முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

இஸ்லாம்

"History makes it clear however, that the legend of fanatical Muslims sweeping through the world and forcing Islam at the point of the sword upon conquered races is one of the most fantastically absurd myth that historians have ever repeated."
---- De Lacy O’Leary "Islam at the Crossroads" (London, 1923, page 8).

இறைத் தூதரின் காலத்திலேயே அன்றைய அரேபியப் பிரதேசம் முழுவதிலும் இஸ்லாம் நிறைந்து பரவிவிட்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் பைசாந்தியமும் (கிழக்கு ரோமப்பேரரசு), பாரசீகமும் தன்னிகரில்லாத பெரும் சாம்ராஜ்ஜியங்களாக விளங்கின. பெருமானார் அவர்கள் ரோமச் சக்கரவர்த்தி ஹிராக்ளியஸ் (Heraclius), பாரசீக மன்னன் கிஸ்ரா (Chosroes II), அபீசீனிய அரசர் நஜ்ஜாஷி (Negus) உட்பட உலகத் தலைவர்களுக்கல்லாம் இஸ்லாமிய அழைப்பு விடுத்துத் தூதனுப்பினார்கள்.

பெருமானாரின் மறைவிற்குப்பின் (கி.பி 632) இஸ்லாத்தின் ஒளி, இருட்டை விரட்டும் அதிகாலைச் சூரியனைப்போல் உலகம் முழுக்க வியாபிக்கத் தொடங்கியது. “உலகம் முழுக்க” என்பது அலங்கார வார்த்தையல்ல. முதல் முப்பது வருடங்களில் - அதாவது - ஒரு தலைமுறைக்கு உள்ளாகவே பாரசீக சாம்ராஜ்ஜியம், சிரியா, எகிப்து உட்பட்ட வட ஆப்பிரிக்கா மற்றும் அதன் இடைப்பட்ட பகுதிகள் இஸ்லாத்தின் கீழ் வந்துவிட்டன.

வரலாற்றில் எண்பது வருடங்கள் என்பது கண்மூடித் திறப்பதற்கும் குறைவான நேரம். எண்பது வருடங்களுக்குள்ளாகவே துருக்கி (637), சிரியா, பாலஸ்தீன் (638), அலெக்ஸாந்திரியா (642), கார்த்தேஜ் (துனீசியா, 695), வட ஆப்பிரிக்கா, பாரசீகம் (650), சைப்ரஸ், தெற்கு இத்தாலி, ஸ்பெயின் (711) ஆகிய கிறிஸ்தவ பிரதேசங்கள் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டன.

அமெரிக்க எழுத்தாளர் James A. Michener (1907-1997) கூற்றுப்படி “இஸ்லாம் பரவியதைப் போன்று சரித்திரத்தில் எந்த மதமும் அவ்வளவு வேகமாகப் பரவியதில்லை. மேற்குலகு, இந்த வேகமான வளர்ச்சியை வாளால் வளர்க்கப்பட்டது என்று தவறாக விமர்சித்தாலும் பிற்கால அறிஞர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை.” [Islam - The Misunderstood Religion, Readers' Digest (American Edition) May 1955].

மானுடவரலாற்றில் அதுவரை நிகழ்ந்திராத இந்தச் சரித்திர அற்புதத்திற்கான காரணங்களாக வரலாற்று ஆசிரியர்கள் பலரும் பலவாறான கருத்துகளைக் கொண்டிருந்தாலும் இஸ்லாத்தின் மேலான தூய விழுமியங்களை யாராலும் புறம் தள்ள இயலவில்லை. "பிரித்தானியாவின் நிகரற்ற சரித்திர ஆசிரியர்" என்று அவரது சம காலத்தில் கருத்தப்பட்ட சர். எட்வர்ட் கிப்பன் எழுதுகிறார் “சௌராஷ்டிரரின் மதக் கோட்பாடுகளைவிட தூயதாகவும், மோசேயின் சட்டங்களைவிட எளிமையானதாகவும், ஏழாம் நூற்றாண்டின் மர்மங்களும் மூட நம்பிக்கைகளும் நிறைந்து ஆகமங்களை ஏமாற்றிக் கொண்டிருந்த பல சமயங்களைவிடவும் முகம்மதுவின் மார்க்கம் மேலானதாக இருந்தது” (The Decline and Fall of the Roman Empire, vol. 5. p. 48).

