முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

தோழர்கள்

ஸ்லாத்தை ஏற்றபின் நபியவர்களுடன் அணுக்கமாகிவிட்ட தோழர்களுள் பிலால் இப்னு ரபாஹ் முக்கியமானவர். பத்ருப் போர் தொடங்கி, பிறகு நடைபெற்ற போர்களிலெல்லாம் அவரும் முக்கியமான படைவீரர். ஆன்மீகமும் வீரமும் சம விகிதத்தில் அவரது வாழ்க்கையில் கலந்திருந்தன.

இன, நிற அடிப்படையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடெல்லாம் இஸ்லாத்தில் கிடையாது என்பதை அறிவோமில்லையா? அதை அழுத்தமாகப் பதிய வைக்கும் நிகழ்வொன்று நடந்தது. முஸ்லிம்களின் முதல் முஅத்தின் என்ற பெருமை தோழர் பிலாலுக்குத்தான் அமைந்தது.

தொழுகைக்கு மக்களை அழைக்க பாங்கு வாசகங்கள் முடிவானதும் மதீனாவில் தம்முடைய மஸ்ஜிதில் பாங்கு சொல்லும் உன்னதப் பணிக்கு நபியவர்கள் பிலாலை நியமித்தார்கள். அவருக்குத் துணையாளர் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு.

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அஷ்ஹது அ(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ்
அஷ்ஹது அ(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ்

என்று ஒவ்வொரு தொழுகைக்கும் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அழைப்பு விடுத்து, விடுத்து, அவரது இனிய குரல் மதீனாவிலும் தோழர்கள் மத்தியிலும் எந்தளவிற்குப் பிரசித்தமானது என்றால், பாங்கோசை என்றால் அது பிலால் என்றாகிப்போனது. இன்றும் உலகின் சில பகுதிகளில், பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் முஅத்தின்களை அறிமுகமில்லாத எவரேனும் சந்தித்து, ‘என்ன தொழில் செய்கின்றீர்கள்?’ எனக் கேட்டால் ‘மஸ்ஜிதில் பிலால் ஆக இருக்கின்றேன்!’ என்று பெருமையுடன் குறிப்பிடுமளவிற்குப் புகழ் பெற்றுவிட்டது அவரது பெயர்.

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளன்று கஅபாவின் கூரையின்மீது ஏறி நின்று பாங்கு சொல்வதற்கு நபியவர்கள் பிலாலைத்தாம் பணித்தார்கள். அவரது பாங்கொலி மலைக்குன்றுகளில் முட்டி எதிரொலித்தது. குன்றுகளிலும் உயர்ந்த இடங்களிலும் ஓரமாக ஒதுங்கி, தொங்கிய முகங்களுடன் கஅபாவில் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த குரைஷிகளுக்கு அந்தக் காட்சியை நம்பவே முடியவில்லை. இது கனவா, நனவா? புழுதியில் கிடத்தப்பட்டு, புழுவாக நசுக்கப்பட்ட அந்தக் கறுப்பர் இன்று நம் புனிதக் கருங்கல் ஆலயத்தின் உச்சியில் நின்று உரத்து உரைத்துக் கொண்டிருப்பது விதியா, விசித்திரமா? உயிர் பிரிந்து விடுமோ என்று கிடந்த நிலையில் ஈனஸ்வரத்தில் அன்று அவர் முனகிய வார்த்தைகளை இன்று அந்தக் கஅபாவின் கூரையில் நின்று உச்சபட்ச ஒலியில் ஓங்கி ஒலிப்பது தற்செயலாக இருக்க முடியுமா?

அன்றைய நாள் அத்தனைத் தோழர்கள் அங்குக் குழுமியிருக்க, நபியவர்கள் கஅபாவின் உள்ளே நுழையும்போது தம்முடன் உஸாமா பின் ஸைத், உஸ்மான் இப்னு தல்ஹா ஆகிய இருவரோடு மூன்றாமவராக பிலால் இப்னு ரபாஹ்வையே அழைத்துச் சென்றார்கள்.

