முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

நூல்கள்

இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்

இஸ்லாமியர் குறித்து இந்துத்துவம் கட்டமைக்கும் பிம்பங்களும் கட்டுக் கதைகளும் மிகுந்த ஆபத்தானவை பாடநூல்களில் வரலாற்றுத் திரிபுகளை மேற்கொள்வது பொய்யான தகவல்களை திரும்பத் திரும்பச் சொல்வது இஸ்லாமியர் பற்றிய அடிப்படையான உண்மைகளை இருட்டடிப்பு செய்வது எனப் பல வடிவங்களில் இவை மேற்கொள்ளப் படுகின்றன தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இப்பிரச்சாரங்கள் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக பொதுக் கருத்தியலில் கூறுகளாக மாறிவிடுகின்றது.

இஸ்லாமியர்கள் கோவில்களை இடித்தவர்கள், இந்தியத் துணைக் கண்டத்தைத் துண்டாடியவர்கள், பலதாரமணம் புரிபவர்கள், நாட்டுப்பற்று இல்லாதவர்கள் பெரும் பணக்காரர்கள் என்றெல்லாம் பிம்பங்களை உருவாக்குவதில் இந்துத்துவம் வெற்றிபெற்றுள்ளது

மெத்தப் படித்தவர்கள் மிகப்பெரிய எழுத்தாளர்கள் போன்றோர்கூட இத்தகைய கட்டுக்கதைக்குப் பலியாகி இருப்பது கண்கூடு. இத்தகைய பிம்பங்கள் மதவெறியை பரப்புவதிலும் வன்முறையை தூண்டுவதிலும் நடந்துபோன வன்முறையை நியாயப் படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. மதவெறிக்கு எதிரானோர் செய்ய வேண்டிய காரியங்களிலொன்று இத்தகைய இத்தகைய கட்டுக் கதைகளை தோலுரிப்பது.

இஸ்லாமியருக்கு எதிராக இவ்வாறு பரப்பப்பட்டுள்ள கட்டுக்கதைகள் இப்பகுதியில் தொகுக்கப்பட்டு கட்டவிழ்க்கப்படுகின்றன.

  1. வரலாற்றில் வகுப்புவாதம்
  2. இஸ்லாமிய பண்பாடு இழிவானதா?
  3. புறக்கணிக்கப்படும் இஸ்லாமியர்

என்கிற மூன்று தலைப்புகளில் இக்கட்டவிழ்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1 வரலாற்றில் வகுப்புவாதம்

ஐயம்-1: இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்? வந்தேறிகளுக்கு வக்காலத்து வாங்குவதுதான் உங்கள் நோக்கமா?

வரலாற்று நூல்கள் உங்களுக்கு அப்படி போதிக்கின்றன. ஆனால் வரலாற்றை ஆழமாக ஆராய்ந்து பார்த்தோமானால் இன்று இஸ்லாமியரை வந்தேறிகள் என்று சொல்லும் பலரும் வந்து குடியேறியவர்கள்தான் என்பது விளங்கும். வடமொழி வேதங்களில் (கிமு 1500 - கிமு 500)தஸ்யுக்கள் என்னும் உள்நாட்டு மக்களைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் படையெடுத்து வந்த ஆரிய மொழி இனத்தவரால் அடிமையாக்கப்பட்டார்கள். இந்த ஆரியர்கள் ரிக் வேத காலத்தில் கால்நடை வளர்க்கும் மேய்ச்சல் இனத்தவராக ஈரான் வழியாக இந்தியாவில் புகுந்து இங்கிருந்த விவசாய மக்களை போரிட்டு அடிமையாக்கி சூத்திரர்களாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் ஆக்கினார்கள்.

ராஜபுத்திரர்கள் கூட துருக்கியர் குடியேறிய காலத்தில் இங்கு குடியேரியவர்கள்தான். செளகான், பரிகரர், சோலங்கி எல்லாம் வந்தேறிகள்தான் எனில் இஸ்லாமியரை மட்டும் வந்தேறிகள் எனச் சொல்வது என்ன நியாயம்? ஆரியர்கள் வருகை எனச் சொல்லும் நம் பாடநூல்கள் இஸ்லாமியர் படையெடுப்பு எனச்சொல்வது பிஞ்சு நெஞ்சில் வகுப்பு வாதத்தை பதிப்பதில்லையா? வகுப்பு வாதத்தை பதிப்பதில்லையா? இங்குள்ள கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இந்த நாட்டு குடிமக்களாக இருந்து மதம் மாறியவர்கள் தான்.

