முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

இஸ்லாம்

அரஃபா பெருவெளி"(...ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைச் சேமித்துக் கொள்ளுங்கள். சேமிப்பில் சாலச்சிறந்தது இறையச்சமாகும். எனவே, நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள்" (அல்குர்ஆன் 2:197).

அல்லாஹ்வின் பேரருளால் இஸ்லாமிய சிறப்புமிகு மாதஙளுள் ஒன்றாகிய 'துல்ஹஜ்' எனும் இந்த ஆண்டுக்கான இறுதி மாதத்தைப் பெற்றுள்ளோம், அல்ஹம்து லில்லாஹ்!

இம்மாதத்தில் ரமலானுக்குப் பிறகு இரண்டாவது பெருநாளாகிய 'ஹஜ்ஜுப் பெருநாள்(ஈதுல் அழ்ஹா)' எனும் தியாகத் திருநாளை, அல்லாஹ்வின் தூதர் இப்ராஹீம்(அலை) அவர்களுடைய ஈடற்ற தியாகத்தை நினைவுகூரும் விதமாக உலக முஸ்லிம்கள் அனைவரும் மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர்.

இம்மாதத்தில் உலகிலுள்ள முஸ்லிம்களில் வசதி படைத்தவர்கள் மக்காவிலிருக்கும் (இறைவணக்கத்திற்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயமான) 'கஅபா'விற்கு ஹஜ் எனும் புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் இம்மாதத்தில் அதிகமாக நன்மையான காரியங்கள் செய்ய ஏவப்பட்டுள்ளதன் அடிப்படையில் நோன்பு, இரவுத் தொழுகைகள், குர்ஆன் ஓதுதல், திக்ருகள்(இறை தியானம்) தர்மங்கள் போன்ற கூடுதல் நற்கருமங்களில் ஈடுபடுகின்றனர்.

இம்மாதத்தின் ஒன்பதாவது நாளில் புனித மக்காவிலுள்ள அரஃபா எனும் மைதானத்தில் ஹாஜிகள் ஒன்றுகூடி தமது ஹஜ்ஜுக் கிரியைகளில் தலையாயதான "பெருவெளிக்கூடல்" எனும் கடமையை நிறைவேற்றுகின்றனர். "ஹஜ் என்பதே அரஃபா(வில் கூடல்)தான்" என்று அண்ணல் பெருமானார் (ஸல்) கூறினார்கள். அதே நாளில் ஹஜ்ஜுக்குச் செல்லாதவர்கள் நபிவழியின் அடிப்படையில் அரஃபா நோன்பு எனும் பெயரில் நோன்பிருந்து இறைவனை வணங்கி, புகழ்ந்து, பாவமன்னிப்பு மற்றும் தேவைகளை அவனிடம் மட்டுமே கோரி அவன் வல்லமையைத் தமது சொல்-செயல்கள் மூலமாக மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி நன்மையடைகின்றனர்.

அரஃபாப் பெருவெளிக்கூடல் என்பது, முஸ்லிம்களின் ஏகத்துவ சமத்துவ சங்கமமாக இறைவனால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். இனம், மொழி, குலம், பிறப்பு போன்ற எவ்விதமான ஏற்றத்தாழ்வும் பாகுபாடுமின்றி ஒரே இடத்தில் தோளோடு தோள் நின்று, ஒரே சீருடையாகிய தைக்கப்படாத இரு வெண்ணிற ஆடைகளை அணிந்து, ஓரிறைவனைப் புகழ்ந்து அவனை வழிபட்டு, அவனது இணையற்ற தன்மையை எடுத்துரைத்து, முழு உலகிற்கும் அவனுடைய ஏகத்துவத்தைப் பறைசாற்றுகின்ற உன்னத நாளாகும்.

ஹஜ்ஜுக்குச் செல்லாத முஸ்லிம்களும் அக்காட்சிகளை இன்று தொலைகாட்சி மற்றும் இணையத்தின் மூலமாகக் கண்டு தங்களுடைய ஏகத்துவ சிந்தனையையும், ஹஜ் செய்யும் ஆசையையும் புதுப்பித்துக் கொள்கின்றனர். உண்மையிலேயே அந்தக் காட்சிகள் என்றும் மறக்க முடியாதவையே. ஹஜ்ஜுக்கு சென்றவராக இருந்தாலும் செல்லாதவராக இருந்தாலும் அதை மீண்டும் மீண்டும் விரும்பக்கூடியவராகவே முஸ்லிம்கள் திகழ்கின்றனர்.

