முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

முஸ்லிம்களுக்காக

றிவியல், நவீன கண்டுபிடிப்புகள், நவீன கருவிகள் இவற்றுக்கு இஸ்லாம் எதிரானதல்ல. ஒவ்வொரு நவீன கருவியும் அறிமுகமான தொடக்கத்தில் மார்க்கத்தின் மீதான அளவிலா பற்றின் காரணமாக அவற்றை இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்த்துத் தடை செய்து வந்தனர். பின்னர் படிப்படியாக அனுமதித்து நடைமுறைப் படுத்தலாம் என தீர்ப்பு வழங்கினார்கள்.

"குர்ஆன் மொழி பெயர்ப்பைத் தமிழில் தருவது ஹராம்" என்று தீர்ப்பு வழங்கினார்கள். இன்று குர்ஆனுக்குத் தமிழ் மொழி பெயர்ப்புகள் பல வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை மார்க்க அறிஞர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஒலி பெருக்கி அறிமுகமான காலத்தில் அது "ஷைத்தானின் கருவி. ஷைத்தானின் கருவியைப் பயன்படுத்துவது ஹராம்" என்று அறிஞர்கள் தீர்ப்பு வழங்கினார்கள். அதனால் தொழுகைப் பள்ளிகளில் ஒலி பெருக்கி அமைப்பதற்குத் தடையாக இருந்தது. பின்னர் துணிச்சலுடன் சில அறிஞர்களும் பள்ளி நிர்வாகிகளும் முன்வந்து பள்ளிகளில் ஒலி பெருக்கி அமைத்தார்கள். இன்று ஒலிபெருக்கி வழியாக அறிஞர்கள் மார்க்கப் பிரச்சாரம் செய்கின்றனர்.

தொலைக்காட்சிப் பெட்டி - டிவி அறிமுகமான அந்தக் காலத்தில் "டிவியில் உருவங்கள் வருகின்றன. எனவே, ஷைத்தான் பொட்டியான டிவி ஹராமானது" என்று தீர்ப்பு வழங்கினார்கள். இந்தக் காலத்தில் அறிஞர்கள் டிவியில் தோன்றி மார்க்கப் பிரச்சாரம் செய்கின்றனர். இவ்வாறு நவீன கருவிகளுக்கெல்லாம் துவக்கத்தில் எதிர்ப்பும் அவை நடைமுறைக்கு வந்த பின்னர் அவற்றிலுள்ள நன்மைகளைக் கண்டு, படு உற்சாகத்துடன் அறிஞர்கள் அதில் பங்காற்றுவதைப் பார்க்கிறோம்.

அந்த வகையில், "உருவப்படம் வரைவது ஹராம்" என்று முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று விளம்பர சுவரொட்டிகளில் தம் உருவப்படம் வரவில்லை என்றால் ஹராம் என்று சொல்லுமளவுக்கு பத்திரிக்கை, நோட்டீஸ், சுவரொட்டி, கம்ப்யூட்டர், டிவிடிக்கள், இணைய தளங்கள் என அறிஞர்களின் உருவங்கள் பதிவு செய்யப் படுகின்றன. கல்விப் பாடங்கள், அறிவியல் கல்வி, சமூக அவலங்கள் என பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்ட பயனுள்ளவைகளை தொலைக்காட்சியில் கண்டு மக்கள் அறிவை வளர்த்துக் கொள்கின்றனர். ஒரு டி.வி.டி யில் லட்சக் கணக்கான உருவப்படங்கள் பதிவு செய்யப் படுகின்றன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

உருவப்படம் ஹராம் என்று சொல்பவர்களாலும் உருவப்படங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க இயலாது என்று சொல்லுமளவுக்கு இன்று உருவப்படங்கள் கட்டாயத் தேவை என்ற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, 'இஸ்லாம் உருவப்படம் வரைதலைத் தடைசெய்துள்ளது' என்பதை எவ்வாறு விளங்க வேண்டும் என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

ஓரிறைவனை வணங்குவது இஸ்லாமின் அடிப்படைக் கொள்கை. எல்லா இறைத்தூதர்களும் ஓரிறைக் கொள்கையின் அடிப்படையில் வாழ்க்கை நெறியினைப் போதித்தனர். ஒரு சமூகத்துக்கு அனுப்பப்பட்ட நபியின் மறைவுக்குப்பின், அச்சமுதாயத்தினர் மன ஆசைக்கு உட்பட்டு, தான்தோன்றித்தனமாக வாழ்க்கையை அமைத்து, "இதைத்தான் அல்லாஹ் எங்களுக்கு ஏவினான்" என்றும் வாய் கூசாமல் இறைவனின் மீது இட்டுக்கட்டிப் பொய்யுரைத்தனர்.

அவர்கள் ஏதேனும் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்துவிட்டால், "எங்கள் மூதாதையர்களை இதன் மீதிருக்கவே கண்டோம். அல்லாஹ்வும் இதையே எங்களுக்கு ஏவினான்" என்றும் கூறுகின்றனர். அல்லாஹ் மானக்கேடானவற்றை ஏவமாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (இட்டுக் கட்டிக்) கூறுகின்றீர்களா? என்று (நபியே) நீர் கேட்பீராக! (அல்குர்ஆன் 007:028)

மானக்கேடான காரியங்களைச் செய்வதற்கு மட்டுமல்லாமல், இறைவனுக்கு இணை தெய்வங்களை ஏற்படுத்தி அவற்றை வணங்குவதற்கும் முன்னோர்களை ஆதாரம் காட்டி நியாயப்படுத்தினர்.

