முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

நுட்பம்

இணைய வங்கிக்கணக்கு பாதுகாப்பானதா?நுட்பம் அதிவேகத்தில் வளர்ந்து வரும் இன்றைய உலகில் அனைத்துத் துறைகளும் கணினிமயம் ஆவதுடன், உலகில் எந்த மூலையில் இருந்தும் சேவைகளைப் பெறுமாறு இணையத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

வங்கியியலும் இதிலிருந்து விதிவிலக்காக முடியுமா என்ன? இன்று அனைத்துப் பிரபலமான வங்கிகளும் தமது வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய சேவைகளான மின்சாரப் பயனீட்டுக்கட்டணம், ரயில் பயணச்சீட்டு, விமானப்பயணச்சீட்டு எனப் பல சேவைகளுக்கான கட்டணத்தை இணையத்தின் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும் பயன்பெறுமாறு தமது வங்கிக்கணக்கு வசதிகளை அமைத்துள்ளன.

இதற்காக தனது வங்கிக்கணக்குகளை இணையம் மூலமாகவே கையாளும் முறையையும் வங்கிகள் அறிமுகப்படுத்தி உள்ளன. பணத்தைக் கையால் தொடாமலே இன்றைய உலகில் சம்பாதிப்பதும் அதனைச் செலவு செய்வதும் பரவலாக நடந்து வருகிறது. இதில் இவ்வளவு வசதிகள் இருந்தாலும், இதில் சிக்கல்களும் இல்லாமல் இல்லை. நுட்பத்தினால் வசதிகள் வளரும்போது அதனைத் தவறாகப் பயன்படுத்தி பணத்தைக் கையாடல் செய்யும் தீயவர்களின் உத்தியும் அதனுடனேயே வளர்கிறது. எனவே வங்கிக் கணக்குகளுக்கான கடவுச் சொற்களையும் (Passwords) கடன் அட்டை (Credit card) எண்களையும் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும். அவை தீயவர்களின் கையில் சிக்கினால் அவற்றின் மூலம் பணக்கையாடல் செய்து திருட்டுகள் செய்யவும் வழிகோலுகிறது.

வங்கிகள் பலவும் தங்கள் வாடிக்கையாளர்கள் இந்த முறையில் பணபரிமாற்றம் செய்வதையும், வங்கி கணக்குகளை கையாள்வதையும் பெரிதும் ஊக்கப்படுத்தி வருகின்றன. இந்த இணைய வழி பரிமாற்றம் முதலீட்டு சந்தை வர்த்தகத்திலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த முறை மிக வசதியாய் இருப்பதால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் வங்கிகளில் நடைபெற்ற அடையாளத் திருட்டு (Identity Theft) மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வங்கிக் கணக்கு விபரங்களை (Account Details) மின்னஞ்சலில் கேட்டு வங்கி முகவரியிலிருந்து வருவது போல் பாவனை செய்து வரும் கடிதங்களுக்கு பதில் அனுப்பும் போதே இது போன்ற திருட்டுக்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற கடிதங்கள் வரும் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

எந்த ஒரு பொறுப்புள்ள வங்கியும் தனது வாடிக்கையாளரின் கடவுச் சொல்லைக் கேட்டு மின்மடல் அனுப்பவோ அல்லது தொலைபேசி மூலம் அழைப்போ செய்யாது. அவ்வாறு கடவுச் சொல் போன்ற தனிப்பட்ட தகவல்கள் (Private credentials) கோரப்பட்டால் நிச்சயம் அது திருட்டு முயற்சியாகத் தான் இருக்கும். எனவே இது போன்ற மின்மடல்கள், தொலைபேசி அழைப்புகள் வந்தால் கவனமாக இருக்கவேண்டும். இந்த வகை தகவல் திருட்டுக்களால் நாட்டின் முன்னேற்றம் பெரியளவில் பாதிக்கப்படுகிறது. இணைய வழி அரசு நிர்வாகம் மற்றும் இணைய வழி பணப்பரிமாற்றம் ஆகியவற்றின் நம்பகத்தன்மை முழுவதுமாகவே சந்தேகத்திற்கு உள்ளாகி விடுகிறது.

மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் பகிர்ந்து கொள்ளக் கூடாத தகவல்களான இவற்றை சிலர் இவை மறக்காமல் இருக்க காகிதங்களில் எழுதி வைத்துள்ளதையும் காணலாம். இதுவும் தவறான வழிமுறையாகும். இது தீயவர் எவரது கையில் சிக்கினால் ஆபத்து தான். கடினமான கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுப்பதுடன் அவற்றை மனனம் செய்து வைத்துக் கொள்ளுதலே சிறந்தது. இணைய உலாவு மையங்களில் (Browsing centers) இதுபோன்ற வங்கி தொடர்பான பரிமாற்றங்களைச் செய்யாமல் இருப்பதே சிறந்தது.

