முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

நூல்கள்

அறிமுகம்:

இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள் அனைத்தும் அரபி நூற்களில் இருந்தது. குர்ஆனும் அரபி மொழியில் இருந்தது. எனவே, அரபி மொழி என்பது இறைவனின் மொழி, அதை மொழியாக்கம் செய்வது மாபெரும் குற்றம் என்ற எண்ணம் மக்களிடையே வேரூன்றி இருந்தது. அப்படியே மொழியாக்கம் செய்தாலும் மொழியாக்கம் செய்யப்படும் மொழியில் தந்து விடக் கூடாது. மொழியாக்கம் செய்யப்படும் மொழியையும் அரபிலேயே எழுதப்பட வேண்டும் என்பதும் எழுதப்படாத சட்டமாக தமிழர்களிடைய இருந்தது என்று கூறலாம்.

இதனால் அரபு தெரிந்த அறிஞர்கள் கூட மொழியாக்கம் செய்வதற்கு பதில் அரபி கிதாபுகளையே எழுதினர். சுப்ஹான மவ்லிது, முஹ்யிதீன் மவ்லிது போன்றவை தான் இச்சமுதாயத்திற்கு கிடைத்தது.

தற்போது சூழ்நிலை அடியோடு மாறிவிட்டது. நிறைய மொழியாக்க நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குர்ஆனின் தமிழாக்கம் கணக்கின்றி ஆயிரக்கணக்கில் விற்பனையாகிறது. ஹதீஸ்கள் தமிழாக்கம் வந்து கொண்டிருக்கிறது.

இச்சமயத்தில் இஸ்லாத்தில் நுழைந்து விட்ட கதைகளையும் அடையாளம் காட்டிவிடலாம் மிகப்பயனாக அமையும். இந்நோக்கில்தான் இந்நூல் தரப்பட்டுள்ளது.

ஜும்ஆ மேடைகளில் சில மவ்லவிகள் "துர்ரத்தன் னாஸிஹின்" என்ற நூலில் இருந்து குறிப்பு எடுத்துத்தான் உரை நிகழ்த்துகின்றனர். இந்நூல் 9ஆம் நூற்றாண்டைச் சார்ந்த உதுமான் இப்னு ஹஸன் இப்னு அஹ்மத் அஷ்ஷாகிர் அல் கவ்பரீ என்பவரால் எழுதப்பட்டதாகும். லெபனான் பெய்ரூத்தில் உள்ள 'தாருல் கிதாபில் அரபி' எனும் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ள பிரதியையே நாம் மேற்கொள்ள காட்டி பக்கம் குறிப்பிட்டுள்ளோம்.

இந்நூல் நாம் மொழி பெயர்க்கவில்லை. அதனால் பயன் ஏதுமில்லை, இந்நூலில் பல தவறுகள் நிறைந்துள்ளன. 90% பொய்க்குப் பஞ்சமில்லை எனலாம். ஆனால் நாம் இந்நூலில் கதைகளாக கூறப்பட்டுள்ளவற்றையே அடையாளம் காட்டுகிறோம்.

'ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்று கூறப்படுவது போல் நாம் அடையாளம் காட்டும் கதைகளின் தரத்தை வைத்தே இந்நூல் எவ்வளவு மோசமானது என்பது புரியும்.

இந்நூல் மோசமானது என்பதை அடையாளம் காட்ட இதை எழுதவில்லை. இது போன்ற கதைகள் இனி இஸ்லாத்தின் பெயரால் கூறப்படக்கூடாது; மேடைகளில் பிரசங்கிகள் கூறக்கூடாது; அப்படியே கூறப்பட்டால் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதற்கே இது அடையாளம் காட்டப்படுகிறது.

இறைவன் அருள் புரிவானாக.

இவண்,

K.M. முஹம்மது முகைதீன்

நல்லூர் - மதுரை 22

 

கட்டுக்கதை-1: ரமழானில் தொழுதால் போதும்?!

முஹம்மது என்ற பெயருடைய ஒருவர் அறவே தொழவேமாட்டார். ரமழான் மாதம் வந்து விட்டால் அழகிய ஆடை உடுத்தி, நறுமணம் பூசிக் கொள்வார்.தொழுவார். இதுவரை விட்ட தொழுகையையும் நிறை வேற்றுவார். ஏன், இவ்வாறு செய்கிறீர்? என்று அவரிடம் கேட்டப்பட்டது. 'இது பாவமன்னிப்பும், அருளும், பரக்கத்தும் நிறைந்த மாதமாகும். இச்சிறப்பை என்னை விட்டும் அல்லாஹ் போக்கி விடவும் கூடும்' என்று அவர் கூறினார். அவர் இறந்த பிறகு கனவில் காணப்பட்ட அவரிடம் உன்னை இறைவன் என்ன செய்தான்? என்று கேட்டப்பட்டதற்கு; ரமழானை கண்ணியப்படுத்தியதற்காக இறைவன் என்னை மன்னித்து விட்டான் என்று கூறினார். (துர்ரத்துன்னாஸீஹீன் - பக்கம், 8)

இச்சம்பவத்தின் மூலம் ரமளான் சிறப்பிற்குரியது. அருளுடையது. பரக்கத் நிறைந்தது. எனவே இச்சிறப்பை தவறவிடக்கூடாது என்று கூறப்படுகிறது.ரமழான் சிறப்பிற்குரிய மாதம், அருளுடைய மாதம் என்பதில் எந்த முஸ்லிமுக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. அந்த மாதத்தின் சிறப்பைக் கூறிட எத்தனையோ பல நபிமொழிகளும், திருக்குர்ஆனின் வசனங்களும் உள்ளன. அவைகளை விடுத்து இதை கூறுவதினால் ரமழானின் சிறப்பை இது கூறுவது போன்று தெரிந்தாலும் உண்மையில் இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையே தகர்த்தெறித்து விடுகிறது.

ஒருவன் வருடம் முழுவதும் தொழாது இருக்கலாம்;. ரமழானில் தொழுவிட்டால் போதும். இதுவரை விட்டத் தொழுகைகளை ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் தொழுது கொண்டால் போதும்என்பதை இச்சம்பவம் மூலம் புரிய முடிகிறது. எவ்வளவு பெரிய அபத்தம்? ஏற்க முடிகிறதா? இஸ்லாத்தின் அடிப்படையை தகர்த்தெரிகிறதா இல்லை?

தொழுவது மூமின்களின் மீதுள்ள கடமையாகும். அதிலும் குறிப்பாக ஐந்து நேரமும் ஒரு மூமின் தொழுதாக வேண்டும். தொழுகை முனாபிக்குகளுக்குத்தான் கஷ்டமாக இருக்கும். தொழாது இருக்கவே கூடாது. இவ்வாறு பின்வரும் குர்ஆனின் வசனங்களும் ஹதீஸ்களும் தெளிவாக அறிவிக்கின்றன.

