரப்போரட்டத்தில் ஒற்றுமையுடன் கலந்து கொண்டதால்தான் காந்தி அஹிம்ஸா முறையில் சுதந்திரத்தைப் பெற முடிந்தது. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் தாங்கள்தான் உயர் ஜாதி, ஆளப்பிறந்தவர்கள் என்றெல்லாம் மனதில் பதியவைத்துக்கொண்டு அன்றும் இன்றும் தீவிரவாதத்தை வித்திட்டு முளைக்கச்செய்து உரமிட்டு வளர்த்து அறுவடையும் செய்துவருகின்றார்கள். அவர்களின் போலி வேஷத்தை இறைவன் வெளிக்காட்ட ஆரம்பித்து விட்டான் என்பதற்கு மாலேகான் நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு.
இந்தச் சமூக விரோதிகள் – ஆம்! தீவிரவாதத்தை வைத்து மனித உயிர்களைக்குடித்து பணம் பண்ணுபவர்களை அப்படித்தான் அழைக்க வேண்டும், விதையிடுகிறார்கள் என்று பார்ப்போம். பொதுவாக ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த சூழ்நிலையைச் சந்தித்து இருப்பார். அதாவது இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெறும். இந்தியாவைக் கூறுபோடத் துடிக்கும் கும்பல், முஸ்லிமைப் பார்த்து, “என்னப்பா உங்க பாகிஸ்தான் விளையாடுது“ என்று உசுப்பேற்றுவார்கள். பெரும்பான்மையனவர்கள் அதனைக் கண்டு கொள்ளமாட்டார்கள். ஒரு சிலர் மனதில் இந்த நச்சு விதை நன்றாகப் படிந்துவிடும். ஓர் ஊரில் பிறந்த ஒருவர், அவ்வூரைத் தனது தாய் மண்ணாக இறக்கும் வரை பாசத்துடன் பார்ப்பார். அப்படியிருக்கும்போது ஒரு நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்க்கை நடத்தும் முஸ்லிமைப் பார்த்து அவனது நாட்டுப்பற்றைச் சந்தேகப்படும்போது யாருக்கும் கோபம் வரவே செய்யும். முஸ்லிம்களைப் பொருத்தவரை உலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களையும் சகோதரர்களாகப் பார்க்கிறோம். இதையே விவேகானந்தர் அமெரிக்காவுக்குப் போய் “சகோதர சகோதரிகளே“ என்று விளித்தார் என்று கேள்விப் பட்டால் எல்லோரும் உணர்ச்சி வசப்படுகின்றோம். இந்த முஸ்லிம் சகோதர மனித நேயத்தை ஏற்றுக்கொள்ள முடியாத சமூக விரோதிகள் விரிக்கும் முதல் வலைதான் மேலே சொன்ன துடுக்குத்தனமான கேள்வி. நாம் இஸ்லாமிய அறிவோடும் சிந்தனையோடும் இருக்கும்போது இவர்களின் நச்சுப் பேச்சைத் தட்டிக் கழித்து உதாசினப்படுத்திவிடுவோம். இதுவே சந்தர்ப்ப சூழ்நிலையால் புரிந்து கொள்ளமுடியாத ஒரு முஸ்லிம், “ஆம் நான் பாகிஸ்தானைத் தான் ஆதரிக்கிறேன்“ என்று கூறிவிட்டால் இந்திய முஸ்லிம்கள் அனைவருமே இப்படித்தான் நாட்டுப் பற்றற்றவர்கள் என்று எக்காளமிடலாம் என்பதே அச் சமூகவிரோதிகளின் திட்டம். இதே சிறு கூட்டம்தான் படிப்பறிவும், பட்டறிவும் குறைந்தவர்காளாக, வசதி வாய்ப்பும் குன்றியவர்களாக உள்ளவர்களை அடிமைப் படுத்தி அவர்களைத் தீண்டத்தகாதவர்களக நடத்தும்போது அச்சமுதாயத்தில் உள்ள சில இளைஞர்கள் சிலர் நக்ஸல்களாகவும் மாவோக்களாகவும் ஆக்கப்படுகிறர்கள். எவரும் தீவிரவாதத்தை வேண்டும் என்றே எடுப்பதில்லை. எந்த ஒரு முஸ்லிமும் அறுதியிட்டு உறுதியாகக் கூறுவார்: இஸ்லாம் எந்த கால கட்டத்திலும் சூழ்நிலையிலும் தீவிரவாதத்தைப் போதிக்கவுமில்லை, ஆதரிக்கவுமில்லை. ஏனெனில் இறைவேதத்தில் அல்லாஹ் தெளிவாகக்கூறுகிறான்: “அல்லாஹ் விலக்கியிருக்கிறான் – நீங்கள் எவரையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள் …” (17:33).
