முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

உலகம்

பாலில் நீர்கலப்பதா?ன்றைய இரவு அஸ்லமுடன் மதீனா வீதிகளில் உலா சென்று கொண்டிருந்தார் உமர் (ரலி). பகலெல்லாம் அரசாங்க நிர்வாகம், போர் விவகாரங்கள், குடும்ப அலுவல்கள் என்று ஓயாத ஒழியாத வேலைகள்; இரவிலோ மக்களின் நலன் காக்க ரோந்து; அதன் பின்னர் பின்னிரவுத் தொழுகை என்று அயராது பணியாற்றிக் கொண்டிருந்தவர் உமர். நம்மைப்போல் தொடர்ந்து ஏழு எட்டு மணி நேரத் தூக்கம் என்பதெல்லாம் அவர் ஒருநாள்கூடத் தூங்கியதாய் அறிய முடியவில்லை. சதா காலமும் இறைவனின் நினைப்பையும் அச்சத்தையும் நெஞ்சில் தூக்கித் திரிந்துகொண்டிருந்தார் அவர்.நள்ளிரவு நெருங்கியிருக்கும். நடந்து வந்து கொண்டிருந்தவருக்கு மிகவும் அசதியாக இருந்தது. ஒரு வீட்டின் சுவரில் சாய்ந்து அமர்ந்து விட்டார்.

வீட்டின் உள்ளே பேச்சு சப்தம் கேட்டது. “மகளே! சற்று எழுந்து அந்தப் பாலில் தண்ணீர் கலந்து வையேன்”

ஊர் அடங்கியிருந்த நேரம். தாயொருவள் மகளிடம் பேசியது தெளிவாய்க் கேட்டது.

“என்ன, பாலில் தண்ணீர் கலப்பதா? அப்படியானால் கலீஃபாவின் கட்டளை?”

“அது என்ன கட்டளை?”

பாலில் தண்ணீர் கலந்து விற்பதை நம்மூர் பால்காரர்கள் பின்பற்றும் முன்பே இப்பழக்கம் தொன்றுதொட்டு உலகெங்கும் இருந்து வந்திருக்கிறது போலும். உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வது பெரும் குற்றம் என்பது இஸ்லாத்தின் நிலை. அதனால் உமருடைய கட்டளைப்படி அவரின் சேவகர் ஒருவர் மதீனா வீதியெங்கும் அறிவிப்புச் செய்திருந்தார், “பாலில் தண்ணீர் கலப்படம் செய்யக் கூடாது என்பது கலீஃபாவின் உத்தரவு”

மகள், தாய்க்கு அந்தக் கட்டளையை நினைவுறுத்தினாள்.

“அது சரி! உமரோ அந்த சேவகனோ காணவியலாத இடத்தில் நம் வீட்டிற்குள் நீ இருக்கிறாய். எழுந்து தண்ணீரைக் கலந்து விடு; யாரும் அறியப்போவதில்லை” என்றாள் அந்தத் தாய்.

“அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன்! பொது இடங்களில் அமீருக்குக் கட்டுப்பட்டவளாகவும் தனிமையில் அவரது உத்தரவுகளுக்கு மாறு செய்பவளுமாக நான் என்றுமே நடந்து கொள்ளமாட்டேன்” என்று திட்டவட்டமான பதில் வந்தது.

மக்கள் மத்தியில், பகலில், சட்டத்திற்கும் உத்தரவிற்கும் கட்டுப்பட்டு நடப்பது மக்களுக்கு நிர்பந்தமாகக்கூட ஆகிவிடுகிறது. ஆனால் யாருமற்ற தனிமையில் இருக்கும்போதும் ஒருவர் இறைவனுக்கும் அவனது சட்டத்திற்கும் பயந்து நடந்துகொண்டால் அது ஒழுக்கத்தின் மேன்மையை அல்லவா எட்டிவிடுகிறது? அதுதானே இறையச்சம்!

தாய்க்கும் மகளுக்குமான இந்த உரையாடலைக் கேட்டு அசதியிலிருந்த உமர் அசந்துவிட்டார்.

“அஸ்லம் இந்த வீட்டின் கதவின்மேல் அடையாளமிட்டு இந்த வீடு எங்கிருக்கிறது என்று நினைவில் வைத்துக் கொள்.”

தெருப்பெயர், கதவு எண் போன்ற அடையாளங்கள் இல்லாத காலத்தில் அதுதான் அவர்களுக்கு எளிய முறை. அஸ்லம் அவ்விதமே குறியிட்டுவிட, பின்னர் தொடர்ந்தது அவரது அன்றைய இரா உலா.

