முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறிவியல்-நுட்பம்

கவல் தொடர்பு என்பது ஒரு கலை. ஆக்கவும் அழிக்கவும் வல்ல உன்னதக் கலை. ‘என் ஜுஜ்ஜு, செல்லம்’ என்று பேசி காதல் வளர்ப்பதிலிருந்து போர் மூட்டி குண்டு போடுவதுவரை தகவல் தொடர்பு பிரமாண்ட சக்தி வாய்ந்த தொழில் நுட்பம்.

கணவன்-மனைவி, உறவு-நட்பு, வீடு-நாடு, வேட்பாளர்-வாக்காளர் என்று அனைவரும்-அனைத்தும் ஒன்றுடன் ஒன்று உறவாடுவதற்குத் தகவல் தொடர்பு அவசியம். ‘அது என்ன தகவல் தொடர்பு?’ என்று அவசரப்படுபவர்களுக்குச் சுருக்கமாகச் சொல்வதென்றால் ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ கேட்க வேண்டும்’ என்று பாட்டு பாடலாம். ஆனால் அவ்வளவு தானா அது?

மனிதன் உலகில் தோன்றிய போதே பேச்சையும் மொழியையும் இறைவன் பரிசளித்துவிட்டான். மனித இனம் வளர, வளர வார்த்தைகளும் மொழிகளும் கூடவே வளர ஆரம்பித்திருக்கின்றன. உரையாடல், எழுத்து என்று தகவல் பரிமாற்றம் புது உருவெடுத்தது. அண்மையில் இருப்பவர்களிடம் தகவலைச் சொல்லப் பேச்சும் தொலைவில் இருப்பவர்களுக்குத் தெரிவிக்க எழுத்தும் என்ற நிலையை எட்டியதும் சுவரில் வரைந்து, கல்வெட்டில் செதுக்கி, புறா காலில் கட்டி … என்று தகவல் தொடர்புக்கு இறக்கை முளைக்க ஆரம்பித்து விட்டது. அதற்கான சாதனங்கள் உருப்பெறத் தொடங்கிப் பெருகின.

எந்தெந்தக் காலத்தில் என்னென்ன முன்னேற்றம் ஏற்பட்டது என்பதையெல்லாம் வேக முன்னோக்கி (fast forward) பொத்தானை அழுத்திக் கடந்து இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு வந்துவிட்டால், கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் மனித இனம் இத் துறையில் அடைந்துள்ள நவீன வளர்ச்சி மூச்சு முட்டும் பிரமிப்பு! ‘டிரிங், டிரிங்’ காலத்துத் தொலைபேசி தொடங்கி வானொலி, தொலைகாட்சி, கணினி என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்ப் புதுப்புது கண்டுபிடிப்புகள் பல்கிப் பெருகி இன்று ஒவ்வொருவர் உள்ளங்கையிலும் உலகம்.

சோஷியல் மீடியாவுக்கான மென்பொருள்களும் செயல்படும் தளங்களும் வெள்ளைக்கார கார்ப்பரேட் கர்ண பிரபுக்களால் இலவசமாகிப்போய் அனைவரும் தம்மளவில் ஒரு மீடியா சேனலாகவே மாறிவிட வழி வகுத்துவிட்டது தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானம்.

விளைவு?

மூளை கிரகிக்கும் சக்திக்கு அப்பாற்பட்ட வகையில் நொடிக்குப் பல்லாயிரத் தகவல்கள், செய்திகள், துணுக்குகள், வம்புகள், அக்கப்போர்கள் என்று கரை புரண்டோடுகிறது இணையவெளி. இணையம் முடங்கினால், மது கிடைக்காத குடிகாரர்களின் கை, கால்கள் நடுங்குவதைப்போல் வெலவெலக்கும் நிலையில் உள்ளது இன்றைய ‘அடிக்ட்’ உலகம். இத் தொழில் நுட்பத்தின் நற்பயன்களையும் தீமைகளையும் அலசும் பொறுப்பை ஆராய்ச்சியாளர்கள், சிந்தனையாளர்கள் வசம் ஒப்படைத்துவிடுவோம். நம்மளவில் இந்த நவீனத் தகவல் தொடர்பைச் செம்மையான வகையில் பயன்படுத்த என்ன செய்யலாம், செய்யக்கூடாது என்பதைக் கவனித்துக் குறித்து வைத்துக்கொண்டால், சுற்றமும் நட்பும் சூழ ஆரோக்கியமாய் வாழ வழிவகை ஏற்படலாம்; தம்பதியரிடையே காதல் பெருகலாம். பேராசைக்கு என்ன தடை? நம் நாடேகூட சுபிட்சமடையலாம்!

