முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

வாழ்வியல்

நல்ல/கெட்ட நேரம் இல்லைமூடநம்பிக்கை என்பது எப்போது தோன்றியது என்று சரியாகத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு காரியம் தனக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைந்திட, அல்லது நல்லதாகவோ தீயதாகவோ அமைந்திடக் காரணமாக குறிப்பிட்ட சில நாட்கள், நேரங்கள், விஷயங்கள், செயல்கள், அனுஷ்டானங்கள், பொருள்கள், உயிரினங்கள், போன்றவைதாம் காரணிகள் என்று மனிதன் நம்புவதற்குப் பெயர் மூடநம்பிக்கையாகும்.

உதாரணத்திற்கு ஒரு பூனை குறுக்கே செல்வதால் தனக்கு ஏதாவது கெடுதி ஏற்படும் என்று நம்புவது; அல்லது தான் நாடிய/நடக்கவிருந்த நல்ல காரியம் நடைபெறாமல் போகக்கூடும் என்ற ஒரு சஞ்சலம், அல்லது ஒரு ஆந்தை அலறுவதால் ஒரு கெட்ட காரியம் நிகழும் அல்லது மரணம் நடைபெறும் என்று கருதுவது ஆகிய இவை காலங்காலமாக மனிதனிடம் காணப்படும் மூடநம்பிக்கையாகும்.

ஒருவர் தும்மினால் நல்லது நடக்கும் அல்லது நடக்காது என்று நம்புவது; வீட்டை விட்டு வெளியே போகும்போது எதிரில் விதவைகள்/குருடர்களைக் கண்டால் தனது காரியம் கெட்டு விடும் என்று கருதுவது; தனக்குப் பாதகமாக ஏதேனும் நிகழ்ந்தால், "காலையில் யார் முகத்தில் விழித்தோனோ?" என்று கருதி அந்த முகத்தை இணைத்து சம்பந்தப்படுத்துவது போன்றவையும் மூடநம்பிக்கையே.

இதேபோல்தான் ஒரு பொருளை, ஒரு நிறத்தை, ஒரு எண்ணை, ஒரு நாளை அல்லது நேரத்தை நல்லதாகவோ தீயதாகவோ மனிதன் கருதுவது இன்றைய நவீனகாலத்திலும் அன்றாட நிகழ்வுகளாகக் காண முடிகிறது. 13 என்ற எண் தீமை பயப்பது என்பதாகக் கருதி அதைத் தமது இல்லங்களுக்கோ வாகனங்களுக்கோ அல்லது உடமைகளுக்கோ தவிர்த்துக் கொள்ளக்கூடிய மக்களை இன்றும் மேற்குலகில் பரவலாகக் காணமுடிகிறது. சில முன்னேற்றமடைந்த நாடுகளிலும் வீட்டு எண்ணிக்கையில் 13ஐத் தவிர்ப்பதும், மாடிக் கட்டடங்களிலும் 12ஆவது மாடியை அடுத்து 13ஐத் தவிர்த்து அடுத்த எண்ணான 14ஐத் தருவது போன்றவையும் மூடநம்பிக்கையாகும்.

அதேபோல் ஒரு சில எண்களை/பொருள்களை அதிர்ஷ்டமானதாகக் கருதி அந்த எண்களை/பொருட்களைத் தேடி அதிக விலைகொடுத்துப் பெறுதலும் அந்த எண்/பொருள் தனக்கு அதிகமான இலாபத்தை அல்லது பாதுகாப்பை வழங்கிடும் என்று கருதும் மூடநம்பிக்கையும் நடப்பில் உள்ளது.

அறிவியல், கல்வி, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் என்று எல்லாவிதத்திலும் வளர்ச்சியின் உச்சியில் இருப்பதாகக் கருதப்படும் தற்போதய காலத்திலும் இந்த மூடநம்பிக்கை எனும் நோய் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை என்பதே யதார்த்தம்.

