முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

Mohd Ali ips

கடந்த சில நாட்களாக அரபு நாடுகளில் நடக்கும் மக்கள் எழுச்சியினைப் பார்த்து உலகமே வாயடைத்துப் போயுள்ளது. ஏனென்றால், மக்கள் பட்டினியும் பசியுமாக அல்லல்படும் வேளையில் மன்னர்களும்அதிபர்களும் பகட்டாகப் பலஆண்டுகள் சிம்மாசனத்தில் பசைபோட்டு ஒட்டியவர்களாகத் திகழ்கிறார்களே, அந்தத் தலைவர்களாலே கட்டுப்படுத்த முடியாத "மக்கள் புரட்சி, அமைதியான முஸ்லிம் மக்களிடம் வந்தது எப்படி?" என்பதுதான் உலத்தாரின் வியப்பு.

 

டூனிஸியா நாட்டில் மக்கள் புரட்சி எவ்வாறு வந்தது? பட்டதாரி வாலிபரான 26 வயதுடைய முஹம்மது என்பவர், உலகப் பொருளாதார வீழ்ச்சியில் அரசிலும் தனியார் நிறுவனங்களிலும் எந்த வேலையும் கிடைக்காமல் தமது ஏழ்மையான குடும்பத்தினைக் காக்க, ரோட்டு ஓரத்தில் ஒரு காய்கறிக்கடை நடத்திப் பிழைத்து வந்தார். ஆனால் அங்கே வந்த போலீஸ், அந்தக் கடைக்குச் சென்று "நீ இங்குக் கடை வைக்க முடியாது" என்று சென்னை பாரிஸ் கார்னரில் ரோடு ஒரத்தில் கடை வைத்திருப்பவர்களிடம் பணம் பிடுங்கும் போலீஸைப்போல் பிடுங்கியிருக்கிறார்கள். திருடாமல், கொள்ளையடிக்காமல் வயிற்றுப் பிழைப்பிற்காக கடை வைத்திருப்பதினையும் வேலை கொடுக்காத அரசும் அதன் ஊழியர்களும் தடை செய்கிறார்களே என வேதனையில் உழன்ற அந்த இளைஞர், தன் உடலில் மண்ணெண்னையை ஊற்றி வெந்தனில் வெந்து மடிந்தார்.

1965ஆம் ஆண்டு இந்தி ஆதிக்க உணர்வினை எதிர்த்துத் தமிழர்கள் தீக்குளித்து, இன்றுவரை அதன் கனல் மாறாமல் காங்கிரஸ் தமிழ்நாட்டில் ஆளமுடியாத ஒரு கட்சியானதோ அதேபோன்ற நிலையினை அந்த டூனிசியா இளைஞர் ஏற்படுத்தி விட்டார் எனச் சொன்னாலும் மிகையில்லை. அந்த இளைஞரின் தற்கொலையால் அவரை இன்னார் என்று அறிந்திராத அந்நாட்டின் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு தொடங்கிய புரட்சியினால் அந்த நாட்டு ஜனாதிபதி பென் அலி நாட்டினை விட்டு ஓட்டம் பிடிக்கும் அளவுக்கு உக்கிரமடைந்தது. வயிற்றுப் பசிக்கு ரொட்டித் துண்டுகூட கிடைக்காததால் பிரான்ஸ் நாட்டு மக்கள் 1789இல் செய்த புரட்சியைப் போன்று ஆட்சி ஆட்டம் கண்டது டூனிசியாவில்.

அரபுலகில் மிகமுக்கியமான புரட்சியொன்று 1919ஆம் ஆண்டில் நடந்தது. அதுவும் இதே எகிப்தில் தொடங்கி, விடுதலைப் போராளி இயக்கங்களுக்கிடையில் புரட்சிக் கனலை ஏற்படுத்தி, ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்தது.