மறுநாள் -

அஸ்லமை அழைத்தார் உமர். “நேற்று குறியிட்டுவிட்டு வந்த அந்த வீட்டிற்குச் செல்லுங்கள். இரவில் உரையாடிக் கொண்டிருந்தது யார், யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு ஆண் துணையிருக்கிறதா என்றும் அறிந்து வாருங்கள்”

அவர்கள் இருவரும் தாயும் மகளும் என்பதையும் மகளுக்குத் திருமணமாகவில்லை; தாயார் கணவனை இழந்தவர் என்பதையும் அறிந்துவந்துச் சொன்னார் அஸ்லம். அடுத்து என்ன நடக்க வேண்டும்?

நமக்குப் பழக்கமான ஆட்சிமுறைப்படி அரசாங்க உத்தரவை மீறுவதற்கு ஊக்குவித்த அந்தத் தாய்க்குத் தண்டனையோ அபராதமோ வழங்கப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பெண்ணிற்கு நற்சான்றிதழ், ஒரு பதக்கம், வேண்டுமானால் சற்றுத் தாராளமாய்க் கொஞ்சம் பணமுடிப்பு என்று அளித்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கலீஃபா உமர் தம் மகன்களை அழைத்தார். முந்தைய இரவு நடந்தவற்றையும் அஸ்லம் அறிந்து வந்து சொன்னதையும் கூறிவிட்டு,

“உங்களின் தந்தைக்கு மட்டும் வயது முதிர்ச்சி ஏற்பட்டிருக்காவிடில் அவர் இந்தப் பெண்ணை மணமுடிப்பதில் நீங்கள் எவரும் அவருடன் போட்டியாளராக வரமுடியாது. எனவே உங்களில் யாருக்காவது மணமுடிக்கப் பெண் தேவையா?” என்று கேட்டார்.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), “எனக்கு மனைவியிருக்கிறார். இப்பொழுது வேறு திருமணத்துக்குத் தேவையற்றவனாய் இருக்கிறேன்” என்று சொல்லிவிட்டார்.

மற்றொரு மகன் அப்துர் ரஹ்மானும் அதே பதிலையே கூறினார்.

ஆஸிம் மட்டும், “தந்தையே! எனக்கு மனைவியில்லை. எனவே அப்பெண்ணை மணமுடித்து வையுங்கள்” எனக் கேட்டுக் கொண்டார்.

“மிக்க நன்று” என்று அந்தப் பெண்ணுக்குத் தம் மகன் ஆஸிமை மணமுடித்துக் கொடுத்தார் உமர்.

இங்கு சற்று மூச்சை இழுத்துவிட்டு, இலேசாய்ச் தலையையும் சொறிந்து கொண்டு யோசிக்க வேண்டும். இஸ்லாமியப் பேரரசின் கலீஃபா உமர். அவர் தம்முடைய மகன்களுக்கு மன்னர்கள், சக்கரவர்த்திகள், பெருங்குடி மக்கள், செல்வந்தர்கள் போன்றோரிடமிருந்து பெண்களைத் தேடித் தேடி பெற்றுத் தந்திருக்கலாம். அவ்விதம் மணமுடிக்க எவ்வித மறுப்புமின்றிப் பெண்களும் தயாராய் இருந்திருப்பார்கள்.

கடைக்குச் சென்றால் கண்ணைப் பறிக்கும், மனதை மயக்கும் ஒரு பொருளை வாங்கியே தீரவேண்டும் என்று நமக்கெல்லாம் ஓர் உத்வேகம் பிறக்குமே அப்படி, போற்றுதற்குரிய இறையச்சத்துடன் ஒரு பெண் மதீனாவில் உள்ளதை உணர்ந்த அந்தநொடி, அந்தப் பெண் தம் வீட்டிற்கு உரியவர் என்று தீர்மானித்து விட்டார் உமர். அடுத்து என்ன செய்தார்? அஸ்லமை அனுப்பி அந்தப் பெண் பேரழகியா, சீர் செனத்தி தரும் வசதி இருக்கிறதா, பேரீச்சம் தோப்பு, ஒட்டகம் என்று சொத்துபத்து எவ்வளவு என்று பட்டியலிட்டு வரச் சொல்லவில்லை! ‘திருமணத்திற்கு தகுதியான வகையில் இருக்கிறாரா?’ தீர்ந்தது விஷயம்.

ஏன் இப்படி?

இறையச்சம், ஒழுக்கம் போன்ற மாண்புகளில் இணைந்து உருவாகிறதே - அது வாழ்க்கை. உலக மகா வாழ்க்கை! மறுமையின் சிறப்பிற்கு இம்மையில் அடித்தளம் அமைக்கும் வாழ்க்கை. அத்தகு இல்லறம் உலகின் சிறந்த வாரிசுகளை ஈன்றெடுக்கும்; இறைவனின் பாதுகாவல் அவர்களுக்கு என்றென்றும் இருக்கும் என்பது உமரின் நம்பிக்கை.

