முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

இஸ்லாம்

குறைஷிகள் மக்காவில் பல்வேறு கோத்திரங்களாகப் பிரிந்து வாழ்ந்த போதிலும் குறைஷி ஒருவருக்குப் பிரச்சினை என்றால் 'குறைஷி' என்ற ரீதியில் ஒன்றுபடுவார்கள். "நீதியானவர்கள்" எனப் பெயர் பெற்றிருந்த அவர்கள் தம் மரபு வழிக் கோத்திரத்தார் பலருடனும் பல உடன்படிக்கைகளைச் செய்திருந்திருந்தனர்.

உடன்படிக்கைகளுக்காக எதையும் இழப்பதைத் தமது மேன்மையாகவும் குலவழக்கமாகவும் கருதினர். அத்தகைய சூழலில் யமன் நாட்டுத் துறைமுகமான ஸாபித்திலிருந்து மக்காவுக்கு வந்த ஸஹம் கோத்திரத்து வணிகர் ஒருவர், குறைஷிக் கிளையைச் சேர்ந்த ஒருவருக்குப் பெறுமதி வாய்ந்த சில பொருட்களை விற்பனை செய்தார். ஆனால் வாங்கியவர் உரிய தொகை கொடுக்காமல் ஏமாற்றவே, வணிகர் மக்காவிற்குப் புதியவராக இருப்பினும் அபூகுபைஸ் குன்றின் மேல் ஏறி நீதி வேண்டி உரத்து முறையிட்டார். கோத்திரப் பிரிவினைகள் எவ்வாறிருந்தாலும் குறைஷிகள் அனைவரும் ஒற்றுமைப்பட்டிருப்பதில் முனைப்புக் காட்டினர். இருந்த போதிலும் அவர்களை முன்னர் பிரித்துப் போட்ட நிகழ்வின் கசப்பு அவர்களின் அடிமனத்தில் இருக்கத்தான் செய்தது. அது, ஒருகாலத்தில் ஒன்றுபட்டிருந்த குறைஷிகளின் தலைவர் குஷை என்பவருக்குப் பிறகு, "வாசனையாளர்கள்" - "கூட்டுறவாளர்கள்" என இரு பெருங் கூறுகளாகப் பிரிந்த பெருந் துன்பியல் நிகழ்வு. அந்தப் பிரிவு, குறைஷிக் கோத்திரத்தார்கள் பலரையும் இணைய முடியாத இரு துருவங்களாகப் பிரித்துப் போட்டு இருந்தது.

'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு' எனும் தத்துவத்தை உயிர்ப்பிக்க முயல்பவர்கள் இவ்வுலகில் எக்காலத்திலும் வாழ்ந்து வந்திருக்கின்றனர். அவர்களுள் ஒருவர்தாம் தையிம் கோத்திரத்து அப்துல்லாஹ் இப்னு ஜுத்ஆம் என்பவர். பல கோத்திரங்களாகப் பிரிந்து வாழும் குறைஷியர் ஒன்றுபட வேண்டும் என்பதற்காகப் பல முயற்சிகளை இப்னு ஜுத்ஆம் மேற்கொண்டார். அவற்றுள் ஒன்றாகத் தமது வீட்டையே குறைஷிகள் ஆலோசனைக்குக் கூடும் சமுதாய நலக்கூடமாக அர்ப்பணித்துவிட்டார்.

யமன் வணிகரின் முறையீடு அங்கு விசாரணைக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாகக் குறைஷிகளின் ஒரு ஆலோசனைக் கூட்டமும் அங்கு நடைபெற்றது. அதில் வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கை ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.

அங்கு அன்று நிறைவேறிய 'ஹில்ஃபுல் ஃபுதூல்' எனும் வரலாற்றுச் சிறப்பு மிக்க உடன்படிக்கை, ஒற்றுமைக்கான அற்புத வழிகளைக் குரைஷியருக்குத் திறந்து விட்டிருந்தது. அந்த உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்களுள் இருவர் மட்டுமே இளைஞர்கள். பிற்றைக் காலத்தில் அந்த உடன்படிக்கையைப் பற்றி, "அறியாமைக் காலத்தில் நடைபெற்ற அந்த உடன்படிக்கையில் நானும் பங்கு பெற்று இருந்தேன்.  செந்நிற ஒட்டகக் கூட்டம் ஒன்றை எனக்கு ஈடாக அளித்தாலும் அதிலிருந்து நான் விலகிக்கொள்ள மாட்டேன். அதுபோன்ற உடன்படிக்கைக்காக இப்போது அழைக்கப்பட்டாலும் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்வேன்" என அண்ணலார் (ஸல்) சிறப்பித்துச் சொன்னார்கள்.

