முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

முஸ்லிம்களுக்காக

ஐயம்:
அஸ்ஸலாமு அலைக்கும்

முஸ்லிம் கணவர் ஒருவரின் மனைவி உயிரோடு இருக்கும்போது, அவர் இன்னொரு பெண்ணை மணமுடிப்பதற்கு அவருடைய மனைவியின் அனுமதி கட்டாயமா?

தெளிவு:
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ் ...
முஸ்லிம் கணவரின் மனைவி இருக்கும்போது இன்னொரு பெண்ணை அவர் மணமுடிக்க வேண்டுமாயின் மனைவியின் அனுமதி கட்டாயமா? எனக் கேட்டால், இஸ்லாத்தைப் பொருத்தவரை அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் அனுமதி வழங்கிய பின்னர், நான்குவரை பலதார மணமுடிக்க எவருடைய அனுமதியும் தேவையில்லை. ஏனெனில், இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆனும் ஹதீஸும் அவ்வாறு தடுக்கவில்லை.

விளக்கமாகப் பார்ப்பதற்கு முன்னர் பலதார மணம் பற்றிக் குர்ஆனும் சுன்னாவும் கூறுவதை அறிந்துகொள்வோம். இஸ்லாத்தில் பலதார மணம் என்பது கடமையான ஒன்றல்ல; மாறாக, கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்ட அனுமதியாகும்.

அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நடுநிலையோடு நடக்க முடியாது என்று அஞ்சினால், உங்களுக்கு  விருப்பமான பெண்களை இரண்டாவதாகவோ, மூன்றாவதாகவோ, நான்காவதாகவோ மணந்து கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் (அவர்கள் அனைவரிடமும்) நடுநிலையோடு நடக்க முடியாது என்று அஞ்சினால், ஒரு பெண்ணை (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (அடிமைப்) பெண்ணைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் நடுநிலை வழுவாமல் வாழ எளிதான வழியாகும் (அல்குர்ஆன் 004:003).

குர்ஆனுக்கு இணையான நெருங்கிய விளக்கவுரை சுன்னாவெனும் நபிவழி:
அறியாமைக் காலத்தில் பத்துப் பெண்களை மணமுடித்திருந்த ஃகைலான் பின் ஸலமா அஸ்ஸகஃபீ (ரலி) இஸ்லாத்தை ஏற்றார். அவருடன் சேர்ந்து அவருடைய பத்து மனைவியரும் இஸ்லாத்தை ஏற்றனர். அப்போது அப்பெண்களில் நால்வரை மட்டும் தேர்வுசெய்து (கொண்டு மற்றவர்களை விட்டு விலகிக்) கொள்ள வேண்டும் என்று அவருக்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள் (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: திர்மிதீ 1047; ஸஹீஹ் இபுனு ஹிப்பான் 4158).

அறியாமைக் காலத்தில் பலதார திருமணத்திற்குக் கட்டுப்பாடு எதுவும் இருக்கவில்லை. ஒருவர் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணமுடித்துக் கொள்ளலாம்; புகழுக்கும் பெருமைக்குமாகப் பல பெண்களை மணந்துகொண்டு, அவர்களுள் அநேகரை ஒப்புக்கு மனைவியராக வைத்துக்கொண்டு, அவர்களுடைய உரிமைகளை நிறைவேற்றாமல் அநீதி இழைக்கும் நடைமுறை வழக்கில் இருந்தது. அதற்குக் கட்டுப்பாடு விதித்து, அதிக பட்சம் நான்கு என்கிற உச்சவரம்பை விதித்தது இஸ்லாம்.

"உங்களுக்கு விருப்பமான பெண்களில் நான்கு வரை மணமுடித்துக் கொள்ளுங்கள்" என்று கூறியதோடு, "நான்கு மனைவியரையும் சமமாக நடத்த முடியாதெனில் ஒரு மனைவியுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். அநீதி இழைக்காமலிருக்க இதுவே நெருக்கமான வழி" எனவும் இறைவசனம் அறிவுரை கூறுகின்றது.  

