இறையச்சம் (கை)கூடியதா? (பிறை-2)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 2

தொழுகை போன்ற கட்டாயக் கடமை முதல், குர்ஆன் ஓதுதல், அதிகமாக தர்மங்கள் செய்தல், பிறர் நலம் நாடுதல், மார்க்கச் சொற்பொழிவுகள், அழைப்புப் பணி நிகழ்ச்சிகள் என்று எல்லாவற்றிலும், தொடர்ந்து வரும் 11 மாதங்களில் ஈடுபாடும் கவனமும் குறைந்து காணப்படுகிற நிலையில்தான் பெரும்பாலானோர் வாழ்க்கை கழிகிறது.

ரமளான் தினங்களில் தினம் தோறும் அக்கறையாக கவனத்துடன் கூட்டாக ஃபஜ்ருத் தொழுகை எனும் அதிகாலை தொழுகையைக் கடைப்பிடித்தவர்கள், ரமளான் அல்லாத காலங்களில் ஃபஜ்ருத் தொழுகையைத் தொழாமல் தூங்கிவிடுவதும், மற்ற தொழுகைகளில் கவனக்குறைவாக அக்கறையின்றி செயல்படும் நிலையையும் பரவலாகக் காண முடிகிறது.

குர்ஆனை அதிகமாக ஓதியவர்கள், குர்ஆனை விட்டு தூரமாகிவிடுவதும் அவரவர் வாழ்க்கையில் இருந்து குர்ஆனும் நபிவழியும் தூரமாகி விடுவது மட்டுமில்லாமல் மீண்டும் புறம், கோள், மோசடி, விரயமான கேளிக்கைகள் என்று ரமளானில் பெற்ற நன்மைகளைவிடப் பல மடங்கு அதிகமாக சொல், செயல், செவி, பார்வைகளின் மூலம், தொடர்ந்து வரும் 11 மாத காலம் தீமைகளில் மூழ்கிவிடுகின்றனர்.

இதிலிருந்து கிடைக்கும் செய்தி என்ன? ரமளானில் குர்ஆனைப் படித்தவர்கள் தமது உள்ளத்தில் அதன் கட்டளைகள் பதியுமாறு அதனைப் படிக்கவில்லை என்பதை இதன் மூலம் பறை சாற்றுகின்றனர். ரமளான் மாத இரவுகளில் நின்று வணங்கியவர்கள் இறை அச்சத்துடன் தாங்கள் அத்தொழுகைகளை நிறைவேற்றவில்லை என்பதை உரக்க அறிவிக்கின்றனர்.

ரமளான் மாத நோன்புகளை நோற்றவர்கள் நோன்பை எந்த நோக்கத்திற்காக இறைவன் விதித்தானோ அந்நோக்கத்தை மனத்தில் ஏந்தி அந்நோக்கத்தில் முழுமை பெறுவதற்காக நோன்புகளை நோற்கவில்லை என்பதை உலகிற்குக் கூறாமல் கூறுகின்றனர்.

“…. நீங்கள் (உள்ளச்சம் பெற்று) இறைபக்தி உடையவர்களாகலாம்.” (அல்குர்ஆன் 2: 183)

ஒரு செயலைச் செய்யும் பொழுது அச்செயல் எந்த நோக்கத்திற்காகச் செய்யப்பட்டதோ அந்நோக்கம் முழுமை அடைவதைப் பொருத்து அச்செயலின் பிரதிபலன் கிடைக்கிறது. இது எல்லாச் செயல்களுக்கும் பொருந்தும். அதுபோலவேதான் நோன்பும். ரமளான் மாதத்தில், 29 அல்லது 30 நாட்களில் பகல் முழுவதும் உண்ணுவதையும் பருகுவதையும் தவிர்த்து, இன்னபிற இச்சைகளையும் அடக்கி வாழ்ந்தவர்களின் நோக்கம் இறைபக்தியை தம்முள் ஏற்படுத்தி/வளர்த்துக் கொள்வதே. ஒரு நோக்கத்துக்காகப் பலவற்றைத் துறந்த ஒருவர், அந்த நோக்கத்தை அடைந்து கொண்டாரா என்பதை எளிய சுயசோதனை மூலம் அறிந்து கொள்வது தேவையான ஒன்றாகும்.

கடந்த ஆண்டின் நோன்பு நாட்களில் அமைந்திருந்த தம் இறையச்ச நடைமுறைகள், கடந்த நோன்புப் பெருநாள் முதல் இந்த ரமளானின் முதல்நோன்பு வரைக்கும் எந்த அளவு தம் வாழ்வில் வெளிப்பட்டிருக்கின்றன? என்பதை ஒருகணம் அசைபோட்டுப் பார்த்தால், அல்லாஹ் கூறும் “இறையச்சம் உடையவர்கள்” ஆகிக் கொண்டிருக்கிறோமா? ஆகிவிட்டோமா? ஆகவேயில்லயா? என்பதை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். நோன்பிருந்ததன் நம் நோக்கம் எத்துணை அளவு நிறைவேறி இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.