முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

உலகம்

மற்றொரு இரவு. மதீனாவின் வீதிகளில் ரோந்து சென்று கொண்டிருந்தார் உமர் (ரலி). மைதானம் போன்ற ஓரிடத்தில் புதிதாய்க் கூடாரம் முளைத்திருந்தது. ‘நேற்று இந்தக் கூடாரம் இங்கு இல்லையே’ அது அவரது கவனத்தைக் கவர்ந்தது. அதை நெருங்கினார். அருகே நெருங்க நெருங்க அந்தக் கூடாரத்தின் உள்ளிருந்து ஒரு பெண்ணின் அழுகைச் சப்தம் கேட்டது. விரைந்து நெருங்கினார் உமர்.

கூடாரத்தின் வெளியே ஒரு மனிதன் கவலையுடன் அமர்ந்திருந்தான். அவனை நெருங்கி முகமன் கூறிய உமர், “யார் நீ?” என்று விசாரித்தார்.

“நான் பாலைநிலத்தைச் சேர்ந்தவன். அமீருல் மூஃமினீனைச் சந்தித்து நிவாரண உதவி பெற்றுச் செல்ல வந்திருக்கிறேன்” என்று பதில் வந்தது. அக்காலத்தில் மக்கள் அனைவருக்கும் கலீஃபா அறிமுகமானவராய் இருக்கவில்லை. கலீஃபாவும் ‘ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட’ என்று கட்டியக்காரர்கள் புடைசூழ பவனி வருவதில்லை. எளிமையின் இலக்கணம் நபித் தோழர்கள்.

“இதென்ன கூடாரத்திலிருந்து அழுகைக் குரல்?”

“அல்லாஹ்வின் கருணை உம்மீது பொழியட்டும். அதுபற்றி நீர் கவலைப்பட வேண்டாம்”

“பரவாயில்லை, என்னவென்று என்னிடம் சொல்”

“என் மனைவி. பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கிறாள்”

”அவளுடன் யாரும் துணைக்கு இருக்கிறார்களா?”

“இல்லை”

அதற்குமேல் அங்கு நிற்காமல் உடனே கிளம்பி தம் வீட்டிற்கு விரைந்தார் உமர். அலீ (ரலி) அவர்களின் மகள் உம்மு குல்சும் உமரின் மனைவியருள் ஒருவர். அவரிடம் வந்த உமர், “அல்லாஹ் உனக்கு எளிதாக்கி வைத்துள்ள வெகுமதியில் சிறிது வேண்டுமா?”

ஆவலுடன், “என்ன அது?” என்று விசாரித்தார் உம்மு குல்சும்.

“கணவனும் மனைவியும் வழிப்போக்கர்களாய் மதீனாவிற்கு வந்திருக்கின்றனர். அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவளுடன் யாரும் துணைக்கு இல்லை”

“தங்கள் விருப்பப்படியே செய்வோம்” என்றார் உம்மு குல்சும்.

ஊருக்குப் புதிதாய் வந்த வழிப்போக்கருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது. அதை இரவில் ரோந்து சென்று அறியும் கலீஃபா, வேறு யாரையும் அழைத்து அதற்கு ஏற்பாடு செய்யவில்லை. தம் வீட்டிற்கு விரைந்து சென்று தம் மனைவியை எழுப்பி உதவிக்கு அழைக்கிறார். மனைவியும் “இதோ வந்தேன்,” என்று விரைந்து வருகிறார். மறுமையே முதன்மையாய் வாழ்ந்து கொண்டிருந்த சமூகம் அது.

“பிரசவம் நிகழ்த்த என்னென்ன தேவையோ அதற்குண்டான அனைத்தும், துணியும், தைலமும் எடுத்துக் கொள். ஒரு பாத்திரமும் தானியமும் பதப்படுத்தப்பட்ட கொழுப்பும் எடுத்து வா”

உம்மு குல்சும் அவர் கேட்டதை எடுத்துக் கொண்டுவர, “வா போகலாம்” என்றார் உமர்.

பாத்திரத்தையும் தானியத்தையும் உமர் எடுத்துக்கொள்ள, உம்மு குல்சும் பின்தொடர விரைந்து அந்தக் கூடாரத்தை அடைந்தார்கள் பரந்துபட்ட நாடுகளின் கலீஃபாவும் அவர் மனைவியும்.