குர்ஆனும் சுன்னாவும் பலதார திருமணத்தை நான்குவரை வரம்பு விதித்து, ‘நடுநிலை’ எனும் நிபந்தனையுடன் அனுமதித்துள்ளது என்பதை மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து விளங்கலாம். ஒன்றுக்கு மேற்பட்டாலே அது சக்களத்தி சண்டை, சச்சரவு, போட்டி, பொறாமைகளுக்குப் பஞ்சமிருக்காது என்பதும் எல்லாவற்றிலும் சமநிலை என்பது சாத்தியக் குறைவானது என்பதும் நம்மைப் படைத்தவனுக்கு நன்கு தெரியும்.

எனவே, “இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் எவ்வளவு விரும்பினாலும் மனைவியரிடையே (எல்லாவற்றிலும்) சமநிலையோடு  நடந்துகொள்ள உங்களால் முடியாது. நீங்கள் ஒருத்தியின் பக்கம் முழுமையாகச் சாய்ந்து, அடுத்தவளை (அந்தரத்தில்) தொங்க விடப்பட்டவள் போல் விட்டுவிடாதீர்கள்...” (அல்குர்ஆன் 004:129)  என்ற கடுமையான எச்சரிக்கையையும் இறைவசனம் பதிவு செய்துள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்டால் எவ்வளவுதான் விரும்பினாலும் மனைவியரிடையே சமநீதி செலுத்த முடியாது என அல்லாஹ் அறுதியிட்டுச் சொல்லிவிட்டான். பலதார மணமுடித்திருந்த நபி (ஸல்) அவர்கள், “இறைவா! எனது சக்திக்குட்பட்டவற்றில் சமநீதியாய் நடந்து கொள்கிறேன், சக்திக்கு அப்பாற்பட்டவற்றில் என்னைக் கேள்வி கேட்காதே”  என்ற கருத்தில் பிரார்த்தனை செய்தார்கள் (அபூதாவூத்).

நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியர் அனைவருக்கும் உணவு, ஆடைகள், தங்குமிடம் அனைத்தும் சமமாக வழங்கினார்கள். ஆனாலும், நபியவர்களுக்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மீதான அன்பு சற்று மிகைத்திருந்தது. அது, தம்மை மீறிய செயல் என்பதாலேயே நபியவர்கள் மேற்கண்டவாறு பிரார்த்தித்தார்கள்.

மனைவியரை விடுத்து நம் குழந்தைகளை எடுத்துக்கொண்டாலும் நாமறியாமலேயே நம்மையும் மீறி, ஒருவர் மீது அன்பு மிகைப்பது நம் சக்திக்கு அப்பாற்பட்ட உளவியல் சம்பந்தப்பட்டது. எனவே, மனைவியரிடையே வாழ்வாதாரப் பொருட்களை சமமாக வழங்கி, அவர்களின் தேவைகளையும் சமமாகப் பங்கிட்டுப் பூர்த்தி செய்து வந்தால் மனைவிகளுக்கு அநீதி இழைக்கும் குற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. அன்பு செலுத்துவதில் ஏற்றத்தாழ்வு என்பது மட்டும் மனிதர்களால் தவிர்க்க இயலாதது.

சிக்கலான இவ்வளவு நிபந்தனைகள் இருக்கும்போது பலதார மண அனுமதி தேவைதானா என்கிற வினா எழுகிறதல்லவா? ஆம், கேள்வியெழத்தான் செய்கிறது.

பலதார மணம் கட்டாயக் கடமை இல்லை. "விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்" எனக் கட்டளையிடும் இஸ்லாம், அந்தச் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோருக்கு ஒரு மாற்று வழியாகத்தான் இந்தப் பலதார மண அனுமதியை வழங்கி இருக்கின்றது. அனைத்தும் அறிந்த இறைவன் மனித வாழ்வுக்கு ஒரு நடைமுறையை அனுமதித்தால் அதில் மனித குல மேம்பாட்டிற்கான வழிமுறை அமைந்திருப்பது திண்ணம்.