ஆனால், பத்தாண்டுகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் ஆட்சியாளர்கள் தடம் புரண்டு போகத் தொடங்கியவேளை, இமாம் ஹஸனுல் பன்னா அவர்களின் தலைமையில் 1928ஆம் ஆண்டு 'இக்வானுல் முஸ்லிமூன்' எனும் போராளி இயக்கம் தோன்றியது. அன்றிலிருந்து இன்றுவரை இக்வான்கள் இழந்தவையும் அவர்கள் செய்த தியாகங்களும் கொஞ்சநஞ்சமல்ல. அவர்களை அழித்தொழிக்கப் பலகால கட்டங்களிலும் எகிப்திய அரசு ஏவி விட்ட அடக்குமுறைகளும் கொஞ்சநஞ்சமல்ல.

 

இன்றைய எகிப்துப் புரட்சிக்கு இக்வான்கள் தொடங்கி வைத்தப் புரட்சிக் கனல் ஒரு முக்கிய அடிப்படை என்றால் மிகையாகாது.

 

பண்டைய மாசிடோனியாவின் கவளா எனும் ஊரில் 1769இல் பிறந்த முஹம்மது அலீ பாஷா அல் மஸ்ஊத் பின் அகா என்பவரால் எகிப்தில் தொடங்கப்பட்ட மன்னராட்சி,

ஜூலை 23, 1952இல் 'விடுதலை ஊழியர் இயக்கம் (Free Officers Movement)' நடத்திய இராணுவப் புரட்சியால் முடிவுக்கு வந்தது.

 

பாஷா வம்ச மன்னர் ஃபாரூக் அப்புறப் படுத்தப்பட்டு, எகிப்தில் குடியரசு உதயமானது.

அதனைத் தொடர்ந்து எகிப்திலும் மக்கள் புரட்சி ஓங்கி 30 ஆண்டுகால ஹுஸ்னி முபாரக் ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்பட்டு விட்டது. மக்கள்புரட்சிக்கு பயந்து ஜோர்டன் மன்னர் அப்துல்லாஹ் மந்திரிசபையினைக் கலைத்து விட்டதாகத் தகவல்கள் வருகின்றன. யேமன் நாட்டிலும் மக்கள்சக்தி எரிமலையாகி, அரசிற்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஏன் இந்த நிலை என்று சற்றே பார்க்கலாமே!

இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் முஸ்லிம் நாடுகளை ஐரோப்பியர் காலனி ஆதிக்கத்தால் அடிமைப்படுத்தியிருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக, சாதாரண தலைமை ஆசிரியர் உமர் முக்தாரிலிருந்து அரேபிய படூவின் இனத்தவைர்வரை பாடுபட்டு, தியாகம் செய்து முஸ்லிம் நாடுகளை விடுதலை செய்ததை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.


ஆனால் அந்த நாடுகளெல்லாம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் குடும்ப ஆட்சி நடத்தும் மன்னர்களாக, சில நாடுகளில் மன்னர்களை கவிழ்த்த ராணுவ தளபதிகள் நிறந்தர நாட்டின் தலைவர்களாக தங்களைத் தாங்களே நியமனம் செய்து கொண்டார்கள். ரஸூலுல்லா சொல்லிய முஸ்லிம் ஆட்சித் தலைவர்கள் மக்கள் தலைவர்களாகவும் மத நல்வழிகாட்டிகளாகவும் திகழ வேண்டுமென்பதுதான். ஆனால் நடந்தது என்ன? ரஸூலுல்லா தலைவராக இருந்தபோது வெறும் ஈச்சங்கீற்றால் ஆன படுக்கையில் முதுகில் தழும்பு ஏற்படப் படுத்தும், தம் அன்புமகள் பாத்திமா நாச்சியார் பசியோடு இருந்தபோது அரசு கஜனாவிலிருந்து ஒரு பேரித்தம் பழம்கூட சட்டத்திற்குப் புறம்பாக எடுத்துக் கொடுக்காது மக்களோடு மக்களாக ஏழ்மையில் பங்கு பெற்ற எழைப்பங்காளனாக வாழ்ந்தார்கள்.