இன்னும் தொழுகைகையை முறையாகக் கடை பிடித்ததும், ஸகாத் கொடுத்து வாருங்கள்.(அல்குர்ஆன் 2:110)

தொழுகைகளை, குறிப்பாக நடுத்தொழுகையைப் பேணிக் கொள்ளுங்கள். (தொழுகையின் போது) அல்லாஹ்வின் முன்பு உள்ளச்சத்துடன் நில்லுங்கள்.(அல்குர்ஆன் 2:238)

பகலில் இரு முனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துவீராக!(அல்குர்ஆன் 11:114)

நபியே! உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும் உறுதியும் கொண்டிருப்பீராக!

நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது மூமின்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது.(அல்குர்ஆன் 4:103)

இஸ்லாம் ஐந்து (தூண்கள்) மீது கட்டப்பட்டுள்ளது.

1. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் எவருமில்லை என்றும், முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுதல்.

2. தொழுகையை நிலைநிறுத்துதல்.

3. ஜகாத் கொடுத்தல்.

4. ரமழானில் நோன்பு வைத்தல்

5. கஃபாவை ஹஜ் செய்தல் என்று நபி (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.(புகாரி, முஸ்லிம்)

ஐந்து நேரத்தொழுகைகளை அல்லாஹ், அடியார்கள் மீது கடமையாக்கியுள்ளான். அவற்றை ஒருவர் நிறைவேற்றி, அவற்றை லேசாகக் கருதாமல் அவற்றை வீணாக்காது செய்தால் அவனை சொர்க்கத்தில் நுழையச் செய்யும் பொறுப்பு அல்லாஹ்விடம் உண்டு. அவற்றை செய்யவில்லையானால் அல்லாஹ்விடம் அவருக்கு எந்த பொறுப்பும் இல்லை. அவன் நாடினால் அவரை தண்டிப்பான். அவன் நாடினால் அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன் என உபாதா இப்னுஸ்ஸாமித் (ரலி) அறிவிக்கின்றார்கள்.(முஅத்தா, அபூதாவூத், நஸயீ, இப்னுஹிப்பான்)

'உங்களின் செயல்களில் மிக சிறந்தது, தொழுகை தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) கூறினார்கள் என ஸலவா இப்னுல் அக்வஉ (ரலி) அறிவிக்கின்றார்கள். (தப்ரானீ - அவ்ஸத்)

ஒரு மனிதருக்கும் இறைமறுப்புக் கொள்கைக்கும் இடையேயுள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதுதான் என்று நபி (ஸல்) கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லா (ரலி) அறிவிக்கின்றார்கள்.(அஹ்மத், முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, திர்மிதி)

இவ்வசனங்களும், ஹதீஸ்களும் தொழுகை கடமை என்று அறிவிக்கின்றது. ஆனால் துர்ரத்துன்னா ஸிஹுன் நூலில் கூறப்பட்டுள்ள சம்பவமோ ரமழானின் சிறப்பை கூறுகிறோம் என்ற பெயரில் தொழாது இருக்கலாம், ரமழானில் தொழுது விட்டால் போதும் என்று கூறுகிறதே! குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் மாற்றமான வாழ்க்கையை வாழ்ந்த ஒருவரின், சரித்திரத்தைக் கூறலாமா? இதை கேட்பவர்கள், ரமழானில் மட்டும் தொழுது வழிபட்டால் போதும், இறைவனின் அருளும், பரக்கத்தும் கிடைத்து விடும் என்று எண்ணி விட மாட்டார்களா? இவர் போன்று நாமும் வாழலாம் என்று கூறிவிட்டால் இச்சம்பவத்தின் மூலம் குர்ஆன் - ஹதீஸுக்கு மாற்றமான வாழ்க்கையை வாழலாம் என்று போதித்த குற்றம் இந்த சம்பவத்தை கூறியவர் மீது ஏற்படத்தானே செய்யும். யோசித்துப் பாருங்கள்! இச்சம்பவம் மிகப்பெரிய தவறு என்று விளங்கும்.

இதுமட்டுமல்ல! தொழுகை என்பது ஐந்து நேரமும் கடமை என்பதோடு, உரிய நேரத்தில் தொழவும் வேண்டும் என்று கட்டளை இடுகிறது இஸ்லாம். தொழுகிறவர் உரிய நேரத்தில் தொழாது விட்டுவிட்டால் அத்தொழுகையை மீண்டும் தொழ முடியாது. மறந்து இருந்துவிட்டாலோ, தூங்கி விட்டாலோ தான் மீண்டும் நினைவு வந்ததும், எழுந்ததும் தொழலாம். இதைவிடுத்து வேண்டுமென்றே தொழுகையை விட்டால் குற்றஙம் தான் மிஞ்சும். போரில் இருந்தாலும் தொழுதாக வேண்டும். தொழுகையை விட்டுவிட எவருக்கும் அனுமதியில்லை.

அகழ்போரின் போது லுஹர், அஸர் ஆகிய தொழுகைகள் போரில் ஈடுபட்டதனால் தவறிவிட்டது. சூரியன் மறைந்த பிறகு பிலாலை அழைத்து லுஹருக்கு இகாமத் சொல்லச் செய்து லுஹர் தொழுகையை நிறுத்தி நிதானமாக அதற்குரிய நேரத்தில் தொழுவது போல் தொழ வைத்தார்கள். பின்பு அஸர் தொழுகைக்கு இகாமத் கூறச் செய்து அஸரையும் அழகிய முறையில் அதற்குரிய நேரத்தில் தொழுவது போலவே தொழ வைத்தார்கள். பின்பு மஃரிபு தொழுகையையும் இதே போன்று தொழ வைத்தார்கள்.

'நீங்கள் பயந்தால் நடந்து கொண்டோ, வாகனத்தில் இருந்து கொண்டோ தொழுது கொள்ளுங்கள் என்று (குர்ஆனின் 2:239) வசனம் இறங்குவதற்கு முன் நடந்தது என அபூஸயீத் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(அஹ்மத், நஸயீ, அம்முஅத்தா)

சூரியன் மறைந்தப்பிறகு லுஹர், அஸர், மஃரிபை நபி (ஸல்) அவர்கள் தொழ வைத்தாலும், 2:239 வசனம் மூலம் இனி இவ்வாறு தொழக்கூடாது. தொழுகையை அதற்குரிய நேரத்தில் அது போரின் சமயமாக இருப்பினும் தொழுதுவிட வேண்டும் என அல்லாஹ் அறிவித்து விடுகிறான்.

ஆனால் இச்சம்பவமோ தொழாது இருக்கலாம், அப்படியே இருந்தாலும் ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக சேர்த்துத் தொழுது விடலாம் என்று கூறுகிறது. இச்சம்பவத்தைக் கேட்கும் ஒருவர் காலையில் இருந்து மாலை வரை தொழாமலிருந்து விட்டு இரவு படுக்கும்முன் விட்டுவிட்ட பஜ்ர், லுஹர், அஸர், மஃரிபு ஆகியவற்றை இஷாவுடன் சேர்த்து தொழலாம் என்று எண்ணிச் செய்தால் தொழுகையை உரிய நேரத்தில் தொழவேண்டும் என்ற இறைக்கட்டளை என்னவாகும்?

'அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான செயல் எது? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். 'தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது' என்று நபி (ஸல்) கூறினார்கள்' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவித்து புகாரீ, முஸ்லிம், திர்மிதி, நஸயீ ஆகிய நூல்களில் பதிவாகியுள்ள ஹதீஸின் கருத்துப்படி 'உரிய நேரத்தில் தொழுவதே இறைவனுக்கு விருப்பமானது. விட்டு விட்டால் வெறுப்பான செயல் அது' என்று புரிய முடிகிறதே! காலமெல்லாம் விட்டு விட்டு, ரமழானில் செய்தால் நன்மை கிட்டி விடும் என்பது சரியாகுமா?

'ஒருவர் ஐந்து நேரத் தொழுகைகளில் அவற்றின் ருகூஉ, ஸஜ்தாக்கள், அதற்குரிய நேரத்தை பேணி இது இறைவன் இட்டகட்டளை என்பதை அறிந்து கொண்டால் அவர் சொர்க்கத்தில் நுழைவார் என்று நபி (ஸல்) கூறியதாக ஹன்ழளா (ரலி) அறிவித்து அஹ்மதில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸுக்கு இச்சம்பவம் முரண்படத்தானே செய்கிறது. சொர்க்கத்தில் நுழையச் செய்யும் செயலுக்கு மாற்றமானது தான் இச்சம்பவம் என்பது புரிகிறதே!

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் மாதவிடாய் காலத்தில் தொழக்கூடாது நோன்பு வைக்கக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. இவ்வாறு விடுபட்ட தொழுகைகளை நோன்புகளை மாதவிடாய் முடிந்ததும் செய்ய வேண்டுமா? என்று கூறும் போது, நோன்பை மீண்டும் செய்ய வேண்டும், தொழத் தேவையில்லை என்று கூறுகிறது.

நாங்கள் மாதவிடாய் காலத்தில் விட்டு விடும் தொழுகைகளை திரும்பவும் தொழ வேண்டாம் என்றும், அந்தக் காலத்தில் விடுபட்ட நோன்புகளைத் திரும்பவும் நோற்க வேண்டுமென்றும் கட்டளையிடப்பட்டிருந்தோம் என்று முஆதா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ)

நோன்பு என்பது வருடத்தில் ஒரு மாதம் மட்டும் செய்வதால், தினமும் அது கடமை இல்லை என்பதால் விட்டுவிட்ட நோன்பைச் செய்ய வேண்டும் என்று கூறும் இஸ்லாம், அதேசமயம் தொழுகையை விட்டு விட்டால் அதை உரிய நேரத்தில் தொழத் தவறியதால் மீண்டும் செய்யத் தேவையில்லை என்கிறது. உரிய நேரத்தினை விட்டு விட்டு நேரந்தவறி தொழக்கூடாது என்று கூறுவதற்கு மாற்றமாக இச்சம்பவம் தொழலாம் என்கிறது. நபி (ஸல்) அவர்களின் ஆணைக்கு மாற்றமான செயலை செய்த ஒருவரின் செயலை நியாயம் கற்பிக்கும் வகையில் மேடைகளில் முழங்குவதும், நூல்களில் எழுதுவதும் சரிதானா?

'உங்களில் எவரேனும் தொழுகையை விட்டும் உறங்கி விட்டால் அல்லது மறந்து விட்டால் நினைவு வந்ததும் தொழ வேண்டும்' என்று நபி (ஸல்) கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(முஸ்லிம்)

தொழுகையின் நேரத்தில் உறங்கிவிட்டால் நேரம் கழித்து எழுந்தாலும் உடனே தொழுது விடவேண்டும். தொழுகையின் நேரம் என்பதை மறந்து நேரம் கழித்ததும் நினைவுக்கு வந்தால் தொழுகையை உடனே நிறைவேற்ற வேண்டும்.

தூக்கம், மறதி என்ற இரு காரணங்களால் மட்டுமே உரிய நேரத்தில் தொழுகை விட்டாலும் நேரம் கழிந்த பிறகும் தொழலாம் என்று கூறுகிறது. வேண்டுமென்றே விட்டு விட்டு பிறகு தொழலாம் என்றிருப்பது கூடாது என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கிறது.

வேண்டுமென்றே 11 மாதங்களாக தொழாமல் இருந்தவர், ரமழானில் மட்டும் தொழுகிறார். இறைவனின் அன்பையும், அருளையும் அடைந்து கொள்கிறார் என்று கூறுவது மூலம் நீங்களும் இதுபோல் நடந்து கொள்ளலாம் என்று கூறுவதாகத்தானே அர்த்தம். இதனால் தானோ என்னவோ, ரமழானில் நிறைந்து விடும் பள்ளிகள், ரமழான் முடிந்தப்பிறகு வெறிச்சோடிப்போய் விடுகிறது போலும்!

ரமழானின் சிறப்பைக்கூற எண்ணற்ற பலஹதீஸ்கள் உள்ளன. இதைவிடுத்து மார்க்கத்திற்கு முரணான செயலைத் செய்த ஒருவரின் செயலை கூறுவது பயனற்றதே இதைக் கூறியவர், 'எழுதியவர், சரிகாண்பவர் அனைவரும் இறைவனின் கோபத்திற்கு ஆளாவர் என்பதில் சந்தேகமே இல்லை.

இது போன்ற கதைகள் கூறுவது மூலம் ஒரு சிறப்பை கூற நினைத்து, இதர சட்டங்களை பாழ்படுத்துகிறோம் என்பதை கவனத்தில் கொண்டு கதைகளை கூறுவதை விட்டும் தவிர்போமாக!

கட்டுக்கதை-2: பெண் அவுலியா திருமணம்?

ஹஸன்பஸரீ, மாலிக் இப்னு தீனார், தாபிதல் புனானீ ஆகியோர் ராபிஅத்துல் அதவிய்யா என்ற பெண்மணியிடம் வந்தனர். 'ராபிஆவே! எங்களில் ஒருவரை உனக்கு (கணவராகத்) தேர்ந்தெடுத்துக் கொள். திருமணம், நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தாகும் என்று ஹஸன் பஸரீ கூறினார். 'எனக்கு சில சந்தேகங்கள் உண்டு. அதற்கு பதில் அளிப்பவரை நான் திருமணம் செய்து கொள்கிறேன்' என ராபிஆ கூறினார். 'இவர்கள் சொர்க்கவாசிகள், இவர்கள் நரகவாதிகள் என மறுமையில் (மலக்கு) ஒருவர் கூறும்போது நான் எந்த கூட்டத்தில் இருப்பேன்?' என முதல் கேள்வியை ஹஸனிடம் அப்பெண் கேட்டார். நான் அறிய மாட்டேன் என அவர் கூறினார்.

என்னை என் தாயின் கர்ப்ப அறையில் மலக்கு உயிர் கொடுத்தபோது நான் நல்லவளாக இருந்தேனா? கெட்டவளாக இருந்தேனா? என்று ராபிஆ கேட்டார். நான் அறிய மாட்டேன் என ஹஸன் கூறினார்.

