முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

இஸ்லாம்

தஸ்பீஹ் தொழுகை என்ற பெயரில் ஒரு தொழுகையை நபி(ஸல்) அவர்கள் தொழுததாகவோ அல்லது மற்றவருக்கு அதனை செய்ய கற்று கொடுத்ததாகவோ நாம் அறிந்தவரை ஒரு ஆதாரப்பூர்வமான செய்தி கூட இல்லை. அவ்வாறு ஒரு தொழுகையினை பரிந்துரைக்கும் அறிஞர்கள் சிலர் எடுத்துக் காட்டும் செய்திகளில் முக்கியமான மற்றொரு ஹதீஸ் நபித்தோழர் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிப்பதாகும்.


நபி (ஸல்) அவர்கள் ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களை எத்தியோப்பியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் திரும்பி வந்தபோது நபி (ஸல்) அவர்கள், அவர்களைக் கட்டியணைத்தார்கள். இரு கண்களுக்கு இடையில் முத்தமிட்டார்கள். பின்னர் உமக்கு ஒரு அன்பளிப்பு வழங்கவா? நற்செய்தி கூறவா? உபகாரம் செய்யவா? காணிக்கைத் தரவா? என்று கேட்டார்கள். (அதற்கு அவர்)அல்லாஹ்வின் தூதரே! ஆம் என்றார். "நான்கு ரக்அத்கள் தொழு! அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து அத்தியாத்தையும் ஒரு (துணை) அத்தியாயத்தையும் ஓது! பின்னர் ஓதி முடித்ததும் நீ நின்ற நிலையில் ருகூவுக்கு முன்னர் ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று 15 தடவை கூறு! பின்னர் ருகூவு செய்! பின்னர் அதை 10 தடவை கூறு! பின்னர் ருகூவில் அதை 10 தடவை கூறு! இரண்டாம் ரக்அத்தை துவங்குவதற்கு முன்னர் இந்த ரக்அத் முழுவதற்கும் இவ்வாறே செய்து கொள்! நான்கு ரக்அத்துகளை நீ முடிக்கின்ற வரை நான் வர்ணித்ததைப் போன்று (மீதமுள்ள) மூன்று ரக்அத்திலும் (இவ்வாறே செய்!) " என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: ஹாகிம் (1196)

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாக வரும் இந்தச் செய்தியை தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக கருதுபவர்கள் இச்செய்தியைப் பற்றி இமாம் ஹாகிம் அவர்களின் "ஆதாரப்பூர்வமானது" என்ற கூற்றையும், இமாம் தஹபீ அவர்களின் தல்கீஸ் என்ற நூலில் "நம்பகமானது" என்ற கூற்றையும் அதற்கு ஆதாரமாக கொள்கின்றனர்.

ஆனால் இச்செய்தியில் இடம் பெறும் ஏழாவது அறிவிப்பாளர் அஹ்மத் பின் தாவூத் பின் அப்துல் கஃப்ஃபார் என்பவரைக் குறித்து இமாம் தஹபீ அவர்களே மீஸானுல் இஃதிதால் என்ற நூலில்  கடுமையாக விமர்சிக்கின்றார்கள்.

சுவர்க்கத்தின் திறவுகோல் ஏழைகளாவர். யாசிப்போர் அல்லாஹ்வின் நெருங்கிய நண்பர்களாவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ள அறிவிப்பு அவர் அறிவித்த பொய்யான செய்திகளில் ஒன்றாகும். (நூல்: மீஸானுல் இஃதிதால் பாகம் 1, பக்கம் 232)

அவரல்லாமல் இமாம் தாரகுத்னீ போன்ற மேலும் பல பிரபல ஹதீஸ் கலை அறிஞர்களும் அஹ்மத் பின் தாவூத் பின் அப்துல் க்ஃப்ஃபார் அவர்களை பொய்யான செய்திகளை அறிவிப்பவர் என விமர்சித்துள்ளனர். ஒருவேளை இச்செய்தி இமாம் ஹாகிம் அவர்களுக்கு தெரியாமல் போயிருக்கலாம்.

இமாம் ஹாகிம் அவர்கள் இச்செய்தியை ஆதாரப்பூர்வமானது எனக் கூறுவதைக் குறித்து இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தனது லிஸானுல் மீஸான் என்ற நூலில் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.

ஜாஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களுக்கு (நபி(ஸல்) அவர்கள்) தஸ்பீஹ் தொழுகையை கற்றுக் கொடுத்ததாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை (இமாம் ஹாகிம் அவர்கள்) ஆதாரப்பூர்வமானது, அதன் மீது எந்த (பலவீனம் என்ற) புழுதியும் படியவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் இது இருள் நிறைந்ததாகும். ஒளியுடையது அல்ல. (இதில் இடம் பெறும்) அஹ்மத் பின் தாவூத் என்பவரை இமாம் தாரகுத்னீ விமர்சனம் செய்துள்ளார் என்று அந்நூலின் ஓர உரையில் எங்கள் ஆசிரியர்கள் அதை விமர்சனம் செய்துள்ளனர். (நூல்: லிஸானுல் மீஸான் பாகம் 1, பக்கம் 368)

மேலிம் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள், அஹ்மத் பின் தாவூத் பின் அப்துல் கஃப்ஃபாரைக் குறித்து பின்வருமாறு விமர்சிக்கின்றார்கள்.

அஹ்மத் பின் தாவூத் என்பவர் முற்றிலும் பலவீனமானவராவார். இவரைப் பொய்யர் என்று (ஹதீஸ் கலை வல்லுனர்கள்) குற்றம் சுமத்தியுள்ளனர். (நூல்: தல்கீஸுல் ஹபீர் பாகம் 4, பக்கம் 96)

எனவே தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாக வரும் இச்செய்தியும் பலவீனமானதாகும். தஸ்பீஹ் தொழுகை தொழுவதற்கு இந்த ஆதாரமும் ஏற்புடையதாக இல்லை.

இன்னும் வரும், இன்ஷா அல்லாஹ்.

< பகுதி-3 | பகுதி-5 >

Comments   

Rifae
0 #1 Rifae -0001-11-30 05:21
உங்கள் இணையதளத்தை தொடர்ந்து பார்வையிட்டு வருகிறேன். மிகவும் தரமான முறையில் சிறப்பான பல்வேறு விசயங்களை தருகிறீர்கள். பாராட்டுக்கள். இதே ரீதியில் மேன்மேலும் சிறக்க துவாக்கள்.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்