இத்தகு நற்பேறெல்லாம் எப்படித் தற்செயலாக மட்டும் இருக்க முடியும்? சித்திரவதையின் உச்சக்கட்டத்தின் போது, உயிர் பிரிந்துவிடும் சாத்தியமிருந்தும் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல், இணங்கிவிடாமல், ஏகத்துவத்தை உரத்து உரைத்த தன் அடிமைக்கு அந்த ஏக இறைவன் இவ்வுலகில் அளித்த நற்பேறல்லவா இது! ‘லாத், உஸ்ஸா’ என்ற எந்தச் சிலைக்கும் போலி பாவனையில்கூட வாழ்த்துச் சொல்லாமல், ‘அஹதுன்! அஹதுன்! என்று அடிபட்டுக் கிடந்த அவரின் வரலாற்றில் இன்றைய நமக்கு நிறைய பாடமல்லவா உள்ளது.

இம்மையிலேயே அவருக்கு இத்தகு பேறு என்றால் மறுமையில்? அது அளவற்றது என்பதை உணர்ந்து கொள்ள பிலாலின் காலடியோசையைத் தாம் சொர்க்கத்தில் கேட்டதாக நபியவர்கள் தெரிவித்துள்ள ஒரு ஹதீஸ் போதுமே!

நபி(ஸல்) அவர்கள் ஒரு ஃபஜ்ருப் பொழுதில், 'பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும்! ஏனெனில் உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டேன்' என்று பிலால்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) 'இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் தொழ வேண்டுமென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களுள் சிறந்த செயல்' என்று விடையளித்தார்கள் (புகாரீ 1149).

oOo

ஷாம் பகுதியில் பைஸாந்தியர்களுடன் நிகழ்ந்து கொண்டிருந்த யுத்தத்திற்கு முஸ்லிம் படைகளுக்கு உதவியாக ஸயீத் இப்னு ஆமிர் ரலியல்லாஹு அன்ஹுவின் தலைமையில் மற்றுமொரு புதிய படைக்குழுவை கலீஃபா அபூபக்ரு (ரலி) ஏற்பாடு செய்தார். அதில் வந்து இணையும்படி மக்களுக்கு அழைப்பு விடுக்க பிலாலைத்தாம் அவர் கேட்டுக்கொண்டார். அப்பணியை நிறைவேற்றிய பிலால், படை கிளம்புவதற்குத் தயாரானபோது கலீஃபாவைச் சந்தித்தார்.

“அல்லாஹ்வின் தூதருடைய கலீஃபாவே! என்னைத் தங்களுடன் வைத்துக் கொள்வதற்காகவும் பிரதியுபகாரம் புரிவதற்காகவும் தாங்கள் எனக்கு உமையாவிடமிருந்து விடுதலை பெற்றுத் தந்திருந்தால் நான் தங்களுடன் இங்குத் தங்கிவிடுகிறேன். ஆனால், என் இஷ்டப்படி சுதந்திரமாக வாழ நீங்கள் என்னை விடுவீர்களென்றால், நானும் போருக்குச் சென்று என் இறைவனின் வழியில் போரிட்டு, எனக்கான நன்மையைத் தேடிக்கொள்ள அனுமதியுங்கள். ஏனெனில், இங்குத் தங்களுடன் தங்கியிருப்பதைவிட, ஜிஹாது எனக்கு உவப்பானது” என்று தம் விருப்பத்தைத் தெளிவாக விவரித்தார்.