யாருக்கும் வக்காலத்து வாங்குவதல்ல நமது நோக்கம். அரசியல் நோக்கில் இங்கே பரப்பப்பட்டுள்ள மதவெறியானது பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கக் காரணமாகியுள்ளது. இளைஞர்களும் பொதுமக்களும் படித்தவர்களும் உண்மையான பிரச்சனையிலிருந்து தங்களின் கவனத்தை திருப்பி வகுப்பு வெறிக்குப் பழியாவதற்கு இஸ்லாமியர் பற்றி மதவெறியர்களாலும் பத்திரிக்கைகளாலும் கல்ல்வியாளர்களாலும் திட்டமிட்டுப் பரப்பப்படும் கட்டுக்கதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எனவே இந்தக் கட்டுக்கதைகளை ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிவது ஜனநாயக உணர்வுடைய ஒவ்வொருவரின் கடமை. இந்நிலையில் வரலாற்று ஆதாரங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகள், புள்ளி விவர நிறுவனங்கள் தொகுத்துள்ள செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் உண்மை நிலையைக் கண்டறிவதுதான் நமது நோக்கம். இங்கே சொல்லப்பட்டவற்றை ஆதாரங்களுடன் மறுத்தால் ஏற்றுக்கொள்கிறோம்.


ஐயம்-2: இஸ்லாமியர் படையெடுத்து வந்து இந்து கோயில்களை இடித்து சிதைத்தார்கள் என்பதற்குத்தான் ஆதாரம் இருக்கின்றதே?

கஜினி முஹமது பதினேழு முறை சோமநாதபுரம் கோயிலை இடித்து நொறுக்கினார் என்று உங்களுக்கு பாடநூல்கள் சொல்லியுள்ளன. இல்லையா?

இந்தியாவில் கோயில்கள் என்பது சாமி கும்பிடுகின்ற இடம் மட்டுமல்ல. மன்னர்களின் கோட்டைகளாகவும் நிதிக் களஞ்சியங்களாகவும் அவை திகழ்ந்தன. இல்லாவிட்டால் தஞ்சை பெரிய கோவிலைச் சுற்றி இவ்வளவு பெரிய அகழி ஏன்? பண்டை மன்னர்கள் நடத்திய போர்கள் பெரும்பாலும் கொள்ளையடிப்பதற்காக நடத்தப்பட்டவைதான்.

இந்த அடிப்படையில்தான் கஜினிமுஹம்மது படையெடுத்ததும்.

கோயிலுக்குள் ஒளிந்து கொண்ட எதிரி மன்னர்களை கொல்லவும், ஒளித்து வைக்கப்பட்ட செல்வங்களைக் கொள்ளையிடவும், எதிரியின் பன்னாட்டு ஆளுமையை அழிக்கவும்தான் கோயில்கள் மீது படையெடுக்கப்பட்டன.

எந்த இஸ்லாமிய மன்னனும் தனது எல்லைக்குள் இருந்த இந்து கோயில்களையோ, தனது பாதுகாப்பில் இருந்த இந்து மன்னர்களின் கோயில்களையோ இடித்ததில்லை. அவுரங்கசீப் ஆட்சிகாலத்தில் அப்படித்தான். அவுரங்கசீப்புக்கு எதிராக சூழ்ச்சி செய்தவர்களின் கோட்டைகளும் கோயில்களும்தான் இடிக்கப்பட்டன. மற்றபடி முழுமையான மத சுதந்திரம் இருந்தது. அவுரங்கசீப் ஆட்சிகாலத்தில் தான் தமிழ்நாட்டிலிருந்து குமரகுருபரர் காசிக்கு சென்று முப்பது ஆண்டுகள் சமய பொழிவும் செய்து அங்கே குமாரசாமி மடம் ஒன்றையும் நிறுவினார்.

