முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

இஸ்லாம்

தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாகக் காண்பிக்கப்படும் ஹதீஸ்களில் மிக முக்கியமானது நபித்தோழரும் நபிகளாரின் பெரிய தந்தையுமான அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் போதித்ததாக வரும் ஹதீஸ்களாகும். இந்த ஹதீஸை அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப்(ரலி) அவர்களும் பிரபல நபித்தோழர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் அறிவிப்பதாக இரு செய்திகள் வருகின்றன. அவற்றில் இப்பகுதியில் அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப்(ரலி) அவர்கள் அறிவிப்பதாக வரும் செய்தியினையும் அதனைக் குறித்த ஹதீஸ் கலை அறிஞர்களின் கூற்றையும் பார்ப்போம்.


"உமக்கு அன்பளிப்பு வழங்கவா? உபகாரம் செய்யவா? தானம் செய்யவா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இதற்கு முன்னர் யாருக்கும் வழங்காத உலகப் பொருளிலிருந்து ஏதாவது ஒன்றைத் தருவார்கள் என்று நான் எண்ணினேன் .

அப்போது உனக்கு நான் கற்றுத் தருவதை நான்கு ரக்அத்தில் கூறினால் அல்லாஹ் உன்னை மன்னிப்பான். (தொழுகையை) அல்லாஹு அக்பர் என்று கூறி ஆரம்பம் செய். பிறகு பாத்திஹா அத்தியாயத்தையும் மற்றொரு அத்தியாயத்தையும் ஓது. பின்னர் ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று 15 தடவை கூறு. நீ ருகூவு செய்யும் போது இதைப் போன்று 10 தடவை கூறு. ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறும் போது அதைப் போன்று 10 தடவை கூறு. ஸஜ்தா செய்யும் போது அதைப் போன்று 10 தடவைக் கூறு. ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தி நிலைக்கு வருவதற்கு முன்னால் அதைப் போன்று 10 தடவைக் கூறு. பின்னர் இரண்டாவது ரக்அத்தில் முதல் ரக்அத்தில் செய்ததைப் போன்று செய் . மேலும் இருப்பில் அமரும் போது அத்தஹிய்யாத் ஓதுவதற்கு முன்னால் அதனை 10 தடவை சொல். இதைப் போன்று மீதமுள்ள இரண்டு ரக்அத்திலும் செய்து கொள்.

(இத்தொழுகையை) ஒவ்வொரு நாளும் செய்ய முடியுமானால் (அவ்வாறே செய்) முடியவில்லையானால் வாரத்தில் ஒரு முறை. அதுவும் முடியவில்லையானால் மாதத்தில் ஒரு முறை. அதுவும் முடியவில்லையானால் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை. அதுவும் முடியவில்லையானால் வருடத்தில் ஒரு முறை (தொழுது கொள் )" (என நபி(ஸல்) அவர்கள் எனக்கு போதித்தார்கள்.)

அறிவிப்பவர்: அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி),   நூல்: அல்மவ்லூஆத் இப்னுல் ஜவ்ஸீ ( பக்கம்
:143).

இச்செய்தியில் ஸதகா பின் யஸீத் என்பவர் இடம் பெறுகிறார். இவரை பலவீனமானவர் என பல ஹதீஸ் கலை அறிஞர்கள் கருத்து கூறியுள்ளனர்.

"இவர் பைத்துல் முகத்தஸ் பள்ளியின் பக்கத்தில் வாழ்ந்தவர், இவருடைய ஹதீஸ்கள் பலவீனமானவையாகும்" என்று இமாம் அஹ்மத் அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: தாரீகுல் கபீர், பாகம்:4,பக்கம்:295).

"ஸதகா பின் யஸீத் என்பவர் பலவீனமானவர்" என்று இமாம் நஸ யி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.  (நூல் : அல்லுஃபாவு வல்மத்ரூக்கீன், பாகம் :1, பக்கம் :58)

"ஸதகா பின் யஸீத் அல்குரஸானீ என்பவர் ஹதீஸ் கலையில் மறுக்கப்பட்டவர்" என்று இமாம் புகாரி அவர்கள் குறிப்பிட்டார்கள்.  (நூல்: அல்காமில் ஃபீ லுஅஃபாயிர் ரிஜால், பாகம் :4, பக்கம் :78)

"ஸதகா பின் யஸீத் அல்குராஸானீ என்பவர் ஹதீஸ் கலையில் மறுக்கப்பட்டவர்" என்று இமாம் புகாரி அவர்கள் குறிப்பிட்டதாக ஆதம் பின் மூஸா அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: லுஅஃபாவுல் உகைலீ , பாகம்:2, பக்கம்:206)

"ஸதகா பின் யஸீத் என்பவர் தன்னிடம் குறைவான செய்திகள் இருப்பதால், நபர் விடுபட்ட (பலவீனமான) பல செய்திகளை நம்பகமானவர் பெயரைப் பயன்படுத்தி அறிவிப்பவர். அவருடைய செய்திகளில் ஈடுபடுவதும் அதை ஆதாரமாகக் கொள்வதும் கூடாது" என இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: அல்மஜ்ரூஹீன், பாகம் 1, பக்கம் 374)

தஸ்பீஹ் தொழுகை தொடர்பான இச்செய்தியினை நபிகள் நாயகத்தின் பெரிய தந்தையும் நெருங்கிய நபித்தோழருமான அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப்(ரலி) அவர்கள் அறிவிப்பதாக வரும் ஒரே காரணத்திற்காக ஏற்றுக் கொள்வது சரியாகாது. தஸ்பீஹ் தொழுகைக்கு இந்த ஹதீஸை ஆதாரமாக காண்பிப்பவர்கள் இதனை ஒரு காரணமாக எடுத்திருப்பதற்கு சாத்தியம் அதிகமாக இருக்கிறது. ஆனால் பல பிரபல ஹதீஸ்கலை அறிஞர்களும் ஹதீஸ்களைத் தொகுக்கும் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த பல இமாம்களும் இச்செய்தியில் இடம் பெறும் ஸதகா பின் யஸீத் என்பவரைப் பற்றி குறிப்பிட்டிருக்கும் மேற்கண்ட ஆட்சேபணைகள் கருத்தில் கொள்ளத்தக்கவைகளாகும்.

அதிலும் முக்கியமாக இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் இவரைக் குறித்து, "நபர் விடுபட்ட பல செய்திகளை நம்பகமானவர் பெயரைப் பயன்படுத்தி அறிவிப்பவர்" என்று கூறிய கருத்து ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டியதாகும்.

இந்த செய்தியைப் பொறுத்தவரை சந்தேகம் எழுப்பாமல் நம்புவதற்கு சாத்தியமுள்ள நபி(ஸல்) அவர்களின் தந்தையின் பெயர் இச்செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றே கருத வேண்டியுள்ளது. ஹதீஸ்கலையில் நிபுணத்துவமும் நல்ல பாண்டித்தியமும் உள்ள பிரபலமான பல அறிஞர்கள் இந்த ஹதீஸில் இடம் பெறும் அறிவிப்பாளரை குறித்து பலமான ஆட்சேபணை தெரிவித்துள்ளதால் தஸ்பீஹ் தொழுகை தொழுவதற்கு இச்செய்தியையும் உறுதியான ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

இன்னும் வரும், இன்ஷா அல்லாஹ்.

< பகுதி-6 | பகுதி 8 >

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்