எனவே, மேலும் நீட்டாமல், ஆண்களுக்குப் பலதார திருமணத்திற்கு அனுமதியை வழங்கியவன் அல்லாஹ் எனக் கூறி, கேள்விக்கு வருவோம்.

முஸ்லிம் கணவர் ஒருவரின் மனைவி உயிரோடு இருக்கும்போது, அவர் இன்னொரு பெண்ணை மணமுடிப்பதற்கு அவருடைய மனைவியின் அனுமதி கட்டாயமா?

கணவன் இரண்டாவது கல்யாணம் முடிக்க விரும்பினால் முதல் மனைவியின் ஒப்புதல் கட்டாயம் வேண்டும் என்பது பிற சமூக மக்களின் நடைமுறையிலுள்ள எழுதப்படாத விதியாகும். முதல் மனைவி ஒப்புதலளித்து, கணவன் இரண்டாவது திருமணம் முடிப்பது பெரும்பாலும் நடைமுறை சாத்தியமற்றது. எந்தப் பெண்ணும் – குறிப்பாக தமிழ்நாட்டுப் பெண் - இதற்கு சம்மதிக்க மாட்டாள்.

பிற சமயச் சட்டப்படி, முதல் மனைவி இருக்கும்போது அவள் சம்மதம் இல்லாமல் கணவன் இரண்டாவது திருமணம்தான் செய்து கொள்ளக்கூடாது. ஆனால், மணமுடிக்காமல் சின்னவீடு, வைப்பாட்டி என எத்தனைப் பெண்களையும் வைத்துக் கொள்வதற்கு முதல் மனைவியின் சம்மதம் தேவையே இல்லை என்பதுதான் நடைமுறை. ‘நீ எத்தனை பெண்களை வேண்டுமானாலும் வைத்துக் கொள், மனைவி என்கிற பெருமைக்குரிய அந்தஸ்து எனக்கு மட்டும் இருந்தால் போதும்’ என மரபுவழி மனைவியும் அதைக் கண்டு கொள்ளமாட்டாள். இது, இஸ்லாத்தின் பார்வையில் வெளிப்படையான விபச்சாரம். ஆனால், ‘சமரசம்’ எனும் நோக்கில் நாடு முழுதும் பரவலாக நடைமுறையில் உள்ள சமூகச் சீரழிவு.

இது போன்ற நெறியற்ற வாழ்க்கையை இஸ்லாம் தடை செய்து, நேர்மையான வாழ்வுக்குப் பலதார திருமணத்தை அனுமதித்துள்ளது.

இனி, “பலதார திருமணத்திற்குப் பிற மனைவியரின் அனுமதி கட்டாயம் வேண்டும்” என்கிற கருத்துடையோர் கூறும் ஆதாரத்தைப் பார்ப்போம்,