"...எங்கள் மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை விட்டுவிட்டு அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எம்மிடம் வந்துள்ளீர்?..." என்று கூறினர். (அல்குர்ஆன் 007:070) "...எமது மூதாதையர்கள் வணங்கியதை நாங்கள் வணங்குவதை விட்டும் எங்களைத் தடுக்கின்றீரா?..." என்று கூறினர். (அல்குர்ஆன் 011:062)

இஸ்லாத்தின் மீளெழுச்சியின்போது ஓரிறைக் கொள்கையை எதிர்த்தவர்கள், 'எம் மூதாதையர்களை எந்த வழியில் கண்டோமோ அந்த வழியை நாங்களும் பின்பற்றுவோம்' என்று கொள்கையளவில் பல தெய்வக் கொள்கையை நம்பிக் கொண்டிருந்தனர். உருவச் சிலைகளை வணங்கி வழிபாடு நடத்தி, "எங்கள் முன்னோர்களை இப்படித்தான் கண்டோம், நாங்களும் அவர்களையேப் பின்பற்றுவோம்" என்றும் கூறிவந்தனர். இக்கருத்தைக் குர்ஆன் நெடுகிலும் பல வசனங்களில் காணலாம்.

உருவச் சிலைகள், உருவப் படங்கள் ஆகியவை இறைவனுக்கு இணைகற்பித்தல் எனும் மாபெரும் பாவத்தைச் செய்திடத் தூண்டுதலாக அமைந்துள்ளன. தந்தை தெய்வமாக வணங்கிய உருவத்தை மகன் வணங்கி வழிபடுவது இயல்பு. இவ்வாறு தலைமுறை தலைமுறையாக உருவச்சிலைகள், உருவப்படங்கள் தொடர்ந்து வணங்கி வழிபாடு நடத்தப்பட்டு வந்தன. இறைவனுக்கு இணைவைக்கும் கொடிய பாவத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க உருவச் சிலைகள் செய்வதும் விற்பதும்,  உருவப்படங்கள் வரைதலும் விற்பதும் குற்றமெனத் தடைவிதித்து கடுமையாக எச்சரித்துள்ளது இஸ்லாம்!

கப்ரு - மண்ணறையை வணங்குதல்

நபி(ஸல்) அவர்களுக்கு மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வையைத் தங்களின் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும்போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். அந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது "தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூத-கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்" எனக் கூறி யூத-கிறிஸ்தவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள். (அறிவிப்பாளர்கள்: ஆயிஷா (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி 435-0437; முஸ்லிம் 826 , நஸயீ 2047, அபூதாவூத் 3227, அஹ்மத்).

ஓர் இறைவனை வணங்கும்படி ஓரிறைக் கொள்கையின் பக்கம் அழைத்த நபிமார்களையும் யூத, கிறிஸ்தவர்கள் விட்டு வைக்கவில்லை. இறைவனிடமிருந்து செய்திகளைப் பெற்று மக்களுக்கு அறவுரைகளைப் போதிக்க நியமிக்கப்பட்ட நபிமார்கள் மரணித்து விட்டால், அவர்களின் அடக்கத்தலத்தில் ஆலயம் எழுப்பி வணக்கத்தலமாக்கி நபிமார்களின் மண்ணறைகளை வணங்கி வழிபாடு செய்தனர்.

உம்மு ஹபீபா(ரலி)வும் உம்மு ஸலமா(ரலி)வும் தாங்கள் அபிசீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற (கிறிஸ்தவ) கோவிலைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவர்களுள் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கஸ்தலத்தின் மேல் வணக்கஸ்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள்தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்" என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 427, 434, 1341, 3873; முஸ்லிம் 822, நஸயீ 0704, அஹ்மத் 23731).

சமகாலத்தில் மக்களுடன் சேர்ந்து வாழ்ந்த நல்ல மனிதர் மரணமடைந்தால் அவரை அடக்கம் செய்து அவருடைய சமாதி மீது வணக்கத் தலத்தை நிறுவி, அதில் அவருடைய உருவப்படங்களைப் பொறித்துவிடுவார்கள். சமாதி, உருவ வழிபாடுகள் இப்படித் துவங்கி, பின்னாளில் சமாதிகளும் உருவங்களும் தெய்வங்களாக வழிபட்டுக் கொண்டாடப் படுகின்றன.

எடுத்துக் காட்டாக: கிறிஸ்தவ ஆலயங்களில் இறைத்தூதர் இயேசு அவர்களின் உருவச் சிலைகளும் உருவப்படங்களும் பதிக்கப்பட்டிருக்கும். அத்துடன் இயேசுவின் அன்னை மரியாவின் உருவச் சிலைகளும் உருவப்படங்களும் பதிக்கப்பட்டு, அன்னையும், மகனாரும் வணங்கப்படுவதைப் பார்க்கிறோம் - இயேசு, மரியா உருவ ஓவியங்கள் கிருஸ்தவர்களின் வீட்டில் வைத்து கடவுளாக வணங்கி ஆராதிக்கப்படுகின்றன - இச்செயலுக்கு முஸ்லிம்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல "தமிழகத்து தர்ஹாக்களைப் பார்த்து வருவோம்" என நல்லவர்கள் அடக்கம் செய்யப்பட்ட சமாதிகளின் மீது தர்ஹாக்களை எழுப்பி சமாதி வழிபாடு நடத்தி வருகின்றனர். - தர்ஹாக்களின் ஓவியங்கள் வீட்டில் வைத்து தீப ஆராதனையாக ஊதுவத்தி கொளுத்தி வைத்து வணங்கி ஆராதிக்கப்படுகின்றன - உருவ வழிபாடு கூடாது என இஸ்லாம் தடை விதித்திருப்பதால் தர்ஹாக்களில் உருவங்கள் பொறிக்கப்படவில்லை. மாறாக, சமாதியில் அடக்கம் செய்யப்பட்டவர் வணங்கப்படுகிறார். (தர்ஹாவின் சமாதி வழிபாடும், இறைவனுக்கு இணைகற்பிக்கும் செயலாகும் என்பது தனி விஷயம்)

உருவ வழிபாடுகளை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை! சமாதி வழிபாடு, உருவ வழிபாடு இவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்திடவேண்டும் என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.

