முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

ஆய்வுக் கட்டுரைகள்

(முன் குறிப்பு: 'வட்டி' என்றால் நமக்கு நினைவுக்கு வருவது பணம் கொடுக்கல்-வாங்கல், கடன் மற்றும் வங்கித்  தொடர்புடைய நடவடிக்கைகளில் வசூலிக்கப்படும் அதிகப்படியான தொகைதான். இஸ்லாம் தடுத்திருக்கும் ‘ரிபா’ இந்த வட்டியையும் உள்ளடக்கியது மட்டுமல்லாமல் மேலும் விரிவான பொருள்களைக் கொண்டது. குர்ஆன் குறிப்பிடும் ‘ரிபா’வைப் பற்றி நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டுமெனில் அதை, நாம் விளங்கியிருக்கும் ‘வட்டி’ என்ற குறுகிய பொருளில் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இறைமறையில் இடம்பெறும் 'ரிபா' எனும் அரபுச் சொல்லுக்கு 'வட்டி' என்றே தமிழாக்கப்பட்டுள்ளது. அதற்கு வேறொரு தமிழ்ச் சொல்லைத் தேடுவதைவிட குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆழமான பொருளுடைய ‘ரிபா’ என்ற சொல்லையே பயன்படுத்திக் கொள்ளலாம்).

 

ரிபா என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது அதற்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டிருந்த யூத, கிருஸ்துவ சமுதாயத்தினருக்கும் தடை செய்யப்பட்டிருந்தது. “ரிபா வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,)...” (4:161) என்ற குர்ஆன் வசனம் ரிபா யூதர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்ததையும், தடையை மீறி அவர்கள் ரிபா சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததையும் தெரிவிக்கிறது.

பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் வட்டியைத் தடை செய்யும் பல வசனங்கள் இருக்கின்றன. இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களின் காலத்தில் யூதர்கள் இறை ஆலயங்களுக்குள்ளேயே கடைவிரித்து வட்டித்தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களின் அக்கிரமங்களால் கடும் கோபமடைந்த ஈசா (அலை) அவர்கள் அந்த வட்டிக்காரர்களை ஆலயங்களிலிருந்து விரட்டியடித்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் யூதர்களுடன் அரபுக்களும்கூட ரிபா சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். ‘ரிபா’ என்ற வார்த்தையும் அவர்களுக்கு நன்கு பரிச்சயமானதாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் ரிபாவைத் தடை செய்யும் குர்ஆன் வசனங்கள் படிப்படியாக அருளப்பட்டன.

ரிபா தொடர்பாக அருளப்பட்ட முதல் குர்ஆன் வசனம் சூரா அர்ரூமில் உள்ள 39வது வசனம். இது மக்காவில் அருளப்பட்டது.

(மற்ற) மனிதர்களுடைய சொத்துகளோடு் சேர்ந்து (உங்கள் சொத்தும்) பெருகும் பொருட்டு நீங்கள் ரிபா வாங்கி(ச் சேர்ப்பீர்களா)னால் அது, அல்லாஹ்வின் கண்ணோட்டதில் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஸகாத்தாக நீங்கள் எதைச் செலுத்தினாலும் (அது) பெருகும். அவ்வாறு செலுத்துவோர்தாம் (தம் நற்கூலியை) பன்மடங்காக்கிக் கொண்டவர்களாவர்..” (30:39).

மேலோட்டமாய்ப் பார்க்கும்போது இந்த வசனம் ரிபாவைத் தடை செய்யவில்லையே எனத் தோன்றினாலும், இந்த நடவடிக்கைகள் அல்லாஹ்வின் உவப்பைப் பெற்றுத் தருவன அல்ல; மறுமையில் இதனால் எந்த நன்மையும் கிடைக்காது என்ற எச்சரிக்கைகளும் இதில் பொதிந்திருப்பதைப் புரிந்துக் கொள்ள முடியும்.

ரிபாவைப் பற்றி, இரண்டாவதாக அருளப்பட்டது சூரா அன்னிஸாவில் உள்ள 161ஆவது வசனம்.