“ஜிஹாதுதான் உம்முடைய நாட்டம் என்றால் நான் உம்மை இங்குத் தங்கும்படி கட்டளையிடவும் முடியாது. அவ்விதம் நான் செய்யவும் மாட்டேன் பிலால். நீர் எங்களுக்காக பாங்கு சொல்ல வேண்டும் என்பதே என் விருப்பம். உம்மைப் பிரிவதை நினைத்தால் நான் தனித்துவிடப்பட்ட உணர்வு எனக்கு மேலிடுகிறது. எப்படியிருந்தாலும் என்றாவது ஒருநாள், நாம் ஒருவரையொருவர் இவ்வுலகை விட்டுப் பிரியத்தான் வேண்டும் என்பதை நான் அறிவேன். ஆகவே நற்காரியங்கள் அதிகம் செய்துகொள்வீராக!. அவை உமக்கு இவ்வுலகின் வாழ்வாதாரம். உமது நற்காரியங்களின் பயனாய், உமது ஆயுள் வரை, அல்லாஹ் உயர்வானவர்களிடம் உம்மைப் பற்றிக் குறிப்பிடுவான். மரணத்திற்குப் பின் வெகு சிறப்பான வெகுமதியை அளிப்பான்” என்று வாழ்த்தி, இறைஞ்சி வழியனுப்பி வைத்தார் கலீஃபா.

போர்க்களத்தில் பிலாலின் வாழ்க்கை தொடர்ந்தது. அதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் போர் முடிவுற்ற பின்னரும் மதீனா திரும்ப மனமின்றி ஷாமிலேயே தங்கிவிட்டார்.

பிற்காலத்தில் உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவானபின் சிரியாவுக்கு பிலால் வந்தார். பிலாலின் பாங்கோசைக்கு ஏங்கிக் கிடந்த முஸ்லிம்கள் கலீஃபா உமரிடம், ‘நாங்கள் யார் கேட்டாலும் மறுத்துவிடுகிறார். நீங்களாவது சொல்லிப் பாருங்களேன்’ என்று கோரிக்கை வைத்தனர்.

பிலாலின்மீது ஏகப்பட்ட அன்பும் வாஞ்சையும் மதிப்பும் உமருக்கு நிறைந்திருந்தன. தோழர் பிலாலை ‘நம்முடைய தலைவர்’ என்றே அவர் குறிப்பிடுவார். ‘அபூபக்ரு நம்முடைய தலைவர். அவர் நம்முடைய தலைவருக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தவர்’ என்று தெரிவிப்பது அவரது வழக்கம். ஆனால், பிலாலோ, “நானொரு அபிஸீனியன் மட்டுமே. அண்மைக் காலம் வரை அடிமையாகக் கிடந்தவன்” என்று அடக்கத்துடன் சொல்லிவிட்டுப் போய்விடுவார்.

மக்களின் வேண்டுகோளையும் தமது ஆசையையும் உமர் பிலாலிடம் தெரிவிக்க, யோசனைக்குப் பிறகு ஒருவழியாக இணங்கி, பல ஆண்டுகளுக்குப் பிறகு அன்று மதீனாவில் மீண்டும் ஒலித்தது பிலாலின் இனிய பாங்கொலி.

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்
அஷ்ஹது அ(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ்
அஷ்ஹது அ(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ்
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்

என்று பிலால் ரலியல்லாஹு அன்ஹுவின் பாங்கொலி காற்றில் பரவ, பரவ, நபியவர்களுடன் வாழ்ந்த காலமும் நேரமும் பொழுதும் தோழர்களுக்கு பழைய நினைவுகளைக் கிளப்பி, அனைவருக்கும் அழுகை பீறிட்டு சபையெங்கும் அழுகையொலி! உமர் ரலியல்லாஹு அன்ஹுவுக்கோ அவர் அழுது உகுத்த கண்ணீரில் அவரது தாடி நனைந்து ஈரமாகிப் போனது.

oOo

ஹிஜ்ரீ 21 ஆம் ஆண்டு பிலாலை இறுதி நேரம் அண்மியது. மரணத் தருவாயிலிருந்த அவர் தம் மனைவியிடம், “என் நேசத்திற்குரிய தோழர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் முன் சென்றுவிட்ட என் தோழர்களையும் நாளை நான் சந்திக்கக் கூடும்” என்றார்.

