வந்துவிட்டது புது பேஸ்மேக்கர் (Pacemaker)

Share this:

ந்தியாவில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் சீரற்ற இதயத் துடிப்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் பேஸ்மேக்கர் (Pacemaker)கருவியைப் பொருத்திக் கொள்கின்றனர். பெரும்பாலும் பிறவிக் குறைபாடு மற்றும் வயது முதிர்வு பிரச்னை காரணமாக இதயத் துடிப்பில் பிரச்னை ஏற்படுகிறது. எனவே, இவர்களுக்கு வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும்போது, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால், பேஸ்மேக்கர் பொருத்தியவர்கள் எம்.ஆர்.ஐ. போன்ற காந்த கதிர்வீச்சு மிக அதிக அளவில் உள்ள ஸ்கேன்களை செய்ய முடியாது. இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் தற்போது எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு ஏற்ற பேஸ்மேக்கர் கருவி வந்துள்ளது.

{jcomments on}

இதுபற்றி சென்னையைச் சேர்ந்த இதயம் மற்றும் எலக்ட்ரோஃபிசியாலஜி மருத்துவர் ஏ.எம்.கார்த்திகேசனிடம் பேசினோம். ‘நம்முடைய உடல் முழுவதும் ரத்தத்தைக் கொண்டுசெல்ல இதயம் துடிக்க வேண்டும். இதயம் துடிக்க அதன் உள்ளேயே ஒரு மினி ஜெனரேட்டர் உள்ளது. இதை சைனஸ் நோட் என்று சொல்வோம். இதயத்தின் வலது மேல் அறையில் இந்த சைனஸ் நோட் உள்ளது. இங்கிருந்து மின்சாரத்தைக் கொண்டுசெல்லும் அமைப்பு உள்ளது. இது இதயத்தின் ஒவ்வோர் அறைக்கும் மின்சாரத்தைக் கொண்டுசென்று இதயத்தைத் துடிக்கச் செய்யும். இதயத்தில் போதுமான அளவில் மின்சாரம் உற்பத்தியாகாவிட்டால், இதயத்துடிப்பு குறைந்துவிடும். இதனால் உடல் முழுவதும் ரத்தம் செல்வது பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

 

இந்த நிலையில், நோயாளிக்குச் செயற்கை இதயத் துடிப்பு அளிக்கும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படும்.

 

தற்போதுள்ள பேஸ்மேக்கர் கருவிகளைப் பயன்படுத்தும்போது, எதிர்காலத்தில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் செய்ய முடியாத நிலை இருந்தது. எம்.ஆர்.ஐ. மிக அதிகக் காந்த ஆற்றல்கொண்டது. காந்த விசைப் பகுதிக்குள் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டவர்கள் நுழைந்தால் கருவி செயல்படுவதில் பாதிப்பு ஏற்பட்டு, இதயம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ துடிக்கச் செய்யலாம் அல்லது கருவியே பழுதடையலாம். சர்க்கரைப் பாதிப்பு உள்ளவர்களுக்கு நரம்பு மண்டலம், கண் பாதிப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இந்த பேஸ்மேக்கர் கருவி பொருத்தி இருந்தால் ஸ்கேன் செய்வது மிகவும் சிக்கலாக இருந்தது.

இந்தப் பிரச்னையைப் போக்கும் வகையில் தற்போது எம்.ஆர்.ஐ. பரிசோதனைக்கு ஏற்ற பேஸ்மேக்கர் வந்துள்ளது. வெறும் எம்.ஆர்.ஐ.க்கு ஏற்றது மட்டுமல்ல, இதனுடன் மேலும் சில சிறப்பு அம்சங்களும் இந்த கருவியில் உள்ளன. பொதுவாக இதயப் பிரச்னை உள்ளவர்களுக்கு திடீரென இதயத் துடிப்பு வழக்கத்தைவிடவும் (சராசரியாக நிமிடத்துக்கு 60 முதல் 100 துடிப்பு) அதிகமாகிவிடும். இதனால் மூளைக்கு ரத்தம் செல்வது பாதிக்கப்பட்டு, பக்கவாதம், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில், இதயம் நிமிடத்துக்கு 150-200 முறை துடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த பேஸ்மேக்கர் உடனடியாகச் செயல்படத் தொடங்கி, சில விநாடிகள் அதைவிடவும் அதிக வேகமாகத் துடிக்கத் தூண்டும். இப்படி இதயத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்வதன் மூலம் இதயம் தன்னுடைய சராசரி துடிப்பு நிலைக்குத் திரும்பிவிடும்.

 

அதேபோல, இதய நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்படும். இதற்கு நெஞ்சில் நீர் கோத்துக்கொள்வதுதான் காரணம். நீர் அளவு அதிகரித்தால், அவசர சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படும். இந்தக் கருவியில், உடலில் சேரும் நீர் அளவும் கண்காணிப்பதற்கான வசதி உள்ளது. குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது இந்த கருவி தானாகவே செயல்பட்டு, இதுபற்றிய தகவலை பேஸ்மேக்கர் தயாரித்த நிறுவனம் வழியாக டாக்டருக்கு அனுப்பிவிடும்.

மேலும், குறிப்பிட்ட இடைவெளியில் இதயத்தின் செயல்பாடு பற்றிய தகவலையும் இது அனுப்பிவிடும். இதன் செயல்பாட்டை வீட்டில் இருந்தபடி கண்காணிக்கும் வசதியும் உள்ளது’ – நம்பிக்கை மேலிடச் சொல்கிறார் கார்த்திகேசன்.

 

நன்றி: பா.பிரவீன்குமார்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.