“நீ உள்ளே சென்று உதவு” என்று மனைவியை அனுப்பிவிட்டு அந்த மனிதனுக்குப் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டார் உமர்.

“வா, இங்கு வந்து அடுப்பில் நெருப்புப் பற்றவை” என்று அவனை அழைக்க, நடப்பதை ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருந்த அந்த மனிதன் நெருப்பைப் பற்ற வைத்தான். அடுப்பில் பாத்திரத்தை வைத்து, சமைக்க ஆரம்பித்து விட்டார் கலீஃபா உமர்.

இதனிடையே உள்ளே பிரசவம் நலமே நிகழ்ந்து முடிந்தது. உமரின் மனைவி கூடாரத்தின் உள்ளிருந்து பேசினார். “ஓ அமீருல் மூஃமினீன்! உங்கள் தோழரிடம் ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தியைத் தெரிவியுங்கள்.”

அதைக் கேட்ட அந்த மனிதன் “என்னது அமீருல் மூஃமினீனா?” என்று ஆடிவிட்டான். ஓடோடி வந்து சமைத்து உதவி செய்பவர் அமீருல் மூஃமினீனா? பிரசவம் பார்த்து உதவியவர் அவரின் மனைவியா? அதிர்ச்சியடைந்து பின்வாங்க ஆரம்பித்தான் அந்த மனிதன்.

“அங்கேயே நில்” என்றார் உமர்.

சமையல் பாத்திரத்தை எடுத்துக் கூடாரத்தின் வாயிலில் வைத்துவிட்டுத் தம் மனைவியிடம் கூறினார், “அந்தப் பெண்ணை உண்ணச் சொல்”

பாத்திரம் உள்ளே சென்றது. பிரசவித்த பெண் நன்றாகச் சாப்பிட்டு முடித்ததும் மீத உணவும் பாத்திரமும் வெளியே வந்தன. எழுந்து சென்று அதை எடுத்து வந்த உமர் அந்த மனிதனிடம் அதை நீட்டி, “நீயும் இதைச் சாப்பிடு. இரவெல்லாம் தூங்காமல் விழித்திருக்கிறாயே” என்று உபசரித்தார்.

பிறகு உமர் தம் மனைவி உம்மு குல்சுமை அழைத்தார், “வா நாம் போகலாம்”

அந்த மனிதனிடம், “நாளை எம்மை வந்து சந்திக்கவும். உமக்குத் தேவையானதை நாம் அளிப்போம்”

மறுநாள் அதைப்போலவே அந்த மனிதன் சென்று உமரைச் சந்தித்தான். கணவன் மனைவிக்கும் புதிதாய்ப் பிறந்த அவர்களின் குழந்தைக்கும் சேர்த்து நிவாரணம் அளிக்கப்பட்டது.

நமக்கெல்லாம் விந்தையாகிப்போன இத்தகைய செயல்கள் கலீஃபா உமரின் இஸ்லாமிய ஆட்சியின் காலத்தில் வெகு இயல்பாய் நிகழ்ந்தன.

-நூருத்தீன்


மூலம் : அல்பிதாயா வந்நிஹாயா 7/140

ஆங்கிலம் :  Umar Bin Al-Khattab, His Life & Times - Vol 1, Dr. Ali Muhammad as-Sallabi - Translated by Nasiruddin al-Khattab

நன்றி : சமரசம் 16-28, பிப்ரவரி 2011

Comments   
sabeer ahmed
0 #1 sabeer ahmed 2011-02-19 20:49
எத்தனை அழகிய பண்புகள் கொண்ட மனிதரகளை கொண்ட மார்க்கம் நம் மார்க்கம்! இதில் துளியேனும் தற்கால் தலைகளிடம் இருப்பின்... அல்ல்லாஹ்தான் நாடனும்.
Quote | Report to administrator
Mohamed Ali
0 #2 Mohamed Ali 2011-02-20 06:33
சிறந்த நிகழ்வை அருமையாக விளக்கி விழியில் நீர் சரக்க வைக்கும் கட்டுரை.
Quote | Report to administrator
அபு நிஹான்
0 #3 அபு நிஹான் 2011-02-20 08:41
இத்தகைய பண்பு நம் அனைவருக்கும் வர வல்ல இறைவனை இறைஞ்சிகிறேன்.
Quote | Report to administrator
Mohammed Munas
0 #4 Mohammed Munas 2011-02-20 11:30
This message should be read by everyone in the world.