அவருடைய மனைவிக்குப் புரிந்துவிட்டது. “என்னைத் துன்பம் சூழப்போகிறது!” என்றார்.

“என்னை மகிழ்வு சூழப் போகிறது!” என்று பதிலளித்தார்; இவ்வுலகைப் பிரிந்தார் பிலால் இப்னு ரபாஹ்.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

<தோழர்கள் தொடர் நிறைவுற்றது>

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.

கண்ணீர்!

இத் தருணத்தில் இதைத் தவிர என்னிடம் வேறொன்றுமில்லை. எனது உணர்ச்சிகளை வெளியிட வார்த்தைகள் இல்லை.

எத்தகு பணி! எத்தகு பாக்கியம்! புனிதர்களின் வரலாற்றுப் பக்கங்களை நுனிப்புல் அளவுக்காவது மேய்வதற்குக் கிடைத்த வாய்ப்பு எத்தகு பெருமை!

பலவீனங்களும் குறைகளும் ஏகத்துக்கு நிறைந்தள்ள என்னை இப் பணிக்குத் தேர்ந்தெடுத்த அந்த ஏக இறைவனுக்கு நான் எப்படி நன்றி செலுத்துவேன்?

அல்ஹம்துலில்லாஹ்!

இதன் பயணம் அலாதியானது. அதன் சுகம் விவரிக்க இயலாதது. ஒவ்வொரு தோழரின் வாழ்க்கையும் நிகழ்வுகளும் எனக்குள் தோற்றுவித்த காட்சிகள் பிரம்மாண்டமானவை. அவற்றுள் பொதிந்திருக்கும் பாடங்கள் என் மூளையின் புரிந்துகொள்ளும் திறனுக்கு அப்பாற்பட்டவை. நான் முயன்று முடித்திருப்பதெல்லாம் வாசித்ததையும் புரிந்ததையும் உணர்ந்ததையும் ஓரளவுக்குத் தாள்களில் கடத்தியது மட்டுமே.

அல்ஹம்துலில்லாஹ்!

இப் பணியை ஏற்றுக் கொள்ளவும் நமது குற்றங்குறைகள், பிழைகளை மன்னிக்கவும் அவனிடம் மன்றாடுகிறேன்.

இதற்கான நற்கூலியை நம்மனைவருக்கும் ஈருலகிலும் வழங்கியருள அவனிடம் அழுது இறைஞ்சுகிறேன்.

வஸ்லாம்.

அன்புடன்,
நூருத்தீன்

Comments   
நட்புடன் ஜமால்
0 #1 நட்புடன் ஜமால் 2017-12-24 10:04
.
சுப் ஹானல்லாஹ் - என்னே ஒரு தெளிவு
.
//“என்னைத் துன்பம் சூழப்போகிறது!” என்றார்.

“என்னை மகிழ்வு சூழப் போகிறது!” என்று பதிலளித்தார்//
Quote | Report to administrator
நட்புடன் ஜமால்
0 #2 நட்புடன் ஜமால் 2017-12-24 10:07
நபித்தோழர்கள் என்றாலே "பிலால் ரலியல்லாஹு அன்ஹூ" அவர்களைத்தான் முதலில் நினைப்பேன், இவர்கள் வாழ்வில் பட்ட துண்பங்கள் நமக்கெல்லாம் ஓர் படிப்பினை
.
அருமையாக கோர்த்துள்ளீர்கள்

வாழ்த்துகள்
Quote | Report to administrator
Ummu afnan
0 #3 Ummu afnan 2017-12-24 13:52
அல்ஹம்துலில்லாஹ்

ஈருல வெற்றியை அல்லாஹ் தருவானாக
உங்களின் இப்பணியை பொருந்தி கொள்வானாக ஆமீன்
Quote | Report to administrator
சிராஜ் முகம்மது
0 #4 சிராஜ் முகம்மது 2017-12-26 13:44
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