"மண்ணறை(கப்ரு)கள் மீது அமராதீர்கள், அவற்றை நோக்கித் தொழாதீர்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூமர்ஸத் கன்னாஸ் (ரலி) நூல்கள்: முஸ்லிம் 1768, திர்மிதீ 0971, நஸயீ 0760, அபூதாவூத் 3229, அஹ்மத்).

நாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ரோம் நாட்டிலுள்ள ரோடிஸ் தீவில் இருந்தோம். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அப்போது ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள், எங்கள் நண்பரின் கப்ரைத் தரை மட்டமாக அமைக்கும்படி உத்தரவிட்டார்கள். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்ரைத் தரை மட்டமாக்கும்படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன்" என்று சொன்னார்கள். (அறிவிப்பாளர்: ஸுமாமா பின் ஷுஃபை (ரஹ்) நூல்கள்: முஸ்லிம் 1763, நஸயீ 2030, அபூதாவூத் 3219, அஹ்மத்).

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அதே அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர், (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!" என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) நூல்கள்: முஸ்லிம் 1764, திர்மிதீ 0970, நஸயீ 2031, அபூதாவூத் 3218, அஹ்மத்).

இறைவனுக்கு இணைவைக்கும் செயற்பாடுகளை இறைவன் மன்னிக்கவே மாட்டான் (அல்குர்ஆன் 004:116) என அறுதியிட்டுக் கூறியிருப்பதால், உருவ வழிபாடு என்பது இணைவைக்கும் செயல், அதனால் இஸ்லாம் உருவங்கள் வரைவதை, செதுக்குவதைத் தடைசெய்திருக்கின்றது.

உயிரினங்களின் உருவப் படங்கள் வரைவதைத் தடைசெய்வது தொடர்பான நம் அறிவுக்கெட்டிய சில அறிவிப்புகளைப் பார்த்துவிடலாம்.

முதல் வகை ஹதீஸ்கள்:

1) நான் இப்னு அப்பாஸ் (ரலி) உடன் இருந்தபோது ஒருவர் வந்து, 'அப்பாஸின் தந்தையே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்துபவன். நான் உருவங்களை வரைகிறேன்' எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), 'நபி(ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். "யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது" என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்' என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். அவரின் முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), 'உமக்குக் கேடு உண்டாகட்டும்! நீர் உருவம் வரைந்துதான் தீர வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவற்றை வரைவீராக!' என்றார். (அறிவிப்பாளர்: ஸயீது இப்னு அபில் ஹஸன் (ரஹ்) நூல்கள்: புகாரி 2225, 5963; முஸ்லிம் 4290, 4291, திர்மிதீ 1751, நஸயீ 5359, அபூதாவூத் 5024, அஹ்மத்).

2) நான் சிறியமெத்தை ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதில் உருவப் படங்கள் வரையப்பட்டிருந்தன. (வீட்டுக்கு வந்த) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கண்டதும் வாசற்படியிலேயே நின்றுவிட்டார்கள், உள்ளே வரவில்லை. அவர்களின் முகத்தில் அதிருப்தி(யின் அறிகுறி)யினை நான் அறிந்து கொண்டு, 'இறைத்தூதர் அவர்களே! நான் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்துவிட்டேன்?' என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இது என்ன மெத்தை?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'தாங்கள் இதில் அமர்ந்துகொள்வதற்காகவும், தலை சாய்த்துக் கொள்வதற்காகவும் இதைத் தங்களுக்காகவே நான் விலைக்கு வாங்கினேன்'' என்றேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இந்த உருவப் படங்களை வரைந்தவர்கள் மறுமைநாளில் வேதனை செய்யப்படுவார்கள். மேலும் அவர்களிடம் 'நீங்கள் படைத்தவற்றுக்கு (நீங்களே) உயிர் கொடுங்கள்' என (இறைவன் தரப்பிலிருந்து இடித்து)க் கூறப்படும்'' என்று சொல்லிவிட்டு, 'உருவப்படங்கள் உள்ள வீட்டில் நிச்சயமாக (இறைவனின் கருணையைக் கொண்டுவரும்) வானவர்கள் நுழைவதில்லை'' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 5181, 5937; முஸ்லிம் 4287, அஹ்மத், முவத்தா மாலிக்).

3) நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் மதீனாவில் ஒருவரது வீட்டினுள் நுழைந்தேன். அதன் மேல் தளத்தில் உருவப் படங்களை வரைபவர் உருவங்களை வரைந்து கொண்டிருந்தார். அப்போது அபூ ஹுரைரா(ரலி), 'என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்கமுடியும்? அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று (அல்லாஹ் கூறுவதாக) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்' என்றார்கள்... (நபிமொழிச் சுருக்கம், அறிவிப்பாளர்: அபூ ஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் (ரஹ்) நூல்கள்: புகாரி 5953, 7559; முஸ்லிம் 4292, அஹ்மத்).

முஸ்லிம் ஹதீஸ் 4292இல், "மதீனாவில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த மர்வான் அல்லது ஸயீத் பின் அல்ஆஸுக்கு உரிய புதுமனை ஒன்றுக்கு நானும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் சென்றோம். அந்த மனையில் ஓவியர் ஒருவர் உருவப் படங்களை வரைந்து கொண்டிருந்தார்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

4) ...வட்டி (வாங்கி) உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும், பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக் கொள்பவளையும், உருவப்படங்களை வரைகின்றவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஜுஹைஃபா (ரலி) நூல்கள்: புகாரி 5962, அஹ்மத் 18281).

5) நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ தல்ஹா (ரலி) நூல்கள்: புகாரி 3225, முஸ்லிம் 4278, திர்மிதீ 2804, நஸயீ 4282, அபூதாவூத் 4153, இப்னுமாஜா 3649, அஹ்மத்).

6) "உருவச் சிலைகளோ உருவப் படங்களோ உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 4293).

மேற்காணும் ஆறு அறிவிப்புகளும் உயிரினங்களின் உருவ ஓவியம் தீட்டுவதை வன்மையாகக் கண்டித்து எச்சரிக்கின்றன. உருவச் சிலையும், உருவப்படமும், நாயும் உள்ள வீட்டில் நன்மையைக் கொண்டுவரும் வானவர்கள் நுழையமாட்டார்கள் எனக் கூறி வீடுகளில் இவற்றைத் தவிர்க்கும்படியும் அறிவிக்கின்றன. இந்த அறிவிப்புகளின் கருத்துகளில் ஏறத்தாழ சற்று வார்த்தைகள் வித்தியாசத்தில் இன்னும் அனேக அறிவிப்புகள் உள்ளன. இந்த ஆதாரங்களின் அடிப்படைப் படிப்பினையாக,

உருவப்படம் வரைந்தவர் அந்த உருவத்துக்கு உயிர் கொடுக்கும்படி மறுமையில் வேதனை செய்யப்படுவார். அவரால் உயிர் கொடுக்க இயலாது. அதனால் வேதனையும் நீங்காது.

அடக்கத் தலத்தில் ஆலயம் எழுப்பி அங்கு அடக்கம் செய்யப்பட்டவரின் உருவப்படத்தை வரைந்து வைப்பவர்கள், படைப்பினங்களில் மகா மட்டமானவர்கள்.

"என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் யார்?" என்று அல்லாஹ் கேட்கிறான்.

உருவப் படங்கள் வரைபவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.

உருவப்படங்களும் நாயும் உள்ள வீட்டில் அருளைக் கொண்டுவரும் வானவர்கள் நுழைய மாட்டார்கள்.

ஆகியவற்றை எடுத்துச் சொல்லி "உருவப்படம் வரையக் கூடாது"' புகைப்படக் கருவியைக் கொண்டு உயிரினங்களின் உருவங்களைப் "புகைப்படம் எடுக்கக் கூடாது" ஒளிப்பதிவு செய்யும் கருவியைக் கொண்டு உயிரினங்களின் உருவங்களை "ஒளிப்பதிவு செய்யக் கூடாது" "வீடுகளில் உருவப்படங்களை வைத்திருக்கக் கூடாது" எனத் தீர்ப்பு வழங்குகின்றனர் சில அறிஞர்கள்.

முதல் வகையான மேற்கண்ட இவ்வறிவிப்புகளின் எச்சரிக்கை மட்டும் இருந்திருந்தால் மறுபேச்சுக்கே இடமில்லாமல், உயிரினங்களின் உருவப் படங்கள் வரைவதற்கும், உருவப் படங்களை பயன்படுத்துவதற்கும் தடையுள்ளது என்று சொல்லி முடித்து ஒதுங்கி விடலாம். ஆனாலும், விதிவிலக்காக வேறு சில அறிவிப்புகளும் உள்ளன அவற்றையும் இங்கு ஒப்பு நோக்க வேண்டும்.

இரண்டாம் வகை ஹதீஸ்கள்:

(1) எங்களிடம் திரைச் சீலையொன்று இருந்தது. அதில் பறவையின் உருவம் இருந்தது. ஒருவர் வீட்டுக்குள் நுழையும்போது அந்தத் திரையே அவரை வரவேற்கும். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை அப்புறப்படுத்து. நான் வீட்டுக்குள் நுழையும் போதெல்லாம் இவ்வுலக(த்தின் ஆடம்பர)ம்தான் என் நினைவுக்கு வருகிறது" என்று கூறினார்கள்... (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம் 4279, திர்மிதீ 2468, நஸயீ 5353, அஹ்மத்).

(2) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தபோது, எனது வீட்டுவாசலில் நான் குஞ்சம் உள்ள திரைச் சீலையொன்றைத் தொங்கவிட்டிருந்தேன். அதில் இறக்கைகள் கொண்ட குதிரைகளின் உருவங்கள் இருந்தன. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை (அகற்றுமாறு) உத்தரவிட, அவ்வாறே அதை நான் அகற்றிவிட்டேன். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 4281).

(3) ஆயிஷா (ரலி) அவர்களிடம் உருவச் சித்திரங்கள் பொறித்த திரைச் சீலை ஒன்று இருந்தது. அதனால் வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த அலமாரி)யை அவர்கள் மறைத்திருந்தார்கள். (அதை நோக்கித் தொழுத) நபி(ஸல்) அவர்கள், 'இதை அகற்றிவிடு. ஏனெனில், இதிலுள்ள உருவப்படங்கள் என் தொழுகையில் என்னிடம் குறுக்கிட்டுக் கொண்டேயிருக்கின்றன' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி 5959, முஸ்லிம் 4284, அஹ்மத் 12122. முஸ்லிம் நூல் அறிவிப்பில், ஆகவே "அதை நான் அப்புறப்படுத்தி அதைத் தலையணை(இருக்கை)களாக ஆக்கி விட்டேன்" என்று இடம்பெற்றுள்ளது).

(4) நான் என்னுடைய அலமாரி (நிலைப் பேழை) ஒன்றின் மீது (மிருகங்களின்)  உருவங்கள் (வரையப்பட்டு) இருந்த ஒரு திரைச் சிலையைத் தொங்க விட்டிருந்தேன். அதை நபி(ஸல்) அவர்கள் கிழித்துவிட்டார்கள். எனவே, அதிலிருந்து நான் இரண்டு மெத்தை இருக்கைகளைச் செய்து கொண்டேன். அவை வீட்டில் இருந்தன அவற்றின் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்வார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2479).

