முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

Mohd Ali ips

செல்வாக்கால் தாழும் நீதி‘நீதியே என்னிடம் நெருங்காதே- நீ
நெருங்கும் இடத்தில் நானில்லை!’


அரசியல் சட்டப் பிரிவு 14இன்படி, "சட்டத்திற்கு முன் அனைத்து இந்தியக் குடிமகனும் சமமாக நடத்தப்பட வேண்டும்". அது தெரிந்த பழஞ்சங்கதிதானே! அதற்கு இப்போது என்ன வந்தது? என நீங்கள் கேட்கலாம். சொல்லட்டுமா சொந்தங்களே!

ஊருக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும்; புதிய பா.ஜ.க தலைவர் நிதின் காட்காரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்னணியில் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறார் என்பது. இவர் வசிப்பது நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவகத்தை அடுத்துள்ள இவரது வீட்டில். அவருடைய கட்சிக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவில் 50 சதவீத பொறுப்பாளர்கள் ஆர்.எஸ்.எஸ் ஆசிபெற்றவர்கள். அதில் முன்னாள் மத்தியப் பிரதேச மாநில பி.ஜே.பி தலைவர் நரேந்தரசிங் தோமர் (Narendra Singh Tomar) தற்போதைய அகில இந்திய பி.ஜே.பி குழுவில் பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார். அவர் மத்தியப் பிரதேச சிவ்பூரி மக்களவை எம்.பியும் ஆவார். அவர் பொதுச்செயலாளர் பதவியேற்ற பின்பு தன்னுடைய சொந்த ஊரான மத்தியப் பிரதேசத்திலுள்ள அம்பா நகருக்குச் சென்றபோது அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

எப்படி?

நமதூர்ப் பக்கம் வி.ஐ.பிகளுக்குக் கொடுக்கப்படும் யானைகள் மாலையிடும் வரவேற்பா? அல்லது பட்டர்கள் பரிவட்டம சூடி, பூரண கும்ப வரவேற்பா? அல்லது தாரை-தப்பட்டை வரவேற்பா?

அல்ல-அல்ல நண்பர்களே! நமது அரசால் அழைப்பு கொடுக்கப்பட்ட வெளிநாட்டு முக்கியப் பிரமுகர்கள் நமது நாட்டுக்கு வரும்போது வழங்கப்படும் 'கன் சல்யூட்' அதாவது "துப்பாக்கி சல்யூட்", பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளருக்குக் கொடுக்கப் பட்டது என்றால் நம்புவீர்களா?

21.3.2010 ஊடகங்களிலும் எலக்ட்ரானிக் மீடியாக்களிலும் பார்த்த பின்பு உங்களால் நம்பாமல் இருக்க முடியாது. சாதாரணமாக வெளிநாட்டு வி.வி.ஐ.பி வரும்போது 21 துப்பாக்கிக் குண்டுகள் வெடித்துதான் வரவேற்பர். ஆனால் எம்.பி. நரேந்திரசிங் வந்தபோது சட்டத்துக்கு விரோதமாக 101 துப்பாக்கி வெடித்து, மாபெரும் வரவேற்பாக திறந்த ஜீப்பில் வலம் வந்த அவரை வரவேற்றிருக்கிறார்கள்.

அவர்கள் வைத்திருந்த அத்தனைத் துப்பாக்கியும் அனுமதியில்லாத துப்பாக்கிகளாம்! உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி வெடித்த துப்பாக்கியால் பி.ஜே.பியின் டிவிஷனல் யூனிட் துணைத் தலைவர் சுபாஷ் ஷர்மா காயம் பட்டிருக்கின்றார் என்ற செய்தியும் உண்டு. இத்தனையும் மாநிலக் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்துள்ளது. ஏனென்றால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க அரசு அரியணையிலுள்ளது.

ஆயுதச் சட்டம் 1959இன் பிரிவு 7, 20, 24, 25படி துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வேண்டும். அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் கைது செய்யப்பட வேண்டும். அனுமதியில்லாத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட வேண்டும் மற்றும் அதற்கான தண்டனை மூன்று வருடத்திலிருந்து ஏழு வருடமாகும். ஆனால் அந்த வரவேற்பில் அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கையில்லை என்றே ஊடகங்கள் கூறுகின்றன. நீதி அவர்களை நெருங்காது. காரணம் அவர்கள் காவி உடை வஸ்தாதுகள்.