நீங்கள் அஞ்சாதீர்கள், கவலைப்படாதீர்கள் என ஒருவருக்கும், உங்களுக்கு சுபச்செய்தி இல்லை என இன்னொருவருக்கும் கூறப்பட்டால் நான் அவர்களில் எவருடன் இருப்பேன்? என அப்பெண் கேட்க, நான் அறிய மாட்டேன் என்று கூறினார்.

சொர்க்கத் தோட்டத்தில் ஒன்றாகவோ, அல்லது நரகக் குழிகளில் ஒன்றாகவோ தான் 'கப்ர்' (புதைகுழி) இருக்கும், எனது கப்ரு எப்படி இருக்கும்? என்று ராபிஆ கேட்க, அவர் 'கப்ர்' அவர் 'நான் அறிய மாட்டேன்' என்றார்.

சில முகங்கள் பிரகாசித்தும், சில முகங்கள் கறுத்தும் இருக்கும் அந்த நாளில் என் முகம் எப்படி இருக்கும் என்று அப்பெண்கேட்க, நான் அறியமாட்டேன் என ஹஸன் கூறினார்.

'இன்னாரின் மகன் இன்னார் நல்லவர், இன்னாரின் மகன் இன்னார் கெட்டவர்' என்று (மலக்கு) ஒருவர் மறுமையில் கூறும்போது நான் எவராக இருப்பேன்? என்று ராபிஆ கேட்க, நான் அறியமாட்டேன் என ஹஸன் கூறனார். பிறகு மூவரும் அழுதுகொண்டே. ராபிஆத்துல் அதவிய்யாவை விட்டும் சென்றனர்.(துர்ரத்துன் நாஸிஹீன் பக்கம் 22)

ராபிஅத்துல் அதவிய்யாவின் கணவர் இறந்துவிட்டதும் அவரிடம், ஹஸன் அவர்களும், அவரது நண்பர்களும் வந்து, (வீட்டிற்குள்) வர அனுமதி கேட்டனர். உள்ளே வர அனுமதியளித்த ராபிஆ, தனக்கும் அவர்களுக்குமிடையே திரை ஒன்றை ஏற்படுத்திக் கொண்டார்.

ஹஸனும், நண்பர்களும்: உனது கணவர் இறந்துவிட்டார் உனக்கு ஒரு கணவர் அவசியம்.

ராபிஆ : ஆம்! எனினும் உங்களில் பெரிய அறிஞர் யார்? அவரைத் திருமணம் செய்து கொள்கிறேன்.

ஹஸனின் நண்பர்கள் : ஹஸன் பஸர் தான்.

ராபிஆ : என்னிடம் நான்கு கேள்விகள் உண்டு. அவற்றிற்கு நீங்கள் பதில் தந்து விட்டால் நான் உங்களுக்குச் சொந்தம்.

ஹஸன் : கேள்! அல்லாஹ் எனக்கு உதவி புரிந்தால் நான் உமக்கு பதில் கூறுவேன்.

ராபீஆ : நான் இறந்தப்பிறகு, பூமியில் இருந்து வெளிப்படுத்தும் போது நான் ஈமானுடன் வெளியேறுவேனா? இல்லையா? கூறுங்கள்.

ஹஸன் : இது மறைவான விஷயம். மறைவான விஷயத்தை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறியமாட்டார்.

ராபீஆ : கப்ரில் நான் வைக்கப்பட்டு, என்னிடம் முன்கர், நகீர் கேள்வி கேட்டால் அவ்விருவருக்கும் நான் பதில் கூறுவேனா? இல்லையா? கூறுங்கள்.

ஹஸன் : இதுவும் மறைவான விஷயம். மறைவானவற்றை அல்லாஹ்வே அறிவான்.

ராபீஆ : மறுமையில் மக்கள் எழுதப்பட்டு, பட்டோலைகளை வழங்கப்படும்போது, எனது பட்டோலை எனது வலது கையில் கொடுக்கப்படுவேனா? அல்லது இடது கையில் கொடுக்கப்படுவேனா? நீங்கள் கூறுவது என்ன?

ஹஸன் : இதுவும் மறைவான விஷயமே!

ராபீஆ : சொர்க்கத்திற்கு ஒரு கூட்டம், நரகத்திற்கு ஒரு கூட்டம் என மக்களை அறிவிக்கும்போது நான் இந்த கூட்டத்தில் எவருடன் இருப்பேன்?

ஹஸன் : இதுவும் மறைவான விஷயமே!

ராபீஆ : இந்த நான்கு கேள்விகளுக்கு பதில் கூற முடியாத ஒருவருக்கு திருமணத்தில் எப்படி விருப்பம் இருக்க முடியும்?

ராபீஆ :ஹஸனே! அறிவைஎத்தனை பங்காக அல்லாஹ் படைத்துள்ளான்.

ஹஸன் : 10 பங்காக! 9 ஆண்களுக்கும், 1 பெண்களுக்குமாகும்.

ராபீஆ : ஹஸன் அவர்களே! அல்லாஹ் இச்சையை எத்தனைப் பங்குகளாக படைத்துள்ளான்?

ஹஸன் : 10 பங்குகளாக! 9 பெண்களுக்கும், 1 ஆண்களுக்குமாகும்.

ராபீஆ : ஹஸன் அவர்களே! ஒரு பங்கு அறிவை வைத்து 9 பங்கு இச்சையை நான் கட்டுப்படுத்தி விடுகிறேன். ஆனால் 9 பங்கு அறிவை வைத்து ஒருபங்கு இச்சையை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லையே!

ராபீஆவின் பேச்சைக் கேட்ட ஹஸன் அழுது கொண்டே ராபீஆவை விட்டு வெளியேறினார்.

இந்த இரண்டு செய்திகளும் ஏறக்குறைய ஒரே நிகழ்ச்சியை அறிவிக்கின்றன. இந்நிகழ்ச்சி அடிக்கடி மேடைதோறும் மவ்லவிகளால் முழங்கப்பட்டு 'இதோ இவர் போன்றல்லவா உலக பற்றற்றவாழ்க்கை இருக்க வேண்டும்?' என்று விளக்கம் தரப்படும். (விளக்கமளிக்கும் மவ்லவியோ உலகப் பற்றற்ற வாழ்க்கையை போதிக்க விலை பேசிய பிறகே மேடை ஏறி தன் உலகப்பற்றை காட்டிக் கொள்கிறார் என்பது தனி விஷயம்.)

ஒரே சம்பவத்தைப் போதிக்கும் இந்த இரண்டு செய்திகளையும் மீண்டும் படியுங்கள்! முதல் செய்தியில் ஹஸனிடம் ராபீஆ ஆறு கேள்விகளை கேட்பதாக உள்ளது. இரண்டாம் செய்தியிலோ, நான்கு சந்தேகம் உள்ளதாக கூறிக் கேட்கிறார் என்றுள்ளது. இரண்டு செய்திகளிலும் உள்ள கேள்விகள் கூட ஒன்றையொன்று ஒத்ததாக இல்லை. இப்படிமுரண்பட்டு இருப்பதில் இருந்தே இச்செய்தி இட்டுக்கட்டப்பட்ட கதை என்பதை தெளிவாக்குகிறது.

