முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

முஸ்லிம்களுக்காக

யம்: தொழுகையில் வரிசையில் நின்று தொழுது கொண்டிருக்கும்போது, முன் வரிசையில் இடம் இருந்தால் நகர்ந்து சென்று அங்கு நிற்கலாமா? -  ஹபீப் ரஹ்மான்

தெளிவு: 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... 

தொழுகையின் அணிவகுப்பு வரிசையை நேராக்குங்கள்; நெருக்கமாக நில்லுங்கள்; வரிசையை ஒழுங்கு படுத்துவது தொழுகையை நிலைபெறச் செய்வதாகும்; தொழுகையை அழகுறச் செய்வதாகும் என்றெல்லாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். தொழுகையின் வரிசையை இடைவெளியின்றி நெருக்கமாக அமைத்துக் கொள்ள வேண்டும். "வரிசையை ஒழுங்குற அமைக்கவில்லை எனில் அல்லாஹ் உங்கள் முகங்களை மாற்றி விடுவான்'' என்றும் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (தொழுகையைத் துவங்குவதற்கு முன் மக்களை நோக்கி) ''உங்கள் வரிசைகளை நேராக்கிக் கொள்ளுங்கள், வரிசைகளுக்கிடையே (இடைவெளி இல்லாமல்) நெருக்கமாக நில்லுங்கள்! முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வனின் மீது ஆணையாக! ஷைத்தான்கள் தொழுகை வரிசையின் இடைவெளியில் கருப்பு ஆடுகளைப் போன்று நுழைவதை நான் காண்கிறேன்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: நஸயீ 806, அபூதாவூத்)

"உங்கள் வரிசைகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளுங்கள்! நிச்சயமாக நான் என்னுடைய முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காண்கிறேன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும் எங்களில் ஒருவர் தம் தோள் புஜத்தை மற்றவரின் தோள் புஜத்துடனும் தம் பாதத்தை மற்றவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொள்ளலானார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 725)

தொழுகையின் வரிசை இடைவெளியின்றி நெருக்கமாக இருக்க வேண்டும். முதல் வரிசை இடைவெளியின்றி பூர்த்தியானதும் அடுத்த வரிசையைத் துவக்கிப் பூர்த்தி செய்து இவ்வாறு ஒவ்வொரு வரிசையும் இடைவெளியின்றி அமைத்துக் கொள்ள வேண்டும். கடைசி வரிசை குறைவுடையதாக இருக்கும். அப்போதும் கடைசி வரிசையில் நிற்பவர்கள் இடைவெளியின்றி ஒருவருக்கொருவர் நெருக்கமாக நிற்கவேண்டும்.

(தொழுகையில்) முன் வரிசையை நிறைவு செய்யுங்கள்! பின்னர் அடுத்துள்ள வரிசையை (நிறைவு செய்யுங்கள் வரிசையில்) குறைவு ஏற்பட்டால், அது இறுதி வரிசையாக இருக்கட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) நூல்கள்: நஸயீ 809, அபூதாவூத், அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளபடி தொழுகையில் வரிசைகளைச் சரிபடுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு வரிசைகளை முறைப்படுத்திக் கொண்டால் பின் வரிசையில் தொழுகையில் நிற்பவர் நடந்து சென்று முன் வரிசையில் சேரும் நிலை ஏற்படாது. எனினும், பின் வரிசையில் தொழுகையில் நிற்பவர் முன் வரிசையில் இடமிருந்தால் தொழுகையில் நிற்கும் நிலையிலேயே நகர்ந்து அங்கு சென்று சேர்ந்து கொள்ளலாம். ஒரு வரிசையிலிருந்து இன்னொரு வரிசைக்குச் சேர நகர்ந்து செல்லும்போது அந்த வரிசையில் இடைவெளி ஏற்படும். அந்த இடைவெளியை நெருக்கமாக்க பின் வரிசையிலுள்ளவர் முன் நகர்ந்து வந்து சேர்ந்து கொள்ளலாம். இப்படியே வரிசைகளை நெருக்கமாக அமைத்துக் கொள்ள வேண்டும்!
 
தொழுகையில் நிற்கும் நிலையில் நகர்ந்து செல்வதற்கான ஆதாரம்:
 
குபாவில் இருந்த பனூ அம்ர் இப்னு அவ்பு கூட்டத்தினரிடையே தகராறு இருப்பதாக நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. அவர்களிடையே சமரசம் செய்வதற்காக நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் புறப்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் வரத் தாமதமானது. தொழுகை நேரம் நெருங்கியது. அப்போது பிலால்(ரலி), அபூ பக்ர்(ரலி)யிடம் வந்து 'அபூ பக்ரே!" நபி(ஸல்) வருவதற்குத் தாமதமாகிறது; தொழுகை நேரம் நெருங்கிவிட்டது. எனவே, மக்களுக்கு நீங்கள் தொழுகை நடத்துகிறீர்களா? என்று கேட்டார்.
 