அதே போல் இம்மாதத்தின் பத்தாவது நாளாகிய ஹஜ்ஜுப் பெருநாளைத் தியாகத்திருநாளாக, அல்லாஹ்வின் தூதர் இப்ராஹீம்(அலை) அவர்களுடைய ஈடற்ற வாழ்க்கை படிப்பினைகளையும் தியாக வரலாற்றையும் நினைவுகூரும் விதமாகக் கொண்டாடுகின்றனர். அந்த தியாகத்தின் பின்னணி, நோக்கம், தேவை பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் யாவை? என்பதையும் முஸ்லிம்கள் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஹஜ் எனும் வணக்கமாகட்டும்; குர்பானியாக(ஆடு மாடுகளை "பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்" அல்லாஹ் மிகப்பெரியவன் என்று கூறி அறுத்துப் பலியிடும் செயலாக) இருக்கட்டும்; அவற்றின் நோக்கம் முஸ்லிம்களின் வாழ்வில் இந்த ஒரு நாளோடு அல்லது சில நாட்களோடு மறைந்து விடக்கூடாது. மாறாக என்றென்றும் அந்தப் படிப்பினையும் நோக்கமும் வெறும் சடங்கு சம்பிரதாயங்களோடு நின்று விடாமல் உலகம் நிலைபெறும் மட்டும் முஸ்லிம்களின் உள்ளத்தில் பசுமையாக நிலைநிற்க வேண்டும். அவர்தம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எதிரொலிக்க வேண்டும்.

எப்படி நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு ஏற்ப அல்லாஹ்வின் வழியில், அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்தவர்களாக சத்தியத்திற்காக ஏகத்துவத்திற்காக தமது பெற்றோர், தமது வீடு, தமது நாடு, குடும்பம், மனைவி ஆகியோரை மட்டுமின்றி, தம் முதுமைக் காலத்தில் வேண்டிப் பெற்ற புதல்வன் இஸ்மாயீல்(அலை) அவர்களையும் தியாகம் புரியத் துணிந்தார்களோ - மறு பரிசீலனை, மறு சிந்தனை, என்று சற்றும் தயங்காமல், துணிவாக ஏக இறைவனுக்கு அடிபணிவதற்காக மறுமையை முழுமையாக நம்பியவர்களாக செயல்பட்டார்களோ - அப்படி உறுதியான நம்பிக்கை உடையவர்களாக ஒவ்வொரு முஸ்லிமும் மாறவேண்டும்.

இந்த உலக வாழ்க்கையை இந்தக் கண்ணோட்டத்திலேயே நோக்க வேண்டும். இத்தூதை முழுமனித குலத்திற்கும் எத்திவைத்து ஈடேற்றமளிக்க முயல வேண்டுமென்பதே இந்தத் தியாகத்திருநாள் முஸ்லிம்களுக்குத் தரும் படிப்பினையாகும்.

இவ்வுலக வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளும், இலாப நஷ்டங்களும், இழப்புகளும் ஆதாயங்களும் இந்த சத்தியமார்க்கத்திலிருந்து உள்ளத்தை மயக்கி மாற்றிவிடாமல், உறுதியான இறை நம்பிக்கையுடன் உயிரையும் பொருட்படுத்தாமல் மார்க்கக் கட்டளைகளை நிறைவேற்ற, செயல்பட எந்தத் தியாகமும் செய்ய அனைத்து முஸ்லிம்களும் முன்வரவேண்டும் என்ற படிப்பினை இத்தியாகத் திருநாளின் படிப்பினையில் பொதிந்துள்ளது .

இன்று நாம் முஸ்லிம்களுள் சிலரின் செயல்பாடுகளைக் காணும்போது, தங்களை முஸ்லிம்கள் என அதிகபட்சமாக அடையாளப்படுத்திக் கொள்வதற்கு, பள்ளிவாயில்கள், மார்க்கக் கூட்டங்கள், இஸ்லாமிய நூல்கள், ஒலி-ஒளிப்பேழைகள், குறுந்தகடுகள் ஆகியவற்றைப் பயன் படுத்திக் கொள்வதோடு போதுமாக்கிக் கொள்வதைப் பார்க்கிறோம். முஸ்லிம்களின் வாழ்க்கையில் அவர்களது அன்றாடச் செயல்பாடுகளில் 'இறைவனுக்கான தியாகம்' எனும் சிந்தனை, செயலாக வெளிப்படுவது மிகவும் அருகிப் போய்விட்டது.