இச்சம்பவத்தை குறிப்பிடும் துர்ரத்துன்னாஸிஹீன் நூலாசிரியர் எந்த அறிவிப்பாளர் வரிசையுமின்றியே பதிவு செய்துள்ளார் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். வேறுநூற்களில் இருக்கலாமே என்ற கேள்வியை இவர்கள் எழுப்பலாம். இச்சம்பவத்தின் மூலம் இஸ்லாத்தின் ஆன்மீகத்தைப் போதிக்கிறோம் என்றப் பெயரில் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையையே இவர்கள் தகர்த்தெரிந்து விடுகின்றனர் என்பதை ஏனோ மறந்து விடுகின்றனர்.

ராபீஆ அதவிய்யா திருமணமே செய்யாதிருந்தவர் அல்லது திருமணமே செய்திடத் தகுதியற்றவர் என்று இருந்திருந்தது, ஹஸன் கேட்டபோது மறுத்திருந்தால் சரியானது என்று எண்ணி விடலாம்: இவரோ ஏற்கனவே திருமணம் செய்திருந்தவர். கணவர் இறந்து கைம் பெண்ணாக இருந்ததால் தான் - அதுவும் திருமணம் செய்யத் தகுந்த வயதுடைய பெண்ணாக இருந்தால் தான் - ஹஸன் தன் நண்பர்களோடு வந்து பெண் கேட்டுள்ளார்.

'எனக்கு முதல் கணவரோடு வாழ்ந்த வாழ்க்கையை போதும்: இனி எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. திருமணம் செய்தால் முதல் கணவர் பற்றிய எண்ணமே மிகைக்கும்' என்று கூறி இவர் மறுத்திருந்தால் சராசரிப் பெண்ணோடு மனநிலை என்று கூறி இருந்து விடலாம்.

'ஆண்கள் என்றாலே எனக்கு பிடிக்கவில்லை. என் கணவர் தந்த அடியும், உதையும் என்னை இந்த எண்ணத்திற்கே கொண்டு வந்து விட்டு விட்டது. எனவே திருமணமே நான் செய்யப் போவதில்லை' என்று கூறி இவர் மறுத்திருந்தால் கூட கணவரின் நடவடிக்கையால் இவர் மனபாதிப்புக்குள்ளாகி இருக்கலாம் என எண்ணிட வாய்ப்புண்டு.

ஆனால்,

ராபீஆவோ தனக்கு திருமணம் செய்ய எண்ணமுள்ளதை கூறிக்கொண்டே, அறிஞரைத் திருமணம் செய்யத்தயார் என்று அறிவித்துக் கொண்டே சில சந்தேகங்களை கூறி அதை நீக்கினால் செய்யத்தயார் என்று ஒரு நிபந்தனையும் போட்டது தான் ராபீஆவின் அறியாமையை அல்லது இக்கதையை கூறியவரின் அறியாமையை பளிச்சிடுகிறது.

ராபீஆ முதலில் திருமணம் செய்திருந்த முதல் கணவர் ராபீஆவின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தப் பிறகுதான் திருமணம் நடந்ததா? ராபீஆவின் சந்தேகங்களுக்கு இறைவன் புறத்திலிருந்து வஹீ வந்ததாலொழிய பதிலளிக்க இயலாது. ஒருவனின் வெளிச்செயல்களை வைத்து நல்லவன், சொர்க்கத்தில் நுழைபவன், இவனது கப்ரு சுவனத்து பூங்காவாகவே இருக்கும் என்றெல்லாம் கூறினாலும், அவனது இறுதி முடிவு இறைவனின் கையிலேயே உள்ளது.

கப்ரிலும், மறுமையிலும் நற்பேற்றை அடைய ஒருவன் முயற்சிக்க வேண்டுமே தவிர, அதை இம்மையிலேயே தெரிந்து கொள்ள அவன் அலட்டிட வேண்டியதில்லை. நபித்தோழர்களில் பலர் இம்மையில் சுவர்ச்சிவாசிகள் என்று நபி (ஸல்) அவர்களால் தான் அறிவுறுத்தப்பட்டார்களே தவிர அவர்களே அறிந்து கொள்ளவில்லை. நபி (ஸல்) அவர்களுக்கும் கூட இறைவனே அதை அறிவித்துத் தந்தான்? இவ்வாறு இருக்க பதிலளிக்கவே முடியாத கேள்விகளையே ராபிஆ ஹஸனிடம் கேட்டுள்ளார்.

'இது மறைவான விஷயம் என்று ஹஸன் கூறியது முற்றிலும் சரியே! மறைவான ஒன்றை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறியமாட்டார்கள். அல்லாஹ்வால் அறிவித்துத் தரப்பட்டாலொழிய எவரும் நிச்சயமாக அறியமுடியாது.

(நபியே!) நீர் கூறும் அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கு யாதொரு நன்மையோ, தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன். மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத்தேடிக் கொண்டிருப்பேன். (அந்நிலையில்) எவ்விதமான தீங்கும் என்னைத் தீண்டியிராது, நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயங் கூறுபவனுமேயன்றி வேறில்லை.

(அல்குர்ஆன் 7:188)

மறைவான ஞானம் இறைவனுக்கே என்று தெரிந்த பிறகும், அதை சுட்டிக் காட்டிய பிறகும் ஹஸனிடம் ராபீஆ கேட்டிருப்பது திருமணத்தில் உள்ள அவரது ஆர்வமின்மையும், இஸ்லாத்தைப் பற்றிய அறியாமையையுமே எடுத்துக் காட்டுகிறது. இவர்தான் 'பெண் அவ்லியா' என்று வேறு புகழப்படுகிறார்!

இரண்டாவது கதையில் 'ஒரு அறிவை வைத்துக் கொண்டு 9 பங்கு ஆசையை நான் கட்டுப்படுத்துகிறேன். 9 பங்கு அறிவை வைத்துக் கொண்டு ஒரு பங்கு ஆசையை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லையா? என்று ஏளனமாக ராபீஆ ஹஸனிடம் கேட்கிறார்.