அந்த இணையில்லாத தலைவரைப் பின்பற்ற வேண்டிய முஸ்லிம் நாட்டு மன்னர்களும் அதிபர்களும் எப்படியிருக்கிறார்கள்? தங்கள் சொந்த நாட்டு மக்கள் நலனைப் புறக்கணித்து மேலை நாட்டு மோகத்தில் அந்த நாட்டு பெண்களையும் மணமுடித்து, அந்த மேலை நாடுகளின் கைப்பாவையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஏன் மாவீரன் என்ற சதாம் ஹூசைன்கூட தன் பாதுகாப்பிற்கு ஜெர்மன் ராணுவ அதிகாரிகளை வைத்திருந்து, கடைசி நேரத்தில் ஏமாந்த சோணகிரியான கதையுமுண்டு. இன்றைய பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரிகூட தம் நாட்டுக் குடிமக்களால் தனக்கு ஆபத்து இருப்பதாகச் சொல்லிக் கொண்டு தம் சொந்தப் பாதுகாப்பிற்காக அமெரிக்கப் படையினரினை வைத்துக் கொள்ளத் தீர்மானித்தாராம், செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

எண்ணெய் வளம் மற்றும் இயற்கை வளம் மிக்க இஸ்லாமிய நாடுகளின் செல்வங்களைத் தங்கள் சொந்தச் செல்வங்களாக நினைத்து மேலை நாடுகளில் பங்களாக்கள், பல மனைவிகள், சொந்த நாட்டின் பங்களாவில் கழிவு கக்கூசுக்குக்கூட தங்கம் பொருத்திய கம்மோடுகள் போன்ற ஆடம்பர வாழ்க்கை. முஸ்லிம் நாடுகளான ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளை கைப்பற்றித் தங்கள் கைப்பாவைகளை ஆட்சி பீடத்தில் வைத்த பின்னரும், "தீவிரவாதத்திற்கு எதிரான போர்" என்பதாக பம்மாத்துக் காட்டிக் கொண்டு, லட்சக்கணக்கான அப்பாவி மக்களையும், ஏன் அந்த நாட்டு ராணுவ வீரர்களையுங்கூட கொன்று குவித்துக் கொண்டிருப்பதை இன்றுவரை எந்த முஸ்லிம் நாட்டு தலைவரும் தட்டிக் கேட்க முன்வரவில்லை. மாறாக பதவியிறங்குவதிற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அரேபியாவிற்கு வருகை தரும்போது அவர் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் செய்த அழிவு வேலைக்கு நன்றிக் கடனாக வைரம், வைடூரியங்களைத் தங்கத்தட்டில் வைத்துத் தாரை வார்த்தனர் என்ற செய்தி அப்போது எல்லா ஊடகங்களிலும் வந்தது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் இமாம் அவர்கள் சென்ற 28.01.2011 அன்று தனது வெள்ளி குத்பா உரையில் ஜனநாயத்தினை வசை பாடியதாக நண்பர்கள் தங்கள் கண்டனக் கனைகளை இ-மீடியாக்களில் எழுப்பியிருந்தனர். வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கம் என்பது குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் இருக்கும் உதாரணங்களை முஸ்லிம் மக்களுக்கு போதனை செய்யும் ஒரு புனித செயல். அதில் அரசியல் பேச்சாளர்கள் போன்று தங்கள் மனம்போன போக்கில் அதிகப் பிரசங்கம் செய்வது கண்டனத்திற்குரியது. இதற்கு முந்திய வாரம் 21.01.2011 அன்று நான் அதே பள்ளிவாசலுக்கு ஜும்த் தொழுகைக்குச் சென்றிருந்தேன். அப்போது அந்த இமாம் தனது பிரசங்கத்தில் தஞ்சாவூர் கோவில் விழாவிற்குக் கலைஞர் சென்றதை விமர்சனம் செய்து பேசினார்.

 

ஏற்கனவே இதுபோன்ற குற்றச்சாட்டு, பத்திரி்கையில் வந்து அரசும் விளக்கம் கொடுத்த பின்னும் அதுவும் புனித குர்ஆனை மேற்கோள் காட்டிப் பேசவேண்டிய குத்பா நேரத்தில் அந்நிகழ்வை விமர்சித்துப் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது!

 

ஹஜ் பயண ஏற்பாடுகள் முறைகேடுகள் சம்பந்தமாகஅன்று நான் எழுதிய கட்டுரையில் அந்த இமாம் மீது ஹஜ் பயண ஏற்பாடு சம்பந்தமாக வந்த புகார் பற்றி விளக்கமாக எழுதியிருந்தேன். அது சமுதாய அமைப்புகளின் மீடியாக்களில் வந்திருந்தது.