இதுபோன்ற மூடநம்பிக்கைகளைக் கல்வியறிவில் பின்தங்கியவர்கள் முதல் ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் நன்கு படித்த இளைஞர்கள் முதியவர்கள் என்ற அனைவர்களிடமும், பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் அறிவுஜீவிகள் முதல் ஆன்மீகவாதிகளிலும் பரவலாகக் காணமுடிகிறது. சிலர் இதற்கு மதச் சாயம் பூசிடுவதும் அதன் மூலம் இதைச் சரிகாணுவதும் இம்மடமையை ஆதரிக்கும் சிலருடைய துணையுடன் இதைத் தொடர்ந்து நிலை நாட்டிவருவதும் சுய இலாப நோக்கில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற ஒரு துர்ப்பாக்கியமான காரியம் ஆகும்.

ஒரு நாள் என்பது நல்லநாள் அல்லது கெட்டநாளாக; ஒரு நேரம் என்பது நல்லநேரம் அல்லது கெட்டநேரமாக எப்படி அமையும்? ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரு சிலருக்கு நல்லதும் மற்றவர்களுக்குத் தீயதும் இழப்புகளும் ஏற்படத்தான் செய்கின்றன என்பதை எவரும் மறுத்திட இயலாது.

உதாரணத்திற்கு ஒரே நேரத்தில் பிறப்புகளும் இறப்புகளும் இவ்வுலகத்தில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சிலர் நோயுறுவதும் நிலர் நிவாரணம் பெறுவதும், சிலர் கல்வியில் தேர்ச்சி பெறுவதும் சிலர் தோல்வியுறுவதும், சமுதாயத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகள் ஆகும். அதே போல் ஒரே நேரத்தில் எதிரெதிர் அணியில் போட்டியிடும் இரு அணிகளில் ஒன்று வெல்வதும் ஒன்று தோல்வியுறுவதும் இயல்பானதும் தவிர்க்க இயலாத ஒன்றுமாகும்.

இன்னும் குறிப்பிட்ட ஒருநேரத்தில் ஒரே வீட்டில் திருமணம் அல்லது பிறப்பு போன்றதும் அதே வீட்டில் அதே குறிப்பிட்ட நேரத்தில் இறப்புகளும் ஏற்படுவதையும் காண்கிறோம். குழந்தை பிறக்கும்போது மரணித்த தாயும், தாய் இருக்க மரணித்த குழந்தையும் பிறந்த இரு குழந்தைகளுள் ஒன்று மரணித்தும் மற்றொன்று உயிருடனும் இருக்கவும் காண்கிறோம். மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் சில பிறப்புகள் சில இறப்புகள் போன்ற எண்ணற்ற நேர்மறை எதிர்மறையான நிகழ்வுகள் என்பதெல்லாம் ஒரே நேரத்தில் நடந்து, "நேரம் என்பதில் நல்லதோ கெட்டதோ இல்லை" என்பதைத் தெளிவாகப் பறைசாற்றுகின்றன,

ஒரு நேரம் நல்லது எனில் அதில் எங்கும் யாருக்கும் எந்த ஒரு கெடுதியும் இழப்பும் துன்பமும் கவலையும் நோயும் கஷ்டமும் ஏற்படக் கூடாது. அப்போதுதான் அது "நல்ல நேரம்" ஆகமுடியும். அப்படி ஒரு நேரம் இருக்கிறதா என்றால் இல்லையென்பதே உண்மை. அதேபோல் ஒரு நேரம் கெட்ட நேரம் என்றால் அதில் எங்கும் யாருக்கும் எந்த ஒரு நல்லதும், இலாபமும், பலனும், சந்தோஷமும், இன்பகரமானதும் நிகழவே கூடாது. அப்போதுதான் அது கெட்ட நேரம் என்றாகும். இந்த நிலையும் இல்லை என்பதே மறுக்க இயலாத உண்மை.