ரிபா வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கிவந்தனர்; தவறான முறையில் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்தனர் (எனவே, இவ்வாறு தண்டனை வழங்கினோம்). இவர்களில் இறைநிராகரிப்பாளருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்” (4:161).

நபி (ஸல்) அவர்களின் மதினா வாழ்வின் ஆரம்பத்தில் அருளப்பட்ட இந்த வசனம் யூதர்களுக்கு ரிபா தடை செய்யப்பட்டிருந்ததையும் அத்தடையையும் மீறி அவர்கள் ரிபா வாங்கி வந்ததனால் அல்லாஹ்வின் கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளானார்கள் என்பதையும் தெரிவிக்கிறது. இந்த வசனமும் முஸ்லிம்களுக்கு ரிபாவை நேரடியாகத் தடை செய்யவில்லை என்றபோதிலும், முன்னர் வேதம் கொடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு இது தடுக்கப்பட்டிருந்தது என்ற உண்மையும் அதை மீறுவோர் இறைவனின் கோபத்திற்கு ஆளாவார்கள் என்ற எச்சரிக்கையும், முஸ்லிம்களும் இதிலிருந்து விலகி வாழவேண்டும் என்பதை உணர்த்துவதாகவும் உள்ளது.

மூன்றாவதாக அருளப்பட்ட சூரா ஆல இம்ரானின் 130-ஆவது வசனம்தான் ரிபாவை நேரடியாக தடை செய்த வசனம்.

இறைநம்பிக்கையாளர்களே! பன்மடங்காகப் பெருகிக்கொண்டே அதிகரிக்கும் ரிபாவை(வாங்கி)த் தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி(இதைத் தவிர்த்து) வாழ்ந்தால் வெற்றியடைவீர்கள்” (3:130).

இந்த வசனம் ஹிஜ்ரி 2ஆம் ஆண்டில் அருளப்பட்டிருக்கும் என குர்ஆன் விரிவுரையாளர்கள் கருதுகின்றனர்.  

பத்ருப் போரில் பெரும் தோல்வியடைந்து  திரும்பிச் சென்ற குறைஷிகள் மீண்டும் முஸ்லிம்களைத் தாக்குவதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்த காலம் அது.  அம்ரிப்னு உகைஷ் என்பவர் மதினாவில் இருந்தார். இஸ்லாத்தின் கொள்கைகள் அவரது உள்ளத்தைக் கவர்ந்திருந்தது. ஆனால் வெளிப்படையாக அதனைத் தன் வாழ்வின் நெறியாக ஏற்றுக்கொள்ள அவருக்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தது. காரணம் அவரது தொழில். ஆம்.. வட்டிக்குக் கடன் கொடுப்பதே அவரது தொழிலாக இருந்தது. “இறைநம்பிக்கையாளர்களே! பன்மடங்காகப் பெருகிக்கொண்டே அதிகரிக்கும் ரிபாவை(வாங்கி)த் தின்னாதீர்கள்...” என்ற இறைக்கட்டளை பிறப்பிக்கப்பட்டிருப்பதை அவர் அறிந்திருந்தார்.

தாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டால் தமக்கு வரவேண்டிய வட்டித் தொகையை வசூல் பண்ண முடியாதே என்பதுதான் அவரது தயக்கம். இந்தச் சூழ்நிலையில் உஹதுப் போர் மூண்டு விட்டது. இனியும் தாமதிக்க வேண்டாம் என்று முடிவெடுத்த அம்ரிப்னு உகைஷ், தமது தயக்கங்களை உதறித் தள்ளிவிட்டு இஸ்லாத்தை ஏற்ற கையோடு போருக்குச் சென்றார். அல்லாஹ் அவருக்கு அப்போரில் ‘உயிர்த்தியாகி’ எனும் சிறப்புப் பதவியை வழங்கினான். ரலியல்லாஹு அன்ஹு.

அபுஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்ததாக அபுதாவூத் ஹதீஸ் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் இந்த நிகழ்வு, உஹதுப் போருக்கு முன், அதாவது ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில், ரிபாவைத் தடை செய்யும் சூரா ஆல இம்ரான் வசனம் (3:130) அருளப்பட்டது என்பதற்குச் சான்றாக இருக்கிறது. 