இன்னொன்றையும் யோசித்துப் பாருங்கள். தஞ்சை பெரிய கோயில் உட்பட இன்றுள்ள பல கோயில்கள் சமண / புத்த கோயில்களை இடித்து கட்டப்பட்டவைதானே! இராசராசன் இலங்கையிலுள்ள அநுராதபுரம், பொலனருவை ஆகிய இடங்களில் இருந்த புத்த கோயில்களை இடித்து தரைமட்டமாக்கி அந்த ஊருக்கு ஜனநாத மங்களம் என்று தனது பெயரைச் சூட்டவில்லையா?

சுபதாவர்மன் (கிபி 1193 1210) என்ற பார்மரா மன்னன் குஜராத்தைத் தாக்கி அங்கிருந்த சமண கோயில்களை கொள்ளையிடவில்லையா?

காஷ்மீர் இந்து மன்னன் ஹர்ஷன் ஆட்சியில் கோயில்களை இடிப்பதற்கென்றே தெய்வங்களை நிர்மூலம் செய்கின்ற அதிகாரி (தேவோத்வத நாயகன்) என்று ஒரு அதிகாரி நியமிக்கப் பட்டிருந்ததாக கல்ஹணன் எழுதிய ராஜதரங்கிணி-யில் குறிப்பிடப்பட்டுள்ளதே?

எனவே கோயில் இடிப்பு என்பதை எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றும் மக்களின் செயலாகவும் கருத வேண்டியதில்லை.


ஐயம்-3: ஆனால் இஸ்லாமியர் கட்டாயமாக மதம் மாற்றினரே? இந்துக்களாக இருந்தவர் மீது ஜிஸ்யா என்னும் தண்டனை வரி விதிக்கப்பட்டதாகப் பாட நூல்களில் படித்திருக்கின்றோமே?

மறுபடியும் பாடநூல்களா? சரி! மன்னர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தபோதும் அவர்கள் மக்களின் எதிர்ப்புகள் தான் ஏதாவது ஒன்றைச் சொல்லி மக்களை கொள்ளையடித்தவர்கள்தான். இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்கள் மீது ஜிஸ்யா வரி சுமத்தியது உண்மைதான். ஆனால் இந்த வரி இந்துக் கோவில்களை பராமரிக்க என்று சொல்லப்பட்டது. இஸ்லாமிய மக்கள்மீது வரி இல்லையென நினைத்து விடாதீர்கள். ஜகாத் என்ற பெயரில் அவர்களிடமும் வசூலிக்கப்பட்டது. ஜிஸ்யா வரியும் கூட பெண்கள், குழந்தைகள், பார்ப்பணர்களிடம் வசூலிக்கப்படவில்லை. இந்து மன்னர்கள் யூத குடியினரிடமிருந்தும் ஜிஸ்யா வசூலித்தர்கள் என்று பதினான்காம் நூற்றாண்டு பயணி ஒருவர் குறிப்பிடுகின்றார்.

 

ஹிஸ்யாவுக்காக பயந்துகொண்டு இந்துக்கள் மதம் மாறினார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். எந்த இஸ்லாமிய மன்னரது காலத்திலும் இந்த மக்கள் கட்டாயமாக மதம் மாற்றப்படவில்லை. இதன் பொருள் மத மாற்றங்களே இல்லை என்பதல்ல இரண்டு வகையில் மதமாற்றங்கள் நடை பெற்றன.

1) எல்லோரும் சகோதரர்களே என்ற சூஃபி துறவிகளின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு இந்து மத சாதிக் கொடுமையினால் வெறுப்புற்று அடிநிலை மக்கள் இஸ்லாத்திற்கு மாறினார்கள்.

2) அரசியல் ரீதியாக ஆளும் வர்க்கமாக இருந்த புதிய மன்னர்களைத் தங்கள் விசுவாசத்தால் அசத்த விரும்பியவர்களாகவும் மதம் மாறியுள்ளனர். ஆனால் அந்த நிலையிலும் சாதாரண மக்கள் கட்டாய மதம் மாற்றப்படவில்லை. அரசியல் காரணங்களுக்காக சில சமயங்களில் சந்தேகத்திற்கிடமான சில ஜமீன்தாரர்கள் மதம் மாற்றப்பட்டிருக்கலாம்.


 

ஐயம்-4: அலாவுதீன் கில்ஜி ஜமீந்தார்களை ஒடுக்கினாரே?

