முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

தோழியர்

ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப்
صفية بنت عبد المطلب

சிறு குன்றின் மேலிருந்து உடலொன்று உருண்டு வந்தது. உயிரற்ற உடல். கோட்டைச் சுவரின் உள்புறத்திலிருந்து அதை யாரோ வீசியெறிந்திருந்தார்கள். வெளியே காத்திருந்த யூதர்களின் எதிரில் ‘பொத்தென்று’ வந்து விழுந்தது அது.

கோட்டையின் உள்ளே உளவு பார்க்க தம் நண்பனை அனுப்பிவிட்டு, “ரொம்ப நேரமாச்சே, ஆளைக் காணோமே” என்று காத்திருந்தால் பிணமாக உருண்டு வந்து விழுந்தான் அவன். அனைவரும் பதட்டத்துடன் எழுந்து ஓடிச்சென்று பார்த்தார்கள். தலையில், உடலில் பலத்த காயம்; கசகசவென்று ஏகத்துக்கு வழிந்திருந்த குருதி; உளவாளி உயிர் பிரிந்து கிடந்தான்.

நண்பனின் உடலைக் கண்டதும் அச்சமும் அதிர்ச்சியும் ஒரே நேரத்தில் ஏற்பட்டுப்போய், அவர்களுள் ஒருவன், “முஹம்மது தம் சமூகத்துப் பெண்களையும் பிள்ளைகளையும் தற்காப்பு ஏற்பாடுகள் இன்றி விட்டுச் சென்றிருப்பார் என்று நாம் நினைத்திருக்கக்கூடாது” என்றான்.

கலைந்து தம் இருப்பிடங்களுக்கு வேகமாய் ஓடினார்கள் அந்த யூதர்கள். வந்த காரியம் கைகூடாவிட்டாலும் பரவாயில்லை; உயிர் பிழைத்தால் போதும் என்றாகிவிட்டது அவர்களுக்கு.

oOo

உம்மு அய்மன் ரலியல்லாஹு அன்ஹா வரலாற்றில் அன்னை ஆமினாவின் திருமணத்தைப் பார்த்தோம். அன்னை ஆமினாவுக்குச் சகோதரி ஒருவர் இருந்தார் – ஹாலா பின்த் வஹ்ப். தம் மகன் அப்துல்லாஹ்வுக்கு ஆமினாவை மணமுடித்த அப்துல் முத்தலிப் ஹாலாவை மணந்து கொண்டார். ஏறக்குறைய ஒரே காலத்தில் இவ்விருவரின் திருமணங்கள் நடைபெற்றதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அப்துல் முத்தலிப் - ஹாலா தம்பதியருக்குப் பிறந்தவர்களே ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப், ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் - ரலியல்லாஹு அன்ஹுமா.

வீரமும் தீரமும் பொதுவான அம்சமாய்த் தோழர்கள் மத்தியில் அமைந்திருந்த ஒன்றுதான் என்றாலும், இந்த இருவருக்கும் முறையே, 'ஆண் சிங்கம்', 'பெண் புலி' என்ற சிறப்புத் தகுதி ஏற்பட்டுப் போய்விட்டது.

சற்றுக் குழப்பமாய்த் தோன்றினாலும் சில உறவுமுறைகளை இங்கு சுருக்கமாய்த் தெளிவுபடுத்திக் கொள்வோம். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸஃபிய்யா  பின்த் அப்துல் முத்தலிப், தாயார் ஆமீனாவின் சகோதரி மகள் ஆதலால் அக்காள் என்றொரு உறவு; தந்தை அப்துல்லாஹ்வின் சகோதரி என்ற வகையில் அத்தை என்று மற்றொரு உறவு. ஆனால் அரபியரின் வழக்கப்படி, அப்துல் முத்தலிபின் வாரிசுகள் என்ற அடிப்படையில் ஸஃபிய்யா  ரலியல்லாஹு அன்ஹா, நபியவர்களின் அத்தை என்ற உறவு முறையிலேயே வரலாற்றில் அறியப்படுகின்றார்; இரண்டு வயது மூத்த அத்தை.