***

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் கோத்ரா ரயில் விபத்திற்குப் பின்பு 1500 முஸ்லிம் அப்பாவிகள் காவியுடை குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். காவிக்காரர்கள் ஆடிய வெறியாட்டத்தை அப்போதைய உளவுப்படைத் தலைவர் ஸ்ரீகுமார் முழு விபரத்துடன் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அத்துடன் அப்போதைய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் பதவியிறங்கிய பின்னர் தன்னுடைய இயலாமையை வருத்தமுடன் தெரிவித்ததாக ஊடகங்கள் சொன்னது அனைவரும் அறிந்ததே.

இதில் என்ன விசேஷம் என்றால் தனது வீட்டில் படுகொலைகளுக்கு பயந்து ஓடி வந்து ஒளிந்து கொண்டிருந்த மக்களைக் காப்பாற்ற, பல முறை போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கும் முதல்வர் மோடிக்கும் மாறி மாறி உதவி கேட்டு, ஃபோன் செய்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியும் மற்றும் 68 பேர்களும் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்கள். அவருடைய வீடும் தரை மட்டமானது. மதுரை பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனிடம் தன் கணவன் கோவலனைக் கொன்ற பாவத்திற்கு நீதிப் பரிகாரம் தேடி முறையிட்டதைப் போல் மறைந்த ஜாஃப்ரியின் மனைவி திருமதி. ஸக்கியா உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு அதன் பயனாக, உயிருடன் எரித்தக் கொலை வெறியாட்டத்தை விசாரணை செய்ய முன்னாள் சி.பி.ஐ டைரக்டர் ராகவன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. உடனே பி.ஜே.பி பத்திரிக்கை தொடர்பாளர் ரவி பிரசாத் என்ன சொன்னார் தெரியுமா? "நாங்கள் சட்டத்தினை மதிப்பவர்கள். மோடி சட்டப்படி நடந்து கொள்வார்" என்று கூறினார். ஆகவே அவர்கள் வாக்கின்படி குஜராத் முதல்வர் மோடிக்கு ஆஜராக சம்மனும் அனுப்பட்டது.

இப்போது குற்றவியல் சட்டம்(சி.ஆர்.பி.சி) பிரிவு 39படி சில குற்றங்கள் சம்பந்தமாக உடனே தகவல் கொடுக்கக் கடமையாகிறது. இதில் முக்கிய சில குற்றங்களான தீ வைத்தல், கொலை செய்தல் போன்றவையும் அடங்கும். இது, பிரிவு 160படி காவல் துறை அதிகாரி மேற்கூறிய குற்றங்கள் சம்பந்தமான தெரிந்த விபரங்களைச் சொல்ல அது சம்பந்தப்பட்டவர்களை விசாரணைக்கு அழைக்கும் சம்மனாகும். ஆகவேதான் மோடியினை அழைத்துள்ளார்கள் சிறப்பு விசாரணைக் குழுவினர். ஆனால் மோடி என்ன சொன்னார் தெரியுமா? தனக்கு எந்த சம்மனும் வரவில்லை; சம்மன் அனுப்பப் பட்டதாக செய்தி பரப்பியது தனது எதிரிகளின் திட்டமிட்ட செயல் என்று கூறினார். ஆனால் அடுத்த நாளே அதாவது 23.3.2010 அன்று அவருடைய வக்கீல் மகேஷ் ஜேத்மலானி சொல்கிறார்: "சம்மன் வந்தது உண்மை, அவர் 27.3.2010 அன்று ஆஜராவார்" என்று. ஆனால் மோடியுடன் சேர்ந்து பி.ஜே.பி எம்.எல்.ஏ காலுபாய் மாலிலாடுக்கு அனுப்பிய சம்மனை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டியிருப்பதாகவும் ஆகவே அதனைச் சிறப்பு விசாரணைக்குழு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி,  காலுபாயின் போர்வையில் ஒளிந்து கொள்ளப் பார்க்கிறார் மோடி.

***

இரண்டாம் உலகப்போரில் யூதர்களை நாஸிப்படை வேட்டையாடியது அனைவரும் அறிந்ததே. ஜெர்மன் நாட்டுக் கோர்ட்டில் ஒரு வழக்கு நடந்தது. அதில் 1944ஆம் ஆண்டு நடந்த கொலைகளில் சம்பந்தப்பட்ட ஜெர்மன் நாட்டு முன்னாள் படைத்தளபதியும் 88 வயதாகி வீல்ச்சேரில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவருமான ஹீன்ரிச்சுக்கு 23.3.2010 அன்று ஜெர்மன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இதை எதற்காகச் சொல்கிறேனென்றால் "உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும்" என்ற நாட்டுப்புறப் பழமொழியை யாரும் மறந்து விடக் கூடாது. அதுபோல குஜராத் முதல்வர் 1500 முஸ்லிம்களை குஜராத் மாநிலத்தில் கொன்ற குற்றத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். ‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயிலாண்டி’ என்ற பழமொழிக்கிணங்க அப்பாவி முஸ்லிம்களை - என்னைப் போன்றோர் உள்பட - பொய் வழக்கில் மாட்ட வைக்கும் குயுத்தியினை குஜராத் போன்ற பல மாநில அரசுகளும் மத்திய புலனாய்வுத் துறையும் தொடர்ந்து கையாண்டு கொண்டுதான் உள்ளனர் என்பதை முஸ்லிம்கள் அறியாமலில்லை. ஆனால் ஆட்சியிலுள்ளவர்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் சட்டத்திலுள்ள அனைத்து ஓட்டைகளையும் பயன்படுத்தி தப்பிக்கப் பார்க்கின்றனர்.

