முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

வாசகர் பகுதி

மீபத்தில் மாணவர் சார்ந்த பிரச்சினைகள் சமூகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரியது. அதிலும், அப்பிரச்சினைகளை மாணவர்களே ஏற்படுத்துவதுதான் மிகுந்த வேதனை.

கல்லூரி வளாகங்களுக்குள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் அடிதடிகள், கொலைகள் தமிழக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துக் கொண்டிருக்கின்றன. தாராளமாகக் கிடைக்கும் மதுவும், போதைப்பொருட்களும் மாணவர்களின் நிலையை இன்னும் மோசமாக்கிக் கொண்டிருக்கிறது.

குற்றம் இழைத்த மாணவர்களுக்குத் தண்டனை வழங்குவது பற்றி மேம்போக்காகப் பேசிவிட்டு எழுந்து சென்று விடுகிறோம். அதை விடுத்து, வலிமையான தேசம் உருவாக இந்தப் பிரச்சினைகளின் முழு பரிணாமங்களை ஆய்வு செய்ய வேண்டியிருக்கின்றது. இச்சம்பவங்கள் நிகழ்வதற்கான அடிப்படைக் காரணங்கள் என்னவென்று இச்சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் சிந்தித்து, அந்தக் காரணிகளைச் சீர்செய்ய வேண்டும். நான் முக்கியமாகக் கருதும் மூன்று முக்கிய காரணிகளை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

மூன்று காரணிகள்:

1.   குடும்பம்
2.   கல்வி
3.   ஊடகம்

மேற்கூறிய மூன்றும் தனிமனித வாழ்விலும் கூட்டு வாழ்விலும் நம்மீது ஆதிக்கம் செலுத்தக்கூடியவை. சிறந்ததொரு சமூகத்தைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவை. ஆனால் இன்றைய சூழ்நிலையில் இவற்றின் அமைப்பும் செயல்பாடும் திருப்தியளிக்கக் கூடிய வகையில் இல்லை.

படம் நன்றி: விகடன்

 

சமூகத்தில் நல்லவை எவை தீயவை எவை எனும் பகுத்தறிவு ஒரு நல்ல குடும்பத்திலிருந்தே உருவாகிறது.

குடும்பம்

"கூட்டு வாழ்க்கை முறை" என்ற சூழல் கிட்டத்தட்ட இன்று இல்லாமல் ஆகிவிட்டது. தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் பேரன்கள், பேத்திகள் வளர்ந்த காலம் போய் விட்டது. குழந்தைகளுக்கு நெறிகள் ஊட்டும் அழகிய கதைகள் சொல்வதற்கு ஆளில்லை. இன்றைய பெற்றோர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக கணவனும் மனைவியுமாக வேலைக்குச் செல்லக்கூடிய நிலை உருவாகி, பிள்ளைகளைச் சரிவர கவனிப்பதில்லை. அதிலும் பிள்ளைகளுக்குத் தந்தையுடனான உறவு முற்றிலும் அறுந்தே விட்டது. பிள்ளைகளுக்காக எத்தனை மணிநேரத்தை இன்றைய பெற்றோர்கள் செலவிடுகின்றார்கள்? தங்கள் பிள்ளைகளுக்கு எது பிடிக்கும், பிடிக்காது, அவர்களுடைய நண்பர்கள் யார், அவர்கள் எப்படி நேரத்தை செலவிடுகின்றார்கள், என்பதைப் பற்றிய விவரங்களெல்லாம் பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. பெற்றோர் நம்முடன் நேரத்தைச் செலவிட மாட்டார்களா எனப் பிள்ளைகள் ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்று சேர்ந்து உணவு உண்ணும் பழக்கம், கூடிப்பேசி உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் எதுவும் இல்லாமல் எப்படிப் பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒருவர் மற்றவரைப் புரிந்து கொள்ள முடியும்? பெற்றோர்கள்தான் பிள்ளைகளின் வளர்ச்சியில் முழுப்பங்கு உடையவர்கள். இதை உணர்ந்து பிள்ளைகளைச் சரியாக வழிநடத்தினால் நாட்டில் பிரச்சனைகள் உருவாவதைக் குறைக்க முடியும். சமூகத்தில் நல்லவை எவை தீயவை எவை எனும் பகுத்தறிவு ஒரு நல்ல குடும்பத்திலிருந்தே உருவாகிறது. சரியான முறையில் வழிநடத்தப்பட்ட சிறார்களே மது, போதை, ஆபாசம், வட்டி, வரதட்சணை போன்ற சமூகக் கொடுமைகளை சுட்டெரிக்கும் பழக்கத்துடன் வளர்வர்.

கல்வி

”ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்பதைப் போல் செயற்கையான இன்றைய கல்விமுறை தனிமனித ஆளுமையை உருவாக்கத் தவறிவிட்டது. கல்வி, மனிதனை மனிதனாக உருவாக்க வேண்டிய பணியைத்தான் செய்ய வேண்டுமே தவிர வியாபார நோக்கில் இயந்திரங்களை உருவாக்கக் கூடாது. மனிதத் தன்மையை வளர்க்காமல் வெறும் பணம் சம்பாதிப்பதற்கான உணர்வுகளை மட்டுமே இன்றைய கல்வி இளம்தலைமுறைக்கு போதித்துக் கொண்டிருக்கின்றது. மனித வாழ்வின் நோக்கத்தை, மனிதத் தன்மையை, சமூக அக்கறையை ஊட்டக்கூடிய கல்விமுறையை உருவாக்குவதன் மூலம் சமூகத்தில் மிகச் சிறந்த மாணவர், இளைஞர் பங்களிப்பை அறுவடை செய்ய முடியும்.