அதேபோல், "அவருக்கு நேரம் சரியில்லை; இவருக்கு நல்ல நேரம்; நல்ல காலம்; கெட்ட காலம்" என்று நிகழ்வுகளை நேரத்தோடு தொடர்பு படுத்துவதும் தவறான அடிப்படையில் அமைந்த ஒரு மூடநம்பிக்கையேயாகும். "இந்த மாதத்தில் இந்த நாளில் அல்லது இந்த நேரத்தில் சில புதிய காரியங்கள், திருமணம், புதிய வீடு புகுதல், வியாபாரங்கள் போன்ற நல்லவற்றை துவக்கக் கூடாது; அது நிறைவேறாது; அது நஷ்டமானதாக அமையும்; இழப்பை ஏற்படுத்தும்" என்று கருதி அவற்றைத் தவிர்த்து எச்சரிக்கையாக நல்லநாள், நல்லநேரம் பார்த்து துவங்கப்பட்ட திருமணம் போன்ற எத்தனையோ காரியங்கள் கெடுதியையும் மண விலக்குகளையும் கொலை, தற்கொலை போன்ற உயிரிழப்பையும் பெரும் நஷ்டத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருப்பதைப் பரவலாக சமுதாயத்தில் காணமுடிவதும் மூடநம்பிக்கையைப் பொய்ப்பிக்கும் சான்றுகளாகும்.

"எல்லாம் இறைவிருப்பப்படி நமக்கு நிகழ்கின்றன; அந்த இறைவனின் நாட்டமின்றி எந்த ஒரு நன்மையும்-தீமையும் நோயும்-நிவாரணமும், இலாபமும்-நஷ்டமும், இன்பமும்-துன்பமும், பிறப்பும்-இறப்பும், என்று எதுவுமே ஏற்படுவது இல்லை. எல்லாம் அவன் நாட்டப்படியே நடைபெறுகின்றன" என்று போதிக்கும் இறைமார்க்கமாம் இஸ்லாத்தில் மூடநம்பிக்கைக்குச் சிறிதும் இடமில்லையென்ற போதும் "நாங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறோம்" என்று கூறிக் கொள்ளும் முஸ்லிம்கள் சிலரிடமும் இதுபோன்ற ஒருசில மூடநம்பிக்கைகள் காணப்படுகின்றன என்பது வருத்தத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மையாகும்.

முழு மனிதசமுதாயத்திற்கும் வழிகாட்டிட ஏக இறைவனால் வழங்கப்பட்ட இஸ்லாம் எனும் மார்க்கமும் குர்ஆன் நபிவழிகள் எனும் இறை ஒளியின் மூலம் அனைவருக்கும் வழிகாட்டியாக வாழ வேண்டிய முஸ்லிம்களில் சிலர் இது போன்ற அறியாமை இருளில் மூழ்கியிருப்பது கைச்சேதமே.

"ஸஃபர் மாதம் என்பது பீடைமாதம்" என்று சில முஸ்லிம்கள் கருதுவதும் கூறுவதும் இந்த மாதத்தில் நல்ல காரியங்களைத் துவக்காமல் தள்ளிப் போடுவதும், திருமணங்கள், வியாபாரங்கள் போன்ற நல்ல நிகழ்வுகளைச் செய்தால் அது கேடாக முடியும் என்று தவிர்ப்பதும் புதிதாக மணமுடித்துள்ள தம்பதியரை இம்மாதத்தில் இல்லறம் நடத்த விடாமல் (நடத்தினால் பிறக்கும் குழந்தைக்குக் கேடு, அல்லது குழந்தையால் அவர்களுக்குக் கேடு ஏற்படும் என்று) பிரித்து வைத்தலும், புதுமனை புகுதல் அல்லது புதுவீடு கட்டுதல் போன்றவற்றைத் தள்ளிப் போடுதல் ஆகிய - சில முஸ்லிம்களிடம் நடைமுறையில் உள்ள - அனைத்தும் எவ்வித ஆதாரமுமற்ற கண்டிக்கப் படக்கூடிய மூடநம்பிக்கைகளாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வையும் வானவர்களையும் வேதங்களையும் நபிமார்களையும் கியாமத் எனும் இறுதி நாளையும் நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விதித்த விதியின்படி நடக்கின்றது என்று ஈமான் (நம்பிக்கை)கொள்வதுதான் (உண்மையான) ஈமானாகும்" ஆதாரம் : முஸ்லிம்.