ஆனால் சவூதி அரேபியாவின் சாதாரண குடிமக்களின் நிலையினை நான் 1999ஆம் ஆண்டு ஹஜ் பயணிகள் தங்குவதிற்கு இடம் தேர்வு செய்யம் குழுவில் நியமனம் செய்யப்பட்டு மக்காவுக்குச் சென்றபோது கண்டேன். ஒரு நாள் ஒரு 70 வயது மூதாட்டி இந்திய உதவி கவுன்சில் அதிகாரியைத் தம் 30 வயது மகனுடன் சந்தித்து தம் வீட்டினை ஹாஜிகள் தங்க தேர்வு செய்ய வேண்டுமென்றார். நான் அந்தக் குழுவில் அவர் வீட்டிற்குச் சென்று ஆய்வு செய்தேன். அப்போது அந்த அம்மையாரிடம், "தங்கள் மகன் என்ன வேலை செய்கிறார்?" என்றேன். அதற்கு அவர் அவனுக்கு எந்த வேலையும் கிடைக்காததால் அவனது பாலஸ்தீன மனைவி தன் சொந்த நாட்டிற்குச் சென்று விட்டதாகவும் அவருடைய வீட்டில் ஹஜ் நேரத்தில் கிடைக்கும் வாடகை வருமானத்தினை வைத்துதான் தன் வாழ்க்கை நடப்பதாகவும் சொன்னார்.

இது எதனைக் காட்டுகிறது என்றால் மன்னர்கள், அதிபதிகள் ஆடம்பர வாழ்க்கை நடத்தலாம்; ஆனால் சாதாரணக் குடிமகன் அல்லல் படலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் ஆட்சி நடத்துகின்றனர்.

உகாண்டாவினை ஆண்ட இடி அமீன் மார்க்கச் சட்டத்திற்குப் புறம்பாக நடந்ததால்  லிபியாவிலும் பின்னர் சவூதி அரேபியாவிலும் தமது கடைசிக் காலத்தை அகதியாகக் கழித்து இறந்து போனார். எல்லா அதிகாரமும் படைத்த படைத்தளபதியும் ஜனாதிபதியம் நானே என்று நெஞ்சு நிமிர்த்திய பாகிஸ்தான் முஷர்ரஃபும் லண்டனில் அகதியாக வாழ்கின்றார். அவர்களின் வரிசையில் இப்போது டுனீசிய அதிபர் பென் அலி. ஏன் இந்த இழி நிலை? மக்கள் தளபதிகளும் அதிபர்களும் மக்களை மறந்ததால் வந்த விளைவுதான் அது. அதற்கு வைத்த வேட்டுதான் டூனிஸியாவிலும், எகிப்திலும், ஏமனிலும் நடக்கும் போராட்டங்கள்.

நமது அண்டை குட்டி தீவுகளைக் கொண்ட இந்திய மகா சமுத்திரத்தில் அமைந்துள்ள நாடான மாலத்தீவில் 25 வருடத்திற்குமேல் ஆட்சி செய்த அப்துல் கையூம் என்ற ஜனாதிபதியால் மக்கள் உரிமை மறுக்கப்பட்டது. அதற்கு எதிராகப் புரட்சி செய்த நயீப் என்ற படித்த இளம் தலைவரை 22 தடவை 15 வருடம் ஜெயிலுக்கு அனுப்பியது கையூமின் ஆட்சி. ஆனால் மக்கள் தங்கள் உரிமைக்காக குரல் கொடுத்து சிறைவாசம் சென்ற நயீப்தான் தங்கள் தலைவர் என்று கடைசியில் தீர்மானித்து ஆட்சி மாற்றத்தில் கையூம் பதவியிழந்தார்.