ஆகவேதான் எந்த உண்மையான முஸ்லிமும் தீவிரவாதத்தின் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்கமாட்டார். ஆனால் மேலே சொன்ன சமூக விரோதிகள் எங்கு எது நடந்தாலும் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கியை வைத்துக்கொண்டு இஸ்லாமியத் தீவிரவாதம் என்று இல்லாத ஒன்றை மீண்டும் மீண்டும் கூறி இஸ்லாத்தை ஆட்டம் காண வைக்கலாம் என்று சதி வலையை உலகம் முழுமையும் செயல்படுத்திவருகிறார்கள். ஆனால் அது ஒரு போதும் நடக்கப் போவதில்லை.
உண்மையான தீவிரவாதம் தோன்ற அடிப்படைக் காரணம்:
ஏதோ ஒரு விதத்தில் தனி மனிதனுக்கோ, ஒரு சமூகத்துக்கோ இழைக்கப்படும் அநீதி தீர்க்கப்படாமல் காலம் கடத்தபடுவதே தீவிரவாதம் தோன்றுவதற்குரிய உண்மையான காரணமாகும். அதேபோல் ‘போலியாக உருவாக்கப்படும் தீவிரவாதம்‘ என்பது ஒரு மதத்தின் மீதோ ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதோ ஏற்படும் காழ்ப்புணர்ச்சியும் அதனைத் தங்கள் சுய நலத்துக்காகப் பயன் படுத்திக்கொள்ளும் அரசியல்வாதிகளும் மதவாதிகளும் உற்பத்தி செய்வது. ஆகவே இன்று நமது இந்தியாவில் இந்த இரண்டு வகையான தீவிரவாதங்களும் உண்டென்றால் அது மிகையாகாது. இவற்றை அடியோடு ஒழிக்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும் என்பதே எனது பதில். உண்மையான தீவிரவாதப் போக்கில் உள்ளவர்களின் காரணத்தை கண்டறிந்து அதனை எவ்வித விரோதப் போக்கும் இல்லாமல் அவர்களுக்கு வழங்க வேண்டிய நியாயமான உரிமைகளை அரசும், சம்பந்தப் பட்டவர்களும் வழங்கிவிட்டால் கண்டிப்பாக இந்தத் தீவிரவாதிகள் தங்களின் வழியை மாற்றிக்கொண்டு உணர்ந்து திருந்தி நல்வழிப்பாதைக்கு வந்து விடுவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆகவே இந்தத் தீவிரவாதம் நேரடியாக, வெளிப்படையாகத் தீர்க்க வல்லது. தீர்ப்பது அரசின் துணிவையும் திறமையையும் மட்டும் பொறுத்ததே என்று கூறலாம்.
போலித் தீவிரவாதம்:
இன்று இந்தியாவில் தலை தூக்கி நிற்பது இந்தப் போலியான தீவிரவாதம்தான். உண்மையில் ஒரு சமூகத்தினர் தங்களின் போலியான உயர்குலப் பெருமையை நிலை நாட்டவும் இஸ்லாமியரின் ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாமலும், அதன் மேண்மையை உணர்ந்து அதனை ஏற்க எண்ணினாலும் இறைவன் அவர்களுக்கு ஹிதாயத்தை கொடுக்காததால், (“…தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான் …” அல் குர்ஆன் 2:272) ஏற்கவும் முடியாமல் தோற்றுப் போய் முஸ்லிம்களை அழித்துவிடலாம் என்று எண்ணி, தங்களாகவே பல்வேறு வகைகளிலும் தீவிரவாதத்தை விதைத்தும், வளர்த்தும், தூண்டிவிட்டும் குளிர் காய்ந்து வரும் அச்சமூக விரோதிகள்தான் போலித் தீவிரவாதத்தை உருவாக்குபவர்கள். இவர்களின் வேஷங்களைத் துகிலுரித்து உலகுக்குக் காட்டி இவர்களைத் தலை தூக்கவிடாமல் பண்ணிவிட்டல் கண்டிப்பாக இந்தியாவில் தீவிரவாதம் ஒழிந்துவிடும் என்பதில் ஐயமில்லை. இந்தச் சமூக விரோதிகள் செய்யும், வளர்க்கும் தீவிரவாதச் செயலை- உண்மை நிகழ்வுகளுள் ஒன்று:
25 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பொதுத்துறைப் பொறியாளர், டேய் என்றால் 200 மைலுக்கு அப்பால் ஒடும் சமூகத்தைச் செர்ந்தவர், கம்புச் சண்டைப் பயிற்சிக்கு ஆள் சேர்த்தார். 1995களில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி இக்கூட்டத்தைச் சேர்ந்த பெண்களுக்குத் துப்பாக்கி சுடுவதற்குப் பயிற்சி அளித்த செய்தி, செய்தித் தாள்களில் வந்ததை நடுநிலையாளர்கள் மறந்திருக்க மாட்டார்கள். சில வாரங்களுக்கு முன் தமிழகத்தில் ஒரு பள்ளியில் பயிற்சி முகாம் நடந்ததும் அதனைத் தட்டிக் கேட்டவர்களை அக்கும்பல் தாக்கியதும் அனைவரும் அறிந்ததே. ஆகவே தீவிரவாதத்தை யார் வளர்க்கிறார்கள் என்பதை நடுநிலையாளர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதில்லை. நாளிதழ்கள் மூலம் நாம் அறிந்து கொள்வது வெளிப்படையான தீவிரவாத வளர்ப்பு. மறைமுகமாக என்னவெல்லாம் செய்கிறார்கள் இச்சமூகவிரோதிகள்?. எங்காவது ஒரு சிறு கூட்டம் மதம் மாறிவிட்டால் குய்யோ முறையோவென்று கூச்சல் போடவேண்டியது. ஒரு மனிதன் மதம் மாறுகின்றான் என்பது சாதாரண விஷயமல்ல. யாரும் கட்டாயப் படுத்தி ஒருவனை மத மாற்றம் செய்யமுடியாது. ஏனெனில் மத மாற்றம் என்பது மனதில், இறைவனால் ஏற்படுத்தப்படும் மாற்றம். ஆகவே பணத்தாலோ, வேறு அற்ப உலக ஆதயங்களுக்காகவோ யாரையும் மாற்றிவிட முடியாது. ஒரு பெண் பத்திரிக்கையாளர் கிறிஸ்த்துவராக இருந்து முஸ்லிமாக மாறியவர், கல்லூரியில் படிக்கும்போது ஹிஜாபுடன் வரும் பெண்களைப் பார்த்தாலே மெய் நடுங்கும் அளவுக்கு பயமுறுத்தி வைத்திருந்தனர் இச்சமூக விரோதிகள். அவரே இஸ்லாத்தை அறிந்து ஏற்றுக் கொண்ட பின்பு உண்மையை அறிந்ததும் “இஸ்லாத்தில் தீவிரவாதத்துக்கு வேலையே இல்லை“ என்று கூறுகிறார். மேலே சொன்ன சமூக விரோதிகள் இஸ்லாத்தை இப்படியெல்லாம் சித்தரித்து, சாதரண மக்கள் மனதில் ஒரு பய உணர்ச்சியை படிய வைத்துள்ளார்கள். ஏதற்காக என்றால் காழ்ப்புணர்ச்சிதான் காரணம். இஸ்லாம் மனிதர்கள் அனைவரும் சமம் என்று கூறுவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. 70 வயதைத்தாண்டிய ஒரு அரசியல்வாதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம் எல் ஏ கூறுகிறார்:
“நாங்கள் ஆளப் பிறந்தவர்கள் அல்ல; ஆளுபவர்களுக்கும் மேலே இருந்து வாழ்த்தப் பிறந்தவர்கள்.! என்னே கொடுமையான இழிந்த எண்ணம் பாருங்கள் ஒரு மக்கள் பிரதிநிதியிடம். இது போன்றவர்கள் தங்களின் சுய லாபத்திற்காக வேண்டுமென்றே நாட்டைத் துண்டாடவும் நாட்டு மக்களைத் துன்பத்துக்குள்ளாக்கவும் தீவிரவாதத்தை வளர்த்து அரங்கேற்றிவிட்டு அமைதியான இஸ்லாமியர் மீது பழி சுமத்தி அதிலும் வெற்றி தேடிக்கொள்வது எப்படி என்றால் ஒருதலைப் பட்சமான செய்தி ஊடகங்களின் உதவியுடன்தான்.
முடிவுரை:
உண்மையான தீவிரவாதத்தை அதன் அடிப்படைக் காரணத்தை கண்டறிந்து களைந்து விட்டால் உடனே விலகிவிடும். ஆனால் இந்தப் போலியாக உருவாக்கப்படும் தீவிரவாதத்தைக் களைய அரசும், அரசு இயந்திரங்களும், செய்தி ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் உண்மையை, உண்மையாகக் கண்டறிந்து தீவிரவாதத்துக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் ஜாதி மத இன நிற வேறுபாடு இன்றி சட்டத்தின் முன் நிறுத்தி நியாயமான தீர்ப்பை வழங்கி தண்டனையை நிறைவேற்றினால் எந்த தீவிரவாதியும் உருவாக மாட்டான், அவனை உருவாக்குபவர்களும் நசிந்து விடுவார்கள். எல்லாம் வல்ல இறைவன் உதவியால் இந்தியாவும் அமைதிப் பூங்காவாக விளங்கும். இதில் நாம் இந்திய முஸ்லிம்கள் விழிப்புணர்வுடன் ஒருவருக்கொருவர் அன்புடன் நன்மையில் உதவி செய்துகொண்டும், தீயவற்றை தடுத்துக்கொண்டும், அல்குர் ஆனில் இறைவன் அருளியுள்ளபடி, நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தின்படி வாழ்ந்து வந்தால் நாடும் நலம்பெறும். நாமும் பயன்பெறுவோம் மறுமையில் சுவனத்தைப் பெற்று.
ஆக்கம்: சகோதரி ஜெ ஜெஸிலா