ஹஜ்ஜிலிருந்து திரும்பியவர், தான் நிறைவேற்றிய ஹஜ் மூலம் தனக்கும் தன் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் என்ன செய்தியை, என்ன படிப்பினையை அல்லாஹ் வழங்கியுள்ளான் என்பதில் கவனம் செலுத்தி அதன்படி செயல்பட வேண்டும். அதை விடுத்து, தான் நிறைவேற்றிய ஹஜ்ஜின் எண்ணிக்கையைக் கூட்டுவதிலும், அதைப் பற்றிப் பலரிடமும் தான், "இத்தனை முறை ஹஜ் செய்துள்ளேன்" என்று கூறி மகிழ்வதும், தன்னை "ஹாஜி" என்ற பட்டத்துடன் அறிமுகப்படுத்திக் கொள்வதிலும் ஆர்வமாக இருப்பாரேயானால், பல இலட்சங்களைச் செலவழித்து புனிதப் பயணம்/கள் மூலம் அடைந்து விட்டதாக நம்பிக்கைக் கொண்டிருக்கும் லாபம் கேள்விக் குறியாகி விடும்.

அதேபோல் குர்பானி எனும் பெயரில், "எங்கள் ஆடு விலையுயர்ந்தது, சிறந்தது" என்று தம்பட்டம் அடித்துப் பெருமை கொள்வதும் இவ்வாறு நாம் தரவில்லையென்றால் மற்றவர் தம்மைத் தரக்குறைவாகக் கருதுவார்கள் எனும் எண்ணத்தில் பிறர் பார்ப்பதற்காகப் பலி கொடுப்பதும் பிரதிபலனைக் கேள்விக்குறியாக்கும் செயலே.

"இறை கட்டளைக்காக, அதை நிலை நாட்டுவதற்காக சிறிதும் தயங்காமல் பொருளை மட்டுமின்றி, உயிரையும்கூட தியாகம் செய்யத் தயங்க மாட்டேன்; இறை கட்டளைக்கு மாறாகத் தவறான காரியங்களில் ஈடுபட மாட்டேன்; தவறான வழியில் பொருள் சேர்க்க மாட்டேன்; தவறான வழிகளின் மூலமாக எதையும் அடைவதற்குத் துணிய மாட்டேன்" எனும் பலியிடும் தியாகத்தின் உன்னத நோக்கத்தை நாம் மறந்துவிடலாகாது.

அல்லாஹ் குர்ஆன் மூலமும் இறுதித்தூதர் நபி(ஸல்) மூலமும் எச்சரிக்கின்றான்:

"...மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது இறையச்சம் உடையவர்களிடம் இருந்துதான்" (அல்குர்ஆன்5 :27).

"அல்லாஹ் ஏற்றுகொள்வது நல்லவற்றையே" (நபிமொழி).

" (நீங்கள் பலியிடும் மிருகங்களின்) இரத்தமோ இறைச்சியோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை. ஆனால் உங்களுடைய இறையச்சமே அவனை அடையும் ..." (அல்குர்ஆன் 22:37).

எவ்விதத் தேவைகளுமற்ற அல்லாஹ்விடம் இறைச்சியோ இரத்தமோ சென்றடைவதில்லை எனும் இறைவசனங்களின் உண்மையான செய்தி உணர்த்தும் படிப்பினைகள்:

அல்லாஹ்வுக்குக் கீழ்படிதல், தூய எண்ணம், சத்தியத்தையும் இறை கட்டளைகளையும் நிலைநாட்டும்போது ஏற்படும் சோதனைகளைத் தாங்கிக் கொள்ளும் தியாக மனப்பான்மை, எல்லாச் செயல்களையும் ஏக இறைவனின் கட்டளையின்படியும் அவன் ஒருவனுக்காகவே எதையும் செய்யக்கூடிய இக்லாஸ் எனும் உளத்தூய்மையும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.

இந்த உன்னத நிலையை அடைய முஸ்லிம் சமுதாயம் முனைப்புக் காட்ட வேண்டும்.