மேற்காணும் நபிமொழியின்படி "எல்லாவித நன்மையும் தீமையும் அல்லாஹ் வித்தித்துள்ள விதியின் படியே நிகழ்கிறது" என்று ஒரு மூஸ்லிம் நம்ப வேண்டும்.

அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும், பொருள்கள் உயிர்கள் விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155)

சோதனைகள் நன்மைகள் தீமைகள் ஆகிய அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றன என நம்ப வேண்டிய முஸ்லிம்களுள் சிலர், ஸஃபர் மாதம் என்பது பீடையுள்ள மாதம் என்றும், அதில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்றும், பீடையைக் கழிப்பதற்காக ஸஃபர் மாதத்தின் மூன்றாம் புதன்கிழமை ஆற்றில் குடும்பத்துடன் குளித்து, சில சடங்குகளையும் செய்து அந்தப் பீடையைப் போக்கவேண்டும் என்று மூடநம்பிக்கை கொண்டு, பல வீண் விரயமான சடங்கு சம்பிரதாயங்களை ஸஃபர் மாதத்தில் செய்கின்றார்கள்.

மேலும் மாவிலையில் குங்குமப் பூவின் மையினால் சில வாசகங்களை எழுதிக் கரைத்துக் குடிப்பதும் அதன் மூலம் பலா-முஸீபத்துகள், பீடைகள், நோய்கள், கஷ்டங்கள் ஆகியவற்றில் இருந்து பாதுகாவல் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

இது இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமான செயலும் மூடநம்பிக்கையுமாகும். இஸ்லாத்திற்கு மாற்றமான இவ்வாறான மூடநம்பிக்கைகளை விட்டுவிட்டு "அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது" என்று ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும்.

ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்றிருந்தால் அதை அல்லாஹ்வோ நபி(ஸல்) அவர்களோ நமக்கு அறிவித்திருப்பார்கள். அப்படிப்பட்ட எந்த இறைவசனமோ நபிமொழியோ கிடையாது. மாறாக ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்று நம்புவதைத் தடுக்கும் நபிமொழியைத்தான் நாம் காண் முடிகிறது.

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"இஸ்லாத்தில் தொற்றுநோய் என்பதில்லை; துர்ச்சகுனம் பார்ப்பது கூடாது; ஆந்தை சாஸ்திரம் பார்ப்பதும் கூடாது; ஸஃபர் (மாத பீடையும்) கிடையாது, நட்சத்திர சகுனம் பார்ப்பதும் கிடையாது, கொள்ளி வாய்ப் பிசாசு என்பதெல்லாமில்லை" ஆதாம்: முஸ்லிம்.

ஸஃபர் மாதத்தைப் பீடையுள்ள மாதம் என்பதற்கு, சிலர் கூறும் காரணம், "நபி(ஸல்) அவர்கள் ஸஃபர் மாத முற்பகுதியில் நோயுற்றிருந்து அம்மாதத்தின் மூன்றாம் வாரத்தின் புதன் கிழமை நோயிலிருந்து குணமடைந்தார்கள். ஆகவே அம்மாதம் பீடையுள்ள மாதமாகும், மூன்றாம் வாரத்தில் நபி(ஸல்) அவர்கள் நோயிலிருந்து குணமடைந்ததுபோல், நாமும் பீடையை மூன்றாம் வாரத்தில் நீக்க வேண்டும்" என்று கூறுகின்றார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான வாதமாகும். நோயுறுவது பீடையன்று.