இரண்டு இளைஞர்கள் என்று பார்த்தோமே? இரண்டாமவரை ஊகித்திருப்பீர்கள்.

ஆம்!. முதலாமருக்குப் பிற்காலத்தில் அணுக்கத் தோழராகப் போவதை அறியாத அபூபக்ருதாம் அந்த இரண்டாமவர். இவ்வாறாக, மக்காவின் சூழலை அவதானிக்கும் குழுவில் அபூபக்ரும் முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தார். கொலைக்குப் பழிவாங்கும் நடவடிக்கைகளில், ஈட்டுத்தொகை பெற்றுக் கொண்டு மன்னிக்கும் பழக்கம் அப்போது மக்காவில் நடைமுறையில் இருந்தது. ஈட்டுத் தொகை பெற்றுக் கொண்டு, 'பழிக்குப் பழி'யைக் கைவிடும் வழக்கில் அபூபக்ரின் பரிந்துரையும் ஒப்புதலும் பெரிதும் மதிக்கப்பட்டன. மேலும் அன்னாரின் நல்லொழுக்கம், நன்னடத்தை, நம்பிக்கைத் தன்மை ஆகியவற்றால் அன்னார் மூலமே ஈட்டுத் தொகை தருவதும் பெறுவதும் மக்காவின் நடைமுறையாக மாறிவிட்டிருந்தது.

அரபு மொழியில் எத்துணைத் தேர்ச்சி பெற்ற கவிஞராக இருந்தாலும் கஅபாவினுள் கொலு வீற்றிருந்த கடவுளர்களைப் புகழ்ந்து பாடாவிட்டால் அவருக்குக் கவிஞர் என்ற சிறப்பு மறுக்கப்படும் மௌட்டீகத்தில் மக்கா தன்னை முழுமையாகப் போர்த்திக் கொண்டிருந்த காலகட்டம் ...

கவிஞர் அபூபக்ருக்கு, கடவுள் சிலைகளின் மேல் சினத்தையும் வெறுப்பையும் ஒருங்கே ஏற்படுத்தியது மக்காவின் உக்காழ் திருவிழா.

oOo

வருவார், இன்ஷா அல்லாஹ்!

Comments   

shajahan
+1 #1 shajahan 2014-04-29 08:56
அல்ஹம்துலில்லாஹ்,

கடந்த கால வரலாற்றை மறந்த சமுதாயம் நிகழ்காலத்தை நெரிபடுதவும் முடியாது எதிர்காலத்தை ஒளிமயமாக்கவும் முடியாது .இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக தமது உதிரத்தையும், உயிரையும், உடல் உறுப்புகளையும் உழைப்யும் உரமாக தந்தவர்களின் வரலாற்றை தெரிந்திருப்பது அவசியம்.

சிறப்பாக உள்ளது இரண்டாம் பாகமும் தொடர்ந்து தொய்வின்றி எழுத அல்லாஹ்விடம் நான் பிராதின்கின்றேன ் . இன்னும் நீங்க இது போன்று பல்வேறு வரலாறுகளையும் எழுத வேண்டும்.
Quote | Report to administrator
ஜபருல்லாஹ் இஸ்மாயில்
+1 #2 ஜபருல்லாஹ் இஸ்மாயில் 2014-04-29 11:29
///// 'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு' எனும் தத்துவத்தை உயிர்ப்பிக்க முயல்பவர்கள் இவ்வுலகில் எக்காலத்திலும் வாழ்ந்து வந்திருக்கின்றன ர். ///// அறியாமை காலத்திலேயே இப்படியா...? ஆனால் இன்று நாமோ.... பிளவுபட்டு பிளவு பட்டு.... அய்யாமுல் ஜாஹிலியாவை நோக்கியே பயணிக்கிறோமோ... ? :-(
Quote | Report to administrator
முபி ஜன்னத்
+1 #3 முபி ஜன்னத் 2014-04-29 13:49
அல்ஹம்துலில்லாஹ ். தேர்ந்த எழுத்து நடை. மேலும் மேலும் ஆவல் அதிகரிக்கிறது.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்