அநேக முஸ்லிம் நாடுகள் வளம் பெற்றிருந்தாலும் மேலை நாட்டினை நம்பியிருப்பதற்குக் காரணம் அந்த நாட்டினை ஆளும் மன்னர்களும் ஜனாதிபதிகளும் தளபதிகளும் பிரதமர்களும் மக்களைப் புறக்கணித்து மேலை நாட்டின் எடுபிடியாக இருப்பதாலும், மேலை நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்குத் தங்கள் நாட்டில் பொருளாதார வளர்ச்சியினையும் வேலை வாய்ப்பினையும் மக்கள் நலன்பெற வளர்ச்சித் திட்டங்களையும் நடைமுறப் படுத்தாததாலும் நாட்டின் பாதுகாப்புக் கருதி உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்களை தயாரிக்காததாலும் அண்டை நாடுகளிடமிருந்து தங்கள் நாட்டினைப் பாதுகாக்க தயார் செய்வதிலிருந்தும் தவறியதாலும் தான் இஸ்ரேல் போன்ற குட்டி நாடுகூட பெரிய நாடுகளின் தலையில் குட்டி பயமுறுத்துகின்றது. ஆகவேதான் படித்த இளைஞர்கள், வேலை வாய்ப்பில்லாமல் தாங்கள் பொருளாதாரத்தில் தாழ்ந்திருக்கிறோமே என நினைத்து முஸ்லிம் நாடுகளின் சர்வாதிகார ஆட்சித் தலைவர்களிடமிருந்து அந்த நாடுகளை விடுவித்து, ஜனநாயக பாதையில் மக்களை வழி நடத்திச் செல்ல ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதினை மக்கா மஸ்ஜித் இமாம் போன்றவர்கள் எள்ளி நகையாடலாமா? அவர் போன்ற மெத்தப்படித்த இமாம்களுக்கு அதே பள்ளியில் பதில் சொல்லும் காலமும் விரைவில் வரும் என்பதினை அவர் உணர வேண்டும்.

ஜனநாயகம் என்றால் மக்களால் தேர்ந்தெடுத்த, மக்களுக்கு சாதகமான, மக்கள் பிரதிநிதிகள் கொண்ட அரசு அமைப்பதுதான் ஜனநாயக ஆட்சி. அந்த ஆட்சிக்காகப் போராடும் முஸ்லிம் மக்கள் கீழ்க்கண்டவற்றைக் கவனத்தில் வைக்க வேண்டும்:

  1. கியூபா முன்னாள் அதிபர் பிடல் கேஸ்ட்ரோ சொல்வதுபோல மக்கள் புரட்சியின்போது அமெரிக்கா போன்ற மேலை நாடுகள் தங்களை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக் கூடாது.

  2. அரசு, தனியார் சொத்துக்களுக்கு எந்த நாசமும் விளைவிக்கக் கூடாது.

  3. பொது மக்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட அனுமதிக்கக் கூடாது.

  4. தங்கள் பிரதிநிதிகள் தங்கள் நாட்டினைக் காப்பவராகவும், மக்கள் நலன் போற்றுபவர்களாக இருக்க வேண்டும். அவர்களும் பிற்காலத்தில் தங்களுக்கு முன்னாள் சென்ற கொடுங்கோலர்கள் போன்று இருக்கக் கூடாது.

  5. ஒரு நாடு கொந்தளிப்பில் இருக்கும்போது அண்டை நாடுகள் அதனைத் தாக்கி அழிக்க வழி வகை செய்ய அனுமதிக்கக் கூடாது.

  6. ஸூலுல்லா சொன்ன மத, மனித ஒற்றுமை என்ற பாசக்கயிறினைப் பற்றி கட்டியாக பிடித்துக் கொள்ள தவறிவிடக் கூடாது.

மேற்காணும் ஆறு அம்சங்களும் போராளிகளின் கொள்கைகளாக நடைமுறையில் இருந்தால் மக்கள் செல்வாக்குப் போராளிகளுக்குப் பெருகிவரும் என்பதைச் சொல்லவும் வேணுமோ என் சொந்தங்களே!