நோயும் நிவாரணமும் அல்லாஹ்வின் விதிப்படி ஏற்படுபவை; "நான் நோயுற்றால் குணப்படுத்துபவன் அவனே" (அல்குர்ஆன் 26:80) என்று முஸ்லிம்கள் நம்ப வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள், ஸஃபர் மாதத்தில் மட்டுமா நோயுற்றிருந்தார்கள்?

ரபீஉல் அவ்வல் மாதத்திலும்தான் நோயுற்றிருந்தார்கள். இதை யாரும் மறுக்க முடியாது. நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் கிட்டத்தட்ட 17 நாட்கள் நோயுற்றிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12ல் மரணித்தார்கள். அந்த மாதத்தை/நாளை யாராவது பீடையுள்ள மாதம்/நாள் என்று கூறுகின்றார்களா? மாறாக, அந்த நாளை, எவருடைய பிறந்த நாளையும் சிறப்பித்துக் கொண்டாடாத நபி(ஸல்) அவர்களுக்கே பிறந்த நாளாக - மீலாது விழா என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். ஏன் இந்த முரண்பாடு?

நோய் வரும், தீரும். மரணம் அவ்வாறில்லையே!

பல அறிவிப்புகளின்படி நபி (ஸல்) அவர்கள் பிறந்ததும் இறந்ததும் ரபீஉல் அவ்வல் பிறை 12இல்தான். அந்த நாளையோ வேறு எந்த நாளையுமோ நல்லநாள்/கெட்டநாள் என்று ஏற்படுத்திக் கொண்டு, கொண்டாட்டம்/சோகம் போன்றதை அனுஷ்டிப்பதற்கு மார்க்கத்தில் சிறிதும் இடமில்லை.

ஆகவே ஸஃபர் மாதத்தைப் பீடைமாதம் என்றோ கெட்டமாதம் என்றோ கூறாமல் மற்ற மாதங்களைப் போன்று நினைத்து நமது அன்றாட காரியங்களைத் தொடரவேண்டும்

இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் கூறுவதாக கூறினார்கள்:

"ஆதமுடைய மகன் (மனிதன்) காலத்தைக் குறை கூறுவதன் மூலம் என்னை (அல்லாஹ்வை) குறை கூறுகிறான். ஏனெனில் நானே காலமாக (காலத்தை இயக்குபவனாக) இருக்கிறேன்" ஆதாரம் : புகாரி 4826.

காலத்தையும் நேரத்தையும் குறை கூறுவது மூடநம்பிக்கை மட்டுமின்றி நம்மைப் படைத்த அல்லாஹ்வைக் குறைகூறும் ஒரு பாவமான காரியமாகும் என்பதை உணர்ந்து இதைப் போன்ற அனைத்து வீணான மூடநம்பிக்கைகளைக் களைந்து  நமது பொன்னான நேரத்தையும் செல்வத்தையும் அவனது உண்மையான மார்க்கத்தை அறிந்து பின்பற்றிச் செலவழித்து இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெற்றிட வழி வகுப்போமாக.

 

-ஆக்கம் : இபுனு ஹனீஃப்

Comments   
மு முஹம்மத்
0 #1 மு முஹம்மத் 2010-01-25 23:43
அஸ்ஸலாமு அலைக்கும்
//அறியாமை கால அரபியர்கள் ஷவ்வால் மாதத்தை பீடை மாதமாக கருதி வந்தனர், அன்றைய அரபியர் ஷவ்வால் மாதத்தில் எந்த நிகழ்ச்சிகளையும ் நடத்தாது தடுத்து வந்தனர், இந்த மூடநம்பிக்கையை தீயிலிட்டு கொளுத்தும் வகையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், நான் ஷவ்வால் மாதத்தில்தான் திருமணம் முடிக்கப்பெற்றே ன், ஷவ்வாலில்தான் என் இல்லற வாழ்க்கையை துவங்கினேன், நபி (ஸல்) அவர்களுக்கு என்னைவிட விருப்பமுள்ள மனைவியாக இருந்தது யார்? என்று கூறினார்கள.; (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), ஆதாராம் : முஸ்லிம், அஹ்மத்)