இஸ்லாத்தின் பரவல் கிறிஸ்தவத்தின் மீது காத்திரமான பல விளைவுகளை ஏற்படுத்தியது. ஜெருசேலம், அலெக்சாந்திரியா மற்றும் துருக்கியின் அந்தியோகியா ஆகிய மூன்று புகழ்பெற்ற புரதான சபைகள் வீழ்ந்ததோடு மக்களின் மீதான சபைகளின் கட்டுப்பாடுகள் நீர்த்துப் போயின. அடுத்த ஏழு நூற்றண்டுகளுக்கு முஸ்லிம்களை ஆட்சி பீடத்திலிருந்து எவராலும் அகற்ற முடியவில்லை என்பது மட்டுமில்லாமல் ஐரோப்பா 'இருண்டகாலத்திலிருந்து' மீண்டுவரவே பல நூற்றாண்டுகள் பிடித்தது1.

இஸ்லாம் அரேபியாவில் நிலைநாட்டிக் காட்டிய மகத்தான சமூக நீதியும், சமூக முன்னேற்றமும் அந்தக்காலத்தில் உலகத்தின் வேறெந்த மூலையிலும் கேட்டிராதவை2. தாழ்ந்த குலத்தில் பிறந்த பிலால்(ரலி) அவர்களை, செல்வமும் செருக்கும் குலப்பெருமையும் நிறைந்த அபூசுஃப்யானுக்குச் சரிசமமாக, ஏன் ஒருபடி மேலாகவே வைத்து அழகு பார்த்தது இஸ்லாம். ஆண்பிள்ளைகள் போதுமென்று பெண்குழந்தைகளை உயிரோடு புதைத்த அநியாயத்திற்கு சமாதி கட்டியது2.

இஸ்லாம் இறையியல் செய்தியை மட்டும் கொண்டு வரவில்லை. கூடவே சமூக நீதியையும் மனிதபிமானத்தையும் கொண்டுவந்தது2. இஸ்லாம் பயணித்த இடங்களிலெல்லாம் மகத்தான மாற்றங்களும் கூடவே பயணித்ததனால் இஸ்லாத்தின் பரவல் எளிதாயிற்று. குர்ஆனின் மொழியும் சட்டங்களும் சாமர்கண்டிலும்(ரஷ்யா) செவிலியிலும்(ஸ்பெயின்) ஒரே அர்த்தத்துடனும் பக்தியுடனும் படிக்கப்பட்டன. மூரியர்களும் (முஸ்லிம்கள் அன்று மொரோக்காவிலிருந்து ஸ்பெயினுக்குக் சென்றதால் மூரியர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்) இந்தியர்களும் மக்காவின் ஹஜ்ஜுக் கடமையின்போது சகோதரத்துவத்துடன் தழுவிக் கொண்டார்கள்3.

அமெரிக்க வரலாற்று ஆய்வாளர்களுள் ஒருவரான இரா லாபிடஸ்4 இஸ்லாத்தின் வேகமான பரவல் குறித்து இப்படி எழுதுகிறார்: “மக்கள் ஏன் இப்படி இஸ்லாத்தைத் தழுவினார்கள் என்ற வினா எப்போதும் ஆச்சரிய உணர்வை ஏற்படுத்துகிறது! கட்டாய மதமாற்றம் இஸ்லாமிய ஆட்சியாளர்களிடம அரிதாகவே காணப்பட்டது. மக்களை மதம் மாற்றுவதைவிட ஆள்வதையே அவர்கள் விரும்பினார்கள். மக்கள் இஸ்லாத்திற்கு மாறுவது தானாகவே நடந்து கொண்டிருந்தது. புதிய மத நம்பிக்கைக்கு மாறினாலும் தங்களின் கலாச்சார அடையாளங்களோடு ஆழ்ந்த பற்றும் தொடர்பும் வைத்துக் கொள்ள அவர்களால் முடிந்தது.” இந்த உண்மையின் மிகச் சிறந்த உதாரணமாக உலகின் பல்வேறு  கலாச்சாரங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை இன்றும் ஹஜ்ஜுக்குச் செல்லும்போது மக்காவில் பார்க்கலாம்.  