நேருக்கு நேர் தகவல் பரிமாறிக்கொள்ளும்போது வெறுமே வார்த்தைகள் மட்டும் அப்பணியைச் செய்வதில்லை. நம்முடைய தொணி, அங்க அசைவு, பார்வை, முக பாவம் என்று பல விஷயங்கள் அதில் அங்கம் வகிக்கின்றன. “என்னங்க” என்று இல்லத்தரசி அழைக்கும் குரலுக்கு ஆயிரம் அர்த்தம் இருப்பதில்லையா. அதைப்போலத்தான். ஆனால் எழுதும்போது அப்படியா? கருத்தும் நோக்கமும் உன்னதமானதாக இருப்பினும் எழுதும் வகையில்தானே அதன் வெற்றி அடங்கியிருக்கிறது. வார்த்தைகளும் வாக்கியங்களும் அதன் அமைப்பும் அதற்குப் பிரதானமல்லவா? அதனால்தான் சிலரின் எழுத்துகள் கொண்டாடப்படுகின்றன. மற்றவர்களது எழுத்துகள் கவனத்தைக் கவர மறுக்கின்றன.

நிர்வாக இயலிலும் பத்திரிகைத் துறையிலும் எழுத்து வெகு முக்கியம். அதில் பயிற்சி அளிப்பதற்காகவே பல்கலைக்கழகங்கள் பாடத் திட்டங்களை உருவாக்கி வைத்துள்ளன. அத்துறை வல்லுநர்கள் ஏராளமான நூல்களை எழுதி வைத்துள்ளனர். ‘அப்படியெல்லாமா படித்துவிட்டு பத்திரிகைக்கும் ஊடகத்துறைக்கும் வருகிறார்கள்?’ என்று இடையில் குறுக்கிட்டு அபத்தமாய் வினா எழுப்பக் கூடாது. மழைக்கும் அவர்கள் அப்பக்கம் ஒதுங்குவதில்லை என்பதற்கு,  செய்திகளுக்கு அவர்கள் இடும் தலைப்பே போதுமான சான்று. அது தனி அலசல் சமாச்சாரம். நாம் நம் தகவல் தொடர்புக்கு வந்து விடுவோம்.

நவீன தகவல் நுட்பத்தில் வாக்கியங்கள் சுருக்கெழுத்தாய் மாறிப்போய், தட்டச்சவும் வாசிக்கவும் சோம்பலுறும் இன்றைய தலைமுறையினர், தரமான தகவல் பரிமாற்றத்திற்கு என்ன செய்யலாம், செய்யக்கூடாது என்பது இக் குறுந்தொடரின் சிறு நோக்கம். ஏனெனில், அறம் வளர்க்க இயலாவிட்டாலும் புறம் பேசி தீவினை வளர்வதைத் தடுக்கவாவது அது ஓரளவேனும் உதவுமில்லையா?

எனவே முதலில், தகவல் பரிமாற்றத்தில் எவையெல்லாம் கூடாது, ஒவ்வாது என்பதைப் பார்ப்போம்.

oOo

(தொடரும்)

-நூருத்தீன்

Comments   

நட்புடன் ஜமால்
0 #1 நட்புடன் ஜமால் 2017-03-30 12:13
மிக அழகா எளிமையா சொல்லிட்டீங்க
.
மொழி - மிக பெரிய ஆயுதம், அது எவ்வகையாயிலும் சரியே.
.
உடல் மொழியோடு கூடிய பேச்சுகள், எளிதில் கவருகின்றன என்பது தான் நிதர்சனம்.
.
எழுத்தில் ஓர் அபூர்வமும் நிகழ்வதுண்டு, சம்பவ / சந்தர்ப்பத்தை கிரகித்து விட்டால் ( எழுத்தாளரின் சாமர்த்தியம்) எழுதப்பட்ட சம்பாஷனைகளில் ஏற்ற இறக்கங்களோடு படித்து விட முடிகின்றது.
.
கட்டுரையை முழுமையாக தொடர் ஆர்வத்தோடு ...
Quote | Report to administrator
AASHIQ AHAMED
0 #2 AASHIQ AHAMED 2017-03-30 18:57
அருமை சகோ. தொடர்ந்து படிக்க ஆவலுடன் உள்ளேன்.
Quote | Report to administrator
Indian
0 #3 Indian 2017-04-01 10:01
மனிதனால் இன்று நினைத்த மாத்திரத்தில் உலகின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலையில் இருப்பவருடன் பேச முடியும்.

அண்ணல் நபிக்கு(ஸல்) வஹி எனும் தகவல் தொடர்பு கலை மூலம் திருக்குரானை அல்லாஹ் அருளினான் என்பதை மறுக்க முடியுமா?.
Quote | Report to administrator
அபு பக்கர்
0 #4 அபு பக்கர் 2017-04-02 12:07
ஓய்வு பெற்ற எனது தந்தை, தமிழ் குரானை யூட்யூப்பிலிருந ்து டவுன்லோட் செய்து நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கேட்கிறார். திருக்குரான் பற்றி இன்டெர்னெட்டில் ஆராய்ச்சி செய்கிறார். மார்க்க விஷயங்கள் பற்றி அறிந்து கொள்ள அக்கம் பக்கத்தார் மற்றும் உறவினர் அவரை தேடி வருகின்றனர்.

எனது தந்தை அடிக்கடி சொல்வது. "மார்க்கத்தை பற்றி அறிந்து கொள்ள இனி மதரஸாவை தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. உலகிலேயே மிகச்சிறந்த மதரஸா யூட்யூப். உலகின் தலை சிறந்த மார்க்க அறிஞர்கள் அனைவரும் அங்கே வருகின்றனர்".
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்