ரிபாவைப் பற்றி நான்காவதாக அருளப்பட்ட வசனங்கள் விரிவானவையாகவும் கடுமையான எச்சரிக்கைகளைக் கொண்டதாகவும் இருந்தன. அவை சூரா அல் பகறாவின் 275 முதல் 279 வரையிலான வசனங்கள்.

வட்டிப் பொருளை உண்பவர்கள், ஷைத்தானால் பாதிக்கப்பட்டு, பித்துப் பிடித்தவன் தட்டுத் தடுமாறி எழுந்து வருவது போன்றே (மறுமையில்) வருவர். ஏனெனில், "திண்ணமாக வணிகம் என்பதும் வட்டியைப் போன்றதே" என்று அவர்கள் கூறி(அல்லாஹ்வின் சட்டத்தை ஏளனமாய்க் கருதி)னர். அல்லாஹ் வணிகத்தை அனுமதித்து, வட்டியைத் தடை செய்துள்ளான். ஆயினும், தம்மிறைவனிடமிருந்து அறவுரை வந்தபின் (வட்டியை) விலக்கிக் கொள்பருக்கு, அவர் முன்னர் அடைந்தது அவருடையதுதான். மற்றபடி, அவருடைய செயற்கணக்கு அல்லாஹ்விடம் இருக்கிறது. திரும்பவும் வட்டியில் உழல்பவர்கள் திண்ணமாக நரகவாசிகளே; அவர்கள் அதில் என்றென்றும் வீழ்ந்து கிடப்பர் 002:275.

வட்டியின் வளங்களை அழித்து, அறவழி வளங்களை அல்லாஹ் பெருகச் செய்கிறான். (தன் கட்டளையை) மறுத்துக் கொண்டிருக்கும் பாவி எவனையும் அல்லாஹ் விரும்புவதேயில்லை 002:276.

இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து, தொழுகையை முறைப்படிக் கடைப்பிடித்து ஒழுகி, ஸகாத்தைக் கணக்கிட்டுச் செலுத்தி விடுபவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் திண்ணமாக நற்கூலி உண்டு. அவர்களுக்கு அச்சமென்பதில்லை; அவர்கள் துயருற மாட்டார்கள் 002:277.

இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் மெய்யாகவே நம்பிக்கையாளர்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, வட்டியில் எஞ்சியதை வாங்காது விட்டு விடுங்கள் 002:278.

அவ்வாறு விடவில்லையெனில், அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் (உங்களுக்கு எதிராகப்) போர் அறிவிக்கப்பட்டு விட்டது. நீங்கள் பாவமீட்சி கோரி திருந்தி (வட்டியிலிருந்து) மீண்டுவிடின், நீங்கள் கொடுத்த தொகை (மட்டுமே) உங்களுக்குரியது. அநீதி இழைக்காதீர்கள்; நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள் 002:279.

மக்கா வெற்றிக்குப்பின் நிகழ்ந்த ஹுனைன் யுத்தத்தில் தோல்வியடைந்த ஹவாஜின் மற்றும் ஸகீஃப் கிளையினர் பின்வாங்கிச் சென்று தாயிஃப் நகர கோட்டையினுள் அடைக்கலம் புகுந்திருந்தனர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற நபி (ஸல்), அக்கோட்டையைச் சுற்றி முற்றுகையிட்டார்கள். நாற்பது நாட்கள் வரை நீடித்தது முற்றுகை. இருந்தும் கோட்டைக்குள் இருந்தவர்களுள் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் சரணடைவதாகத் தெரியவில்லை.  தம் தோழர்களுடன் கலந்தாலோசனை செய்த நபி (ஸல்) அவர்கள், திரும்பிச் சென்று விடலாம் என்று முடிவு செய்தார்கள். “அல்லாஹ்வே! ஸகீஃப் கிளையினருக்கு நேர்வழி காட்டுவாயாக! அவர்களை என்னிடம் வரச் செய்வாக!” என்று பிரார்த்தித்து விட்டு நபி (ஸல்) அவர்கள் திரும்பி விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் ஸகீஃப் கிளையினருக்கு நேர்வழி காட்டி அவர்களை நபியவர்களிடம் வரச்செய்தான். ஹிஜ்ரி 9ஆம் ஆண்டில் ஸகீஃப் கிளையினரின் தூதுக்குழு மதீனா வந்து நபியவர்களைச் சந்தித்தனர். தங்கள் கிளையினர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அதற்குப் பகரமாக நபி (ஸல்) சில நிபந்தனைகளை ஒப்புக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அந்த நிபந்தனைகளுள் ஒன்று, ஸகீஃப் கிளையினர் தாம் பிறரிடம் வாங்கியிருக்கும் கடன்களுக்கு இனி வட்டி செலுத்த மாட்டார்கள்; ஆனால் தங்களுக்கு வர வேண்டிய வட்டியைத் தொடர்ந்து வசூலித்துக் கொள்வார்கள் என்று இருந்தது. ‘எல்லா முஸ்லிம்களுக்கும் இருக்கும் உரிமைகள் ஸகீஃப் கிளையினருக்கும் உண்டு’ என்று மட்டும் அந்த ஒப்பந்தத்தில் எழுதித் திருப்பித் தந்தார்கள் நபி (ஸல்) அவர்கள்.