ஸஃபிய்யாவுக்கு முதல் திருமணம் ஹாரித் இப்னு ஹர்ப் என்பவருடன் நிகழ்ந்தது. ஹாரித் யார் என்றால், குரைஷி குலத்தின் பெரும் தலைவர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தவரும் அன்னை உம்மு ஹபீபா, முஆவியா ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோரின் தந்தையுமான அபூஸுஃப்யான் இப்னுல் ஹர்பின் சகோதரர். ஸஃபிய்யாவுக்கு ஹாரித் இப்னு ஹர்பின் மூலமாய் ஸஃபி என்றொரு மகன். சில காலம் கழித்து ஹாரித் இப்னுல் ஹர்ப் இறந்த போனார். பின்னர் ஸஃபிய்யாவுக்கு மறுமணம் நிகழ்வுற்றது.

அந்த இரண்டாம் கணவரின் பெயர் அவ்வாம் இப்னுல் குவைலித். இவர், நபியவர்களின் முதல் மனைவி அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹாவின் உடன்பிறந்த சகோதரர். அவ்வாம்-ஸஃபிய்யா தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர் - ஸுபைர், அல்-ஸாஇப், அப்துல் கஅபா. ஸஃபிய்யாவுக்குப் பிறந்த பிள்ளைகளுள் மற்றவர்களைப் பற்றி அதிகமான குறிப்புகள் இல்லை, ஸுபைர் இப்னுல் அவ்வாமைத் தவிர. ‘இவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம்’ என்று நபியவர்கள் அறிவித்தார்களே பத்துப்பேர், அவர்களுள் ஸுபைர் இப்னுல் அவ்வாம் ஒருவர். ஸுபைரின் வீரமும் சிறப்பும் ஆற்றலும் அவருக்குச் சிறப்பு மிக்க ஓர் இடத்தை வரலாற்றில் பெற்றுத் தந்துவிட்டன. அதற்கு முக்கியக் காரணம் ஸஃபிய்யா, தம் மகனை வளர்க்கத் தேர்ந்தெடுத்த முறை.

அவ்வாம் இப்னுல் குவைலித் இறந்ததும் மீண்டும் விதவையானார் ஸஃபிய்யா . அப்பொழுது ஸுபைருக்குப் பாலகப் பருவம். மிகமிகக் கடுமையான ஓர் எளிய வாழ்க்கைக்கு ஸுபைரைப் பழக்கப்படுத்தி வளர்க்க ஆரம்பித்தார் ஸஃபிய்யா. அந்த மகனை ஒரு வீரத் திருமகனாய், மாபெரும் போர் வீரனாய் உருவாக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் அவருக்கு ஏற்பட்டுப் போயிருந்தது. அதை ஒரு தவம்போல் செயல்படுத்தியிருக்கிறார் ஸஃபிய்யா. கடுமையான, ஆபத்தான செயல்களைக் கொடுத்து, “இதைச் செய்துமுடி” என்றுதான் கட்டளை. அதை நிறைவேற்றச்சொல்லி ஊக்கப்படுத்துவார் தாய். அதில் ஸுபைருக்கு ஏதேனும் தயக்கமோ, அச்சமோ தென்படுகிறது என்றால் பலமாய் அடி விழும். சிறுவனாயிற்றே, ஏதும் விளையாட்டு, பொழுதுபோக்கு? இருந்தது. அம்புகளைச் சீவிக் கூர்மைப்படுத்துவது; விற்களை சரிசெய்வது … இவைதாம் விளையாட்டு.

இராணுவப் பயிற்சிபோல் ஸுபைருக்கு நடைபெறுவதைக் கண்டு, அவரின் மாமன்களில் ஒருவர், ‘என்ன இப்படி கரடுமுரடாய் மகனை வளர்க்கிறாய்? அன்பு புகட்ட வேண்டிய தாய் இப்படிப் போட்டு அடிக்கலாமா?’ என்று கடிந்திருக்கிறார். குரைஷிகள் மத்தியில் கவிதையும் பாட்டும் சிறப்பம்சமில்லையா? பதிலாகக் கவிதை வந்தது.

தோன்றும் வெற்றுச் சினங் கொண்டு
ஈன்ற வென் மகனை அடிப்பேனோ?
ஈன்று புறந்தந்த என் மகனை
சான்று வென்று வர அடிக்கின்றேன்!