ஊடகம்

மக்களின் மனதில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை இந்த ஊடகங்களுக்கு உண்டு என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அதை ஊடகங்கள் உணர்ந்திருந்தும் தம்மைச் சரியான போக்கில் செயல்படுத்த முனையவில்லை. மக்களின் விருப்பத்திற்கேற்ப பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டாலும் அதிலும் மக்கள் நலன், நாட்டு நலன் சார்ந்த அம்சங்களைச் சேர்க்கலாம். ஆனால் ஆபாசத்தையும் வன்முறையையும் கக்கும் தீப்பிழம்புகளாகத்தான் அவை வலம் வருகின்றன. அன்று இந்திய விடுதலையில் ஊடகங்களுக்குப் பெரும் பங்கு இருந்தது என்பதை இன்றைய ஊடகவியலாளர்கள் மறந்து விட்டார்கள் போலும்! சமூகத்தில் இன்று இருக்கும் பிரச்சனைகளுக்கு எதிராய் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டிட இந்த ஊடகங்களால் முடியும். அதனைச் சரிவரச் செய்யாமல் மக்கள் ரசனை இதுதான் என்ற முன்முடிவுடன் பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டு மூன்றாம் தர நிகழ்ச்சிகளையும், மசாலா படங்களையும் தான் தயாரிக்கின்றார்கள். அப்படிப்பட்ட படைப்புக்களையும் முறையாகத் தணிக்கை செய்யாமல் அரசு அனுமதித்துவிடுவதுதான் மிகவும் வருத்தமளிக்கின்றது. நமது நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும், அதற்காக மாணவர்களை, இளைஞர்களை எப்படித் தயார்படுத்த வேண்டும் என்ற கோணத்தில் சிந்தித்து ஊடகங்கள் செயல்பட்டால் நமது நாட்டை உலக அரங்கில் முன்மாதிரியாகக் கொண்டு செல்ல முடியும்.

ஆனால் மேற்கூறிய மூன்று காரணிகளும் அவரவர் கடமைகளைச் சரிவர செய்யாததன் விளைவுகளைத்தான் நாம் இன்று அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். பள்ளி / கல்லூரி வளாகத்திற்குள் தொடர்ந்து அடிதடிகளும் கொலைகளும் நடைபெற்று வருவதை சமூகத்தின் மீது அக்கறை கொண்ட எவராலும் சகித்துக் கொள்ள முடியாது. இந்த நிலை இப்படியே தொடருமானால் இதைவிடப் பல கொடிய நிகழ்வுகளை அடுத்தடுத்துச் சந்திக்க வேண்டி வருமோ என்ற அச்சம் எழுகின்றது.

ஒவ்வொரு தரப்பும் தத்தமது கடமையைச் சரிவரச் செய்யவில்லை எனில் காட்டுமிராண்டித்தனமான, முனை மழுங்கிய சிந்தனைகளைக் கொண்ட சமுதாயம் உருவாகிவிடுமோ என அஞ்சுகின்றேன்.

நாம் ஒவ்வொருவரும் நமது ஆற்றலுக்கும் திறமைக்கும் உட்பட்ட வகையில் நம்மாலான மிகச் சிறந்த பங்களிப்பை சமூகத்திற்குச் செலுத்துவோம். சிறந்த சமுதாயத்தைக் கட்டமைப்போம்.
 

M.சையது அபுதாஹிர் M.Sc.,M.Phil.,
ஆராய்ச்சி மாணவர்


 

Comments   

Abul Hassan
0 #1 Abul Hassan 2014-12-14 16:03
Alhamdhulillah. Good and needed article. Wishes.
Quote | Report to administrator
Sirajutheen BS
0 #2 Sirajutheen BS 2015-06-23 14:21
அஸ்ஸலாமு அலைக்கும்
நான் எழுதிய கட்டுரைகளை தங்கள் தளத்தில் பகிர்ந்துக்கொள் ள நிபந்தனைகள் அறிய வேண்டுகிறேன். மேற்கண்ட மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுமா று கேட்டுகோள்கிறேன்.

இப்படிக்கு
சிராஜுத்தீன் பா செ
Quote | Report to administrator
மக்கள் தொடர்பாளர்
0 #3 மக்கள் தொடர்பாளர் 2015-06-25 11:28
அன்புச் சகோதரர் சிராஜுத்தீன்,

வஅலைக்கும் ஸலாம். தங்களது ஆக்கங்களை என்ற முகவரிக்கு அனுப்புங்கள். ஆசிரியர் குழுவின் பரிசீலித்து பதிவுக்குத் தேர்ந்தெடுக்கும்.

சத்தியமார்க்கம்.காம்
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்