முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

இஸ்லாம்

பிரயாணத்தின் போது தொழுகையை சுருக்கித் தொழும் விஷயத்தில் பொதுவாக இரு விஷயங்களில் மக்களிடையே பெருத்த குழப்பங்கள் நிலவுகின்றன. அவை:

1.பிரயாணம் குறைந்த பட்சம் எவ்வளவு தூரம் இருப்பின் தொழுகையை சுருக்கித் தொழலாம்?

2.பிரயாணத்தின் பொழுது ஒரு ஊரில் தங்க நேர்ந்தால் அதிக பட்சம் எத்தனை நாட்கள் அங்கு தொழுகையை சுருக்கித் தொழ அனுமதியுண்டு? என்பவையாகும்.

இவற்றைக் குறித்து ஆய்வதற்கு முன் முதலில் தொழுகையை எப்பொழுதெல்லாம் சுருக்கித் தொழ மார்க்கத்தில் அனுமதி உள்ளது என்பதைக் குறித்து அறிந்து கொள்வது மிக அவசியமாகும்.

தொழுகையை சுருக்கித் தொழ மார்க்கம் அனுமதிக்கும் தருணங்கள்:

1.எதிரிகளால் ஏதாவது தீங்கு நேரலாம் என்ற அச்சம் நிலவும் சூழல்களில்.

2. பல்வேறு காரணங்களுக்காக நிரந்தரமாக வசிக்கும் இடத்திலிருந்து வெளியூர்களுக்கு பிரயாணம் மேற்கொள்ளும் சூழல்களில்.

நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது,(மற்றும்) காஃபிர்கள் உங்களுக்கு விஷமம் செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அப்பொழுது நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது....(அல்குர்ஆன் 4:101)

இவ்விரு தருணங்களில் கடமையான தொழுகைகளை இரு ரக்அத்துக்களாக சுருக்கித் தொழ மார்க்கம் அனுமதிக்கின்றது.

இதில் முதல் விஷயத்தைப் பொறுத்தவரை பொதுவாக போர்காலங்களில் எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் விதத்தில் அவ்விடத்தில் ஏற்படும் சிரமங்களை கணக்கில் கொண்டு இந்த அனுமதி வழங்கப்படுகின்றது.

இதற்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் பல்வேறு உதாரணங்களை காண முடியும்.

பத்ரு, தபூக் போன்ற யுத்த தருணங்களில் நபி(ஸல்) அவர்கள் தொழுகையை சுருக்கித் தொழ வைத்ததாக பல்வேறு அறிவிப்புக்கள் வருகின்றன.

பிரயாண வேளைகளில் ஏற்படும் சிரமங்களை கவனத்தில் கொண்டு இதே சலுகையை இஸ்லாம் பிரயாணங்களின் போதும் வழங்குகின்றது.

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்தில் இதற்கான நேரடி ஆதாரம் இல்லாத போதிலும் நபி(ஸல்) அவர்கள் தனது போர் அல்லாத மற்ற பிரயாண வேளைகளின் போதும், அச்சமில்லாத காலங்களில் பிரயாணம் செய்யும் பொழுதும் தொழுகைகளை சுருக்கித் தொழுததையும் மற்றவர்களுக்கு அவ்வாறு தொழவைத்ததையும் காணமுடிகின்றது.

நபி(ஸல்) அவர்கள் மினாவில் எதிரிகளைப் பற்றி எந்த அச்சமும் இல்லாத நிலையில் இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அறிவிப்பாளர்: ஹாரிஸா இப்னு வஹப்(ரலி) , நூல்: புகாரி(1083).

கஸர் தொழுகை தொழும் விதம்:

நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை இரண்டு ரக்அத்களாக சுருக்குவது தான் கஸர் தொழுகையாகும். இதன் படி லுஹர், அஸர் மற்றும் இஷா நேரத் தொழுகைகளை இரு ரக்அத்களாக சுருக்கித் தொழ வேண்டும். ஃபஜர் மற்றும் மக்ரிப் தொழுகைகளை சுருக்கித் தொழ அனுமதியில்லை.