தங்கள் நிபந்தனை ஏற்கப்பட்டுவிட்டதாக எண்ணிக் கொண்ட ஸகீஃப் கிளையினர், அவர்களிடம் கடன் பெற்றிருந்த பனூ அம்ரு இப்னு அல் முகீரா கிளையினர் தொடர்ந்து வட்டியைச் செலுத்த வேண்டும் என நிர்ப்பந்தித்தனர். ஆனால் தாங்கள் பெற்றிருந்த கடன்களுக்குச் செலுத்த வேண்டிய வட்டியை மட்டும் நிறுத்தி விட்டனர்.  மக்காவில் ஆளுநராக இருந்த அத்தாப் இப்னு உஸைப் (ரலி) அவர்கள் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நபி (ஸல்) அவர்களே தங்களுக்கு இந்த உரிமைகளை வழங்கியிருப்பதாக ஸகீஃப் கிளையினர் வாதிட்டனர்.  இது தொடர்பாக ஆளுநர் அத்தாப் நபி (ஸல்) அவர்களிடம் ஆலோசனை வேண்டினார். இந்தச் சமயத்தில்தான் இரண்டாவது அத்தியாயத்தின் மேற்குறிப்பிட்ட 278 279 & ஆகிய இரு வசனங்கள் அருளப்பட்டன.

இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் மெய்யாகவே நம்பிக்கையாளர்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, வட்டியில் எஞ்சியதை வாங்காது விட்டு விடுங்கள் 002:278.

அவ்வாறு விடவில்லையெனில், அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் (உங்களுக்கு எதிராகப்) போர் அறிவிக்கப்பட்டு விட்டது. நீங்கள் பாவமீட்சி கோரி திருந்தி (வட்டியிலிருந்து) மீண்டுவிடின், நீங்கள் கொடுத்த தொகை (மட்டுமே) உங்களுக்குரியது. அநீதி இழைக்காதீர்கள்; நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள் 002:279.

இந்த வசனங்கள் ஸகீஃப் கிளையினரின் மனங்களில் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தின. ‘அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் புரிய நாங்கள் சக்தியுடையவர்கள் அல்லர்’ என்று கூறி அவர்கள் தங்கள் கோரிக்கைகளைக் கைவிட்டனர்.

ரிபாவைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் ஏராளம் இருந்தாலும் குர்ஆனில் ரிபாவைப் பற்றிக் குறிப்பிடப்படுவது இந்த நான்கு இடங்களில்தான்.  அன்று வாழ்ந்த நம்பிக்கையாளர்களுக்கு இவையே போதுமானவையாக இருந்தன.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