நபி (ஸல்) அவர்களின் மகளார் ஃபாத்திமாவுடன் மணபந்தத்தில் அலீ(ரலி) இருக்கும்போது இரண்டாம் தாரமாக அபூ ஜஹ்லின் மகளை மணந்து கொள்வதற்கு அலீ(ரலி), பெண் பேசி முடித்திருந்தார். இதை அறிந்த ஃபாத்திமா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து விஷயத்தை எடுத்துச் சொன்னார்.
“... அலீ இப்னு அபீ தாலிப்(ரலி), ஃபாத்திமா(ரலி) (உயிரோடு தம் மணபந்தத்தில்) இருக்கும் போதே அபூ ஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசி முடித்திருந்தார். (அந்த நேரத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அது குறித்து மக்களிடம் அவர்களுடைய இந்த மிம்பரில் (நின்றபடி) உரையாற்றியதை செவியுற்றேன். அப்போது நான் பருவ வயதை அடைந்து விட்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள், “ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தன்னுடைய மார்க்க விவகாரத்தில் சோதனைக்கு உள்ளாக்கப்படுவார் என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறிவிட்டு, (தம் மூத்த மகள் ஸைனபை மணந்திருந்த) தம் மருமகன் - (அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை) – பற்றி, அவர் தம்மிடம் நல்ல மருமகனாக நடந்து கொண்டதைக் குறித்து (நினைவு கூர்ந்து) புகழ்ந்தார்கள். “அவர் என்னிடம் பேசியபோது உண்மையே பேசினார்; எனக்கு வாக்குறுதியளித்தார், அதை நிறைவேற்றித் தந்தார். (மார்க்கத்தில்) அனுமதிக்கப்பட்ட ஒன்றை நான் தடை செய்யக் கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிப்பவனும் அல்லன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரின் மகளும், அல்லாஹ்வின் விரோதியின் மகளும் (ஒரு கணவனோடு மணபந்தத்தில்) ஒன்று சேர முடியாது" என்று கூறினார்கள்
(அறிவிப்பாளர்: அலீ இப்னு ஹுஸைன் (ரஹ்) நூல்கள்: புகாரி 3110, முஸ்லிம் 4841, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).

மேற்கண்ட நபிமொழியில், கூறப்பட்டுள்ள காரணங்களை ஆய்வுக்குட்படுத்தாமல் நபி (ஸல்) அவர்களின் அனுமதி மறுப்பை மட்டும் சுட்டிக் காட்டி இரண்டாம் தாரத் திருமணத்திற்கு முதல் மனைவியின் ஒப்புதல் கட்டாயம் தேவை என சிலர் கூறுகின்றனர். ஆனால், முதல் மனைவியான ஃபாத்திமா (ரலி)யின் ஒப்புதல் இல்லாமலேயே அலீ (ரலி), அபூஜஹ்லின் மகளை இரண்டாம் தாரமாக மணப்பதற்குப் பேசி முடித்திருந்தார் என்று ஹதீஸில் உள்ள வாசகங்களைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். மேலும், இந்த ஹதீஸில் உள்ள இரு முக்கிய அம்சங்களை ‘முதல் மனைவியின் ஒப்புதல் கட்டாயம் தேவை’ எனக் கூறுவோர் கூர்ந்து நோக்கத் தவறியுள்ளனர்.

  1. “மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றை நான் தடை செய்யக் கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை நான் அனுமதிப்பவனும் அல்லன்”.
  2. "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரின் மகளும் அல்லாஹ்வின் விரோதியின் மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்று சேர முடியாது"

என்ற நபி (ஸல்) அவர்களின் இரு கூற்றுகளும் ஆழ்ந்த சிந்தனைக்குரியவை.

" அனுமதிக்கப்பட்ட ஒன்றை, நான் தடை செய்யக் கூடியவன் அல்லன்" என்று அறுதியிட்டுக் கூறுவதன் மூலம் ‘பிற மனைவியரின் அனுமதி இல்லாமல் பலதார மணம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதுதான். அதை நான் தடைசெய்யவில்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதரின் மகளும் அல்லாஹ்வின் விரோதி அபூஜஹ்லின் மகளும் ஒரே நேரத்தில் ஒருவரின் இருமனைவிகளாக மணபந்தத்தில் இணைய முடியாது’ என அலீ (ரலி) அவர்களின் இரண்டாம் தாரத் திருமணத்திற்கு அனுமதி வழங்க மறுத்தார்கள்.

அல்லாஹ்வின் சாபத்திற்குள்ளான அபூலஹபுக்கு நிகரான இஸ்லாமிய விரோதியாவான் அபூஜஹல். இறை இல்லமான கஅபாவில் சிரவணக்கத்தில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முதுகில் ஒட்டகக் குடலைக் கொண்டுவந்து போடுமாறு உத்பாவுக்குக் கட்டளை இட்டவன்; இறையில்லத்தை வலம்வர முஸ்லிம்களுக்குத் தடைவிதித்தவன்; நபியவர்களைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியவன்; நபி (ஸல்) அவர்களின் சத்திய அழைப்பிற்குத் தொடக்கத்திலிருந்து - பத்ருப் போரில் கொல்லப்பட்டு சாகும்வரை - இடையூறாக இருந்தவன் அல்லாஹ்வின் விரோதி அபூஜஹல்.

