முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

மொழியியல்

(2) 3.3. வினை வகைகள்

பகுபத இலக்கணத்தைத் தொல்காப்பியம் விரித்துக் கூறாமல், "மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா" (உரியியல் 96) எனக் கூறி முடித்துக் கொண்டது. கடந்த பாடத்தில் நாம் படித்த 'செய்' வாய்பாடு, வினைப் பகுபதங்களுக்காக நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவரால் இயற்றப்பட்டதாகும். நன்னூலுக்கு உரை எழுதிய ஆறுமுக நாவலர், "இந் நூலாசிரியர் வடநூல் மேற்கோளாக ஒரு மொழியை விதந்து பகாப்பதம் பகுபதமெனக் காரணப் பெயர் தாமே இட்டு, எழுத்தே என்னும் சூத்திரம்முதல் இதுவரையும் பகாப்பதம் பகுபதம் எனப் பலதரம் சொல்லுதல் தன்குறி வழக்கம் மிக எடுத்துரைத்தல் என்னும் உத்தி" எனக் குறிப்பிடுகிறார். பதவியலின் பிற கூறுகளை நாம் உரிய இடங்களில் பிற்பாடு படிக்க இருக்கிறோம்.

இனி, பாடம் 15இன் பட்டியலில் உள்ள வினைவகைகளைப் பார்ப்போம்:

(2) 3.3.1 ஏவல் வினை

(2) 3.3.2 தெரிநிலை முற்றுவினை

வரிசை

ஏவல் வினை

தெரிநிலை முற்றுவினை

01)

நட

நடந்தான்

02)

வா

வந்தான்

03)

மடி

மடிந்தான்

04)

சீ

சீத்தான் (சீவினான்)

05)

விடு

விட்டான்

06)

கூ

கூவினான்

07)

வே

வெந்தான்

08)

வை

வைத்தான்

09)

நொ

நொந்தான்

10)

போ

போனான்

11)

வௌ

வௌவினான் (கவர்ந்தான்)

11)

உரிஞ்

உரிஞினான் (தேய்த்தான்)

13)

உண்

உண்டான்

14)

பொருந்

பொருநினான் (பொருந்தினான்)

15)

திரும்

திருமினான் (திரும்பினான்)

16)

தின்

தின்றான்

17)

தேய்

தேய்ந்தான்

18)

பாய்

பாய்ந்தான்

19)

செல்

சென்றான்

20)

வவ்

வவ்வினான் (பறித்தான்)

21)

வாழ்

வாழ்ந்தான்

22)

கேள்

கேட்டான்

23)

அஃகு

அஃகினான் (சுருங்கினான்)

மேற்காணும் பட்டியலில் ஏவல் வினை(பகுதி)யோடு ஆண்பால் ஒருமைக்கான 'ஆன்' விகுதி பெற்றத் தெரிநிலை முற்றுவினை ஆகிய இருவகை வினைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் 'வௌவ்வினான்', என்பதற்கு 'வவ்வினான்' என்பது போலியாக இருக்கலாம். ஏனெனில், இரண்டுக்கும் "கவர்ந்தான்/பறித்தான்" என்பதே பொருள்.

சான்றுகள்:

என்நெஞ்சும், நாணும், நலனும் இவையெல்லாம்
மன்னன் புனல்நாடன் வௌவினான் என்னே
(முத்தொள்ளாயிரம் 37).

சதமகன் தனைச் சம்பரன் எனும்
மதமகன் துரந்து அரசு வவ்வினான்
(கம்பராமாயணம் - கையடைப் படலம் 24-7).

குறிப்பு:

பழந்தமிழ் வழக்கின்படி 'நட' எனும் ஏவற் சொல்லை 'நடவாய்' என்றும் 'வா' என்பதை 'வாராய்' என்றும் எழுதுவர். இவ்விரு சொற்களிலும் விகுதியாய் அமைந்துள்ள 'ஆய்' என்பது புணர்ந்து கெட்டு, 'நட' என்றும் 'வா' என்றும் சுருங்கியது எனக் கூறுவர். 'நடந்தான்' எனும் முற்றுவினையைப் பிரித்தால், நட+த்+த்+ஆன் என நான்கு கூற்களாகப் பிரியும். 'நடந்தனன்' எனும் முற்றுவினை, நட+த்+த்+அன்+அன் என ஐந்து கூறுகளாகப் பிரிக்கப்படும். முதலாவதில் 'ஆன்' விகுதியும் இரண்டாவதில் 'அன்' விகுதியும் வரும். இரண்டிலும் உள்ள 'த்' இடைநிலை, கடந்தகாலத்தைத் தெளிவாகத் தெரிவிக்கிறது. எனவே, 'தெரிநிலை' என்றானது. குறிப்பு முற்றுவினையில் காலம் உணர்த்தும் இடைநிலை இடம்பெறாது.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

- அதி. அழகு

< பகுதி-1 | பகுதி-17 >

Comments   
கதிரேசன்
0 #1 கதிரேசன் 2011-10-25 20:52
அற்புதமான தொகுப்பு.
இதற்குரிய அடுத்த பகுதிகளுக்கான தொடுப்புக்களைத் தாருங்கள்.
Quote | Report to administrator
SALEM
0 #2 SALEM 2012-08-05 05:41
அற்புதமான தொகுப்பு
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்