தொழுகையைச் சுருக்கித் தொழத் தேவையான குறைந்த பட்ச தொலைவு:

இவ்விஷயத்தில் ஹதீஸ் அறிவிப்பாளர்களிடையேயும் அறிஞர்களிடையேயும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

ஸஹாபாக்கள் பலரும் பல்வேறு விதத்தில் தூர அளவை நிச்சயித்திருந்ததாக அறிவிப்புகளில் காணக்கிடைக்கின்றன. கஸர் தொழுகைக்கான குறைந்த பட்ச தூரத்தைக் காண்பதற்கு முன் அவற்றில் சில முக்கிய அறிவிப்புக்களை இங்கு காண்போம்.

அலி(ரலி) அவர்கள் (வெளியூர்) புறப்பட்டுச் செல்லும்போது (உள்ளூரிலுள்ள) வீடுகள் கண்களுக்குத் தெரியும் போதே கஸருச் செய்தார்கள். திரும்பி வந்தபோது 'இதோ கூஃபா வந்துவிட்டது' என்று அவர்களிடம் கூறப்பட்டது. அப்போது அவர்கள் 'இல்லை! நாம் ஊருக்குள் நுழையும் வரை (கஸ்ருச் செய்வோம்) என்று குறிப்பிட்டார்கள். இச்செய்தி புகாரி ஹதீஸ் கிரந்தத்தில் காணப்படுகின்றது.

இங்கு தூரம் என்பது நிரந்தரமாக வசிக்கும் வீடு அமைந்திருக்கும் ஊரின் எல்லை என்று நபி(ஸல்) அவர்களின் அன்பு மருமகனும் நான்காம் கலீஃபாவுமான அலி(ரலி) அவர்கள் விளங்கியிருந்ததாக அறியமுடிகின்றது.

இதே போன்றதொரு அறிவிப்பை பிரபல நபித்தோழர் அனஸ்(ரலி) அவர்களும் அறிவிக்கின்றார்கள்.

"நான் நபி(ஸல்) அவர்களுடன் லுஹர்த் தொழுகையை மதீனாவில் நான்கு ரக்அத்களாகத் தொழுதேன். துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதேன்." அறிவிப்பாளர்: அனஸ்(ரலி), நூல்:புகாரி(1089)

இவ்விரு அறிவிப்புகளிலும் வரும் கூஃபா மற்றும் துல்ஹுலைஃபா என்ற இரு ஊர்களும் மதீனாவின் பகுதிகளாகும். மதீனாவில் நபி(ஸல்) அவர்களின் வீடு அமைந்திருக்கும் மஸ்ஜிதுந் நபவியிலிருந்து சற்று தூரத்தில் அமைந்துள்ள துல்ஹுலைஃபா அடைந்ததும் நபி(ஸல்) அவர்கள் கஸர் தொழுததும் அதுபோன்றே மற்றொரு பகுதியான கூஃபாவில் இருக்கும் பொழுதும் நபித்தோழர் அலி(ரலி) அவர்கள் தொழுகையை சுருக்கியே தொழுததும், கஸர் தொழுகையின் பொதுவான தூரமாக ஊர் எல்லையை அறியத் தருகின்றன.

தற்காலத்தில் ஓர் ஊரின் எல்லையை கஸர் தொழுகையின் குறைந்த பட்ச பொதுவான தூரமாக நிர்ணயித்தால் அது இடத்திற்கு இடம் வேறுபட வாய்ப்புள்ளதால் மக்களிடையே அது அதிக குழப்பத்தை ஏற்படுத்தலாம். மேலும் தற்காலத்திய கணக்கீட்டு அளவுமுறைகளை வைத்து குறைந்த பட்ச தூரத்தை நிர்ணயிப்பது அவசியமாகின்றது.

< முன்னுரை | பகுதி 2 இன்ஷா அல்லாஹ் விரைவில்.

Comments   

Iniya Thoozhan
0 #1 Iniya Thoozhan -0001-11-30 05:21
Very useful message.
Eagerly waiting for the parts 2.

PLEASE DEFINE THE MINMUM DISTANCE CLEARLY WITHOUT ANY CONFUSION.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்