அரேபிய ஆட்சியாளர்கள், பாரசீக மற்றும் கிறிஸ்தவ ஆட்சியாளர்களைப் போலல்லாமல் மதச் சுதந்திரத்தில் தாராளமாக நடந்துகொண்டதும் முஸ்லிம்களின் இலகுவான வெற்றிக்கு மற்றொரு காரணமாக அமைந்தது. ஏழாம் நூற்றாண்டின் கிறிஸ்தவக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. இன்று போலல்லாமல் மதபீடமும் அரசபீடமும் பிரிக்கப்படாமல் ஒன்றாகவே இருந்து, மதம் மட்டுமே ஆட்சி செலுத்தியது. இன்னும் சொல்லப் போனால் ரோம அரசன் தியொடொஸியஸ் காலத்தில் மக்கள் என்பவர்கள் கிறிஸ்தவர்களாக மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட பிரிவிவைச் சார்ந்த கிறிஸ்தவர்களாக மட்டுமே இருக்கவேண்டும் என்று சட்டமே இருந்திருக்கிறது. சௌராஷ்டிரியம் ஆட்சி செலுத்திய பாரசீகத்திலும் இதேதான் நிலைமை5.

அரேபிய ஆட்சியாளர்களின் கொள்கைகள் குடிமக்கள் விஷயத்தில் கிறிஸ்தவ ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு நேரெதிராக இருந்தன. முஸ்லிம்கள் மட்டும்தான் குடிமக்களாக இருக்கவேண்டும் என்ற எந்தவிதமான கட்டுப்பாடும் வைத்துக் கொள்ளாமல் மதச் சுதந்திர நெகிழ்வுக் கொள்கைகளைக் கொண்டிருந்தனர் அரேபிய ஆட்சியாளர்கள்5. எகிப்தின் ஒரு பிரிவு கிறிஸ்தவர்களுக்கு (Monophysite Christians) இந்தக் கொள்கை வரப்பிரசாதமாக அமைந்தது. காரணம், ரோம (பைசாந்திய) ஆட்சியில் கடுமையாகத் துன்புறுத்தப்பட்ட அவர்கள், இஸ்லாமிய ஆட்சியில் சுதந்திரமாகத் தங்கள் மதத்தைப் பின்பற்ற அனுமதிக்கப்பட்டார்கள். அராபிய மொழி பேசிய கிறிஸ்தவர்களும்(சிரியா), கோப்டிக் கிறிஸ்தவர்களும்(எகிப்து) புதிய ஆட்சியாளர்கள், பழைய ஆட்சியாளர்களைவிட தங்களிடம் பரந்த மனப்பான்மை உள்ளவர்களாகவும் குறைந்த வரி விதிப்பவர்களாகவும் தங்களது கோரிக்கையை ஏற்பவர்களாகவும் இருக்கக் கண்டனர்.

காலித் பின் வலீத் (ரலி) தலைமையில் சிரியாவில் தங்கியிருந்த முஸ்லிம் படைகளுக்கு கலீபா அபூபக்ரு (ரலி) அவர்களின் உத்தரவு இவ்வாறாக இருந்தது: “இறைவனுக்காக வேண்டி போராடும் நீங்கள் குற்றமற்ற ஆண்களைப்போல புறமுதுகு காட்டாமல் போரிடுங்கள். உங்கள் வெற்றி பெண்கள் மற்றும் குழந்தைகளின் ரத்தக் கறைகளின் சுவடு படிந்த வெற்றியாக இல்லாமலிருக்கட்டும். மரங்களையும் வயல்வெளிகளையும் நாசம் செய்துவிடாதீர்கள். நீங்கள் முன்னேறிக் கொண்டிருக்கும்பொது வயதான சமயத் தலைவர்கள் மடாலயங்களில் வசிக்கக் கண்டால் அவர்களைக் கொன்று விடவோ அல்லது அவர்களின் மடாலயங்களை அழித்துவிடவோ தலைப்படாதீர்கள்.” மேற்கண்ட வரிகளை எடுத்து எழுதியவர் வேறு யாருமல்லர். ரோமின் மேன்மையைக் கொண்டாடும், ரோம வரலாற்றை எழுதிய, ரோமர்களின் மீது தீராக் காதல் கொண்ட சர்.எட்வர்ட் கிப்பன் தான்!!. மேலும், சிரியாவின் போஸ்ரா நகரைக் கைப்பற்ற நடந்த போரில் கவர்னர் ரொமானஸ் (Governor Romanus) என்பவர் இஸ்லாத்தைத் தழுவி கிறிஸ்தவர்களை “ஏமாற்றியதையும்” கிப்பன் பதிந்து வைத்திருக்கின்றார்.