தாம்பத்திய ஆசைக்கும், அறிவுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? ஆசை கொள்வோர் அறிவிழந்தோர் ஆகிட முடியுமா? அறிவுள்ளோர் ஆசையற்றவர்கள் என்று கூறிடத்தான் முடியுமா? உளறல்கள்தான் அவ்லியாக்களின் பொன்மொழி என்ற பெயரில் உலா வருகிறது என்பதற்கு இதுவே சான்றாகும்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு பெண்ணைப் பார்த்தார்கள் உடனே தம் மனைவி ஸைனபிடம் சென்று தம் தேவையை நிறைவேற்றினார்கள். வெளியே வந்து, 'பெண் எதிரில் வந்தால் ஷைத்தானின் வடிவத்தில் எதிர் கொள்கிறாள். எனவே உங்களில் எவரேனும் ஒரு பெண்ணைப் பார்த்து கவரப்பட்டால் உடனே தனது மனைவியிடம் செல்லட்டும். அவளிடம் இருப்பதுதான் இவளிடமும் இருக்கிறது' என்று கூறினார்கள் என ஜாபிர் (ரலி) இப்னு மஸ்ஊத் (ரலி) ஆகியோர் அறிவிக்கின்றார்கள்.(முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ)

நபி (ஸல்) அவர்கள் ஒரு பெண்ணை கண்டதும் ஆசை கொண்டுள்ளார்கள் என்பதினால் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவு இருந்தும் தன் ஆசையை கட்டுப்படுத்த தவறி விட்டார்கள் என்று கூறமுடியுமா? இந்த கதையை நம்புவதாக இருப்பின் அப்படித்தான் கூற நேரிடும்.

ஆசை ஏற்படுவது இயற்கை, அதை உரிய வழியில் உரிய முறையில் தணித்துக் கொள்ள வேண்டும் என்றே இஸ்லாம் கூறுகிறது. மேற்கண்ட ஹதீஸின் வாசகமும் இதை உறுதிபடுத்துகிறது. திருமணம் செய்யாதோர் ஆசை ஏற்படாதிருக்க நோன்பு வைக்க வேண்டும் என்றே பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.

வாலிபர்களே! உங்களில் எவருக்காவது (திருமணம் செய்ய) வசதியிருந்தால் அவர் திருமணம் செய்யட்டும் அது (அன்னியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைத் தடுக்கும். (திருமணம் செய்ய) வசதி இல்லை என்றால், அவர் நோன்பு வைக்கட்டும். அது (தவறியதிலிருந்து) அவரைத் தடுக்கும் என்று நபி (ஸல்) கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்)(புகாரி, முஸ்லிம்)

என் சந்தேகங்களுக்கு பதில் கிடைக்காதபோது நான் எப்படி திருமணம் செய்ய இயலும்? என்று ராபிஆ கேட்கிறார். தன்னை இறைச் சிந்தனையை விட்டும் திருமணம் தடுத்து விடும் என்றே இதன் மூலம் அறிவிக்கிறார். திருமணம் செய்வது இறைவனின் நினைவை விட்டும் தடுத்து விடும் என்பது பெரிய அபத்தமாகும். நபி (ஸல்) அவர்களும், நபித் தோழர்களும், திருமணம் செய்தே வாழ்ந்துள்ளனர். இதனால் இவர்கள் அனைவரும் இறைவனின் சிந்தனையை விட்டும் வெளியேறியவர்கள் என்று கூறலாமா?

அப்துல்லாஹ்வே! நீ பகலில் நோன்பு வைத்து, இரவில் நின்று வணங்குவதை நான் அறிகிறேனே? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டனர். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! ஆம்' என்றேன். இனி (அவ்வாறு) செய்யாதே! நீ (ஒரு நாள்) நோன்புவை! நோன்பை (ஒரு நாள்) விட்டு விடு! இரவில் வணங்குவதற்காக) நீ நில்! தூங்கவும்! செய்! உன் உடலுக்கு செய்ய வேண்டிய கடமை உன்மீது உண்டு. உன் கண்களுக்கு செய்ய வேண்டிய கடமை உன்மீது உண்டு. உன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை உன்மீது உண்டு என்று நபி (ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அறிவிக்கின்றார்கள்.(புகாரி, முஸ்லிம், நஸயீ, அஹ்மத்)

அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் தொழுவது போன்றே தொழுவதும், நாங்கள் நோன்பு வைப்பது போன்றே நோன்பு வைத்தும் இருக்கின்ற பெரும் செல்வந்தர்கள் தங்களின் செல்வத்திலிருந்து மேல் மிச்சமானவற்றை தாமாக வழங்கி நன்மைகளை (அதிகமாக) கொண்டு செல்கிறார்கள். (நாங்கள் அதிக நன்மை பெற என்ன வழி?) என்று நபித்தோழர்களில் சிலர் கேட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'நீங்களும் தர்மம் வழங்கும் படியானதை அல்லாஹ் உங்களுக்கு ஆக்கி தரவில்லையா? (ஆம்! நீங்கள் கூறும்) ஒவ்வொரு தஸ்பீஹுக்கும் தர்மம் (செய்த கூலி) உண்டு, ஒவ்வொரு தக்பீரும் தர்மம் தான் இறைவனைப் புகழும் ஒவ்வொன்றும் தர்மம்தான். லாயிலாஹ இல்லல்லாஹ் எனக் கூறும் ஒவ்வொரு தடவையும் தர்மம்தான் (நீங்கள்) நன்மையை ஏவுவதும் தர்மம்தான். தீமையிலிருந்து தடுப்பதும் தர்மம் தான். உங்களில் ஒருவர் உடலுறவில் ஈடுபடுவதும் தர்மம்தான் என்று கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே! அவர்களே! எங்களில் ஒருவர் தன் இச்சையை நிறைவேற்றவே (மனைவியிடம்) வருகிறார். இதற்கு அவருக்கு கூலி உண்டா? என நபித்தோழர்கள் கேட்டனர். ஹராமான வழியில் அதை அவன் நிறைவேற்றினால் அவன் மீது குற்றம் உண்டல்லவா! இதை நீங்கள், அறிவீர்கள் தானே! அவ்வாறே ஹலாலான வழியில் அதை அவன் நிறைவேற்றிக் கொண்டதற்கும் அவனுக்கு கூலி உண்டு' என நபி (ஸல்) கூறினார்கள் என அபூதர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.(முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் மனைவியரிடம் மூன்று பேர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்கம் பற்றி கேட்டு அறிந்ததும். 'இனி நான் தூங்காமல் வணக்கம் புரிவேன்' என ஒருவரும், 'நான் தொடர்ந்து நோன்பு வைப்பேன்' என ஒருவரும், 'நான் திருமணமே செய்ய மாட்டேன்' என ஒருவரும் கூறினர். இதை அறிந்து நபி (ஸல்) அவர்கள் அம்மூவரையும் அழைத்து 'நான் ஒரு நாள் நோன்பு வைத்து மறுநாள் விட்டு விடுகிறேன். தூங்கவும் செய்கிறேன். வணக்கமும் புரிகிறேன். திருமணமும் செய்துள்ளேன்' என்று கூறிவிட்டு, 'இவை என் வழி முறை, இதைப் புறக்கணிப்பவன் என்னைச் சேர்ந்தவனல்லன்' என்று கூறினார்கள் என அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.(புகாரி)

'திருமணம் செய்ய வேண்டும், உடலுறவும் நன்மை பெற்று தரும் செயலே!' என்பதை இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. இதையெல்லாம் அறியாதவரா ராபீஆ? அல்லது இக்கதையை கூறியவர் அறியாதவரா?

