முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

முஸ்லிம்களுக்காக

கேள்வி:-
அஸ்ஸலாமு அலைக்கும் ...

தலை நரைக்குச் சாயம் பூசுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறதா? சிலர், மருதாணி அல்லாத நிறப்பூச்சுக் கூடாது என்கின்றனர். விளக்கம் தரவும்.

- சகோ. முஹைதீன் ஜாஃபர், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. மின்னஞ்சல் வழியாக.

 

பதில்:-
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ் ...

"யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல்கள் - புகாரி 3462, 5899. முஸ்லிம் 4271. திர்மிதீ.

நரைத்த தலைமுடிக்கும் தாடிக்கும் சாயம் பூசி, யூத கிறிஸ்துவர்களுக்கு மாறுசெய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நரைக்குச் சாயமிடுவது

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது, அவர்களுடைய தோழர்களிலேயே அபூபக்ரு(ரலி)தாம் அதிக வயதுடையவர்களாக இருந்தார்கள். பிறகு, அபூபக்ரு(ரலி) தம் (தாடிமுடியை) மருதாணியாலும், 'கதம்' எனும் இலைச் சாயத்தாலும் தோய்த்து (நரையை) மறைத்துக் கொண்டார்கள். அதனால் அதன் நிறம் கருஞ் சிவப்பாகிவிட்டது. அறிவிப்பவர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) (நூல் - புகாரி 3920).

மேற்காணும் ஹதீஸில் இருவகை இலைகள் இடம்பெறுகின்றன. அவற்றின் கலவை நிறங்கள் ஹதீஸ்களில் குறிப்பிடப்படுகின்றன.

மருதாணியும் கதமும் சரிசமமான அளவில் சாறெடுக்கப் பயன்படுத்தப்படுமாயின், அக்கலவை பூசப்படும் (வெள்ளை)நரையின் நிறம் கருஞ்சிவப்பாகிவிடும். மருதாணி இலை கூடிவிட்டால் இளஞ்சிவப்பாகும்; கதம் கூடிவிட்டால் கருப்பாகிவிடும்.

நரைக்குச் சாயம் பூசியே தீரவேண்டும் என்ற (அஹ்லே ஹதீஸ்காரர்கள்போல்) நிலைப்பாடு உடையவர்கள், அண்ணல் அபூபக்ரு (ரலி) அவர்களைப்போல் மருதாணி+கதம் சரிபாதிக் கலவையின் சாறெடுத்துப் பூசிக் கொள்ளலாம்.

அனஸ்(ரலி) அவர்களிடம், "நபி(ஸல்) அவர்கள் (தம் நரை முடிக்குச்) சாயம் பூசியதுண்டா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "நபி(ஸல்) அவர்களுக்குச் சாயம் பூசுகிற அளவிற்கு நரைக்கவில்லை. அவர்களின் தாடியிலிருந்த வெள்ளை முடிகளை நான் நினைத்திருந்தால் எண்ணிக் கணக்கெடுத்திருக்க முடியும்" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) வழியாக, ஸாபித் அல்புனானீ (ரஹ்) நூல் - புகாரி 5895.

நபி (ஸல்) அவர்களுக்குக் கூடுதலாக நரைத்திருக்கவில்லை என்பதை மேற்கண்ட அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பிலிருந்து விளங்க முடிகிறது. நபியவர்கள் தமது முடிக்குச் சாயம் பூசியதாக நமக்குத் தெரிந்து எந்த அறிவிப்பும் இல்லை.

நரைத்த முடிக்குக் கருப்புச் சாயம் பூசுவதில் இரு கருத்துகள் உள்ளன. அதற்கான அறிவிப்புகளையும் பார்ப்போம்!

கருப்புச் சாயம் பூசுவது

 

மக்கா வெற்றி நாளில் (அபூபக்ரு (ரலி) அவர்களின் தந்தை) அபூகுஹஃபா (நபி (ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரது தலைமுடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன. ''இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள். கருப்பு நிறத்தைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) (நூல் - முஸ்லிம் 4270)

முஸ்லிம் நூலில் பதிவுசெய்யப்பட்ட மேற்கண்ட அறிவிப்பு, சற்றுக் கூடுதல் விபரங்களுடன்
''இவருக்குக் கருப்புச் சாயத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்'' என்று அபூகுஹஃபாவைச் சுட்டிக் காட்டுவதாக அஹ்மத் 12174 இப்னுமாஜா 3925 ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது. மக்கா வெற்றி நாளில், அபூபக்ரு(ரலி) அவர்கள் தம் தந்தை அபூகுஹஃபாவைச் சுமந்துகொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தார் என்று அஹ்மத் நூலின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

அபூபக்ரு (ரலி) அவர்களின் தந்தை விஷயத்தில் சொல்லப்பட்ட, 'கருப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் எனும் தடை, எல்லாருக்கும் பொதுவானது' எனும் கருத்தில் அறிஞர்களுள் ஒருசாராரும் 'கருப்பைத் தவிர்க்குமாறு சொல்லப்பட்டது வயது முதிர்ந்தவர்களுக்கு உரியது' எனும் கருத்தில் வேறொரு சாராரும் விளக்கங்கள் கூறுகின்றனர்.