நபி (ஸல்) அவர்களின் வீட்டில் உருவ பொம்மைகள் இருந்தன.

(5) நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகளை வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 6130, முஸ்லிம் 4827, அபூதாவூத் 4931, இப்னுமாஜா 1982, அஹ்மத். முஸ்லிம் நூல் (4827) அறிவிப்பில், ''நான் நபி (ஸல்) அவர்கள் இல்லத்தில் பொம்மைகள் வைத்து விளையாடுவேன்'' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது).

(6) நான் ஏழு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்தபோது, அவர்களிடம் அனுப்பிவைக்கப்பட்டேன். அப்போது விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன் இருந்தன. நான் பதினெட்டு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை விட்டு இறந்தார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம் 2780, நஸயீ 3378).

விளையாட்டுப் பொம்மைகளில் உயிரினங்களின் உருவங்களும் இருந்தன.

(7) நபி (ஸல்) அவர்கள் தபூக் அல்லது கைபர் இரண்டில் ஏதோ ஒரு போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தார்கள். அப்போது காற்று வீசி ஆயிஷா (ரலி) அவர்களின் விளையாட்டுப் பொம்மைகளுக்குப் போடப்பட்டிருந்த திரை விலகியது. அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் "யா ஆயிஷா என்ன இது?'' என்றார்கள். "என் பொம்மைகள்'' என்று  கூறினேன். அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை பொம்மை ஒன்றைக் கண்டு, அதோ நடுவில் உள்ள அந்தப் பொம்மை என்ன? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். "குதிரை'' என்று கூறினேன். குதிரையின் மேல் என்ன? என்று கேட்டார்கள். "இறக்கைகள்'' என்று கூறினேன். குதிரைக்கும் இரண்டு இறக்கைகளா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, "ஏன் சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?'' என்று கேட்டேன், இதைக் கேட்டதும், அவர்களின் கடவாய்ப்பற்களை நான் காணும் அளவுக்கு சிரித்தார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: அபூதாவூத் 4932).

(7வது அறிவிப்பில், "கைபர் அல்லது தபூக்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கைபர் போர் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு நடைபெற்றது. தபூக் போர் ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டு நடைபெற்றது).

உருவப் படங்கள் தொடர்பாக மேற்கண்ட இரண்டாம் வகை ஹதீஸ்களின் கருத்துக்களையொட்டி, சற்று முன்-பின் வாசகங்கள் வித்தியாசத்தில் இன்னும் அனேக அறிவிப்புகள் உள்ளன. இரண்டாம் வகை ஹதீஸ்களிலிருந்து, எவ்வித மதிப்பும் அந்தஸ்தும் வழங்காமல் சில காரண காரியங்களுக்காக வீடுகளில் உருவப்படங்களை வைத்திருக்கலாம்; உருவப்படங்களைப் பயன்படுத்தலாம் என்று விளங்க முடிகிறது.


உருவப் படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்கிற அறிவிப்பிற்கு எதிராக இன்று உருவப் படங்கள் இல்லாத வீடு இல்லை எனும் அளவுக்கு, புகைப்படங்கள், குடும்ப அட்டை, காப்பீடு அட்டை, வாக்காளர் அட்டை, செய்தித் தாள்கள், புத்தகங்கள், கல்விப் புத்தகங்கள், ரூபாய் நோட்டுக்கள், சில்லரைக் காசுகள் என இப்படி எவ்வளவோ உருவப் படங்கள் பதிக்கப்பட்டவை வீடுகளில் உள்ளன. இவை தவிர்க்க முடியாதவை. தவிர்ப்பது நடைமுறை சாத்தியமற்றது.

எடுத்துக் காட்டாக: பாலர் கல்வியை எடுத்துக் கொள்வோம். துவக்கத்தில் குழந்தைகளுக்கு உயிர் எழுத்துகள் கற்றுத் தரப்படுகின்றன. அ, அம்மா அல்லது அணில். ஆ, ஆடு. இ, இலை. ஈ, ஈயின் உருவம். உ, உரல். ஊ, ஊஞ்சல். எ, எலி. ஏ, ஏணி. ஐ. ஐவர். ஒ, ஒட்டகம், ஓ, ஓடம். ஒள, ஒளவையார். என குழந்தைகள் மனத்தில் உயிர் எழுத்துகளைப் பதிய வைக்க பாடப் புத்தகத்தில் உயிரினங்களின் உருவப்படங்களும் வரைந்து காட்டி கல்வி போதிக்கப்படும். குழந்தைகள் வீட்டில் இருக்கும் போதும் பாடப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பார்கள். பாடப் புத்தகங்கள் வீட்டில்தான் இருக்கும். பாடப் புத்தகத்தில் உயிரினங்களின் உருவப்படங்கள் இருப்பதால் வானவர்கள் வீட்டில் நுழையமாட்டார்கள் என்று சொல்ல மாட்டோம்.

உருவப் படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்கிற அறிவிப்பிற்கு எதிராக இன்று உருவப் படங்கள் இல்லாத வீடு இல்லை எனும் அளவுக்கு, புகைப்படங்கள், குடும்ப அட்டை, காப்பீடு அட்டை, வாக்காளர் அட்டை, செய்தித் தாள்கள், புத்தகங்கள், கல்விப் புத்தகங்கள், ரூபாய் நோட்டுக்கள், சில்லரைக் காசுகள் என இப்படி எவ்வளவோ உருவப் படங்கள் பதிக்கப்பட்டவை வீடுகளில் உள்ளன. இவை தவிர்க்க முடியாதவை. தவிர்ப்பது நடைமுறை சாத்தியமற்றது. உருவப்படம் கூடாது என்று சொல்பவரின் சட்டைப் பையில் உருவப்படம் வரையப்பட்ட பணம் இருக்கும். உருவப்படம் உள்ள அடையாள அட்டையும் இருக்கும்.