இறைத்தூதரின் மகளும், இறை எதிரியின் மகளும் ஒரேகாலத்தில் அலீ (ரலி)யின் மனைவிகளா? "அபதன் – ஒருக்காலும் முடியாது" என ஆட்சேபித்தார்கள் நபி (ஸல்).
அபூஜஹ்லின் உறவினர்களுள் சிலர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து அலீ(ரலி)யின் இரண்டாம் திருமணத்திற்கு அனுமதி கோரினர். "நான் அனுமதியளிக்க மாட்டேன்" என்று நபியவர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டார்கள். அது பற்றிய நபிமொழி:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை மீதிருந்தபடி, "ஹிஷாம் பின் அல்முஃகீரா கோத்திரத்தார், அவர்தம் (உறவினரான அபூஜஹ்லுடைய) மகளை அலீ பின் அபீதாலிபுக்கு மணமுடித்துவைக்க (என்னிடம்) அனுமதி கோரியுள்ளனர். அவர்களுக்கு நான் அனுமதியளிக்க மாட்டேன். மீண்டும் அவர்களுக்கு நான் அனுமதியளிக்க மாட்டேன். மீண்டும் (எத்தனை முறை கேட்டாலும்) அனுமதியளிக்க மாட்டேன். அலீ பின் அபீதாலிப், என் மகளை (ஃபாத்திமாவை) மணவிலக்குச் செய்துவிட்டு, அவர்களுடைய பெண்ணை மணமுடித்துக்கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்கமாட்டேன்). என் மகள் (ஃபாத்திமா), என்னில் ஒரு பகுதியாவார். அவரை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும். அவரை மனவேதனைப் படுத்துவது என்னை மனவேதனைப்படுத்துவதாகும்" என்று சொன்னார்கள் (அறிவிப்பாளர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) நூல்கள்: புகாரி 5230, முஸ்லிம் 4839, திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).

  • புகாரீ 3110 உட்பட பல ஹதீஸ் பதிவுகளின்படி, அலீ (ரலி) தம் முதல் மனைவியான ஃபாத்திமா (ரலி) அவர்களின் அனுமதி பெறாமலேயே அபூஜஹ்லுடைய மகளைத் திருமணம் செய்வதற்குப் பேசி முடித்திருந்தார்.
  • நியாயமான காரணங்களை முன்வைத்து நபி (ஸல்) விளக்கிய பின்னர், அபூஜஹ்லின் மகளை இரண்டாம் தாரமாக மணந்துகொள்ளும் ஏற்பாட்டை அலீ (ரலி) ரத்துச் செய்தார்.

எனவே, முஸ்லிம் கணவர் ஒருவரின் மனைவி உயிரோடு இருக்கும்போது, அவர் இன்னொரு பெண்ணை மணமுடிப்பதற்கு அக்கணவருடைய மனைவியின் அனுமதி கட்டாயம் இல்லை!

(இறைவன் மிக்க அறிந்தவன்)

குறிப்பு : வரலாறு நெடுகிலும் அபூஜஹ்லின் மகள் என்று குறிப்பிடப்படுபவரின் பெயர் ஜுவைரிய்யா என அபூதாவூதின் விரிவுரையான ‘அவ்னுல் மஅபூத்’ எனும் நூலில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

Comments   
மீரான்
0 #1 மீரான் 2015-11-22 10:26
இக்கட்டுரை தொடர்பாக சகோதரர் ஆஷிக்கின் எதிர்வினை கீழே. இதற்கு சத்தியமார்க்கம் .காம் பதில் தரவேண்டுமென எதிர்பார்க்கிறேன்.