- ஸலாஹுத்தீன்

Comments   
Mohamed Ali Jinnah
+2 #1 Mohamed Ali Jinnah 2012-02-18 05:51
நல்ல கட்டுரை . எல்லா சமுதாயத்திலும் இந்த வட்டியின் கொடுமையால் படும் அவதியினை பலரும் அறிவோம் .உலகத்தில் பல இன்னல்களை இழைத்து வரும் யூதர்களே இதனை கண்டு பிடித்தாலும் நம் நாட்டில் வட்டியில் பல வகைகளை கண்டு பிடித்து சாதனை செய்து வருவது எவ்வளவு பெரிய கொடுமை! இதில் இஸ்லாமிய மார்க்கம் வட்டி வாங்குவதும் கொடுப்பதும் பாவச் செயலாக சொல்கின்றது. ஆனால் இன்னும் நம் மக்கள் ஆடம்பரத்திற்கும ் வீண் செலவிற்கும் ஆசைப் பட்டு இந்த படுகுழியில் வீழ்ந்து நாசமாகிப் போவதனைப் பார்க்கின்றோம் .அல்லாஹ்தான் அவர்களுக்கு நல் வழி காட்டவேண்டும்
Quote | Report to administrator
Haja
0 #2 Haja 2012-02-19 06:27
Assalamu Alaikkum,

Dear brothers,

Interest is sin in islam. In this today world we are directly or indirectly conneted with interest in somewhere.(you may say that its out of our hand) I am reading lot of article about interst is sin in islam. but until now i did not heard or read any article how to save in islamic way. Today our muslim community is mostly living very badly may be one of the reason there is not enough saving.we cannot sav all time we have to work. In some time we fall in sick or getting aged we need some money to live in this world. so what we can do? Actually saving is in bank is not good. if we put 2lakhs in saving account for two year after two year you may get interst Rs8000, but your many value after two year may fall to 1.5lakhs only because of inflation. So i would like to request our satyamargam teem to publise lot of article about how to save in islamic way? your article help normal poor people to save thier hard work money. Invest in stock exchange in sariyat way are not suitable for poor people.
Quote | Report to administrator
Ansary
0 #3 Ansary 2012-02-27 11:51
yes. I accept what Mr. Haja write above. Please publish the precautions to avoid interest.
Quote | Report to administrator
Mohamed Shabeer
0 #4 Mohamed Shabeer 2012-02-29 22:03
Assalamu Aliakkum Var,

Dear Brother,
Nice article Pls explain receipt the interest is Haram in Islam. What about pay the interest?
Example House Loan,Educationa l Loan, Medical Loan etc....
Middle class family can't able to buy a house by full amount.So they will try to get loan from bank and buy a house. Pls share your opinion in shariath way.
Quote | Report to administrator
சபீனா
0 #5 சபீனா 2013-05-10 21:02
//தொடரும், இன்ஷா அல்லாஹ்.
- ஸலாஹுத்தீன்//

கட்டுரையாளருக்கு எல்லாம் வல்ல இறைவன் நிறைய ஞானத்தை இன்னும் அளிக்க பிரார்த்தனைகள்.

இதன் தொடர்ச்சியை வெளியிடவும். நன்றி.
Quote | Report to administrator
Mohamed Ishaq
0 #6 Mohamed Ishaq 2017-09-02 16:58
Quoting Mohamed Shabeer:
Assalamu Aliakkum Var,

Dear Brother,
Nice article Pls explain receipt the interest is Haram in Islam. What about pay the interest?
Example House Loan,Educational Loan, Medical Loan etc....
Middle class family can't able to buy a house by full amount.So they will try to get loan from bank and buy a house. Pls share your opinion in shariath way.


நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962)

பாடம் : 96 உருவப் படம் வரைவோரைச் சபித்தல்
5962. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்
நான் குருதி உறிஞ்சியெடுக்கு ம் அடிமை ஒருவரை (விலைக்கு) வாங்கினேன். (அவரின் குருதி உறிஞ்சி கருவிகளை உடைத்து விட்டேன். ஏனெனில்,) நபி(ஸல்) அவர்கள், இரத்தத்தின் விலையையும் நாய்விற்ற காசையும் விபசாரியின் சம்பாத்தியத்தைய ும் (ஏற்கக் கூடாதென்று) தடை செய்தார்கள். மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் பச்சை குத்திவிடுபவளைய ும் பச்சை குத்திக்கொள்பவள ையும் உருவப் படங்களை வரைகிறவனையும் சபித்தார்கள்.13 9
Book : 77
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்