இன்று தொலைதூரம் என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. பொருளாதார வசதி இருந்தால் நினைத்த நேரத்தில் விரும்பிய நாட்டிற்குச் சென்று வரலாம். இதற்குப் பாஸ்போர்ட் கட்டாயம் வேண்டும். பாஸ்போர்ட்டின் உரிமையாளரை அடையாளப்படுத்த புகைப்படம் தேவை. அயல் நாட்டினர் உம்ரா, ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டுமாயின் பாஸ்போர்ட் இல்லாமல் இறை ஆலயமான கஅபா இருக்கும் சவூதி அரேபியா நாட்டிற்குள் சட்டப்படி நுழைய இயலாது.

தொலைந்து போனவர்களைத் தேடும் முயற்சியில் "காணவில்லை" என்று அறிவிப்புச் செய்வதற்கும் காணாமல் போனவரின் புகைப்படம் தேவை. காவல் துறையினர் திருடர்கள் பற்றிய எச்சரிக்கை செய்வதற்கும், அயல் நாட்டிற்குத் தப்பியோடிய குற்றவாளியை இன்டர் நெட் மூலம் அடையாளப்படுத்துவதற்கும் உளவுத் துறைக்குப் புகைப்படங்கள் பெரும் உதவியாக இருந்து வருகின்றன.

காவல் துறை, நீதித்துறை, அரசுத்துறை என பல துறைகளிலும் புகைப்படங்களும், ஒளிப்பதிவுகளும் ஆவணங்களாகப் பத்திரப்படுத்தப் படுகின்றன! இன்னும் சொல்வதென்றால், புகைப்படம், ஒளிப்படம் இவை முக்கிய சாட்சிகளாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. மோசடியைத் தவிர்க்க, வீடு நிலம் என அசையாச் சொத்துக்கள் வாங்கும்போது விற்பவர், வாங்குபவரின் புகைப்படங்கள் முத்திரைப் பத்திரத் தாள்களில் ஒட்டிப் பதிவு செய்யப்படுகின்றன. உருவப் படங்களால் இவ்வளவு பயன் இருந்தாலும், இஸ்லாம் முற்றாகத் தடைவிதித்திருந்தால் முஸ்லிம்கள் மறு பேச்சின்றிக் கட்டுப்பட வேண்டும்; அதில் மாற்றுக் கருத்து இல்லை!

திரைச் சீலையில் உயிரினங்களின் உருவப் படங்கள் தேவையா?

மறைவுக்காக வீட்டின் நுழைவாயிலில் திரைச் சீலையைத் தொங்க விடுகின்றனர். வெளியில் நடமாடும் ஆட்களின் பார்வை வீட்டிற்குள் எட்டாமலிருக்க திரைச் சீலை ஒரு மறைவு அவ்வளவுதான். அதற்கு துணி மட்டும் போதும். அதில் உருவப்படங்களை வரைந்து அலங்கரிப்பது வீட்டின் நுழைவாயிலை மதிப்பு மிக்கதாகக் கருதுவதாகும். இது தேவையற்ற அலங்காரம் என்பதுடன் திரைத் துணியில் வரையப்படும் உயிரினங்களின் உருவங்கள் மதிக்கப்படுகின்றன.

உருவப்படங்களின் மீதான இந்த மதிப்பைத்தான் இஸ்லாம் இல்லாமல் ஆக்குகின்றது. அதேத் திரைத் துணியைக் கிழித்து தரையில் விரித்து அதன் மீது அமர்ந்து கொள்ளலாம். மிதியடியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது திரைத் துணியைச் சுருட்டி வீட்டில் ஒரு மூலையில் வைத்து விட்டாலும் வானவர்கள் நுழையத் தடையில்லை!

(8) ஜிப்ரீல் (அலை - ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரது (இல்ல வாயிலில் நின்று உள்ளே வர) அனுமதி கோரினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "உள்ளே வரலாம்" என அனுமதி வழங்கினார்கள். (ஆனால்) "உங்கள் வீட்டுத் திரைச் சீலையில் (உருவப்) படங்கள் உள்ள நிலையில் நான் எப்படி உள்ளே வருவேன்?  அதன் தலைகளை வெட்டி விடுங்கள்; அல்லது உருவங்களைச் சிதைத்துவிடுங்கள். வானவர் கூட்டமாகிய நாங்கள் உருவங்கள் வரையப்பட்ட இல்லங்களில் நுழைய மாட்டோம்" என ஜிப்ரீல் பதிலுரைத்தார். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: நஸயீ 5395, திர்மிதீ 2806, அபூதாவூத் 4158, அஹ்மத் 8018).

நஸயீ நூல் தவிர திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத் ஆகிய நூல்களில் கூடுதலாக வரும் கீழ்க்காணும் செய்தி பதிவுசெய்யப்பட்டுள்ளது.

என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்தார்கள், "நான் நேற்றிரவு உங்களிடம் வந்திருந்தேன். உங்கள் வீட்டு வாசலில் உருவப்படங்கள் இருந்ததன் காரணமாக வீட்டுக்குள் நுழையவில்லை" என்று ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். வீட்டுத் திரைச் சீலையில் உருவப்படங்கள் இருந்தன. வீட்டில் ஒரு நாயும் இருந்தது, உருவப்படத்தின் தலையை நீக்கி அதை மரத்தின் வடிவம் போல் ஆக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அந்தத் திரைச் சீலையைத் துண்டாக்கி மிதிபடும் வகையில் இரண்டு தலையணைகள் தயாரிக்குமாறும், நாயை வெளியேற்றுமாறும் கட்டளையிட்டார்கள். ஹஸன் அல்லது ஹுஸைனுக்கு சொந்தமான நாய்க் குட்டி, நபி (ஸல்) அவர்களின் கட்டிலுக்கடியில் இருந்தது. பின், அது வெளியேற்றப்பட்டது.