அவர் இந்துவல்லாத இஸ்லாமிய இக்தாதர்களையும் தான் ஒடுக்கினார். மதவெறியன் என அவரை தூற்றுகின்றீர்கள். ஆனால் அவர் காலத்திய இஸ்லாமிய வரலாற்றாசிரியர் ஜியாபரணிஎன்ன சொல்கின்றார் தெரியுமா? இஸ்லாம் மதத்திற்காக கில்ஜி ஒரு அரசன் என்ற முறையிலோ, தனி வாழ்விலோ எதுவும் செய்யவில்லை எனத் தூற்றினார். திருப்பித் திருப்பி சொல்கின்றோம் என நினைக்காதீர்கள். அரசியல் காரணங்களாக சில தனிநபர்களை இஸ்லாத்திற்கு மாற்ற அவுரங்கசீப் போன்ற மன்னர்கள் செய்த சில முயற்சிகளை பெரும் மக்களை கட்டாயமாக மதம் மாற்றினார்கள் என நாம் புரிந்து கொள்ளக்கூடாது. அரசியல் நோக்கத்திற்காக குறுநில மன்னர்களோடு கட்டாயமாக மண உறவுகளை இந்து மன்னர்கள் ஏற்படுத்தி கொண்டது பற்றி வரலாற்றிலும் சங்கப் பாடல்களிலும் படிக்கின்றோம் இல்லையா? அப்படித்தான் இதுவும். இது எல்லாம் சரி என நான் சொல்ல வரவில்லை. எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட அதிகார வெறிபிடித்த மன்னர்களின் நடவடிக்கைகளை அவற்றிக்குறிய சூழலிலிருந்து விலகிப் பூதகப்படுத்தி இன்றைய தலைமுறையைச் சேர்ந்த அப்பாவி மக்கள் மீது இரத்த வெறிகொண்ட பகையை ஏற்படுத்த பயன்படுத்தக்கூடாது.


 

ஐயம் 5: இந்து மன்னர்கள் எத்தனையோ கொடுமைகள் செய்திருக்கலாம் ஆனால் ஓரிருவரைக் கூட மதம் மாற்றியதில்லையே?

a. நாம் சில அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ளவேண்டும். முதலில் இஸ்லாம் கிறித்துவம் பேன்றவை பரப்புவதற்குரிய மதங்கள் (Missionary religions). இந்து மதம் அப்படிப்பட்டதல்ல. முற்பிறவியில் அவர் செய்த கரும விளைவிற்கேற்ப இப்பிறவியில் அவர் குறிப்பிட்ட பிறவியில் பிறந்து இழிவுகள் அல்லது பெருமையை அடைகின்றார் என்கின்றது இந்துமதம். எனவே வேற்று மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாற்றினால் அவரை எந்த மதத்தில் வைப்பது என்பதும் ஒரு பிரச்சினை.

b. இங்கேயுள்ள வைதிக, சனாதன, வர்ணாசிரம மதத்திற்கு இந்துமதம் என்ற பெயர் சமீபத்தில் ஏற்பட்டது தான் என்பதை சங்கராச்சாரி, விவேகானந்தர், பாரதி உட்பட சகலரும் ஏற்றுக் கொள்கின்றனர். வரலாறு முழுமையும் பல்வேறு சுதந்திரமான இன குழு மக்களை அவர்களுக்கு ஒரு சாதி பெயர் கொடுத்து தனது ஆட்சிகளுக்குள் சாதியாக ஏற்றதாழ்வுகளும் இந்து மன்னர்கள் பார்ப்பனர்களின் துணையோடு கொண்டு வந்தனர். இதன் மூலம் அந்த சுதந்திர மக்கள் மீது பெரும்பாலான சுரண்டல்களும் சாதிக் கடமைகளும் திணிக்கப்பட்டு அவர்கள் என்றென்றும் அடிமைகளாக்கப்பட்டனர்.