என்ன ஆயிற்று? பின்னர் நடைபெற இருக்கும் இஸ்லாமிய வரலாற்றின் முக்கிய நிகழ்விற்கு அத்திருமணம் முன்னுரை எழுதியது.

அந்தப் பெண்ணுக்கும் ஆஸிமுக்கும் மகளொருவர் பிறந்தார். அந்த மகளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அவர் வேறு யாருமல்ல. பின்னாளில் நேர்வழி சென்ற கலீஃபாக்கள் வரிசையில் ஐந்தாமவர் என்று இஸ்லாமிய உலகு போற்றுமளவுக்கு ஆட்சி புரிந்த 'இரண்டாவது உமர்', உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்)தாம் அவர்.

இஸ்லாமிய ஆட்சியின் பொற்காலத்தை வாசிக்கும்போது இத்தகு ஆட்சியும் ஆட்சியாளர்களும் நமக்கும் அமைய வேண்டுமே என்று எழும் ஆசையும் ஆதங்கமும் நியாயமானவையே. தப்பே இல்லை. ஆனால் அதனுடன் மற்றொன்றும் நமக்கு நினைவில் இருத்தல் வேண்டும். அவர்களெல்லாம் நல்லதொரு நாளில் வானில் இருந்து குதித்து பூமிக்கு வந்தவர்களல்லர். நபி (ஸல்) வழி எவ்வழி, அவ்வழி என் வழி என்று உணர்ந்தார்கள்; அதை இழுத்து சுவாசித்து வாழ்ந்தார்கள். அவ்வளவுதான்!

தலைவர்கள் உருவானார்கள்!

-நூருத்தீன்

சான்றுகள் :

'அமீருல் முஃமினீன் (உமருடைய) சிறப்பு' - இமாம் இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) பக்கம் 89-90

'உமர் பின் அல்கத்தாப், வாழ்வும் காலமும்' - மூலம்: டாக்டர் அலீ முஹம்மது ஸல்லாபீ (ஆங்கில மொழியாக்கம் : நாஸிருத்தீன் அல்கத்தாப்)

நன்றி: சமரசம் - 01-15 மார்ச் 2011

Comments   
தாஜுதீன்
0 #1 தாஜுதீன் 2011-03-11 07:44
அஸ்ஸலாமு அலைக்கும்,

நல்ல பகிர்வு. உமர் (ரலி) வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு பகுதியாவது இன்றைய நம் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இவ்வுலகில் வாழ்ந்து வருகிறார்களா? சந்தேகமே.

பயனுள்ள தகவல் தந்த சத்தியமார்க்கம் தளத்துக்கு மிக்க நன்றி.
Quote | Report to administrator
MOHAMED THAMEEM
0 #2 MOHAMED THAMEEM 2011-03-16 08:31
AL HAMDULILLAH. WHAT A BEAUTIFUL MODEL OF LIFE. YAA ALLAH PUT US ON THE PATH OF THOSE GREAT ONES.
Quote | Report to administrator
MOHAMED THAMEEM
0 #3 MOHAMED THAMEEM 2011-03-16 08:41
AVARKALELLAM NALLATHORU NAALIL VAANILIRUNTHU BOOMIKKU KUTHITHU VANTHAVARKALALL A............ IZHUTHHU SUVAASITHHU VAAZHNTHAARGAL. ALLAHU AKBAR. YAA ALLAH HAVE US A PLACE NEXT TO THEM IN JANNATHUL FIRDOUSE....
Quote | Report to administrator
mohamed
0 #4 mohamed 2011-03-24 08:36
மிகவும் சிறந்த ஒரு முன் உதாரணம். இன்றைய அரசியல் தலைவர்கள் முதல் அரசர்கள் அனைவருக்குமான ஒரு நலல் படிப்பினை இந்த வரலாற்று உண்மையில் பொதிந்திருக்கிறது.

=====
சகோ. முஹம்மது.
தாங்கள் கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தி தங்கிலீஷில் தட்டச்சலாம்.

www.satyamargam.com/.../

-மட்டுறுத்துனர்
Quote | Report to administrator
ASHA
0 #5 ASHA 2011-03-29 10:15
assalamu alaikkum varahmathullah vabarakathuhu.
ulaga pengalukku idhu oru mun udharanam.ithan padi nadakka muyarchi seiyya allah arul purivanagaa.
Quote | Report to administrator
Mohideen
0 #6 Mohideen 2012-03-29 03:20
இது, சஹாபாக்கள் தங்களை அல்லாஹ்விற்கு அடிமை என்று நினைத்து வாழ்ந்ததின் விளைவு.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்