படை நடுங்கும் மாமன் பெயர்கூறவே
நடை பழகு என்றே அடிக்கின்றேன்
விடை கொடுத்தனுப்பும் களம் கண்டு
படை வெல்ல அடித்து வளர்க்கின்றேன்!

பாசமற்ற கொடூரத்தனமில்லை ஸஃபிய்யாவிடம். குறிப்பிட்ட ஒரு நோக்கம் இருந்தது. அதில் தெளிவு இருந்தது. அதற்குரிய பயிற்சிமுறையே வளர்ப்புமுறை என்றாகிவிட்டது. இராணுவத்துக்குப் பயிற்சி அளிப்பது என்று முடிவான பின்னர் நிலா காட்டி சோறு ஊட்டினால் சரிப்படாது என்று புரிந்து வைத்திருந்தார் தாய். அந்த நோக்கத்தையும் பாசத்தையும் உணர்ந்தே வளர்ந்தார் மகன். உயர்ந்து வளர்ந்தவர் பத்துப் பேருள் ஒருவராகிப் போனார்.

நபியவர்கள் ஏகத்துவத்தைப் பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும்; அதைத் தம் உறவினர்களிடமிருந்து துவக்க வேண்டும் என்று அல்லாஹ்விடமிருந்து கட்டளை வந்து சேர்ந்தது.

"இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!"  (சூரா அஷ்-ஷுரா 26:214) என்று அறிவித்தான் இறைவன். அதன் அடிப்படையில் தம் பாட்டனார் அப்துல் முத்தலிப் வகையிலான உறவினர்களை அழைத்து அவ்வப்போது பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள் நபியவர்கள். ஒருநாள் ஆண், பெண், முதியவர், இளையவர் என அனைவரையும் ஒன்று திரட்டி அவர்கள் மத்தியில் நபியவர்கள் எழுந்து நின்று உரையாற்றினார்கள்:
முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே, அப்துல் முத்தலிபின் மகள் ஸஃபிய்யாவே, என்னைச் செவியுறுங்கள். அல்லாஹ்வின் தீர்ப்பிலிருந்து உங்களையெல்லாம் காப்பாற்றும் சிறப்பு எதுவும் எனக்கு இல்லை,” என்று துவங்கி ஏகத்துவம், தம் நபித்துவம் ஆகியவற்றை எடுத்துச் சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுத்தார்கள். சிலர் மட்டும் ஏற்றுக்கொண்டனர். மற்றவர்கள் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அன்றிலிருந்து அபூலஹப் மட்டும் பெரும் விரோதியாய் மாறிப்போனான். பெண்களுள் ஸஃபிய்யாவை அந்த அழைப்பு அப்படியே ஈர்த்தது. உண்மை புரிந்துபோனது; ஏற்றுக்கொண்டார். ரலியல்லாஹு அன்ஹா.

ஸஃபிய்யாவின் இளவயது மகன் ஸுபைரும் தம் தாயுடன் சேர்ந்து இஸ்லாத்தினுள் நுழைந்தார். மக்காவில் ஆரம்பகாலத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு ஸஃபிய்யாவும் இலக்கானார். அதையெல்லாம் தாங்கிக்கொண்டு பொறுத்துக்கொண்டு நகர்ந்தது அவரது வாழ்க்கை. இறுதியில் மதீனாவுக்குப் புலம்பெயரும் காலம் வந்ததும், தமக்குரிய ஹாஷிம் குலத்துப் பெருமை, அந்தஸ்து, பிறந்து வாழ்ந்த ஊரின் இனிய நினைவுகள் ஆகிய அனைத்தையும் உதறி இறக்கி வைத்துவிட்டு அகதியாய்ப் புலம்பெயர்ந்தார் ஸஃபிய்யா. இலக்கு மதீனா. பெரும் இலக்கு அல்லாஹ், அவன் தூதரின் திருப்தி.