உதாரணத்திற்கு, பாரதப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் சீக்கியத் தீவிரவாதிகளால் 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டபோது டெல்லியுள்ள சீக்கியர்கள் 2000 பேர்களுக்கு மேல் கொலை செய்யப்பட்டும், அவர்களது வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டும் அவர்கள் இன்றும் சில இடங்களில் அகதி வாழ்க்கை வாழ்கின்றனர். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜான் குமாருக்கு வாரண்ட் பிறப்பித்த பிறகும் பாதுகாப்பு வளையத்தில் வளைய வரும் அவரை கோட்டை விட்டதாக சி.பி.ஐ சொன்னது. சீக்கிய மக்களும் பத்திரிகை ஊடகங்களும் கண்டனம் எழுப்பின. கண்டனத்திற்குப் பிறகு அவர் டெல்லிக் கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றார் என்றது செய்தி. சட்டத்தினை ஆளுங்கட்சியினைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் எப்படியெல்லாம் தங்கள் இஷ்டம்போல வளைக்கிறார்கள் என்பதற்கு இது இலட்சத்தில் ஓர் உதாரணம் மட்டுமே

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சொல்கிறார் "இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் ஹிந்துக்களே! அவ்வாறு ஹிந்துக்களாக வாழ விருப்பம் இல்லாதவர்கள் இந்தியாவினை விட்டு வெளியேறி விட வேண்டு"மாம்.

ஏன் முஸ்லிம்கள் இந்த நாட்டிக்காக தியாகம் செய்யவில்லையா? டெல்லியை ஆண்ட கடைசி முகலாய மன்னர் பகதூர்ஷா ஸபர் முதலாவது ஆங்கிலேயருக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கவில்லையா? ஆயுதம் ஏந்திப் போரிட முதலில் வந்த சுபாஷ் சந்திரபோஸுக்கு இந்தியாவிலும் பர்மா போன்ற நாடுகளிலும் வாரி வழங்கி ஐ.என்.ஏ படையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் சேரவில்லையா? நாட்டு விடுதலையில் முஸ்லிம்களின் தியாகத்தையும் பங்கையும் 90 வயதிற்கு மேல் உயிர் வாழும் போராட்ட வீரர் அமீர் ஹம்ஸாவை ஆர்.எஸ்.எஸ் தலைவர் கேட்டுத் தெரிந்து கொண்டால் நலமாக இருக்கும். அல்லது முஸ்லிம்கள் சுதந்திரத் தியாக வரலாறுகளைப் படித்தலாவது நலமாக இருக்கும். அரசியல் சட்டப்படி ஆர்.எஸ்.எஸ் தலைவர் சொல்வதுபோல "அரசியல் சட்டப் பிரிவு 14 செல்லாது" என்பதாக அவரால் நடவடிக்கை எடுக்க முடியுமா?

இந்தியக் கோர்ட்டில் சமீபத்தில் ஒரு வழக்கு நடந்தது. அதில் ஜெர்மன் நாட்டுப் பெண்ணுக்குக் கருப்பையில் கோளாறு. யாத்திரை வந்த அந்தத் தம்பதிகளுக்கு இந்தியப் பெண் ஒருத்தி மும்பையில் செயற்கை முறையில் கருத்தரிக்க உதவி செய்து அழகான பெண் குழந்தையும் பெற்றுக் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு எந்த நாட்டுக் குடியுரிமை வழங்குவது? என்ற வழக்கில் இந்தியக் கோர்ட்டு அந்தக் குழந்தைக்கு இந்தியக் குடியுரிமை வழங்கி ஆணையிட்டது.

செயற்கை முறையில் கருத்தரித்த வெளிநாட்டுத் தம்பதிகளின் குழந்தைக்கே இந்தியக் குடியுரிமை கொடுக்கும்போது இந்திய குடிமகன்களான இந்திய முஸ்லிம்களை இந்திய மண்ணிலிருந்து வெளியேறச்சொல்ல அவருக்கு யார் உரிமை கொடுத்தது?.