####

சத்தியமார்க்க கட்டுரை ஆசிரியருக்கு நம்ம டீக்கடை மக்களே எம்புட்டோ தேவலாம்.

டீக்கடையில் உள்ளவர்கள் முதல் சத்தியமார்க்கம் உட்பட எவருக்குமே பதில் சொல்ல விருப்பம் இல்லாத எனது வினா இதுதான்.

கணவனின் மறு கல்யாணத்துக்கு அனுமதிக்கவே மாட்டேன்... மீண்டும் அனுமதிக்கவே மாட்டேன்... என எதிர்ப்பு தெரிவிக்கும் முதல் மனைவியை என்ன செய்வது..???
---------இந்த கேள்வியை கேட்டால்....
சுத்தி வளைச்சு எலலாரும் சொல்றது... எப்படியாச்சும் மார்க்கத்தை சொல்லி நைச்சியமா பேசி கன்வின்ஸ் பண்ணி அனுமதிக்க வச்சிடணும். வேறன்ன செய்ய..?

அந்த எழவைத்தான் "அனுமதி" வாங்கிக்கிங்கப் பா ன்னு சொல்லிட்டு இருக்க்கேன்....

இஸ்லாமிய சிலதாரமணம்.... ரோட்டில் நிற்கும் அநாதைகளை வீட்டுக்குள் கூட்டி வர அல்லாஹ்வால் உருவாக்கப்பட்டு ஆண்கள் மீது சுமத்தப்பட்ட ஒரு கூடுதல் சுமை. அச்சுமையை மறுக்கத்தான் ஆண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள் ளது. மாறாக.... இஸ்லாமிய சிலதாரமணம்.... தலாக் விடப்பட்ட புதுப்புது அநாதைகளை உருவாக்க அல்லாஹ்வால் ஆண்களுக்கு தரப்பட்ட பாக்கியம் அல்ல...!

இது யார்க்கும் ஏன் புரியமாட்டிங்கு துன்னு நான் கேட்பதை விட.... இது எல்லாருக்கும் புரிஞ்சுதான்....

சத்தியமார்க்கம் உட்பட கட்டுரையை பாதியோடு நிறுத்தி விட்டு தப்பி விடுகிறார்கள். அடுத்த பகுதிக்குல்வ் வர மாட்டிங்கிறாங்க.

அந்த அலி ரலி -- பாத்திமா ரலி மேட்டரில் கூட சுயவிளக்கம் கொடுத்து புகுந்து விளையாண்டு இருக்காங்க.

////
அனுமதிக்கப்பட்ட ஒன்றை, நான் தடை செய்யக் கூடியவன் அல்லன்" என்று அறுதியிட்டுக் கூறுவதன் மூலம் ‘பிற மனைவியரின் அனுமதி இல்லாமல் பலதார மணம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட துதான். அதை நான் தடைசெய்யவில்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதரின் மகளும் அல்லாஹ்வின் விரோதி அபூஜஹ்லின் மகளும் ஒரே நேரத்தில் ஒருவரின் இருமனைவிகளாக மணபந்தத்தில் இணைய முடியாது’ என்பதை "தடை செய்யப்பட்ட ஒன்றை நான் அனுமதிப்பவனும் அல்லன்”.எனக்கூற ி அலீ (ரலி) அவர்களின் இரண்டாம் தாரத் திருமணத்திற்கு அனுமதி வழங்க மறுத்தார்கள்.
////

அதில் இடைச்செருகல் இன்றி படியுங்கள். இப்ப எளிதாக புரியும் விளக்கம் இதுதான்.