அடிமை வியாபாரம் அமோகமாக நடந்த அந்தக் காலத்தில்5ஒரு நீக்ரோ இஸ்லாத்தைத் தழுவும்போது அவரது தினசரி வாழ்வில் அது ஏற்படுத்தும் மாற்றத்தைக் கவனித்தால் எப்படி அவரின் புதிய மதத் தேர்வை நியாயப்படுத்தாமல் இருக்க இயலும்? பல தெய்வ வழிபாடு என்பதும் ஆண்டானுக்கு ஒன்று; அடிமைக்கு ஒன்று என்பதும்  உடனடியாக அவனது வாழ்விலிருந்து மறைந்து விடுகிறது. மாந்திரீகம், சூனியம் போன்ற மௌட்டீகத் தீமைகள் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்து மடிகின்றன. மனிதப் பலி என்பது 'பண்டைய பழக்கம்' என்பதாக மாறிவிடும். சமூகத்தில் அந்தக் கருப்பின மனிதனின் இருப்பு அடையாளப்படுத்தப் படுகிறது. அவன் வாழ்க்கையில் முதன் முதலாக நிர்வாண நிலையிலிருந்து ஆடை அணிந்தவனாகிறான் - அதுவும் சுத்தமான ஆடைகள். அழுக்கிலும் குப்பையிலும் உழன்றவன் தூய்மையைப் பார்க்கிறான். விருந்தோம்பல் மதக் கடமையாகிறது. தூய்மை என்பது மிக உயர்ந்த நல்லொழுக்கங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. சோம்பல் குறைந்து வேலை செய்வதற்கான வாய்ப்புப் பெருகுகிறது. முன்னர் குற்றங்கள் எனக் கருதப்பட்டவை, இப்போது எழுதிவைக்கப்பட்ட அவனுக்கான உரிமைச் சட்டங்களாக அவனது வாழ்வில் பரிணமிக்கிறன. அறிவியல் இலக்கியம் தத்துவம் போன்றவை அவனுக்கு அறிமுகப் படுத்தப்படுகின்றன5.

ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு பழங்குடி சமூகத்திற்கு இதைவிடப் பெறுமதியான புதையல் எங்கே கிடைக்கப் போகிறது?

இது போதாதா ஆப்பிரிக்காவில் அவ்வளவு வேகமாக இஸ்லாம் பரவியதற்குக் காரணமாகக் கூற?

இஸ்லாம் எப்படிப் பரவிற்று என்பதை விளக்கும் வாழும் சாட்சியமாகத் தலை நிமிர்ந்து நிற்பது, உலகில் அதிகமான முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட, வரலாற்றில் இஸ்லாமிய அரசர் எவரின் கால் தடமும் படியாத, முஸ்லிம் படைகள் எதுவும் நுழையாத இந்தோனேஷியா. விதிவிலக்காக, நாடு பிடிக்கும் ஆசையிலும் பொருளாசையிலும் முஸ்லிம் பெயர்கொண்ட பிற்கால மன்னர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளைப் பறக்கவிட்டு அக்கிரமங்கள் புரிந்திருக்கிறார்கள். என்றாலும், அவர்களுக்கெல்லாம் முன்பாகவே இஸ்லாம் உலகில் உயர்ந்த விழுமியங்களால் தனது இருப்பிடத்தை நிலை நிறுத்திக் கொண்டு ஒரு பொற்காலத்தை நோக்கி ஒளி வீசத் தொடங்கியது.

நிலாக்கள் தோன்றும், இன்ஷா அல்லாஹ்.


1. Michale Pennock in This is our Church, p.89
2. Robert Wright in The Evolution of God
3. Edward Gibbon- The History of the Decline and Fall of the Roman Empire
4. Ira Lapidus in A History of Islamic Societies
5. Quoted from Waitz by B. Smith, Muhammad and Muhammadanism, pp.42-43   

Comments   
Mohamed Imran Khan
0 #1 Mohamed Imran Khan 2014-06-18 19:55
Masha allah,

Good Islamic article

Keep it up
Quote | Report to administrator
hurra
+1 #2 hurra 2014-10-23 16:58
kelvigalum bathigalum anaivarum arinthu kolle vendiyavai arumai
Quote | Report to administrator
hurra
0 #3 hurra 2014-10-23 16:59
masha allah
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்