பீடை மாதம் என்று ஒன்று இல்லை என்பதை நிரூபித்து நிலைநிறுத்திக் காட்டிய அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை போல் இன்றைய முஸ்லிம்கள் மத்தியில் ஸஃபர் பீடையில்லை என்று நாமும் நிரூபித்துக் காட்ட முயற்சி செய்வோமேயானால் இதனை முழுமையாக ஒழித்துவிடலாம் இன்ஷா அல்லாஹ்.//
நன்றி www.islamkalvi.com/.../?p=1574
Quote | Report to administrator
Ibrahim M.M
0 #2 Ibrahim M.M 2010-02-07 10:48
நன்மை செய்யும் நேரமெல்லாம் நல்ல நேரமே; கெட்ட செயல் செய்யும் நேரமெல்லாம் கெட்ட நேரமே. இறைவன் மீது நம்பிக்கை வைப்போம் ( மூட நம்பிக்கை மீது அல்ல ); நேர் வழி நடப்போம். கட்டுரையாளருக்க ு jazzakAllah.
Quote | Report to administrator
sarthaj begam j.k.
0 #3 sarthaj begam j.k. 2010-12-19 15:48
assalamu alaikum varah........
engal vitil sulnilai sari illathatharku en keta neram than endrukuri ennai migaum kastapaduthinar gal anal ippothu antha
kutra unnarchi en idam illai
thazakkalla.... .
Quote | Report to administrator
நூருத்தீன்.
0 #4 நூருத்தீன். 2010-12-22 09:41
முதன்மையாக குர்ஆனிலும் நபியவர்கள் கற்றுத் தந்த துஆவிலும் நிவாரணமுண்டு. பயின்று வாருங்கள். தவிர, கீழ்க்கண்ட சுட்டியிலுள்ள கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள். மனம் இலேசாகலாம்.


www.inneram.com/.../manam25
www.inneram.com/LifeStyle/

எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களுக்கு நற்கிருபையும் நல்லருளும் புரிவானாக.
Quote | Report to administrator
sabeer
0 #5 sabeer 2011-01-19 11:19
எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களுக்கு நற்கிருபையும் நல்லருளும் புரிவானாக
Quote | Report to administrator
ஹசன்
0 #6 ஹசன் 2011-01-25 13:31
அருமையான பதிவுக்கு நன்றி.....
Quote | Report to administrator
Mohamed Aili Jinnah
0 #7 Mohamed Aili Jinnah 2012-12-16 17:19
அஸ்ஸலாமு அலைக்கும்
அருமையான விளக்கம்
இந்த கட்டுரையைப் படித்து அதன் படி வாழ்பவர்களுக்கு நல்ல நேரம்.
--------------
ஸபர் மாதத்தை பீடை மாதமாகக் கருதித் திருமணம் போன்ற சுப காரியங்களைத் தாமதப்படுத்தக் கூடாது. ஏனென்றால் “ஸபருல் முளஃப்பர்”, “ஸபருல் கைர்” (வெற்றியின் மாதம், நன்மையின் மாதம்) என்பதே ஸபர் மாதத்தின் முழுப் பெயராகும். இஸ்லாமிய வரலாற்றில் பல வெற்றிகள் இம்மாதத்திலேயே கிடைத்திருக்கின ்றன. எனவே ஸஃபர் மாதத்தை பீடை மாதமாகக் கருதுவது சரியல்ல. அவ்வாறு கருதுவது அறியாமைக் கால மூட நம்பிக்கையாகும் . “தொற்று நோய், பறவை ஜோசியம், ஸபர் (பீடை) ஆகியன இஸ்லாத்தில் கிடையாது.” (நபி மொழி: நூல் புகாரீ)
வஸ்ஸலாம்
முஸ்லீம்கள் அறியவேண்டிய முக்கிய சில விளக்கங்கள்
seasonsnidur.blogspot.in/.../. ..
Quote | Report to administrator
M.S.K
0 #8 M.S.K 2012-12-21 15:49
//, "2012 டிசம்பர் 21 இல் உலகம் அழியுமா?" என என்னைத் தனிப்பட்ட முறையில் நீங்கள் கேட்பீர்களேயானா ல், நான், (இறைவன் நாடினால்) "2012 டிசம்பர் 22ம் திகதி இக் கட்டுரையாளர் நண்பர் ராஜ்சிவா அவர்களுடன் தேனீர் அருந்த செல்கிறேன்" என்றுதான் சொல்வேன். மாயா இன மக்களின் வரலாற்றினை அறிந்து கொள்ள உதவிய திரு.ராஜ் சிவா அவர்களுக்கு எனது கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
Engr.Sulthan // UTM group mail/