நீர் விரும்பினால் நடத்துகிறேன் என்று அபூ பக்ர்(ரலி) கூறினார். பிலால்(ரலி) தொழுகைக்கு இகாமத் சொன்னதும் அபூ பக்ர்(ரலி) முன்னே சென்றார். மக்களுக்கு (தொழுகை நடத்த) தக்பீர் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வரிசைகளைப் பிளந்து கொண்டு வந்து (முதல்) வரிசையில் நின்றார்கள். உடனே, மக்கள் கைதட்டலானார்கள். அபூ பக்ர்(ரலி) தொழுகையில் திரும்பிப் பார்க்கமாட்டார். ஆயினும் மக்கள் அதிகமாக கை தட்டியதால் திரும்பிப் பார்த்தார். (வரிசையில்) நபி(ஸல்) நின்றிருந்தார்கள். தொழுகையைத் தொடருமாறு அவருக்கு நபி(ஸல்)அவர்கள் சைகை செய்தார்கள்.
 
அபூ பக்ர்(ரலி), தமக்கையை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து அப்படியே (திரும்பாமல்) பின்னால் நகர்ந்து வரிசையில் நின்றார். நபி(ஸல்) அவர்கள் முன்னே சென்று மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி 'மக்களே! தொழுகையில் ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் ஏன் கைகளைத் தட்டுகிறீர்கள்? கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும். எனவே, தொழும்போது யாருக்கேனும் பிரச்சினை ஏற்பட்டால் 'ஸுப்ஹானல்லாஹ்' எனக் கூறட்டும்" என்றார்கள். பிறகு அபூ பக்ரை நோக்கி 'அபூ பக்ரே! நான் உமக்கு சைகை செய்த பிறகும் மக்களுக்குத் தொழுகை நடத்த மறுத்ததேன்?' எனக் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) முன்னிலையில் அபூ குஹாஃபாவின் மகனுக்குத் தொழுகை நடத்தும் தகுதியில்லை" எனக் கூறினார். (அறிவிப்பாளர்: ஸஹ்ல் இப்னு ஸஃது (ரலி) நூல்கள்: புகாரி 1218, முஸ்லிம் 719, நஸயீ, அபூதாவூத், அஹ்மத், முவத்தா)


ஐயம்:  மஃக்ரிபு, இஷா, ஃபஜ்ரு நேரத் தொழுகைகளில் குர்ஆனை சப்தமாக ஓதுவது போல், லுஹ்ரு, அஸ்ரு நேரத் தொழுகைகளில் குர்ஆன் சப்தமாக ஓதுவதில்லையே ஏன்? - ஹபீப் ரஹ்மான்

தெளிவு:

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ரு நேரத்தில் தொழும் ஜுமுஆத் தொழுகையில் சப்தமாக ஓதித் தொழுதிருக்கிறார்கள். பெருநாள் தொழுகை, மழைத் தொழுகை, கிரகணத் தொழுகை போன்ற முற்பகல் நேரத் தொழுகைகளையும் சப்தமாக ஓதித் தொழுதிருக்கிறார்கள். ஆனால், லுஹ்ரு, அஸ்ரு நேரத் தொழுகைகளை மட்டும் சப்தமின்றியே ஓதித் தொழ வைத்துள்ளார்கள்.

இதற்கான காரணம் என்ன என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவிக்கவில்லை. இதே போன்று ஒரு நாளின் ஃபஜ்ர் தொழுகை இரண்டு ரக்அத்-களாகவும், மஃக்ரிப் தொழுகை மூன்று ரக்அத்-களாகவும் ஏனையவை நான்கு ரக்அத்-களாகவும் இருப்பதற்கும் குறிப்பிட்ட காரணத்தை நபிகளார் அறிவிக்கவில்லை.

“என்னை எவ்வாறுத் தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.”    (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

மேற்கண்ட ஹதீஸின்படி நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி, நபியவர்கள் சப்தமாக ஓதிய தொழுகைகளை சப்தமாகவும், சப்தமின்றி ஓதிய தொழுகைகளை சப்தமின்றியும் ஓதித் தொழுது கொள்வோம்!

(இறைவன் மிக்க அறிந்தவன்)

Comments   

abdul rahiman aneefa
0 #1 abdul rahiman aneefa 2013-12-14 14:45
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஜும்மா இமாம் குத்பா ஓதும்போது சுன்னத் தொழுகலாமா?
Quote | Report to administrator
Mohamed Jasim
0 #2 Mohamed Jasim 2013-12-16 16:03
assalaamu alaikum

ivaigalil islaathin moola aadhaarangal yaavai??
Quran
hadhees
Madh'hab

melum sahaabaakkalai pinpatranumaa., ,
la eef aana hadheesai aerka venduma enbadhanayum vilakkavum...
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்