சகோதரர் நூருத்தீன் அவர்கள் மிக நேர்த்தியாக "நபித்தோழர்கள்/ தோழியர்" புதினத்தை நமக்குத் தந்தார். மிக்க அருமையான, எளிமையான எழுத்து நடை. எல்லாத்தொடர்களி லுமே நம்மைக் கண் கலங்க வைத்துள்ளார். முழுத்தொகுப்பைய ும் புத்தகமாக வெளியிட்டு நம் சமுதாயம் விழிப்புணர்வு பெற உதவ வேண்டும்.
Quote | Report to administrator
rasheed
0 #5 rasheed 2018-01-02 15:40
இஸ்லாம் உலகுக்குச் சொன்ன சஹோதரத்துவம், விடுதலை, சமத்த்துவம் முதலியனவற்றின் செய்தி அருமை பிலால் அவர்கள்.

அருமையான எழுத்து. !
Quote | Report to administrator
நஸீர்தீன்
0 #6 நஸீர்தீன் 2018-02-08 09:28
அஸ்ஸலாமு அலைக்கும்!

ஹஜ்ஜதுன் விதாவின் பின்னர் மார்க்க போதனைக்காக சகாபாக்கள் சென்ற தூர நாடுகள் பற்றியும் அதனோடு இணைந்த வரலாறு பற்றியும் குறிப்பிடுவீர்க ளாயின் அல்லாஹ் உங்களுக்கு பேரருள் புரிவானாக.
வஸ்ஸலாம்.
இப்படிக்கு
நஸீர்தீன்
இலங்கை
Quote | Report to administrator
நூருத்தீன்.
0 #7 நூருத்தீன். 2018-02-09 01:33
அன்புச் சகோதரர் நஸீர்தீன்.

வ அலைக்குமுஸ் ஸலாம்.

நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு முதல் இரண்டு கலீஃபாக்களின் ஆட்சியில் பாரசீகம், ரோம் என இருபுறமும் போர் நிகழ ஆரம்பித்தது. சஹாபாக்கள் படையெழுந்து சென்றனர். வெற்றி பெற்ற பகுதிகளில் இஸ்லாமிய ஞானத்தில் வேரூன்றிய தோழர்கள் ஆளுநர்களாகவும் கல்வி ஆசான்களாகவும் பணியைத் தொடர்ந்தது முதல் நான்கு கலீஃபாக்களின் ஆட்சியுடன் இணைத்து வாசிக்க வேண்டிய சுவையான வீர வரலாறு. அல்லாஹ் நாடினால் வரும்.

-நூருத்தீன்
Quote | Report to administrator
Mohamed Iqbal
0 #8 Mohamed Iqbal 2018-02-17 13:47
நன்றி சகோதரரே. அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக . உங்கள் எழுத்துக்கள் எனக்கு இதைப் படிப்பதற்கான ஆர்வத்தை அதிகரித்தன. பலருக்கு பரிந்துரை செய்தேன்.

இதன் இறுதிப் பகுதியில் உமர் (ரலி) அவர்கள் கலீபாவான பின்பு சிரியாவுக்கு வந்தார் என்று உள்ளது. அவர் மதீனாவுக்கு வந்தார் என்பது தானே சரியாக இருக்கும்.? (உங்கள் கவனத்திற்காக)
Quote | Report to administrator
Thahira Banu
0 #9 Thahira Banu 2018-03-27 22:51
மிகப்பெரும் பாடமாக அமைந்தது பிலால்(ரலி) அவர்களின் வாழ்க்கையும், ஈமானும். அவர் அனுபவித்த கஷ்டங்களும் அவருக்கு அல்லாஹ் கொடுத்த நற்கூலிகளும் நமக்கு மிகப்பெரும் பாடம். அவன் நாடியவர்களுக்கு கணக்கின்றி வழங்கக்கூடியவன் .

அவரின் வாழ்க்கை வரலாறை உங்கள் எழுத்துக்களில் படிப்பது மேன்மேலும் மகிழ்ச்சி &
ஸ்வாரஸ்யம்.
நன்றி சகோதரரே.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்