அனுமதிக்கப்பட்ட ஒன்றை, நான் தடை செய்யக் கூடியவன் அல்லன்" என்று அறுதியிட்டுக் கூறுவதன் மூலம் ‘பலதார மணம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட துதான். அதை நான் தடைசெய்யவில்லை. :-)

யாரை கல்யாணம் பண்ணிக்க போறார்ங்கிறது பாத்திமா ரலி அவர்கள் எழுப்பிய பஞ்சாயத்து அல்ல. அவர் கல்யாணம் பண்ணிக்க போறார் என்பதுதான் பஞ்சாயத்து. பின்னாடி அது நபியின் மூலம் யார்ங்கிறதுதான் முக்கிய பஞ்சாயத்தா மாறிடுது. யாரா இருந்தா என்ன.... அலி ரலி அவர்கள் இரண்டாம் கல்யாணம் பண்ணலை. அம்புட்டுத்தான் பாத்திமா ரலி அவர்கள் தேடிய தீர்ப்பு.

////என் மகள் (ஃபாத்திமா), என்னில் ஒரு பகுதியாவார். அவரை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும். அவரை மனவேதனைப் படுத்துவது என்னை மனவேதனைப்படுத்துவதாகும்///

--------------இதிலிருந்து மட்டுமல்ல.... பாத்திமா ரலி அவர்கள் மனவேதனை எது என்பதை அன்னார் உயிர்வாழ்ந்த வரை அலி ரலி வேறு எந்த திருமணமும் செய்து கொள்ளவில்லை என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
Quote | Report to administrator
இந்தியன்
0 #2 இந்தியன் 2015-11-22 10:31
//என் மகள் (ஃபாத்திமா), என்னில் ஒரு பகுதியாவார். அவரை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்.//

ஃபாத்திமா(ரலி)யை வெறுப்படைய செய்தது எது? தம் கணவர் மற்றொரு திருமணம் முடிப்பதா அல்லது அல்லாஹ்வின் எதிரி மகளை(அவர் முஸ்லிமாகவே இருந்தாலும்) திருமணம் முடிப்பதா?

முஸ்லிமாகிவிட்டாலும்கூட தந்தை மோடி முஸ்லிம்களின் எதிரி என்பதால் மோடியின் மகளை ஒரு முஸ்லிம் திருமணம் செய்து கொள்ளக்கூடாதா?
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #3 சத்தியமார்க்கம்.காம் 2015-11-23 13:45
அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரர்கள் மீரான் & இந்தியன் ஆகிய இருவரின் பின்னுட்டங்களுக ்கு நன்றி!

பணிப் பளுவின் காரணமாக பதில் தருவதற்குச் சற்றே சுணங்கும் என்று கட்டுரை ஆசிரியர் தெரிவித்துள்ளார ்.
Quote | Report to administrator
Feroz
0 #4 Feroz 2015-12-01 13:42
அழகான கட்டுரை. எனினும் மேலோட்டமாகவே உள்ளது. இது அனுமதி என்றளவில் எடுத்து கொள்ளப்பட வேண்டுமே தவிர இரண்டாம் தாரத்தை ஊக்குவிக்கும் செயலாக மாற கூடாது. எப்படி தலாக அனுமதிக்கப்பட்ட ிருப்பினும் இறைவனுக்கு வெறுப்பான காரியமாக உள்ளதோ அது போல் நமது சமூக சூழ் நிலையில் இரண்டாம் திருமணம் என்பது பல்வேறு சிக்கல்களை உருவாக்குகிறது. முதல் மனைவியிடம் சொல்லாமலேயே இரண்டாம் திருமணம் செய்வது, அது வெளிப்படும் சமயம் ஏற்படும் சிக்கல்கள், முதல் மனைவியின் குழந்தைகளின் நிலைமை, அவர்கள் சந்திக்கும் உளவியல் சிக்கல்களும் எழுதப்பட்டிருந் தால் விரிவாக இருந்திருக்கும் . மேலதிகமாக முதிய வயதில் இளைய தாரத்தை இரண்டாம் தாரமாக கட்டி முதல் மனைவியின் உணர்வுகளை புறந்தள்ளுபவர்க ள் "மனைவியரிடத்தில ் சிறந்தவர்கள் மக்களில் சிறந்தவர்கள்" எனும் நபிமொழிக்கு எப்படி இலக்கணமாய் திகழ்வார்கள்
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்