Thanks.
Quote | Report to administrator
M  S K
0 #5 M S K 2011-02-20 11:39
அழகிய பண்புகளை கொண்ட இறைநெறியாம் "இஸ்லாம்" மார்க்கம் மனித சமுதாயம் முழுவதற்கும் இது போன்ற பண்புகளை போதிப்பது மட்டுமின்றி... வலியுறுத்துகின் றது...

நம்மை ஒவ்வொரு நொடியும் கண்காணிக்கும் இறைவனின் முன்னால் நமக்கு நம் பொறுப்புகள் செயல்கள் எண்ணங்கள் பற்றி கேள்வியுண்டு என்ற உணர்வின் வெளிப்பாடுகள் தாம் இவை விளைய வழியாகும்.

இதை மறந்து வாழ்பவர்கள் சமுதாயத்திற்கு அவலமும் தீமைகளும் துன்பங்களும் ஏற்படுத்தி கவலையற்ற நிலையில் வாழ்ந்து மனித சமுதாயத்திற்கு வேதனைகள் பரப்பிடும் வழிகளாக திகழ்கின்றனர்.

இன்று இப்போதனைகள் ... வெறும் போதனைகளாகவும் ... வரலாற்று சம்பவங்களாகவும் மட்டுமே பரவலாக ...காணக்கிடைக்க ிறது .

இவற்றை மனிதர்களில், தலைமைக்கும் - ஆட்சிக்கும், பொறுப்புகளுக்கு ம், அந்தஸ்துக்களுக் கும் சீட்டு / ஒட்டு சுயநல அரசியல் நடத்தும் முன்னோடிகளான, முஸ்லிம் அமைப்புகளின் ஜமாத்துகளின் பெருந்தகைகளும் உணர்ந்த பாடில்லை! எனும்போது பாமரர்களையும், முஸ்லிம் அல்லாத சகோதரர்களை என்ன சொல்வது...

"யானையை கண்ட ஐந்து குருடர்கள் பாணியில்" தமது கருத்தி சரி எனும் நிலைப்பாட்டில். .
கருத்திலும் கொள்கையிலும் விருப்பிலும் வெறுப்பிலும் மூழ்கி சின்னாபின்னமாகி ய நம் முஸ்லிம் தலைமை மற்றும் முஸ்லிம்களின் நோயுற்ற உள்ளம் முறையான நிவாரணம் பெற அதன் மூலம் அவர்களும் நாமும் முழு மனித சமுதாயமும் நலம் பெரும் முன்மாதிரிகளாக திகழ்ந்திட அவர்களுக்கும் நம் அனைவருக்கும் நாம் துவா செய்வோம்.
Quote | Report to administrator
தாஜ்
0 #6 தாஜ் 2011-02-20 17:05
மிக அழகான நிகழ்வை மிக அழகாக கூறியதற்கு நன்றி.
Quote | Report to administrator
எ.கே.இர்பானுல்லாஹ்
0 #7 எ.கே.இர்பானுல்லாஹ் 2011-02-21 17:22
இதுபோன்ற கலிபாக்கள் {தலைவர்கள்} நம்மில் உருவாக வேண்டும்
Quote | Report to administrator
பிந்து zalha
0 #8 பிந்து zalha 2011-02-22 15:43
ஈமானிலும் தக்வாவிலும் சாலிஹான நல்லமல்களிலும் எமக்கு முன்மாதிரி ஆகிவிட்ட சகாபாக்களின் உறுதியை வல்ல இறைவன் எமக்கும் அருள்வானாக..
Quote | Report to administrator
sara
0 #9 sara 2011-02-24 12:44
இதுவரை அறிந்திடாத செய்தியை அழகாய் கூறியதற்கு மிக்க நன்றி. அல்ஹம்துலில்லாஹ ்.
Quote | Report to administrator
கமால்பாட்சா
0 #10 கமால்பாட்சா 2013-10-17 22:58
lஇஸ்லாம் என்ற இனியமார்கம் நம் கண்முன்தேன் ஓடைபோல்ஓடி கொண்டிருக்கின் றது அதை அள்ளி பருக அல்லாஹ் நமக்கு கிருபை செய்ய அகிலத்தின் அதிபதியை வேண்டுகின்றேன்
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்