முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

செய்தி விமர்சனம்

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் செய்யதுவை, உதவி ஆய்வாளர் காளிதாஸ், காவல் நிலையத்திலேயே துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம், தமிழகத்தை கொதிநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.

ஏற்கெனவே இதுபோல சென்னை கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள கானத்தூர் காவல் நிலையத்துக்கு, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தையல் தொழிலாளி ஹுமாயூன், காவல்துறையினரால் அடித்துத் துன்புறுத்தப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.

அதே பகுதியிலுள்ள நீலாங்கரை காவல் நிலையத்துக்கு, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட, 16 வயது சிறுவன் தமீம் அன்சாரியின் வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டினார் காவல் ஆய்வாளர் புஷ்பராஜ். குண்டுபாய்ந்து குருதி வெள்ளத்தில் சரிந்த அந்தச் சிறுவன், பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார்.

தொடர்ச்சியாக நடந்துள்ள இக்கொடூரச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருப்பதும், அதுவும் இளைஞர்களாக இருப்பதும், பின்தங்கிய குடும்பச் சூழலுக்கு உரியவர்களாக இருப்பதும் கவனிக்கத் தக்கவை.

முஸ்லிம்களைப் போலவே, காவல் நிலையத்தில் அடித்தோ சுட்டோ படுகொலை செய்யப்படும் இன்னொரு சமூகம் தலித்களாகும். இதை பல்வேறு ஆவணங்களும் உறுதிப்படுத்துகின்றன.

1999-ஆம் ஆண்டிலிருந்து 2013 வரை, இந்தியாவில் 1413 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அதில் 333 மரணங்கள் மராட்டிய மாநிலத்தில் நடந்துள்ளதாகவும் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் கூறியுள்ளது.

இந்நிலையில், மராட்டிய மாநிலம் 'தானே' மத்தியச்சிறையில் இளைஞர் ஒருவர் மர்ம மரணமடைந்தது தொடர்பான வழக்கில், அதுகுறித்து நீதிமன்றத்தின் சார்பில் விசாரித்து அறிக்கையளிக்க, வழக்கறிஞர் செளத்ரியை நியமித்தது மும்பை உயர்நீதிமன்றம். விசாரணையின் முடிவில் அறிக்கையை தாக்கல் செய்த செளத்ரி, 'காவல் நிலையங்கள் மற்றும் சிறைகளில் நடைபெறும் மரணங்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள் அல்லது தலித்கள் சம்மந்தப்பட்டதாகவே உள்ளது' என கூறினார்.

ஆக, இந்தியாவிலேயே அதிக காவல்நிலைய மரணங்கள் மராட்டியத்தில்தான் என்று குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் அறிக்கையும், அந்த மராட்டியத்தில் அதிகம் செத்துப்போனது தலித்துகளும் முஸ்லிம்களும்தான் என்று நீதிமன்றத்தின் விசாரணை அறிக்கையும் கூறுகின்றன.

'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, 2012 செப்டம்பர் 22 வரை, கொல்கத்தாவின் அலிப்பூர் மத்திய சிறை விசாரணைக் கைதிகள் 1,222 பேரில் 530 பேர் முஸ்லிம்கள். உ.பி.யின் காஸியாபாத் சிறையில் விசாரணைக் கைதிகள் 2,200 பேரில் 720 பேர் முஸ்லிம்கள்' என இந்தியா டுடே இதழ் எழுதியுள்ளது. இந்தியா முழுவதும் இதே நிலை இருப்பதாக நீதியரசர் ராஜேந்தர் சச்சார் குழு கூறியுள்ளது.

பெரும்பாலான முஸ்லிம் கைதிகள், பயங்கரவாதம் அல்லது திட்டமிட்ட குற்றங்களில் எந்தப் பங்கும் இல்லாதவர்கள் என்றும், அதில் 71.9 விழுக்காடு முஸ்லிம்கள் தனிப்பட்ட தகராறுகளில் சிக்கியவர்கள் என்றும், 75.5 விழுக்காடு பேர் முதல் முறையாக செய்த சில்லறைக் குற்றத்திற்காக சிறையில் இருக்கிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிப்பதாக 'இந்தியா டுடே' கூறியுள்ளது.

அந்த ஆய்வுகள் நூறு விழுக்காடு உண்மை என்பதை, கானத்தூர், நீலாங்கரை, எஸ்.பி பட்டினம் காவல்நிலைய சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன. கானத்தூரில் படுகொலை செய்யப்பட்ட ஹுமாயூன், கொசு வலை அடிக்கும் தொழிலை செய்து வந்தவர். அப்படி கொசுவலை அடிக்கப்போன ஒரு வீட்டில் நடைபெற்ற சிறிய திருட்டு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்.

நீலாங்கரையில் துப்பாக்கியால் சுடப்பட்ட சிறுவன் தமீம் அன்சாரியும் அதுபோல சிறிய திருட்டு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்ப்பட்டவர்தான். தற்போது எஸ்.பி பட்டினத்தில் கொல்லப்பட்டிருக்கும் செய்யதுவும், மெக்கானிக் ஷெட்டில் நடந்த சிறிய தகராறு தொடர்பாகவே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இவர்கள் அனைவருமே விசாரணைக் கைதிகள்தான். ஒருவர்கூட, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட தண்டனைக் கைதிகள் அல்ல.

ஆக, குற்றம் நிரூபிக்கப்படாமல், நீதிமன்றத்தால் தண்டிக்கவும் படாமல், வெறும் விசாரணை நிலையிலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களைத்தான் மிகப்பெரும் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கிறார் பா.ஜ.க.வின் எச்.ராஜா. இந்து முன்னணி இராம.கோபாலனும் அவர்போல் அறிக்கைவிட்டு, எஸ்.பி பட்டினம் எஸ்.ஐ காளிதாசுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார்.

எச்.ராஜா மீதும் சிட் ஃபண்டு மோசடி குற்றச்சாட்டு உள்ளது. பா.ஜ.க.வைச் சார்ந்த ரேவதி என்பவர், ராஜா மீது பல புகார்களை ஊடகங்களில் கூறியுள்ளார். அது தொடர்பான விசாரணைக்காக எச்.ராஜாவை காரைக்குடி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அங்கிருக்கும் எஸ்.ஐ, அவரை நோக்கி துப்பாக்கியைத் திருப்பினால், இராம.கோபாலனின் அறிக்கை எப்படி இருக்கும்?

- ஆளூர் ஷாநவாஸ்

 


 

Comments   

Kader M Ibrahim
0 #1 Kader M Ibrahim 2014-10-19 16:19
Supera irukum
Quote | Report to administrator
Hameed Ariff
0 #2 Hameed Ariff 2014-10-29 13:25
appreciating you mr. navaz. you will have more support from Allah
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்