Comments   
Mohamed Ali Jinnah nidurali
0 #1 Mohamed Ali Jinnah nidurali 2011-02-06 07:51
மிகவும் அருமையான கட்டுரை . இந்த கட்டுரை ஒரு வரலாறு படிப்பதுபோல் உள்ளது . இதனை பாட புத்தகதில் சேர்க்க பரிந்துரை செய்யலாம் .முனைவர் முஹம்மத் அலி IPS அவர்கள் தனது ஓய்வு காலத்தில் தமிழில் அருமையாக
கட்டுரை எழுதி மக்களுக்கு சேவை செய்வது மிகவும் பாராட்டுக்குரிய து.
மஸ்ஜித் இமாம்கள் தன் கடமை என்ன என்பதனை உணராமல் மனம் போன போக்கில் தனது வெள்ளி குத்பா உரையில் பேசி வருவது மிகவும் வேதனைக்குரியது. கண்டிக்கப் பட வேண்டும். தொழ வரும் மக்களின் மனதினை திசை திருப்பி தொழுகையில் நாட்டம் ஏற்படாமல் செய்துவிடும் . குத்பா உரை குர்ஆன், ஹதீஸ் சம்பந்தம் உள்ளதாக இருந்து மக்களை இறைவழியில் நாட்டம் அடையும் படி செய்து தொழுகையில் ஒன்றுவதற்கு அடித்தளமாக அமைய வேண்டும் . இன்டர்நெட் உலகில் எல்லோரும் நன்கு, இள வயதினரும், இமாம்கள் போன்று மார்க்க அறிவுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதனை இந்த இமாம்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
Quote | Report to administrator
சஃபி
0 #2 சஃபி 2011-02-06 09:53
சமகால நிகழ்வுகளோடு வரலாற்றுக் குறிப்புகளையும் சேர்த்துக் கொடுத்திருக்கும ் முனைவர் அவர்களின் எழுத்துத் திறன் வியப்பளிக்கிறது !
Quote | Report to administrator
சஃபி
0 #3 சஃபி 2011-02-06 09:54 Quote | Report to administrator
ஹம்துன் அஷ்ரப் அலி,
0 #4 ஹம்துன் அஷ்ரப் அலி, 2011-02-06 10:44
எகிப்து நாட்டின் வரலாற்றினைப்பற் றி நன்கு தெரிந்துக்கொண்ட ேன்.
Quote | Report to administrator
sabeer
0 #5 sabeer 2011-02-06 18:38
நல்லதொரு கட்டுரை மக்கள் புரட்சி தொடரட்டும் ஜனநாயகம் மலர்ந்து நல்ல அரசு அமைய வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம
Quote | Report to administrator
அபூஉமர்
0 #6 அபூஉமர் 2011-02-06 23:16
சகோ முஹம்மத் அலி என்ன சொல்ல வருகிறார்? மச்ஜிடில் அரசியல் பேச கூடாது என்றா ? இக்ஹ்வனுள் முஸ்லிமீன் போராடுவது இஸ்லாமிய ஆட்சிக்காக தான். இஸ்லாத்தின் மிக கொடுமையாமான எதிரியி ஜனநாயகம் தான்
Quote | Report to administrator
Mohamed Ali
0 #7 Mohamed Ali 2011-02-07 19:25
How To Survive (and Then Benefit From) a Boring Khutbah
We are sitting in the masjid. Front row, clean clothes on, ready to hear something that will inspire us, teach us, and give us gems of spiritual wisdom gleaned from the mountain of Prophethood. Our hearts fill with hope that today will be the day that a young, vibrant and dynamic speaker, or a wise, seasoned, and knowledgeable scholar will step up and deliver the message that our hearts so desperately yearn to hear.

A man steps up with a jumble of papers in his hand. He begins.

Speaking? No…Reading. Verbatim.

In an accent that makes us wonder if it was Arabic we just heard or an ancient form of Na’vi, “Today, we are going to learn about faith.”