மிதிபடும் வகையில் மதிப்பற்ற உருவப்படங்கள் வீட்டில் இருக்கலாம். அதனால் வானவர்கள் நுழைய தடை இல்லை என்பதை மேற்கண்ட அறிவிப்பிலிருந்து விளங்குகிறோம்.

உலகப் பயன் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும் உருவப் படங்கள் வீட்டில் வைத்திருக்க மார்க்க ரீதியாக எவ்விதத் தடையும் இல்லை! அப்படியானால் முதல் வகை ஹதீஸ்களின் நிலை என்ன? என்கிற வினா எழுகின்றது. இதற்கு வணங்கப்படும் உருவச் சிலைகளை வடிவமைக்கக் கூடாது, வணங்கப்படும் உருவப் படங்களை வரையக் கூடாது, வணங்கி வழிபாடு நடத்தும் சிலைகளும், உருவப் படங்களும் உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள் எனப் பொருள் கொள்வதே பொருத்தமாகும்.

"நாய்கள், உருவப்படங்கள் இருக்கும் வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள் என்ற ஹதீஸில், 'வணங்கப்படும் உருவப்படங்கள்' என்று நாமாக விளக்கம் இணைத்துக் கொள்ள நமக்கு அதிகாரம் உண்டா?"

இல்லை!, மார்க்கத்தில் ஒன்றைக் கூட்டவோ குறைக்கவோ ஹலால், ஹராம் என்று விதிக்கவோ எவருக்கும் அதிகாரமில்லை. அதிகாரம் யாவும் அல்லாஹ்வுக்குரியது! ஹதீஸ்களிலிருந்து புரிந்து கொண்டதையே விளக்கமாக வைத்துள்ளோம். நாய்களைப் பற்றித் தடை விதிக்கும் ஹதீஸ்களைப் போலவே, விதிவிலக்காக வேட்டை நாய்களை வளர்த்துக் கொள்ளலாம் என்று அல்லாஹ்வின் தூதர் அனுமதியளித்திருக்கின்றார்கள் (புகாரி 2322). இந்த அனுமதி, கட்டாயத் தேவையைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டதாகும்.

உருவச் சிலைகள் உருவப் படங்கள் மட்டும் வணங்கப்படுவதில்லை. சில மதச் சின்னங்களும் வணங்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. சிலுவை, திரிசூலம், வேல் ஆகியவற்றைக் கடவுள்களின் சின்னங்கள் எனப் பிற மதத்தவர் வணங்கி வழிபட்டு வருகின்றனர். சிலுவைச் சின்னம் இல்லாத கிறிஸ்தவ தேவாலங்களைக் காண இயலாது. சிலுவை ஒரு தெய்வச் சின்னம் எனக் கருதி கிறிஸ்தவ மக்கள் வணங்குவதால், தோற்றத்தில் சிலுவைக் குறி போன்றவற்றையும் நபி (ஸல்) அவர்கள் சிதைத்துள்ளார்கள்.     

நபி (ஸல்) அவர்கள் தங்களின் வீட்டில் சிலுவை போன்ற உருவங்கள் உள்ள எந்தப் பொருளையும் சிதைக்காமல் விட்டுவைத்ததில்லை. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 5952, அபூதாவூத் 4151, அஹ்மத் 23740).

மதச் சின்னங்கள் வணங்கப்படுவதால் சிலுவை சின்னத்தைப் போல் தோற்றமளித்தவைகளை நபி (ஸல்) அவர்கள் சிதைத்துள்ளார்கள். வணங்கப்படும் உருவப் படங்களும் சிதைத்து அழிக்கப்பட வேண்டும் என்பது இதிலிருந்து விளங்க முடிகிறது. 

மரணமடைந்த முன்னோர்களின் உருவப்படங்கள் மரச் சட்டமடித்து கண்ணாடியிட்டு சுவற்றில் மாட்டி, அதற்கு நெற்றியில் குங்குமம் சந்தனம் பொட்டுவைத்து மாலையிட்டு அவை பூஜிக்கப்படுன்றன. பிறமதத்தினர் வீட்டின் பூஜையறையில் முன்னோர்களின் உருவப்படங்கள் தெய்வமாக வணங்கப்படுகின்றன.

அம்மி, குழவி, ஆட்டுக்கல், உரல், கல் தூண் என இவற்றை வடிவமைக்கும் சிற்பியிடம் வியாபார சிந்தனை மட்டுமே இருக்கும். வேறு உணர்வு அதிலிருக்காது. ஆனால் ஆண் தெய்வங்கள், பெண் தெய்வங்கள் என உருவச் சிலைகளை வடிவமைக்கும் சிற்பி, அதை உருவாக்கும் போதே அதற்கு தெய்வீக ஆற்றல் உள்ளதாகக் கருதி ஆச்சாரத்துடன் விரதமிருந்து சிலையை வடிக்கிறார். தெய்வப் படங்களை ஓவியம் தீட்டும் ஓவியரும் அதற்கு தெய்வீக ஆற்றல் இருப்பதாகக் கருதி பக்தியுடன் உருவங்களைத் தீட்டுகிறார்.

செல்வங்களை அள்ளித் தரும் பெண் தெய்வம் கையிலிருந்து பொற்காசுகள் கொட்டுவது போலவும், கல்விக்கான பெண் தெய்வம் கையில் வீணை வைத்திருப்பது போன்றும் ஓவியரின் கற்பனைக் கேற்ப, இணைகற்பிக்கும் இணை தெய்வங்களின் உருவங்களை வரைந்தவரிடம், அவர் வரைந்த உருவப் படத்திற்கு உயிர் கொடுக்கும்படி மறுமையில் வேதனை செய்யப்படுவார் என்று விளங்கினால் முரண்பாடு இல்லை.