c. மதம் மாற்றியதில்லையே தவிர மற்ற மதங்களை இழிவு செய்வதிலும் அரசு அதிகாரத்தின் துணையோடு பிற மதத்தவரை இரக்கமில்லாமல் கொன்று குவித்ததிலும் இந்து மதம் வேறெந்த மதத்திற்கும் சளைத்ததில்லை. இந்து சமயச்சாரிகளின் துணையோடும் பாண்டிய மன்னன் எண்ணாயிரம் சமணர்களை ஆசன வாயில் இரும்பை சொருகிக் கொன்றதை தமது பக்தி இலக்கியங்கள் பாராட்டியுள்ளதை நீங்கள் அறிவீர்கள். "பாசிப்பல் மாசுமெய்யர்", "ஊத்தவாயார்" "மந்திபோல் திரியும் அந்தகர்கள்" என்றெல்லாம் திருநாவுக்கரசர் சமணர்களைத் திட்டியுள்ளதை தேவாரத்தில் காணலாம். சமணர்களையும், சாக்கியர்களையும் "கூடுமேல் தலையை அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே" திண்டரடிப்பொடி ஆழ்வார் வேண்டினார். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல சாக்கிய பெண்களைக் கற்பழிக்க திருவுள்ளம் வேண்டுமென சம்பந்தர் பாடினார். பாடியது மட்டுமல்ல, சோழ, பாண்டிய அரசின் துணையோடு இவை எல்லாம் நிறைவேற்றப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.

d. இந்து மதம் பரப்புவதற்குறிய மதமில்லை என்ற போதிலும் பல்வேறு இன குழு மக்கள் இந்து மதத்திற்குள் கொண்டுவரப்பட்டு சாதீய படிநிலையில் இருத்தப்பட்டது பற்றி சற்றுமுன் கண்டோம். இது தவிர சாதீய கொடுமைகளுக்கு எதிராக கிறிஸ்தவத்துக்கும், இஸ்லாத்திற்கும் மதம் மாறிய பழங்குடியினரை மீண்டும் இந்துமதத்திற்குள் கொண்டுவருவதற்காக இன்று பெரிய அளவில் இந்துத்துவவாதிகள் குஜராத் முதலான இடங்களில் இயக்கம் நடத்துவதை நாம் மறந்துவிடக் கூடாது. சமீபத்தில் (1998-99) கிறிஸ்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பின்னணியாக இத்தகைய இந்து மத மாற்ற இயக்கங்கள் இருந்துள்ளதை பத்திரிக்கைகள் (Frontline outlook Jan-99 ) முதலான இதழ்கள் சுட்டிக்காட்டியுள்ளன. தவிரவும் "ஹரே கிருஷ்ணா ஹரே ராமா" முதலானையக்கங்கள் வெளிநாடுகளில் இந்துமத மாற்றங்களை மேற்கொண்டு வருவதையும் இங்குள்ள இந்துத்துவவாதிகள் அவற்றோடு நெருக்கமான உறவு வைத்திருப்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.


ஐயம் 6 : பிற்கால நாயக்க, மராட்டிய மன்னர்கள் காலத்தில் இஸ்லாமிய கோயில்களை பராமரிப்பதற்கு உரிமை இருந்திருக்கிறது. பல இஸ்லாமியர் இந்து மன்னர்களின் படைத் தலைவர்களாகக் கூட இருந்திருக்கின்றார்களே?

உண்மைதான். நாம் முன்பே குறிப்பிட்டபடி இவை எல்லாமே அரசியல் நோக்கில் செய்யப்பட்டவைதான். இஸ்லாமிய மன்னர்களின் காலத்திலும் இந்து கோயில்கள் பராமரிக்கபட்டதால்தான் இன்றளவும் பழமையான கோவில்கள் நாடெங்கும் இருக்கின்றன என்பதை மறந்து விடாதீர்கள்.

ராஜபுத்திரர் பார்ப்பணர் போன்ற இந்து மத ஆதிக்க சக்திகள் இஸ்லாமிய மன்னர்களிடம் உயர் அதிகாரிகளாக இருந்திருக்கின்றனர். அக்பரிடம் அதிகாரியாக இருந்த ராஜாமான்சிங் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். முஹம்மது பின் துக்ளக் காலத்தில் அலிஷா நாது எனும் இஸ்லாமிய குறுநிலத் தலைவன் தனக்குட்பட்ட பகுதியில் கொடுமைகள் செய்வதாகப் பரான் என்ற இந்து நிலப் பிரபு முறையிட, இந்தப் பகுதி நாதுவிடமிருந்து பறிக்கப்பட்டு பரானிடம் வழங்கப்பட்டது. இதற்காக நாது சகோதரர்கள் துக்ளக்கை எதிர்த்து கலகம் செய்தனர்.