Quote | Report to administrator
abdul azeez
0 #9 abdul azeez 2012-12-24 02:07
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே!

// //, "2012 டிசம்பர் 21 இல் உலகம் அழியுமா?" // என்றும் டிசம்பர் 23 என்றும் பலவாறாக பேசப்படுகிறது இருந்தாலும் இந்த மாயாவின் வரலாற்றை

நான் டிஸ்கவரியில் பார்த்ததுண்டு ரொம்பவும் இந்த மாயா இன மக்களை தூக்கி பேசி இருந்தார்கள். அறிவு சேனல்களான டிஸ்கவரி மற்றும் நேட் ஜாகரபி காட்டும் காட்சியெல்லாம் உண்மையாகாது.

yesuvai siluvaiyil araindha andha cross simbalai vaithu peyai virattuvadhaaga reel viduvaargal idhe nat geo channelum and discovery channelum kooda konjam ushaar.

maa salaam.
abdul azeez
Quote | Report to administrator
S. ABDUL SUBAHAN
0 #10 S. ABDUL SUBAHAN 2013-02-08 21:12
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புடயீர்,
தங்களது ஆக்கஙளை மளயாள மொழியில் வெளியிட அனுமதி தரமுடியுமா
என அன்புடன் வேண்டிக்கொள்கிர ேன்
Quote | Report to administrator
SSK
0 #11 SSK 2017-11-01 12:40
அஸ்ஸலாமு அலைக்கும்
அருமையான விளக்கம்
இந்த கட்டுரையைப் படித்து அதன் படி வாழ்பவர்களுக்கு நல்ல நேரம்.
--------------
ஸபர் மாதத்தை பீடை மாதமாகக் கருதித் திருமணம் போன்ற சுப காரியங்களைத் தாமதப்படுத்தக் கூடாது. ஏனென்றால் “ஸபருல் முளஃப்பர்”, “ஸபருல் கைர்” (வெற்றியின் மாதம், நன்மையின் மாதம்) என்பதே ஸபர் மாதத்தின் முழுப் பெயராகும். இஸ்லாமிய வரலாற்றில் பல வெற்றிகள் இம்மாதத்திலேயே கிடைத்திருக்கின ்றன. எனவே ஸஃபர் மாதத்தை பீடை மாதமாகக் கருதுவது சரியல்ல. அவ்வாறு கருதுவது அறியாமைக் கால மூட நம்பிக்கையாகும் . “தொற்று நோய், பறவை ஜோசியம், ஸபர் (பீடை) ஆகியன இஸ்லாத்தில் கிடையாது.” (நபி மொழி: நூல் புகாரீ)
வஸ்ஸலாம்
முஸ்லீம்கள் அறியவேண்டிய முக்கிய சில விளக்கங்கள்
seasonsnidur.blogspot.in/.../. ..
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்