முற்றும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!

oOo

உருவப் பொம்மைகள் வீட்டில் வைத்திருக்கலாமா?

(பகுதி - 2 http://www.satyamargam.com/islam/for-muslims/2254-2254.html  )

Comments   

அபூ ஹஸன்
+2 #1 அபூ ஹஸன் 2013-11-13 04:12
இன்றைய காலகட்டத்திற்கு கட்டாயத் தேவையுள்ள ஓர் ஆய்வு இது.

சிரமங்கள் எடுத்து அருமையான தொகுப்பினை வழங்கிய உங்களுக்கு இறைவன் நன்மைகளைத் தருவானாக!

Quote:
"உருவப்படம் வரைவது ஹராம்" என்று முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று விளம்பர சுவரொட்டிகளில் தம் உருவப்படம் வரவில்லை என்றால் ஹராம் என்று சொல்லுமளவுக்கு...
ரசிக்க வைத்த மெல்லிய நகைச்சுவை ;-)

படித்து பரப்ப வேண்டிய ஆக்கம். அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறே ன்.
Quote | Report to administrator
Dr. Ibrahim
0 #2 Dr. Ibrahim 2013-11-15 16:08
Salaam.

This is a pretty good first analysis in Tamil mashaAllah.

I look forward to seeing more contributions from Satyamargam. Jazakamullah.
Quote | Report to administrator
zaki
0 #3 zaki 2013-11-23 01:29
Assalamualaikum ,
Appo phone computer pontravattil photos save panni vaikalaama illaya. Pillaikala siriya vaysila edutha photo pontrathai primt out edukaamal phone computer ill save pannalaama? Thayavu seithu enathu email id ku reply pannavum.
Jazakumullah.
Quote | Report to administrator
இப்னு அமீர்
0 #4 இப்னு அமீர் 2013-12-07 15:23
.
மாஷா அல்லாஹ், வேறு எந்த இணைய தளத்திலோ இஸ்லாமிய உரைகளிலோ கிடைக்காத மிகச் சிறப்பான தொகுப்பு.

இதன் இரண்டாம் பகுதி வெளியான லிங்க் தாருங்கள். நன்றி.
Quote | Report to administrator
இப்ஹாம்
0 #5 இப்ஹாம் 2014-03-19 13:03
ஒட்டுமொத்தத்தில ் சிறந்த ஆக்கம். எனினும் சிறு இடத்தில் விடப்பட்ட தவறு ஒட்டுமொத்த முடிவையே மாற்றியுள்ளது என்பது கசப்பான உண்மையாகும்.

கட்டுரையாளரின் முடிவு - //வணங்கப்படும் உருவச் சிலைகளை வடிவமைக்கக் கூடாது, வணங்கப்படும் உருவப் படங்களை வரையக் கூடாது, வணங்கி வழிபாடு நடத்தும் சிலைகளும், உருவப் படங்களும் உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள ் எனப் பொருள் கொள்வதே பொருத்தமாகும்.//

என்பதாகும். ஆனால் ஹதீஸில் அவ்வாறு இல்லை என்பதை கட்ரையாளர் ஒப்புக் கொள்கிறார். அடுத்த ஹதீஸை பாருங்கள்,

ஜிப்ரீல் (அலை - ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரது (இல்ல வாயிலில் நின்று உள்ளே வர) அனுமதி கோரினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "உள்ளே வரலாம்" என அனுமதி வழங்கினார்கள். (ஆனால்) "உங்கள் வீட்டுத் திரைச் சீலையில் (உருவப்) படங்கள் உள்ள நிலையில் நான் எப்படி உள்ளே வருவேன்? அதன் தலைகளை வெட்டி விடுங்கள்; அல்லது உருவங்களைச் சிதைத்துவிடுங்க ள். வானவர் கூட்டமாகிய நாங்கள் உருவங்கள் வரையப்பட்ட இல்லங்களில் நுழைய மாட்டோம்" என ஜிப்ரீல் பதிலுரைத்தார். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: நஸயீ 5395, திர்மிதீ 2806, அபூதாவூத் 4158, அஹ்மத் 8018).

நபி (ஸல்) அவர்களின் வீட்டு திரைச்சீலையில் வணங்கப்படும் உருவப்படங்கள் தொங்கவிடப்பட்டி ருந்ததன் காரணமாகத் தான் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நுழையவில்லை என்று பொருள் கொள்ளலாமா? நஊதுபில்லாஹி மின்ஹா.

புகைப்படம் தவிர்க்க முடியாத ஒன்று என்பதில் மாற்றுக்கருத்தி ல்லை. அதற்காக வலிந்து எடுக்கப்படும் மார்க்கத்தீர்ப் புக்கள் எமது நிலையை தலைகீழாக மாற்றிவிடும். எவற்றை வீடுகளில் வைப்பதற்கு அனுமதி என்று வந்துள்ளதோ அவை மாத்திரமே விதிவிலக்கானது. மற்றபடி மலக்குமார்கள் உருவம் உள்ள வீட்டிற்கு வரமாட்டார்கள் என்ற ஹதீஸின் படி உருவம் உள்ள நமது வீடுகளிற்கு மலக்குமார்கள் வரமாட்டார்கள் என்பதுவே உண்மை.

நமது பணங்களிலும் உருவம் உண்டு. பிள்ளைகளின் பாடப்புத்தகங்கள ிலும் உருவம் உண்டு. எமது அடையாள அட்டை கடவுச்சீட்டு என எல்லாவற்றிலும் உருவம் உண்டு. இவற்றை நாம் மதித்து வேறு நடக்கின்றோம் பின்பு எப்படி எமது வீட்டிற்கு மலக்குமார் வருவார்கள் என தீர்ப்பு வழங்குவது சிந்தியுங்கள் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங ்கள்.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்