இயற்கையிலேயே வீரமும் தீரமும் நிறைந்து போயிருந்ததால் பின்னர் நிகழ்வுற்றப் போர்களில் வரிந்து கட்டிக்கொண்டு இறங்கிவிட்டார் ஸஃபிய்யா. உஹதுப் போர் நடைபெற்றபோது வயதில் மூத்த பெண்மணி அவர். ஆனால் களத்திற்குச் சென்ற முக்கியமான பெண்களுள் அவரும் ஒருவர். தண்ணீர் சுமந்து சென்று களத்திலுள்ள முஸ்லிம் வீரர்களுக்கு அளிப்பது, அம்புகளை உடனுக்குடன் கூர் தீட்டித் தருவது என்று இயங்க ஆரம்பித்தார் அவர். குரைஷிகளுக்கு எதிரான வெகு முக்கியப் போர் அது என்பது ஒருபுறம்; தம் சகோதரன் மகன் - அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், சகோதரர் ஹம்ஸா, மகன் ஸுபைர் ஆகிய மூவர் களம் புகுந்திருந்ததால் அதிகப்படியான அக்கறை மறுபுறம் என்று அப்போரில் அவருக்கு அதிகக் கவனம் இருந்தது.

போர் எதிரிகளுக்குச் சாதகமாகிப் போன தருணம். நபியவர்களைச் சுற்றி வெகு சில தோழர்களைத் தவிர யாருமில்லை. அவர்களை நோக்கிக் குரைஷிகள் முன்னேறுவதைக் கண்டார் ஸஃபிய்யா. தண்ணீர் சுமந்திருந்த தோல் துருத்திகளைத் தூக்கி எறிந்துவிட்டு, தம் குட்டிகளைக் காக்கப் பாயும் பெண் புலியைப்போல் தடதடவென்று ஓடினார் அவர். தாறுமாறாய் ஓடிக்கொண்டிருந்த போர் வீரன் ஒருவனிடமிருந்து ஈட்டியைப் பிடுங்கிக்கொண்டு கத்திக்கொண்டே ஓடினார். “அல்லாஹ்வின் தூதரைவிட்டு ஓடுகிறீர்களே! அழிந்து நாசமாகுங்கள்” என்று ஓடுகிற வேகத்தில் சிலருக்குத் திட்டும் அடியும் விழுந்தன.

அங்கு, களத்தில் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு கொல்லப்பட்டு, எதிரிப் பெண்களால் உடல் சின்னாபின்னமாக்கப்பட்டுக் கிடந்தார். தம் சகோதரனின் உடல் கிடக்கும் களப் பகுதிக்கு ஸஃபிய்யா ஓடிவருவதைக் கண்ட நபியவர்கள் உடனே ஸுபைரிடம், “உன் தாயார் வருகிறார், அவரை மடக்கு,” எனப் பணித்தார்கள்.

தம் சகோதரன் அவ்விதம் கிடப்பதை ஸஃபிய்யா காணக்கூடாது, அது அவருக்குப் பெரும் சோகத்தை விளைவிக்கும் என்று நபியவர்கள் கருதினார்கள். விரைந்து சென்ற ஸுபைர் தம் தாயை வழிமறித்து, “திரும்பிச் செல்லுங்கள் அம்மா. திரும்பிச் செல்லுங்கள்” என்று தடுத்தார்.

“ஹும்! வழியைவிடு. உனக்கு இன்று தாயே கிடையாது!” என்று மூர்க்கமான பதில் வந்தது. அவர் கண்களிலும் புத்தியிலும் இருந்த ஒரே அக்கறை நபியவர்களின் நலம்.

“அல்லாஹ்வின் தூதர் உங்களைத் திரும்பிச் செல்லும்படி கட்டளையிட்டுள்ளார்கள்” என்றார் ஸுபைர்.

“ஏன்?” என்று கேட்ட ஸஃபிய்யாவுக்கு விஷயம் உடனே புரிந்து போனது. “என் சகோதரன் ஹம்ஸா கொல்லப்பட்டார்; அவரது அங்கங்கள் துண்டாடப்பட்டன. அதுதானே விஷயம்? அவர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு மடிந்துவிட்டார் என்பது எனக்குத் தெரியும். அல்லாஹ்வுக்காக இது நிகழ்ந்திருப்பின் எனக்கு அது மகிழ்வே. அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். அவன் நாடினால் நான் பொறுமையுடன் இருப்பேன். வழியைவிடு.”

நபியவர்களுக்கு ஸஃபிய்யாவின் பதில் தெரியவந்ததும், அவரை அனுமதிக்கும்படி ஸுபைருக்குத் தெரிவித்தார்கள்.