சில வங்கிகள் இது போன்ற கையாடல்களைத் தடுக்க பண அளவுக்கான உச்சவரம்பு விதித்துள்ளன. ஒவ்வொரு பரிமாற்றத்தையும் குறுஞ்செய்தி (SMS) மூலம் தெரிவிக்கும் வசதியையும் பெரும்பாலான வங்கிகள் அளிக்கின்றன. இதனையும் பயன்படுத்தி விழிப்புடன் இருக்க இயலும்.

இவை தவிர தொழில்நுட்ப வழியில் செய்யப்படும் கயமைத் தனங்களை (fraud) புகார் செய்ய காவல் துறையின் இணையக்குற்றப் புலனாய்வுப் (Cybercrime) பிரிவும், வங்கியின் தகவல் தொழில்நுட்பத் துறையும் இணைந்து செயலாற்ற வேண்டும்.

வங்கிகளும் அதிகப் பாதுகாப்பு நிறைந்த 128 படி சங்கேதக்குறியேற்றம் (128 bit encryption) கொண்ட மென்பொருள்களைப் பயன்படுத்துவதோடு வெரிசைன் (Verisign) தாவ்டே (thawte) போன்ற பிரபல இணைய எண்குறியேற்ற சான்றிதழ்களையும் (Digital certificates) பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் மன நிம்மதியுடன் வங்கிகளை இணையத்தில் பயன்படுத்த ஆவன செய்யவேண்டும்.

அதோடு நாம் வங்கியின் பாதுகாக்கப்பட்ட இணையப்பக்கத்தில் (secure webpage) தான் இருக்கிறோமா என்று பயனர்களும் கவனிக்க வேண்டும். (இதனை வங்கிகள் https:// என்று தொடங்கும் பக்கமாக வைத்திருக்கின்றன. இதனையும் கவனித்தல் அவசியம்.) நமது கடவுச்சொல்லை அடிக்கடி மாற்றிவர வேண்டும். நமது பணி முடிந்தவுடன் அனைத்து திரைகளையும் முடிவிட வேண்டும். மேலும் உலாவியின் (browser) தற்காலிக சேமிப்புப் பக்கங்களையும் (cache) அழித்துவிடவேண்டும்.

இதுபோன்ற சில குறிப்புகளை பின்பற்றுவதால் பாதுகாப்பான முறையில் இணைய வழி வங்கிக்கணக்கை பராமரிக்கவும், பாதுகாக்கவும், பயனீட்டவும் முடியும். பல இணைய வழி பணபரிமாற்றத்தை நம்பிக்கையுடன் கையாளவும் முடியும்.

- அபூஷைமா

Comments   
Musthak M.H
0 #1 Musthak M.H -0001-11-30 05:21
Assalamu Alaikum
A good informative and usefull article in Tamil with unfamiliar terms meaning given in brackets in English.
Alhamdulillah this will surely help to increase Tamil equivalent knowledge for not so unfamiliar terms by reading and remembering them with commonly used English terms.
Jazaakallahu Khair Br Abu Shaimah.
Musthak M.H
Quote | Report to administrator
ஜமால் முஹம்மது, தக்கலை.
0 #2 ஜமால் முஹம்மது, தக்கலை. -0001-11-30 05:21
மிகவும் பயனுள்ள கட்டுரை. வாசகர்கள் கீழ்கண்ட முக்கியமான விவரத்தினை மறக்காமல் நினைவிற்கொள்ள வேண்டும், நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும ் எடுத்துரைக்க வேண்டும்.
-------------------------------

//'எந்த ஒரு பொறுப்புள்ள வங்கியும் தனது வாடிக்கையாளரின் கடவுச் சொல்லைக் கேட்டு மின்மடல் அனுப்பவோ அல்லது தொலைபேசி மூலம் அழைப்போ செய்யாது.'//

--------------------------------
மேலும் இந்தக் கருத்து, பெருகிவரும் யாஹூமெயில்,ஹாட் மெயில்,ஜிமெயில் போன்ற இணையமடல் தளங்களைப் பயன்படுத்துவோரு ம் மிகவும் பொருத்தமானதாகும ்.

வங்கியில் பணம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்க வேண்டுமோ அது போல் மின்னஞ்சலில் பரிமாறும் சில முக்கிய செய்திகளும் பாதுகாக்கப்பட வேண்டியவைதானே.
Quote | Report to administrator
rajacycle@gmail.com
0 #3 rajacycle@gmail.com -0001-11-30 05:21
This Topic very use ful thankns for that asslamu alikkum
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்