முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

நற்சிந்தனைகள்

மீண்டும் ஒரு ரமளான்: பிறை16

நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (அல்குர்ஆன் 2:187)

நோன்பின்போது பகல் நேரத்தில் உண்பதும், பருகுவதும் தடைசெய்யப்பட்டது போல் தம்பத்திய உறவு கொள்வதும் தடுக்கப்பட்டதாகும். பசித்திருப்பது, தாகித்திருப்பது மட்டுமின்றி நோன்பாளி (பகல் நேரத்தில்) ஆசையை - இச்சையைக் கட்டுப்படுத்தி, தம்பத்திய உறவிலிருந்து விலகியிருக்கவேண்டும். இறைவனுக்காகப் பட்டினியையும் தாகத்தையும் சகித்துக் கொள்வதுபோல் தன்னுடைய உடல் இச்சை உணர்வுகளையும் கட்டுப்படுத்திச் சகித்திருக்க வேண்டும்.

வரம்பு மீறி விடாமல் நோன்பாளி மனைவியருடன்,

"நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள், முத்தமிடுவார்கள்! உங்களில் தம் உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தார்கள்!" (அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்: புகாரி, 1927)

''நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டு தம் மனைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்'' என்று சொல்லிவிட்டு ஆயிஷா (ரலி) அவர்கள் சிரித்தார்கள். (நூல்: புகாரி, 1928)

நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நோன்பாளி மனைவிகளைக் கட்டி அணைப்பது பற்றி ஒரு மனிதர் கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள். பின்னர் மற்றொருவரும் வந்து கேட்டார் அவருக்குத் தடை விதித்தார்கள். நபி (ஸல்) அவர்களால் அனுமதிக்கப்பட்டவர் முதியவராகவும் தடுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தார். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். நூல்: அபூதாவூத்)

எளிதில் உணர்ச்சி வசப்பட்டு எல்லை மீறிவிடும் இளவயதுக்காரர்களுக்கு நோன்பிருக்கும் நிலையில் தம் மனைவியைக் கட்டியணைக்க நபி (ஸல்) தடை விதித்தது இங்கு ஆழ்ந்து நோக்கத் தக்கது.

எந்த வயதுக்காரரும் எல்லை மீறலாம்; போலவே ஓர் இளம் கணவர், நோன்பிருந்து கொண்டு தம் மனைவியைக் கட்டியணைத்தாலும் கட்டுப்பாடு குலையாதவராக இருக்கக் கூடும். ஆனால் இளவயதுக்காரர்கள் சுயகட்டுப்பட்டை இழந்து விடுவதற்குக் கூடுதல் சாத்தியம் உள்ளது. மேற்காணும் ஹதீஸிலிருந்து நாம் பெறவேண்டிய பாடம் என்னவெனில், சுயகட்டுப்பாட்டின் உறுதியைப் பற்றி அவரவருக்கே நன்கு தெரியும். எனவே, தத்தம் நிலையைக் கருத்தில் கொண்டு ஒரு நோன்பாளிக் கணவர் தம் மனைவியுடன் பகல் பொழுதுகளில் அண்மையாக/சேய்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

கட்டுபாட்டை மீறி நோன்பாளி மனைவியிடம் உடலுறவு கொண்டால் அதற்கான பரிகாரமும், பரிகாரம் செய்ய இயலாதவர்களுக்கான சலுகைகளும் நபிவழியில்,

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழிந்து விட்டேன்!" என்றார். நபி(ஸல்) அவர்கள் 'உமக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள்.

'நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடிவிட்டேன்!" என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள், 'விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?' என்று கேட்டார்கள். அவர் 'இல்லை!" என்றார்.

'தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'இல்லை!" என்றார். 'அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர், 'இல்லை!" என்றார்.

நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த 'அரக்' எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது, நபி(ஸல்) அவர்கள் 'கேள்வி கேட்டவர் எங்கே" என்றார்கள். 'நானே!" என்று அவர் கூறினார். 'இதைப் பெற்று தர்மம் செய்வீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர், 'இறைத்தூதர் அவர்களே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை!" என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள்: பிறகு 'இதை உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!" என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். நூல்: புகாரி, 1936, 5368, 6087, 6164, 6709)

(''அப்படியானால் நீர் முறித்த நோன்பிற்குப் பகரமாக ஒரு நோன்பு நோற்பீராக'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்ற கூடுதல் வாசகங்கள் இப்னுமாஜா, அபூதாவூத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)

பிறை 1பிறை 17 >

 சத்தியமார்க்கம்.காம் தளத்தின் மேற்கண்ட ஆக்கம், மறுபதிப்பாக இவ்வருட ரமளானில் வெளியாகியுள்ளது.  அனைத்துப் பிறைகளையும் வாசிக்க...
Comments   
A,R,Abdul Ravoof
+1 #1 A,R,Abdul Ravoof 2011-08-19 21:37
All your articles are very informative and educative. May Allah bless you for your good work !
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்