போர் முடிவுற்றதும் ஸஃபிய்யா தம் சகோதரன் ஹம்ஸாவின் உடலைக் கண்டார். அவரது வயிறு கிழக்கப்பட்டு, ஈரல் பிடுங்கப்பட்டு, கண்களும் காதுகளும் வெட்டப்பட்டு உருவமே அலங்கோலமாய்ச் சிதைந்து கிடந்தது. அதைக் கண்டார் ஸஃபிய்யா. நிதானமான தீர்க்கமான வார்த்தைகள் வெளிப்பட்டன.

“நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்களாய் இருக்கிறோம். அவனிடமே நாம் மீள்வோம். இது அல்லாஹ்வுக்காக நிகழ்ந்துள்ளது. அல்லாஹ் என்ன விதித்துள்ளானோ அதை நான் ஏற்றுக்கொண்டேன். அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். இதற்குரிய அல்லாஹ்வின் வெகுமதிக்காக நான் பொறுமையுடன் காத்திருப்பேன்.”

உடன்பிறந்த சகோதரனை இவ்விதம் காண்பது எத்தகைய கொடூரக் காட்சி? ஒரு பெண்ணுக்கு எத்தகைய இழப்பு இது? எவ்வளவு மனவேதனை, கோபம், ஆத்திரம், சோகத்தை அது ஏற்படுத்தியிருக்க வேண்டும்? அவை அத்தனையையும் தாங்கிக்கொண்டு, ஏக இறைவன் அல்லாஹ்வுக்காகத் தாங்கிக்கொண்டு, பொறுமையுடன் இருப்பேன், அவனது வெகுமதிக்குக் காத்திருப்பேன் என்று ஒரு பெண்ணால் சொல்ல முடிந்ததென்றால் அந்த ஈமானின் வலு, இறை நம்பிக்கை எத்தகையதாய் இருந்திருக்க வேண்டும்?

மலை சாய்ந்து கிடப்பதைப்போல் தம் சகோதரன் ஹம்ஸா உஹது மலையடியில் வீழ்ந்துகிடப்பதைப் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருந்தார் ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹா.

oOo

அகழிப் போரையும் அது சார்ந்த நிகழ்வுகளையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டே வந்தோம். இந்தப் போரில் முக்கியமான ஓர் ஏற்பாடாக முஸ்லிம் பெண்களை ஹஸ்ஸான் இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹுவுக்குச் சொந்தமான 'ஃபாஉ' எனும் கோட்டை ஒன்றில் பத்திரமாகத் தங்க வைத்திருந்தார்கள் நபியவர்கள். அது உயரத்தில் அமைந்திருந்த, பாதுகாப்பான வசதிமிக்க கோட்டை. இந்தப் போரில் பனூ குரைளாவினர் புரிந்த நயவஞ்சகத்தைப் பற்றி சற்று விரிவாகவே முந்தைய அத்தியாயங்களில் படித்தோம். பனூ நதீர் யூதர்களின் பேச்சைக் கேட்டு மனம் மாறிய பனூ குரைளா யூதர்கள் முதல் வேலையாக இந்தக் கோட்டைக்குச் சில ஒற்றர்களை அனுப்பிவைத்தார்கள்.

தங்களின் பெண்கள், பிள்ளைகளைக் கோட்டைக்குள் பாதுகாப்பாய் இருக்க வைத்துவிட்டுக் களத்திற்குச் சென்றுவிட்டார்கள் முஸ்லிம் வீரர்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். இங்கு முஸ்லிம் பெண்களுக்குப் பாதுகாவலாய் ஆண்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது பனூ குரைளா யூதர்களின் யூகம். அது சரியான யூகமுங்கூட. எனவே, முஸ்லிம் பெண்களுக்கு இங்குத் தொந்தரவு அளிக்க ஆரம்பித்துவிட்டால் அங்கு, களத்தில் ஆட்டத்தை எளிதாகக் கலைத்துவிடலாம் என்று நயவஞ்சக யூத மூளை திட்டமிட்டது. அந்தக் கோட்டையை நெருங்கி வேவுபார்க்க ஆரம்பித்தனர் சிலர்.