இந்த கதையை கூறுவோர் என்ன கூற வருகிறார்கள்? 'இனி திருமணம் செய்வோர் இந்த நிபந்தனைகுட்பட்டே திருமணம் செய்ய வேண்டும். இதை அறியாதோர் திருமணம் செய்யலாகாது' என்று கூறப்போகிறார்களா?

எப்படியோ இந்த கதை ஒரு முக்கிய சுன்னத்தை அடியோடு தகர்க்கின்றது! எனவே இந்த கதையை மேடையில் கூறுவதை தவிர்க்க வேண்டும். மீறினால் சுன்னத்தை கைவிடத் தூண்டிய குற்றம் இக்கதையை கூறுவோர் மீது ஏற்படும்.

கட்டுக்கதை-3: நரகின் வாசலை அடைத்த கல்!

இப்ராஹிம் வாஸிதீ என்பவர் (ஹஜ்ஜின் போது) 'அரபா' வில் தங்கி இருந்த போது தன் கையில் ஏழு கற்கள் வைத்திருந்தார். 'கற்களே! அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவருமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனின் அடியாராகவும், தூதராகவும் உள்ளார் என்று நான் கூறியதற்கு சாட்சி கூறுங்கள்' என்று கற்களிடம் கூறினார். அந்த இரவில் தூங்கும் போது கியாமத் நாள் ஏற்பட்டது போன்று கனவில் கண்டார்.

அப்போது, அவர் விசாரிக்கப்பட்டு அவரை நரகில் போடும்படி கட்டளையிடப்பட்டது. நரக வாசலுக்கு அவரை அழைத்துச் சென்றனர். அப்போது கற்களில் ஒன்று நரக வாசலில் வந்து நின்றது. அதை அப்புறப்படுத்த வேதனை செய்யும் மலக்குகள் ஒன்று சேர்ந்து முயற்சித்தும், சக்தி பெறவில்லை.

பிறகு மற்றொரு வாசலுக்கு அவரை இழுத்து வந்தனர். அப்போதும் ஏழு கற்களில் ஒன்று வந்து நின்றது. அதை அப்புறப்படுத்த முயற்சித்தும் அவர்களால் இயலவில்லை. ஏழு வாசல்களுக்கும் அவரை கொண்டு வந்தனர். இந்தக்கற்கள் ஒவ்வொரு வாசல்களில் வந்து நின்று கொண்டு 'லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்' என்று இவர் கூறியதற்கு நாங்கள் சாட்சி கூறுகிறோம் என்று கூறின.

பின்பு அவரை ர்ஷின் பக்கம் அழைத்து வந்தனர். நீ கற்களை சாட்சியாக்கினாய், உனது உரிமையை அவைகள் வீணடிக்காத போது, நான் உன் கடமையை எப்படி வீணடிப்பேன்? நீ கலிமா மொழித்ததற்கு நானும் சாட்சி' என்று அல்லாஹ் கூறிவிட்டு, அவரை சொர்க்கத்திற்கு அனுப்புங்கள்' என்று கூறினான்.

அவர் சொர்க்கத்திற்கு வந்த போது, அதன் வாசல்கள் அடைக்கப்பட்டிருக்கக் கண்டார். அப்போது லாயிலாஹ இல்லல்லாஹ் வந்து, அதன் அனைத்து வாசல்களையும் திறந்து விட்டது. அவர் (அதில்) நுழைந்தார்.(துர்ரத்துன் னாஸிஹீன் - பக்கம் 36)

இக்கதை மேடைதோரும் தெரு பிரசங்கிகளான மவ்லவிகள் பலர் பேசி வருவர், இக்கதை ஜும்ஆ மேடைகளிலும் முழங்கப்படும். மக்களிடம் எதைக் கூறினாலும் எதைப் பேசினாலும் நம்பிவிடுவர் என்ற இறுமாப்பு எண்ணமே இந்த கதையும் உருவாகக் காரணமாகும்.

இறைவனின் மகத்துவத்தை குறைக்கும் வண்ணம் இந்த கதை அமைந்துள்ளது, இறைவன் தீர்ப்பு மறுமையில் மிக நியாயமானதாகவும், எந்த வித அநீதியும் இல்லாததாகவுமே இருக்கும். இப்படித்தான் திருக்குர்ஆனில் 2:28, 3:25, 108, 161, 6:160, 19:60, 39:69, 40:17, 31 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இறைவனின் தீர்ப்பில் குறைவு எதையும் காண முடியாது என்பதை பலஹதீஸ்கள் கூறுகின்றன.

சொர்க்கத்திற்குரியவனை நரகவாசி என்றோ, நரகத்திற்குரியவனை சொர்க்கவாசி என்றோ தீர்ப்பு செய்யப்படமாட்டாது. நிரந்தரமாக நரகில் கிடக்க வேண்டியவனை தற்காலியமாக நரகில் போடவோ, தற்காலிகமாக நரகில் இருக்க வேண்டியவனை நிரந்தரமாக நரகில் போடவோ இறைவன் தீர்ப்பு செய்து விடமாட்டான்.

இந்த கதையின் கதாநாயகர் இப்றாஹிம் வாஸிதீ என்பவரோ ஈமான் கொண்டவர்: ஹஜ் செய்தது மூலம் அன்று பிறந்த பாலகனைப் போன்று குற்றமற்றவராக உள்ளவர், இவரை நரகவாசி என்று அல்லாஹ் தீர்ப்பு செய்ததாக இக்கதை கூறுகிறது. எவ்வளவு பெரிய மதியீனம்?

நியாயதீர்ப்பு நாள் என்பதை அர்த்தமற்றதாகவும் இறைவனின் தீர்ப்பு சரியாகவே இருக்கும் என்ற அடிப்படையை தகர்க்கும் விதமாகவும் அமைந்துள்ள இக்கதையை மேடை தோறும் முழங்குவதுதான் ஆச்சரியமாகும்.

இப்றாஹிம் வாஸித் என்பவர் ஹஜ் செய்ததால் ஹஜ்ஜுக்கு முன் உள்ள பாவங்கள் மன்னிக்கப்பட்டு இருக்கலாம், ஆனால் ஹஜ்ஜுக்குப் பிறகு தவறுகள் செய்திருக்கலாம் அல்லவா? அதனால் அவர் நரகவாசி என்று இறைவன் தீர்ப்பு செய்து இருக்கலாம் அல்லவா! என்று இக்கதையை கூறுவோர் கூறலாம்.

பொதுவாக நரக வேதனை என்பது இரண்டு வகையாக உண்டு. ஒன்று, செய்த குற்றங்களுக்கேற்ப குறிப்பிட்ட காலம் மட்டும் நரகின் வேதனையை அனுபவித்து விட்டு, சொர்க்கத்தின் நுழைதல். இரண்டு, நிரந்தரமாக நரகின் வேதனையை அனுபவித்தல்.