அதேபோல் மகாராஷ்ட்ராவில் சிவ்சேனா அமைப்புகள், "மகாராஷ்ட்ரா மகாராஷ்ட்ராவினர்க்கே சொந்தம், அவர்களுக்குத்தான் வேலையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்" என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் பிழைப்புத் தேடிவந்த அடுத்த மாநில மக்களைக் காட்டுமிராண்டித்தனமாக தாக்குவது என்ன நியாயம்? எந்தக் கோர்ட்டாவது அப்படித் தாக்கும்-தூண்டிவிடும் சிவ்சேனா தலைவர்களான தாக்கரே வகையறாக்களைத் தண்டிக்க முடிகிறதா?

மேலே சொன்ன உதாரணங்கள் எல்லாம் எப்படி ஆட்சி பீடத்திலுள்ள, மதச் செல்வாக்குள்ளவர்கள் குற்றங்கள் செய்து விட்டும், விஷ துவேஷத்தினைப் பரவ விட்டும் நீதியின் கரங்களிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள் என்று பார்த்தோம். அவர்களை நீதியின் கரங்கள் தங்கள் வளையத்தில் கொண்டு வரமுடியவில்லை.

"நீதியே என்னிடம் நெருங்காதே- நெருங்கினால்
நீயே தொலைந்து போவாய்"

என்று அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

***

டெல்லி சீக்கியர் கொடுமை நடந்து 26 வருடம் ஆகிறது.

பாபர் மஸ்ஜித் இடித்து 18 வருடமாகி விட்டது.

இப்போதுதான் ராய்பெரேலிக் கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. இதில் ஆறுதல் தரும் தகவல் என்னவென்றால் அத்வானிக்குப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அஞ்ஜூ குப்தா, ஐந்தாண்டுகளுக்கு முன்னரே (07.07.2005) அத்வானிக்கு எதிராக அலஹாபாத் நீதிமன்றத்தில் சாட்சியளித்தவர், இப்போது பி.ஜே.பி எப்படித் தொண்டர்களை கர்சேவைக்கு லட்சக்கணக்கில் கூட்டியது; பாபரி மஜ்ஜித் இடித்த நேரத்தில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, பெண் சுவாமி ரித்தம்பரா, வினாய் கட்யார், டால்மியா, கிரஜா மகராஜ், அசோக் சிங்கால் போன்றோர் எப்படி ஆக்ரோசமாகத் தூண்டிவிட்டனர் என்பதை விளக்கமாக - கட்டிக்கொண்டு ஆடிய ஆனந்த கூத்து உட்பட - விவரித்திருக்கிறார்.  அவருடைய நேர்மையினை, துணிச்சலினை உங்கள் சார்பாக பாராட்டுகிறேன். குறுக்கு விசாரணை, எதிர்வரும் ஏப்ரல் 23, 2010 அன்று நடைபெறவுள்ளது.

குஜராத் இனப்படுகொலை நடந்து எட்டு வருடமாகிறது.

நீதி கிடைக்கத் தாமதமாகிறது.

"தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகக் கருதவேண்டும்" என்பது சட்ட நிபுணர்கள் கருத்து. ஆனால் நம்பிக்கையில் வாழும் இந்தியர் நீதி தாமதமானாலும் மறுக்கப்பட்ட நீதியாக இருக்கக்கூடாது என ஆசைப்படுவது நியாயம்தானே சொந்தங்களே!

- முனைவர் A.P. முஹம்மது அலீ, M.A, Ph.D, IPS(R)

Comments   
Ahamed Basheer
0 #1 Ahamed Basheer 2010-04-04 22:13
Nobody can give you freedom. Nobody can give you equality or justice or anything. If you're a man, you take it - Shaheed Malik Al Shabazz (Malcolm X) The American Black Nationalist leader.
Quote | Report to administrator
Nizam
0 #2 Nizam 2010-04-22 14:19
How many of us trying to get justice for our fellow muslim brethern? We mostly don't care about our fellow muslims.Because we have our own problems, Business,Life and struggle! What guratees that this problem will not come to anyone of us? We need to change our attitude towards our fellow muslim brethern until or otherwise these type of injustice will prevail forever to INDIAN Muslims.

There was an incident at Murukkangudi village near Kumbakonam where 20 years old Muslim who returned from DUBAI was abducted and killed by POLICE 10 years ago. The case was transfered to CBCID and it discovered 10 people gang murdered that muslim youth. Time has passed 10 years now! No Arrest, No prosecution!!, No justice!!!. This is one of the incident where muslims are refused justice. There are 100 and 1000 of cases in Tamilnadu and India! As a social responsibility, We have to work together and help the victims and fight the injustice within the constitution.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்