அதிகாலை நேரம். பதுங்கிப் பதுங்கிச் சென்று கொண்டிருந்த ஒருவனின் நிழலைப் பார்த்துவிட்டார் அந்தக் கோட்டையில் தங்கியிருந்த ஸஃபிய்யா. அரவம் எழுப்பாமல் அதைக் கவனிக்க ஆரம்பித்தார். அவனது நடமாட்டத்தைக் கொண்டே அவன் எதிரிகளின் ஒற்றன் என்பது எளிதாய்த் தெரிந்தது. பாதுகாப்பாய் அமைக்கப்பட்டிருந்த வேலிகளுக்கு அருகே ஊர்ந்துவந்த அவன் உள்ளே யார் இருக்கிறார்கள் என்பதை நோட்டமிட ஆரம்பித்தான். அவன் யூதன் என்பதும் எதற்கு இங்கு நெருங்கி வந்துள்ளான் என்பதும் சடுதியில் புரிந்து போனது ஸஃபிய்யாவுக்கு.

“பனூ குரைளா யூதர்கள், நபியவர்களுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை முறித்துவிட்டார்கள்” என்று தமக்குள்ளே முணுமுணுத்தார். “குரைஷிகளின் கூட்டணிப் படையினருக்கு இவர்கள் உதவப் போகிறார்கள். இங்கோ பாதுகாவலுக்கு முஸ்லிம் ஆண்கள் இல்லை. நபியவர்களும் தோழர்களும் அங்கு எதிரிகளை எதிர்கொண்டு நிற்கிறார்கள். பெண்கள் பாதுகாவல் இன்றி இங்கிருப்பதை இந்த ஒற்றன் தெரிவித்துவிட்டால், யூதர்கள் திரண்டுவந்து நம்மைத் தாக்கி அடிமைப்படுத்தி விடுவார்கள். அது முஸ்லிம்களுக்குப் பேரிழப்பாகிவிடும்.”

தமக்குத் தாமே பேசியவர் உடனே காரியத்தில் இறங்கினார். தலையைச் சுற்றி மேலாடையை இறுகக் கட்டிக்கொண்டார். இடுப்பு உடுப்பை வாரால் பலமாய்க் கட்டினார். ஆடை விலகிவிடாமல் இருக்க அந்தப் பாதுகாப்பு. அடுத்து நீண்ட தடித்த வேல்கம்பு ஒன்றைத் தம் தோளில் ஏந்திக்கொண்டார். மெதுவாக, மிகக் கவனமாக சப்தம் எழுப்பாமல் கோட்டையின் கதவை இலேசாகத் திறந்து அதன் பின்புறம் மறைந்து நின்று காத்திருந்தார். இதையெல்லாம் அறியாமல் தன் முடிவை நோக்கிப் பதுங்கிப் பதுங்கி வந்தான் அந்த யூதன். போதுமான அளவு நெருங்கிவிட்டான் என்பதைக் கணித்தார் ஸஃபிய்யா. அவ்வளவுதான். அடுத்து மின்னல் வேகத்தில் ஒரு பாய்ச்சல். தமக்குள்ள அத்தனை பலத்துடனும் அந்த யூதனின் மண்டையில் ஒரே போடாய்ப் போட்டார். குரல் எழுப்பக்கூட அவனுக்கு வாய்ப்பு இருந்ததா எனத் தெரியவில்லை. மடங்கித் தரையில் விழுந்து சரிந்தான் அவன். சரமாரியாக அவனைக் குத்தினார் ஸஃபிய்யா. அவன் நிச்சயம் இறந்துவிட்டான் என்று தெரிந்ததும்தான் குத்துவது நின்றது.

இந்த உளவாளியின் நண்பர்களும் வந்திருப்பார்கள்; வெளியில் காத்திருப்பார்கள் என்பதை யூகித்த ஸஃபிய்யா அடுத்து என்ன செய்வதென்று யோசித்தார். அபாரமான யுக்தி தோன்றியது. ‘உயிருடன் உள்ளே வந்தவன் பிணமாய் வெளியே சென்று விழுந்தால்?’ அது எதிரிகள் மத்தியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவரால் உணர முடிந்தது.

கோட்டைச் சுவரின் உள்புறமிருந்து அந்தப் பிணம் வெளியே வீசப்பட்டது. சிறு குன்றின் மேலிருந்து அது உருண்டு வந்து, வெளியே காத்திருந்தார்களே யூதர்கள் சிலர். அவர்கள் இருந்த பகுதியில் ‘பொத்தென்று’ வந்து விழுந்தது அது.