மேலும் எவர்கள் நிராகரித்து, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகின்றனரோ அவர்கள் நரகவாசிகளே, அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அது மிகவும் கெட்ட சேருமிடமாகும்.(அல்குர்ஆன் 64:10)

இது போன்று இன்னும் பல வசனங்களும், ஹதீஸ்களும் 'நிரந்தர நரக வாழ்க்கை' பற்றி அறிவிக்கின்றன. குறித்த காலம் மட்டும் நரக வேதனையை அனுபவிப்பது பற்றி பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.

யார் லாயிலாஹ இல்லல்லாஹ் கூறி அவரது உள்ளத்தில் கோதுமையின் எடையளவு நன்மை இருந்ததோ அவரை நரகில் இருந்து வெளியேற்றுங்கள். யார் தீட்டிய கோதுமையளவு நன்மை உள்ளத்தில் உள்ள நிலையில் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறினாரோ அவரையும் நரகில் இருந்து வெளியேற்றுங்கள். யார் கடுகளவு நன்மை உள்ளத்தில் உள்ள நிலையில் லாயிலாஹ இல்லல்லாஹ் கூறினாரோ அவரையும் நரகிலிருந்து வெளியேற்றுங்கள் என அல்லாஹ் கூறுவான் என்று நபி (ஸல்) கூறினார்கள். இதை அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.(புகாரி, முஸ்லிம், திர்மிதீ)

இந்த இருநிலை போக, தண்டனைக்குரிய செயல் இருப்பினும் அல்லாஹ் தண்டிக்காது மன்னித்தும் விடுவான் என்பதை பின்வரும் வசனம் கூறுகிறது.

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன. இன்னும் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும் அல்லாஹ் அதைப்பற்றி உங்களை கணக்குக் கேட்பான். இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான். தான் நாடியவரை வேதனையும் செய்வான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் சக்தி(அல்குர்ஆன் 2:284)

செயல்களுக்கேற்ப நிரந்தர தண்டனை தற்காலிக தண்டனை அல்லது மன்னிப்பு என மறுமையின் விசாரணைக்குப் பிறகு உண்டு என்பதை விளங்க முடிகிறது.

இப்ராஹிம் வாஸித் அவர்களுக்கு பொதுவான மன்னிப்பு என்பது கிடைக்காவிட்டாலும், அவர் ஈமான் கொண்டவர் என்ற அடிப்படையில் நிரந்தர தண்டனைக்குரியவர் என்றில்லாமல், செய்த செயலுக்கு ஏற்ப குறைந்த தண்டனை கிடைக்க இறைவன் தீர்ப்பளித்திருந்தாலும் இத்தீர்ப்பை குறைகாணும் வகையில் கற்கள் நடந்து கொண்டன என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல. இறைவனின் தீர்ப்புக்கு எதிராக எவரும் பேச இயலாது. தனக்கு வேண்டியவர் என பரிந்துரை செய்யவும் இயலாது. பரித்துரையையும் இறைவனின் அனுமதி பெற்றவரே செய்ய இயலும், இதை திருக்குர்ஆனின் 2:254, 255, 6:51, 70, 32:4, 2:123, 34:23, 53:26 வசனங்கள் தெளிவு படுத்துகின்றன.

இறைவனின் தீர்ப்புக்கு எதிராக எவர்தான் பேச இயலும்? எதிராக கற்கள் நடந்து கொண்டதாக கூறுவது பெரும் அபத்தமே!

கற்கள் நரகின் வாசலை அடைத்தது என்பதும் நம்ப முடியாத ஒன்றாகவே உள்ளது. ஹஜ்ஜில் கல்லெறிதல் எனும் நிகழ்வு நடப்பதுண்டு, அரபாவில் தங்கி இருந்து விட்டு பத்தாம் நாள் ஜம்ரத்துல் அகபாவில் ஹஜ் செய்வோர் கல்லெறிவர். இக்கற்கள் மிகவும் சிறியதாகவே இருக்கும். நபி (ஸல்) அவர்கள் (விரல்களால்) சுண்டிவிடும் அளவு (சிறு) கற்களால் அறிந்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(முஸ்லிம், திர்மிதீ)

தான் கலிமா கூறியதற்கு சிறிய 7 கற்களை சாட்சியாக அவர் வைத்தாலும், அவை நரகின் வாசலை அடைத்தது என்பது தான் ஆச்சரியம். நரகின் வாசல் எப்படி இருக்கும் என்பதை பின்வரும் ஹதீஸ் படம் பிடித்துக் காட்டுகிறது. கியாமத் நாளில் நரகவாசிகளின் கடைவாய் பற்கள் உஹதுமலை போன்றதாகவும், அவர்களின் தொடை 'பைலா' எனும் மலை போன்றதாகவும் அவர்களின் பின்பகுதி மதீனாவுக்கும், ரபதாவுக்கும் இடையே உள்ள தொலைவு போல் மூன்றுநாள் பயணதூரம் தொலைவு அகலமாகவும் அமைந்திருக்கும் என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.(அஹ்மத், திர்மிதீ)

ஆகவே, இதுபோன்ற கதைகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வஸ்ஸலாம்.

 

Comments   

mohamed
0 #1 mohamed -0001-11-30 05:21
assalamu alaikum (var) This is mohamed from dubai. i would like to know about the shirk.bcecause my boss is insisting me to joint the their shirk organisation.Th ey are doing Sadja(kalil viludal) to their mursid,they are argueing with me.but i couldnt argue with them.so pls send me the all hadish about the Shirk.Their Murshid is located in LalPet-chennai Name is Faizee sha Noori.Their activities are apart from islam.
They are saying there is hadish sahabakal did sadja(kalil viludal) to Prophet MOhammed.Enaku ithuku details vendum pls send me Hadish as soon as possible.if u want more details about them i can send to u.Give me email id. Vasalam by mohamed
Quote | Report to administrator
அபூஸஃபிய்யா
0 #2 அபூஸஃபிய்யா -0001-11-30 05:21
அன்புச் சகோதரர் முஹம்மது,

கீழ்க்காணும் சுட்டிக்குச் சென்று, படித்து, அடுத்தடுத்த பக்கங்களையும் கட்டாயம் படியுங்கள். தெளிவு கிடைக்கும். chittarkottai.com/.../...
Quote | Report to administrator
மரைக்காயர்
0 #3 மரைக்காயர் -0001-11-30 05:21
சகோதரர் முஹம்மது அவர்களே, கீழ்க்காணும் தளத்தில் 'இஸ்லாமிய கொள்கை விளக்கம்' என்ற தலைப்பில் உள்ள சொற்பொழிவுகளை அவசியம் கேட்டுப் பாருங்கள்.
Quote | Report to administrator
அபூஸஃபிய்யா
0 #4 அபூஸஃபிய்யா -0001-11-30 05:21
சகோ. மரைக்காயர்,

தளப் பெயரைக் குறிக்க மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்; குறிக்கவும்.
Quote | Report to administrator
மரைக்காயர்
0 #5 மரைக்காயர் -0001-11-30 05:21
மன்னிக்கவும். கீழ்க்கண்ட தளம்தான் அது..

worldmuslimmedia.com/.../...
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்