அபூபக்ரு (ரலி) அவர்கள் நபித்தோழர்களிலேயே வயதில் முதியவராவார். நபியைவிட வயதில் மூத்தவர். அவரின் தந்தை அபூகுஹஃபா இன்னும் முதுமையானவர். அதிக வயதின் காரணமாக அவரால் நடக்க இயலாமல், அவரைச் சுமந்துகொண்டு வரும்படி நேருகிறது. வயதில் மிகவும் முதியவரான ஒருவருக்குத் தலைமுடியும் தாடியும் வெண்மையாக நரைத்து, அவற்றுக்குக் கருப்புச் சாயம் பூசினால் முதிர்ந்த வயதுக்கு அது பொருத்தமற்றதாகவும் போலியாகவும் தெரியும். எனவே, ''இவருக்குக் கருப்புச் சாயத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது, பொதுவானத் தடையாகக் கொள்ளாமல், கருப்புச் சாயம் கொண்டு தலை/தாடி நரைமுடியை மறைப்பது முதியோருக்கான தடை என்பதாகச் சிலர் விளக்கம் கூறுகின்றனர்.

மேலும், உலகின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்களுள் குளிர் பிரதேசங்களில் வாழ்வோர் இயற்கையாகவே வெண்மையான தலை/தாடி முடியை உடையோராகக் காணப்படுகின்றனர். இவர்களுக்கு நரைத்ததா? இல்லையா? எனும் வேறுபாட்டை விளங்குவது கடினம்.

மேற்கத்திய நாடுகளில் வாழும் பெரும்பாலோரின் இயல்பான தலை/தாடி முடியானது, மருதாணி பூசிய நரைமுடிபோல செம்பட்டை முடியாகத் தோன்றும்.

இளமைப் பருவத்தில் வயதுக்குமீறி நரைத்தவர் எந்நாட்டவராயினும், தம் தலைமுடிக்கும் தாடிக்கும், நரைக்காத அவரது முடியின் ஒத்த நிறத்தில் சாயம் பூசிக் கொள்வது வயதுக்கும் முடிக்கும் பொருத்தமாகவே இருக்கும். இதில் ஏமாற்று வேலையோ, போலித்தனமோ இல்லாததால் இளவயதுடையோர் இளநரைக்குச் சாயம் பூசிக் கொள்ளலாம்.

மேலும், ஒருவர் இளைஞரே ஆயினும் இயல்புக்கும் வயதுக்கும் மீறிய நரை கூடிவிட்டால், அவருக்கு வேலை கிடைப்பது மிகவும் கடினம். பணியாற்றும் பொது இடங்களில் தேவையற்ற இகழ்ச்சியை எதிர்கொள்ள நேரிடும். இளநரை என்பது பெண்களுக்கு அரிதே எனினும் திருமணத்திற்கு முன்னர் இளம்பெண் ஒருவருக்கு நரைத்துவிட்டால், அவருக்கு மணமகன் கிடைப்பது பெரும்பாடாகிவிடும். முடிநிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமுதாயத்தில் வாழ்வோர், இவை போன்ற சமகாலச் சிக்கல்களுக்கு உள்ளாகாமல் தவிர்த்துக் கொள்வதற்கு நரைக்காத முடியின் ஒத்தநிறத்தில் நரைத்த முடிக்குச் சாயம் பூசிக் கொள்வது பொருத்தமானதும் மார்க்கத்தில் தடை இல்லாததுமாகும். எவ்வாறாயினும், நரையை மறைப்பதற்காகச் சாயமிட்டுக்கொள்வது, வளர்ந்துவரும் முடியினூடாக வெளிப்பட்டே தீரும்.

எனவே, இளவயதில் நரைத்தவர்கள் மருதாணி+கதம் கலவை மூலமோ, அவை கிடைக்காதவர்கள் முடிக்கும் முகத்துக்கும் தீங்கு விளைவிக்காத வேதிநிறமாற்றிகள் மூலமோ தம் தலை/தாடி முடிக்குப் பயன்படுத்தி, சாயம் பூசிக் கொள்வதற்குத் தடையேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

Comments   
M.J. SYED ABDULRAHMAN
0 #1 M.J. SYED ABDULRAHMAN 2011-08-15 12:41
அஸ்ஸலாமு அலைக்கும் ...

எவ்வாறாயினும், நரையை மறைப்பதற்காகச் சாயமிட்டுக்கொள் வது, வளர்ந்துவரும் முடியினூடாக வெளிப்பட்டே தீரும்.
True is believable
Quote | Report to administrator
BISMI
+1 #2 BISMI 2016-12-15 19:47
very good
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்