அயோத்தியிலுள்ள அனுமான் கோயில் தொடர்பாக சுன்னி இஸ்லாமியர்களுக்கும், இந்து சாதுகளுக்குமிடையே பிரச்னை வந்தபோது டில்லி மன்னன் வாஜித் அலிஷா இந்துக்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். இது தொடர்பாக அலிஷா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையில் சுமார் முன்னூறுக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்தியும் உள்ளது.


ஐயம் 7. பழைய சங்கதிகள் கிடக்கட்டும் சமீபத்திய வரலாற்றுக்கு வருவோம். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சிதானே காரணம்?

நாடு என்றால் என்ன, நாட்டுப்பற்று என்பதெல்லாம் எவ்வாறு மக்கள் மத்தியில் கட்டமைக்கப்படுகின்றது. இந்தியா என்றொரு நாடு ஆங்கிலேயோர் வருவதற்கு முன்பு இருந்ததுண்டா? எந்த ஒரு பகுதி மக்களும் தாங்கள் பிரிந்து சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பினால் அதனை நிறைவேற்றுவது தானே நியாயம்? என்பன போன்ற கேள்விகளிலிருந்து தொடங்கி மிகவும் விரிவாகப் பேசப்பட வேண்டிய விசயம் இது. விரிவாகப் பேசுவதற்கு இங்கே அவசியம் இல்லாததால் நேரடியாக நீங்கள் கேட்டதற்கு வந்துவிடலாம்.

ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கெதிராக தொடக்கக் காலத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லாமல் இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்தே நேரடியாக போராடினர். குறிப்பாக 1857 முதல் சுதந்திரப்போரில் இஸ்லாமிய மன்னர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆங்கிலேயருக்கு எதிரான அகில இந்திய தேசிய உணர்வு என்பதை முதற்கட்ட இந்து தலைவர்கள் உருவாக்கியபோது ஆங்கிலேய ஆட்சியின் "புதிய இழிவு" களுக்கெதிராக இந்தியப் பழமையை அவர்கள் உயர்த்திப் பிடித்தனர். இந்தியப் பழமை என்பதை இந்து பழமையாகவே முன்வைத்த இவர்கள் இந்த அடிப்படையில் ஆரிய சமாஜம், வர்ணாசிரம சபை, இந்து மகாசபை போன்ற புத்துயிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கினர். இன்றைய 'இந்துத்துவம்' 'இந்து ராஷ்டிரம்' ஆகிய கருத்தாக்கங்கள் முதன் முதலில் முன்வைக்கப்பட்டது இந்து மகாசபையில்தான் என்பது இன்று அவர்களே ஏற்றுக்கொள்ளும் உண்மை. சவர்க்கார், பாய் பரமானந்தர் போன்றவர்களால் தலைமை தாங்கப்பட்டு இயங்கிய இவ்வமைப்பு இந்துக்கள் மத்தியில் முக்கியமான கருத்தியல் சக்தியாக விளங்கியது. குறிப்பாகக் காந்தியின் வருகைக்கு முன்பு இதன் பங்கு குறிப்பிடத்தக்கது.

அங்குள்ள இந்துக்கள் இங்கே வந்துவிடவேண்டும். இங்குள்ள இஸ்லாமியர்கள் அங்கே போய்விட வேண்டும் என்றார். தனக்கு 1905-ஆம் ஆண்டு வாக்கிலேயே இக்கருத்து தோன்றியது எனவும் அவர் கூறினார். பின்னர் 1937- ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற இந்து மகாசபை மாநாட்டில் அப்போது தலைவராக இருந்த சவர்க்கார் இந்தியாவை நாம் ஒற்றை தேசமாக நாம் கருத முடியாது. முக்கியமாக இரண்டு தேசங்கள் இந்தியாவிற்குள் உள்ளன. ஒன்று இந்துக்களின் தேசம்; மற்றது இஸ்லாமியர்களின் தேசம்; என்றார்.

 

இங்கொன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். இஸ்லாமியருக்கு தனிநாடு வேண்டுமென்ற கோரிக்கை முஸ்லிம் லீக்கால் முதன் முதலில் எப்போது வைக்கப்பட்டது தெரியுமா? 1940- ஆம் ஆண்டு லாகூர் மாநாட்டில்தான். அதற்கு முன்பே இந்துமகாசபை இந்த கோரிக்கையை முன்வைத்து விட்டது என்பதுதான் உண்மை.