இவ்வுலகில் எளிதாக மனிதர்களைத் தாக்கி ஆட்கொண்டு விடும் இதர வழிகேட்டு எண்ணங்களாகிய முகஸ்துதி, பகட்டுச்செயல், கர்வம், தற்பெருமை, அலட்சியப் போக்கான இறைமறுப்புச் செயல்கள் நம்மை ஆட்கொண்டுவிடாமல் தற்காத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். அதற்காகவே எந்நேரமும் பிரார்த்தனை செய்ய வேண்டும். இல்லையென்றால், நாம் செய்யும் நற்செயல்கள் வீணாகிவிடும் என்ற எண்ணத்தோடு மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.

அல்லாஹ் நம்மை அவன் ஏற்றுக்கொள்ளத் தக்க நற்செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். தேவை ஏற்படின் அல்லாஹ்வுக்காக எதையும் தியாகம் செய்வதற்கு நாம் சித்தமாய் இருக்க வேண்டும். அதற்கான பக்குவத்தையும் உள்ள உறுதியையும் அல்லாஹ் நமக்கு வழங்க வேண்டும். அவனது உவப்புக்குரிய செயல்களைச் செய்வதில் நம் முனைப்புப் பெருக வேண்டும். அவனது வெறுப்புக்குரிய செயல்களிலிருந்து விலகி வாழ வேண்டும்.

அல்லாஹ்வின் அருளுக்கும் கனிவுக்கும் உரிய அடியார்களாக, தியாக சீலர்களாக, உறுதியான இறையச்சம் உடையவர்களாக இறுதி மூச்சுவரை வாழ்வதற்கு நம் உள்ளங்களுக்கு அவனே வலிமை சேர்க்க வேண்டும் எனும் நம் அனைவருக்குமான பிரார்த்தனைகளுடன் ...

உங்கள் சகோதரன் : இப்னு ஹனீஃப்

 

சத்தியமார்க்கம்.காம் தளத்தின் கட்டுரை, வாசகர்கள் படித்து மீண்டும் பயன் பெறுவதற்காக மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Comments   
ஸலாம் இந்தியா
+1 #1 ஸலாம் இந்தியா 2010-11-09 18:58
சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்
இனிய ஹஜ் தின / பெருநாள் வாழ்த்துக்கள் !

மிகவும் நன்மையை அள்ளித்தரக்கூடி ய சங்கைமிக்க ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்பினை நாம் மிகவும் அறிந்தவர்களாகவு ம் அதன் படி அமல்கள் செய்யக் கூடியவர்களாகவும ் நாம் அனைவரும் திகழ ... து'ஆ செய்வோம் ! து'ஆ வை செவிமடுத்து அருள்புரிவோனிடத்திலே!

facebook.com/dheenul
Quote | Report to administrator
M Muhammad
-2 #2 M Muhammad 2010-11-10 09:10
Assalaamu Alaikum

ALHAMDULILLAAH WA JAZAAKALLAHU KHAIR
Quote | Report to administrator
லறீனா அப்துல் ஹக்
0 #3 லறீனா அப்துல் ஹக் 2012-10-22 11:31
மிகச் சிறந்த பகிர்வுக்கு ஜஸாக்கல்லாஹு கைரன்.

சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எதிர்வரும் ஈதுல் அழ்ஹா தினம் மிக்க மகிழ்வானதாய் அமைய மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

மிக்க அன்புடன்,
சகோதரி,
லறீனா அப்துல் ஹக்.
Quote | Report to administrator
M Muhammad
-1 #4 M Muhammad 2012-10-25 11:28
Assalamu Alaikum

Haj Coverage live Alhamdulillah pls click the below link

huda.tv/.../...
Quote | Report to administrator
M Muhammed
+1 #5 M Muhammed 2015-09-23 16:14
Hajj Live coverage 2015

hamariweb.com/.../...
Quote | Report to administrator
M S K
-1 #6 M S K 2016-09-07 00:20
அல்ஹம்துலில்லாஹ


//0 லறீனா அப்துல் ஹக் 2012-10-22 11:31
மிகச் சிறந்த பகிர்வுக்கு ஜஸாக்கல்லாஹு கைரன்.

சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எதிர்வரும் ஈதுல் அழ்ஹா தினம் மிக்க மகிழ்வானதாய் அமைய மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

மிக்க அன்புடன்,
சகோதரி,
லறீனா அப்துல் ஹக்.
Quote | Report to administrator//
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்