கோட்டையின் உள்ளே உளவு பார்க்க தம் நண்பனை அனுப்பிவிட்டு, “ரொம்ப நேரமாச்சே, ஆளைக் காணோமே” என்று காத்திருந்தால் பிணமாக உருண்டு வந்து விழுந்தான் அவன். அனைவரும் பதட்டத்துடன் எழுந்து ஓடிச்சென்று பார்த்தார்கள். தலையில், உடலில் பலத்த காயம்; கசகசவென்று ஏகத்துக்கு வழிந்திருந்த குருதி; உளவாளி உயிர் பிரிந்து கிடந்தான்.

நண்பனின் உடலைக் கண்டதும் அச்சமும் அதிர்ச்சியும் ஒரே நேரத்தில் ஏற்பட்டுப்போய், அவர்களுள் ஒருவன், “முஹம்மது தம் சமூகத்துப் பெண்களையும் பிள்ளைகளையும் தற்காப்பு ஏற்பாடுகள் இன்றி விட்டுச் சென்றிருப்பார் என்று நாம் நினைத்திருக்கக்கூடாது” என்றான்.

கலைந்து தம் இருப்பிடங்களுக்கு வேகமாய் ஓடினார்கள் அந்த யூதர்கள். வந்த காரியம் கைகூடாவிட்டாலும் பரவாயில்லை; உயிர் பிழைத்தால் போதும் என்றாகிவிட்டது அவர்களுக்கு.

தமக்குள் சுரந்த வீரத்தைப் பாலாகவும் சொல்லாகவும் செயலாகவும் தம் மகனுக்கு ஊட்டி வளர்த்த வீரத் தாய் அவர். தம் குலத்திற்கே நாசம் ஏற்படும் தருணம் வந்துவிட்டால் அவரது செயல்பாடு எப்படி இருக்கும்? அகழிப் போரின் அத்தியாயங்கள் இந்த வீரச் செயலைப் பத்திரப்படுத்திக் கொண்டன.

முஸ்லிம்களின் எதிரியைத் தனியாளாகக் கொன்ற முதல் பெண் எனும் பெருமை பெற்றவராக நீண்ட காலம் வாழ்ந்து, கலீஃபா உமர் இப்னுல் கத்தாபின் காலத்தில் மரணமடைந்து ஜன்னத்துல் பகீ மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பெற்றார் ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப்.

ரலியல்லாஹு அன்ஹா!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

<தோழியர் - 5 | தோழியர் - 6>

Comments   

zaina
0 #1 zaina 2012-03-20 19:56
“நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்களாய் இருக்கிறோம். அவனிடமே நாம் மீள்வோம். இது அல்லாஹ்வுக்காக நிகழ்ந்துள்ளது. அல்லாஹ் என்ன விதித்துள்ளானோ அதை நான் ஏற்றுக்கொண்டேன் . அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். இதற்குரிய அல்லாஹ்வின் வெகுமதிக்காக நான் பொறுமையுடன் காத்திருப்பேன
masha allah ippadi oru eemaanai nam anaivarukkum thnthiduvaanaag a aameen.
Quote | Report to administrator
Thajudeen
0 #2 Thajudeen 2012-03-22 14:33
//மலை சாய்ந்து கிடப்பதைப்போல் தம் சகோதரன் ஹம்ஸா உஹது மலையடியில் வீழ்ந்துகிடப்பத ைப் பொறுமையுடன் பார்த்துக்கொண்ட ிருந்தார் ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹா.//


//முஸ்லிம்களின் எதிரியைத் தனியாளாகக் கொன்ற முதல் பெண்//

அஸ்ஸலாமு அலைக்கும்,

பொறுமையும் வீரமும் பெண்களுக்கு தேவை அது அல்லாஹ்வுக்காக மட்டுமே என்பதை மிக அழகாக குறிப்பிட்டுள்ள ார் ஆசிரியர்.

....
ரலியல்லாஹு அன்ஹா!
Quote | Report to administrator
Ajmal
0 #3 Ajmal 2012-03-29 23:02
Really i cried when i was read this article about shafiya bint abdulmuthalib (ral).Manytimes i heard and read about her history,but now i cried myself..hair alhamdulillah.
i really appreciate the writer Nooruddin.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்