ஐயம் 8. தாங்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாட்டைப் பிரிக்கவேண்டும் என்று இந்துக்கள் சொன்னார்களா? நம்பமுடியவில்லையே! அவர்களுக்கு இதில் என்ன லாபம்?

இந்துக்கள் சொன்னார்கள் என்று நான் சொல்லவில்லை. இந்து மகாசபைத் தலைவர்கள் சொன்னார்கள். சாதாரண மனிதனுக்கு தான் ஒரு இந்து என்ற உணர்வே கிடையாது, அவனுக்கு ஏதாவது உணர்வு இருக்கிறதென்றால் சாதி உணர்வு வேண்டுமென்றால் இருக்கலாம். உயர் சாதி இந்து ஆதிக்க சக்திகள் வெள்ளையரிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பறித்துத் தாங்கள் வைத்துக்கொள்ள விரும்பியபோது சாதிகளாய் பிளவுகொண்டிருந்த மக்களை 'இந்துக்கள் ' என்ற பெயரில் ஒன்றிணைக்க வேண்டியிருந்தது . எனவே 'இஸ்லாமியர்' என்றொரு எதிரியைக் காட்டி தங்களிடமிருந்து அந்நியமாகியிருந்த தாழ்ந்த சாதி மக்களை தங்களோடு இணைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உயர்சாதியினருக்கு இருந்தது.

இன்னொன்றையும் நீங்கள் வரலாற்றுரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலேயரின் வருகையோடு தேர்தல் அரசியலும், மக்கள் தொகை கணக்கீடும்(1911) இங்கே நுழைந்தது. இந்தக் கணக்கீட்டில் இஸ்லாமியர், கிறித்தவர், சாதி இந்துக்கள், தாழ்த்தப்பட்டவர் என தனித்தனியாகவே விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இச்சூழலில் பாகிஸ்தானும் இந்தியாவோடு இணைந்திருந்தால் இஸ்லாமியர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இந்துக்களின் எண்ணிக்கையை விட அதிகமாய்ப் போய் தேர்தல் அரசியலில் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயத்தை இந்துத் தலைவர்கள் உணர்ந்தார்கள். இந்நிலையை எதிர்கொள்ள அவர்கள் இரண்டு வழிகளை மேற்கொண்டனர்.

ஒன்று: தாழ்த்தப்பட்டவர்களையும் இந்துக்களாக கருதவேண்டும் என்ற கருத்தைப் பரப்புவது, 1934 பிப்ரவரியில் அலகாபாத்தில் கூட்டப்பட்ட இந்து மகாசபையின் சிறப்புக் கூட்டமொன்றில் இக்கருத்து விவாதிக்கப்பட்டது. ஆரிய சமாஜிகளும் இதர சனாதனிகளும், தாழ்த்தப்பட்டவர்களையும் இந்துக்களாக கருதவேண்டும் என்ற கருத்தை எதிர்த்தனர். எனினும் அரசியல் லாபம் கருதி தலைவர்கள் இக்கருத்தை வற்புறுத்தினர். இறுதியாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு பொதுக்கிணற்றில் நீர் இறைக்கும் உரிமை போன்றவற்றை மறுக்கக்கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய இந்துமகாசபை "இருந்தாலும் அவர்கள் யக்ஞோபவீதம் (பூணூல்) அணியக்கூடாது " என அறிவித்தது.

 

இரண்டு: இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளைப் பிரித்து தனிநாடாக்கிவிட்டால் எஞ்சிய பகுதியில் 'இந்து ராஜ்யம்' அமைத்து அதில் தாங்கள் ஆட்சி செலுத்த முடியும் என உயர்சாதி இந்துக்கள் நினைத்தனர்.

உண்மை இப்படியிருக்க நாட்டுப் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் மட்டுமே காரணம் என்று எனச் சொல்வது அபத்தம்.

தொடரும்...

Comments   

IQBAL BIN MASTHAN
0 #1 IQBAL BIN MASTHAN -0001-11-30 05:21
Asslamu alaikum:
Greetings!
Please continue this article and we have place it email groups all our tamizh muslims.
Kind regards
Quote | Report to administrator
j.mohammed ali salem manakkadu
0 #2 j.mohammed ali salem manakkadu -0001-11-30 05:21
sathiyam nilaiyagum asatthiyam alinthu pogum etthuthan eraiwanin niyathe
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்