( Read the Full Story at www.suhaibwebb.com)
suhaibwebb.com/.../...
Quote | Report to administrator
haris
0 #8 haris 2011-02-07 21:07
இப்போது ஒரு இயக்கம் அதாவது hizbuthahrir முஸ்லிம்களை ஜனநாயகம் கூடாது என்று சொல்லிக்கொண்டு ஒவ்வொரு வியாக்கியானம் கொடுத்து,வாசிக் கும் பழக்கமே இல்லாத இளைஞர்களை கவர்ந்து இழுக்கிறது.அவர் கள் kilafath எல்லாவற்றுக்கும ் தீர்வு என்று சொல்லி மக்களை அழைக்கிறார்கள். kilafathai சொல்லி அழைப்பது குற்றம் இல்லை.ஆனால் தீர்க்கவேண்டிய பல பிரச்சினைகளை தீர்க்காமல் kilafath தான் தீர்வு தீர்வு என்று சொல்லி முன்னெடுக்கவேண் டிய திட்டங்களை எதிரியின் பிரசாரங்களை முறியடிக்க முயற்சி செய்யாமல் இருப்பது,அணைத்த ு சமூக மக்களை ஒன்றிணைத்து செல்லாமல் முஸ்லிம்களை மட்டும் வைத்து தீர்வை எட்டி விடலாம் என நினைக்கும் மனோ பாவத்தை அந்த இயக்கம் உருவக்கியவருகிற து .அதன் பிரதி பலிப்புத்தான் மக்கா மஸ்ஜித் இமாமின் பேச்சு.இவர்களும ் ஒரு வகையில் எதிரிகளுக்கு உதவுகிறார்கள் .
Quote | Report to administrator
saleem
0 #9 saleem 2011-02-19 08:17
பொதுவாக சிலர் எவ்வளவுதான் வீராவேசமாக பேசினாலும்.வீறு கொண்டு எழுந்தாலும் அரசாங்கத்தின் பிடியில் மாட்டுவதில்லை.ம ாறாக,அவர்களால் நீதிபதிகளோடும் அரசு அதிகாரிகளோடும் வளம் வர முடிகிறது.அது எப்படி முடியும். இவர்களெல்லாம் தொட்டிலையும் கிள்ளிவிட்டு,பி ள்ளையையும் ஆட்டிவிடும் சமூக துரோகிகளாக இருக்கக்கூடுமோ ஏனெனில் சிலர் காட்டிக்கொடுக்க ப்பட்டனர் என இவர் கூறுகிறார் .அவர் இனம் காணப்பட்டுவிட்ட தால் அதைச்சொல்லி இவர் அந்த கீழறுப்பு வேலையில் இறங்கிவிட்டாரோ. போலிகளிடம் சமூகம் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் .எல்லோருக்கும் இது போன்றவர்களின் மேடை வாழ்க்கைதானே தெரியும்!நிஜ வாழ்க்கை தெரியவா போகிறது !ஆம் ஒரு விலைமாது பத்தினியாய் நடித்துவிடமுடிய ும் .ஆனால் கற்பொழுக்கம் உள்ள பெண்ணால் அவ்வாறு முடியாது அல்லவா ?
Quote | Report to administrator
அன்சாரி
0 #10 அன்சாரி 2011-03-01 16:08
... உகாண்டாவினை ஆண்ட இடி அமீன் மார்க்கச் சட்டத்திற்குப் புறம்பாக நடந்ததால் இன்று அரேபியாவில் அகதியாக வாழ்கின்றார்... .// Idi ameen dead on 16th August 2003 pls correct.
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #11 சத்தியமார்க்கம்.காம் 2011-03-03 10:08
அன்புமிக்க சகோதரர் அன்ஸாரீ,
அஸ்ஸலாமு அலைக்கும்.

முனைவர் முஹம்மது அலீ அவர்களின் மேற்காணும் பதிவில் இருந்த, நீங்கள் சுட்டிக்காட்டிய பிழை திருத்தப்பட்டது . கவனக் குறைவுக்கு வருந்துகிறோம்!

தங்களது சுட்டலுக்கு நன்றி சொல்வதோடு, பிழைகள் கண்ணில் பட்டால் தொடர்ந்து எங்களுக்கு அறியத் தாருங்கள் என்று அன்போடு வேண்டுகிறோம்.

ஜஸாக்கல்லாஹு கைரா!
Quote | Report to administrator
haneefm
0 #12 haneefm 2011-03-10 23:47
அஸ்ஸலாமு அலைக்கும்
தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்
ஜகத்தினை அழிக்கவேண்டாம் நல்ல ஆக்கங்களை செய்ய
கருத்துக்கும் கண்ணியத்துக்கும ் உரிய நம் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் ஒன்றுபடுவது எப்போது நம்முடைய இஸ்லாம் சமுதாயம் ஒன்றுபடுமா?
ஒன்ருவருமா?
ஹனிப்
குவைத்
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்